என் மலர்
செய்திகள்

நாகை, பூம்புகாரில் சுருக்குமடி வலைகளில் பிடித்த 11 டன் மத்தி மீன்கள் பறிமுதல்
நாகப்பட்டினம்:
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க கூடாது என மீனவர்களுக்கு அரசு முன்எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் நாகைக்கு உட்பட்ட சில பகுதிகளில் மீனவர்கள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி கடலில் மீன்பிடித்து விற்பனை செய்வதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல் சேவியர் தலைமையிலான அதிகாரிகள் பூம்புகார், நாகை உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடித்து விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து 11 டன் மத்தி மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடற்கரை போலீசார் பாதுகாப்புடன் நாகை துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். அங்குள்ள மீனவர்களிடம் மத்தி மீன்களை பொது ஏலத்தில் விற்பனை செய்தனர். இதில் மீனவர்கள் ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கு மத்தி மீன்களை ஏலத்தில் எடுத்தனர்.






