search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இனிமையான குரலில் பாடும் சகோதரிகள் ஸ்ரீசக்தி-ஸ்ரீமதி.
    X
    இனிமையான குரலில் பாடும் சகோதரிகள் ஸ்ரீசக்தி-ஸ்ரீமதி.

    சூலமங்கலம் சகோதரிகளை போல் பக்தி பாடல்களை பாடி அசத்தும் நாகை சகோதரிகள்- வீடியோ

    நாகையை சேர்ந்த 2 சிறுமிகள் சூலமங்கலம் சகோதரிகள் பாடலை அதே இனிமையுடன் பாடி வலைத்தளங்களில் பெரும் புகழ்பெற்றுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    தமிழ் திரையுலகில் சிறுவர்- சிறுமிகள் குரலில் பாடி அனைவரையும் கவர்ந்தவர் சூலமங்கலம் சகோதரிகள். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இவர்கள் பாடிய பக்தி பாடல்கள் பல சாதனைகளை படைத்துள்ளன.

    இவர்களின் கணீர் குரலில் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் ஆகியவை பாமரர் முதல் படித்தவர்கள் வரை அனைவரது இதயங்களையும் கவர்ந்தன.

    இந்த நிலையில் நாகையை சேர்ந்த 2 சிறுமிகள் சூலமங்கலம் சகோதரிகள் பாடலை அதே இனிமையுடன் பாடி வலைத்தளங்களில் பெரும் புகழ்பெற்றுள்ளனர்.

    இவர்கள் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்.. முருகா’ திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்.. என்ற பாடல் யூடிப்பில் வைரலாகி உள்ளது.

    இதனை உலகம் முழுவதும் வசிக்கும் தமிழ் மக்கள் கேட்டு நாகை சகோதரிகளாக வலம் வரும் ஸ்ரீசக்தி, ஸ்ரீமதி சகோதரிகளை பாராட்டி வருகின்றனர்.

    நாகை மாவட்டம் புதிய நம்பியார் நகர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி கொடிமலர். இவர்களின் மகள்கள் ஸ்ரீசக்தி, 8-ம் வகுப்பும், ஸ்ரீமதி 4-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இசை குடும்பத்தை சேராத இவர்கள் தமிழிசை பாடல்களில் ஆர்வம் கொண்டு அவைகளை கேட்டதும் அப்படியே பாடி பார்த்து பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு சூலமங்கலம் சகோதரிகளை போல் புகழ்பெற வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அவர்களுக்கு பெற்றோரும் உதவி புரிந்தனர். இதன் எதிரொலியாக ஸ்ரீசக்தியும், ஸ்ரீமதியும் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பாடல்களை அதே குரலில் இனிமையுடன் பாடினர்.

    தனது மகள்கள் இனிமையான குரலில் பாடுவதால் ஆச்சர்யம் அடைந்த செல்வகுமார் மகள்களின் பாடலை தனது செல்போன் மூலம் வீடியோவாக பதிவு செய்து அதை வாட்ஸ்- அப் போன்ற சமூக வலைதளங்களில் முதலில் பதிவிட்டார். சிறுமிகளின் பாடல்கள், மக்கள் மனதை கொள்ளை கொண்டதால் இன்று அந்த பாடல்கள் பிரபலமடைந்து வருகிறது.

    தற்போது சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் தமிழார்வலர்கள் நாகை சகோதரிகள் ஸ்ரீசக்தி, ஸ்ரீமதி பாடல்களை கேட்டு பரவசமாகி அவரது தந்தையை செல்போனில் அழைத்து பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

    இதற்கிடையே சிங்கப்பூர் தமிழ்சங்கம் நாகை சகோதரிகள் இசை நிகழ்ச்சியை தீபாவளி அன்று சிங்கப்பூரில் நடத்த முன் வந்துள்ளது. இதுபற்றி நாகை சகோதரிகளின் தந்தை செல்வகுமார் கூறியதாவது:- எனது மகள்களுக்கு சினிமாவில் பாட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. நான் பொருளாதார சூழ்நிலை காரணமாக அவர்களுக்கு முறையான சங்கீத பயிற்சி அளிக்கவில்லை. இருந்த போதிலும் குயில் தானாக பாடுவது போல் அவர்களும் பாடுகிறார்கள். இசை கற்காததால் அவர்களுக்கு எந்த தடையும் இல்லை. முறையாக பயிற்சி பெறாதவர்கள் இனிமையாக பாடுவது இறைவனின் வரம் என்றே நினைக்கிறேன்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் பிரின்ஸ் காட்ஸ் குழந்தைகள் நிறுவனம் தலைவர் குமரேசன் என்பவர் என்னை போனில் தொடர்பு கொண்டார். வலைத்தளங்களில் வலம் வரும் ஸ்ரீசக்தி- ஸ்ரீமதி சகோதரிகளின் பாடல்களை கேட்டு லதா ரஜினி காந்த் மகிழ்ந்ததாகவும், அவர்களை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

    எனது மகள்கள் பாடிய பாடல்கள் பிரபலமாகி வருவதால் அவர்கள் விரைவில் சினிமாவிலும் பாடி சாதனை படைப்பார்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    Next Story
    ×