என் மலர்
காஞ்சிபுரம்
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று நள்ளிரவு 12.20 மணிக்கு விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
அப்போது சென்னையை சேர்ந்த அயூப்கான் என்ற பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.
அவரது உடமைகளை சோதனை செய்த போது அதில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பிடிபட்டது.
அவர் சுற்றுலா விசாவில் சிங்கப்பூர் செல்ல முயன்றார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு பாங்காக் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் ஏற வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சென்னையை சேர்ந்த பயணியை சோதனை செய்த போது அவர் சுற்றுலா விசா வைத்திருந்தார். அவர் வைத்திருந்த கைப்பையில் ரூ.3 லட்சம் வெளிநாட்டு பணம் பிடிபட்டது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடந்தது.
புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று தி.மு.க. போராட்டத்தை அறிவித்து உள்ளது. அந்த போராட்டத்தில் புதுவை காங்கிரஸ் கலந்து கொள்ளும். நானும் பங்கேற்பேன்.
2 ஆண்டுக்கு நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்று புதுவை மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம். தமிழக பாடத்திட்டம் தான் புதுவையில் நடத்தப்படுகிறது.
எனவே நீட் தேர்வில் புதுவை மாநிலத்துக்கும் விலக்கு வேண்டும். இது குறித்து நேற்று கூட மத்திய நிதி மந்திரி மற்றும் சுகாதார மந்திரியிடம் பேசி இருக்கிறேன்.

புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பற்றி எனக்கோ, என் அரசுக்கோ தனிப்பட்ட விருப்பு வெறுப்பு கிடையாது. புதுவை மாநிலத்துக்கு என்று யூனியன் பிரதேச சட்டம் உண்டு. அதற்கு உட்பட்டு நடந்தால் வரவேற்போம். விதிமுறை மீறி நடந்தால் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட எங்கள் அரசு மாநில உரிமையை நிலை நாட்டும்.
டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு மத்திய அரசு பல்கலைக்கழகத்தில் எம்.பி-ல் மற்றும் பி.எச்.டி. படிப்புக்கு மாணவர்கள் இந்தியில்தான் விண்ணப்பம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இது முழுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று. மத்திய அரசு இந்தி திணிப்பு வேலையை மறைமுகமாக செய்ய திட்டமிட்டு வருகிறது. இதனை நிறுத்தி கொள்ள வேண்டும்.
வந்தே மாதரம், தேசிய கீதம் பாடுவதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் உள்ளன. பருவமழை பொய்த்ததால் ஏரி, குளங்களில் நீர் இருப்பு குறைந்து உள்ளது.
சோழவரம், புழல் ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்டன. தற்போது பூண்டி ஏரியில் 20 மில்லியன் கன அடி தண்ணீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 81 மில்லியன் கன அடி தண்ணீரும் உள்ளது.
பூண்டி ஏரியில் உள்ள தண்ணீரை சென்னை குடிநீருக்கு அனுப்ப முடியாததால் கடந்த மாதமே தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து குடிநீர் வாரிய அதிகாரிகள் மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள 22 கல்குவாரி நீர் மற்றும் போரூர் ஏரி தண்ணீரை சுத்திகரித்து வினியோகித்து வருகின்றனர். இதனால் தண்ணீர் தட்டுப்பாட்டை அதிகாரிகள் ஓரளவு சமாளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தாம்பரத்தை அடுத்த எருமையூரில் உள்ள 5 கல்குவாரிகளில் தேங்கி நிற்கும் மழை நீரை குடிநீருக்கு பயன்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக அந்த கல்குவாரி தண்ணீரை பரிசோதனைக்காக கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டியூட்டுக்கு அனுப்பி வைத்தனர். சோதனை முடிவில் அந்த தண்ணீரை சுத்தகரித்து குடிநீருக்கு பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதைதொடர்ந்து 5 கல்குவாரிகளில் தேங்கி நிற்கும் நீரை பைப் லைன் மூலம் எவ்வாறு கொண்டு வருவது எனவும், அதனை சுத்திகரித்து பொது மக்களுக்கு வினியோகிப்பது தொடர்பாகவும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
சிக்கராயபுரம் கல் குவாரிகளில் இருந்து செப்டம்பர் முதல் வாரம் வரை மட்டுமே தண்ணீரை எடுக்க முடியும். இதன் பின்னர் சென்னைக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவு குறையும் நிலை உருவாகும்.
எனவே எருமையூர் கல்குவாரிகளில் இருந்து விரைந்து தண்ணீர் எடுப்பதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணி 2 மாதத்தில் முடிவடையும் என்று தெரிகிறது.
இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறும் போது, “தண்ணீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு குவாரிகளில் இருந்து தண்ணீரை சுத்திகரித்து அனுப்பி வருகிறோம்.
எருமையூரில் உள்ள குவாரிகளில் 1000 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெற முடியும். இதற்கான பணி நடைபெற உள்ளது” என்றார்.
சோழிங்கநல்லூர்:
சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் இன்று காலை மீத்தேன் திட்டத்தை எதிர்த்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திடீரென்று சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீத்தேன் திட்டத்தை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினார்கள். தகவல் அறிந்து போலீசார் அங்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படாததால் அனைவரும் கலைந்து செல்லும்படி கூறினர்.
ஆனால் மாணவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டப்படி கோஷம் எழுப்பினார்கள். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். மொத்தம் 45 பேர் கைது செய்யப்பட்டனர்.
பூந்தமல்லி:
வண்டலூர் அடுத்த ரத்தினமங்கலத்தில் உள்ள குபேரன் கோவிலில் பூ விற்கும் பெண்கள் 9 பேர் இன்று அதிகாலை லோடு ஆட்டோவில் கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு சென்றனர்.
லோடு ஆட்டோவை ராஜசேகர் என்பவர் ஓட்டினார். ஆட்டோ உரிமையாளர் மணிகண்டன் உடன் சென்றார்.
காலை 5 மணிக்கு மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. குன்றத்தூர் அருகே துரைபாக்கத்தில் சாலையோர சிமெண்ட் கலவை லாரி நின்று கொண்டிருந்தது.
அப்போது வேகமாக வந்த ஆட்டோ எதிர்பாராத விதமாக லாரி மீது மோதியது.
இதில் ஆட்டோ பின்புறம் அமர்ந்திருந்த பெண்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். டிரைவர் ராஜசேகர், மணிகண்டன் ஆகியோரும் காயம் அடைந்தனர். சுஜாதா என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அப்பகுதி மக்கள் விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சில் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி தமிழ் அரசி, வசந்தி ஆகியோர் இறந்தனர்.
அம்மலு, முத்தழகி, ராஜேஸ்வரி, டில்லிமா, பொன்னி, டிரைவர் ராஜேசேகர், மணிகண்டன் உள்பட 8 பேர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிமெண்ட் கலவை லாரியை சாலையோரம் நிறுத்திருந்த நாமக்கல்லைச் சேர்ந்த டிரைவர் செந்தில்குமாரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த களக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி என்கிற ராஜசேகர் (வயது 45). விவசாயி.
இவரது தங்கை தன லட்சுமி. இவர் கணவர் பாலாஜியுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். பாலாஜிக்கும், ராஜ சேகருக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது.
மேலும் பணம், கொடுக்கல்-வாங்கலிலும் பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.
இன்று காலை ராஜசேகர் அதே பகுதியில் உள்ள வயலில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த பாலாஜி சொத்து பிரச்சினை குறித்தும், பணம் குறித்தும் கேட்டார். அப்போது 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த பாலாஜி அருகில் கிடந்த கம்பியால் ராஜசேகரை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து மாகரல் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் குமார் மற்றும் போலீசார் பாலாஜியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தம் குறித்து 9-வது கட்ட பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார்.
இதில் கூடுதல் தலைமை செயலாளர் பி.டபில்யூ.தேவிதார், நிதித்துறை கூடுதல் செயலாளர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 47 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 94 பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர்.
அப்போது கல்வி முன்பணம், கல்வி உதவித்தொகை, திருமண கடன் தொடர்ந்து வழங்கப்படும். தையற்கூலி, இரவு படி உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டம் முடிந்தபின்னர், அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தொழிற்சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து அடுத்தகட்ட (10-வது கட்ட) பேச்சுவார்த்தை கூட்டத்தில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை நிறைவு செய்வது என முடிவு செய்து இருக்கிறோம். ஊதிய உயர்வு சதவீதத்தில் வேறுபாடு உள்ளது. அதுகுறித்து துணைக்குழு கூடி முடிவு செய்து, முதல்-அமைச்சரிடம் ஒப்புதல் பெற்று அறிவிக்கப்படும்.
ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ரூ.1,250 கோடி நிலுவைத்தொகை வழங்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள தொகை வரும் செப்டம்பர் மாதம் கணக்கிட்டு வழங்கப்படும்.
தமிழகத்தில் மட்டும் தான் குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவையை போக்குவரத்து கழகம் மேற்கொள்கிறது. தமிழகத்தில் மூலைமுடுக்கெல்லாம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பேட்டரி பஸ்களுக்கு முதலீடு அதிகம். பேட்டரி பஸ்கள் மிக விரைவில் இயக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் சவுந்திரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கல்விக்கடன், கல்வி உதவித்தொகை, திருமண கடன், சீருடை போன்ற அறிவிப்புகள் புதியவை அல்ல. ஏற்கனவே தருவோம் என்று சொல்லி தராமல் இருந்தவை தான். இது எந்த விதத்திலும் அரசின் சாதனை என்று சொல்ல முடியாது.
ஊதிய உயர்வு தொடர்பாக முடிவு எட்டப்பட வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சீபுரம்:
மத்திய அரசு பட்டுச் சேலைகள் மீது 5 சதவீதமும், பட்டுச் சேலை தயாரிப்பிற்கு பயன்படும் மூலப் பொருளான கோறாவிற்கு 5 சதவீ தமும், தூய ஜரிகைக்கு 12 சதவீதம் என தற்போது 22 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது.
இதற்கு முன்பு வரிவிதிப்பு ஏதும் இல்லாத நிலையில் தற்போது 22 சதவீதம் புதிதாக வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி விதிப்பினை கண்டித்து காஞ்சீபுரத்தில் இன்று தனியார் பட்டுச் சேலை விற்பனைக் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பட்டுச் சேலை எடுக்க வந்த வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர்.
நகரம் முழுவதும் சுமார் 300-க்கும் மேற்பட்ட தனியாருக்குச் சொந்தமான பட்டுச் சேலை விற்பனைக் கடைகள் அடைக்கப்பட்டதால் பல கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
தனியார் பட்டுச் சேலை விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் ஒய்.எம்.நாராயணசாமி தலைமையில் பட்டுச் சேலை விற்பனையாளர்கள் ஏராளமானோர் ஜி.எஸ்.டி. வரி விதிப்பினை திரும்பப் பெற வலியுறுத்தி காஞ்சீபுரம் காந்தி ரோடு தேரடியில் இருந்து மூங்கல் மண்டபம் வரை மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர்.
இதில் வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். போராட்டம் குறித்து தனியார் பட்டுச் சேலை விற்பனையாளர் கூறியதாவது:-
ஏற்கனவே நெசவுத் தொழில் மிகவும் நசிந்து போய் உள்ளது. இதற்கு முன்னர் பட்டுச் சேலைகளுக்கோ அதனை தயாரிக்க பயன்படும் கோரா, ஜரிகை போன்றவற்றிற்கோ வரி ஏதும் இல்லாது இருந்தது,
தற்போது மத்திய அரசு 22 சதவீதத்தினை ஜி.எஸ்.டி. வரியாக விதித்துள்ளது. இது நெசவுத் தொழிலின் அழிவிற்கே வழிவகுக்கும். எனவே மத்திய அரசு உடனடியாக இந்த வரிவிதிப்பினை திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
காமாட்சியம்மன் கோயில் அருகே அமைந்துள்ள கோமதி சில்க்ஸ் உரிமையாளர் தாமோதரன் கூறும் போது, “நகருக்கு உலகபுகழ் சேர்க்கும் காஞ்சீபுரம் பட்டு சேலைக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பெருமளவிலான விற்பனை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
கடை உரிமையாளர்கள் மட்டுமின்றி கடையில் பணிசெய்யும் பல்லாயிரக்கணக்கானோர் விற்பனை குறைவினால் கடும் பாதிப்பு அடைவர்.
எனவே பல்வேறு விதங்களிலும் இன்னல்களை விளைவிக்கும் இந்த ஜி.எஸ்.டி. வரிவிதிப்பினை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்” என்று தெரிவித்தார்.
துபாயில் இருந்து சென்னை வரும் பயணிகள் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்று காலை 6 மணியளவில் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் இறங்கிய பயணிகளை கண்காணித்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வாலிபரை தனியாக அழைத்து விசாரணை நடத்தினர். அவரது உடமைகளை சோதனை செய்தபோது எதுவும் சிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து அவர் பயணம் செய்த விமானத்தின் இருக்கையை சோதனையிட்டனர். அப்போது இருக்கை கிழிக்கப்பட்டு அதன் அடியில் 100 கிராம் எடையில் 30 தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 3 கிலோ தங்கம் இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தங்கம் கடத்தி வந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவரைப் பற்றிய விபரத்தை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
பிடிபட்ட வாலிபர் கடத்தல் தங்கத்தை இருக்கையின் கீழ் மறைத்து வைத்து வந்து இருப்பது மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரிகளின் சோதனை குறித்து முன் கூட்டியே அவருக்கு யாரேனும் தகவல் தெரிவித்து இருக்கலாம் என்று கருதுகிறார்கள்.
எனவே விமான நிலைய ஊழியர்கள் தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தனரா? என்ற கோணத்திலும் ரகசிய விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
காஞ்சீபுரம் அடுத்து முத்தியால்பேட்டை பகுதியில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட புரட்சிதலைவி அம்மா அணியின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மற்றும் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மைத்ரேயன் எம்பி., தலைமை வகித்தார்.
கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-
மக்களின் ஆதரவினை பெருவாரியாக பெற்று ஆட்சி நடத்திய ஜெயலலிதாவின் பெயரால் நடைபெறுகின்ற தற்போதைய ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் பரவிக்கிடக்கிறது. இதனால் எம்.ஜி.ஆர். உருவாக்கி ஜெயலலிதாவால் கட்டி காப்பாற்றப்பட்ட இயக்கத்திற்கு அவப்பெயர் உண்டாகி உள்ளது.
நடிகர் கமல் ஒரு தமிழர் அவர் நம்மில் ஒருவர் அரசின் ஊழலை பற்றி
பேச அனைவருக்கும் உரிமை உண்டு. அரசினை பற்றி கமல்ஹாசன் உள்ளிட்ட யாரும் விமர்சனம் செய்யலாம். அதற்கு உரிய முறையில் விளக்கம் அளிக்க வேண்டுமே தவிர தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்த விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். யாரையும் மிரட்டுவது அரசின் வேலை அல்ல.
நீட் தேர்வின் மூலம் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் பாதிப்படையும் காரணத்தினால் இத்தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு உறுதியான முடிவை மேற்கொள்ள வேண்டும்.
அணிகள் இணைய வேண்டுமென பேசுபவர்கள் எங்களை கிண்டல் கேலி செய்யும் விதமாக பேட்டிகள் அளிப்பது அதிகாரம் எங்கள் கையில் உள்ளது என்ற ஆணவத்துடன் செயல்படுவது என்பது அவர்களின் கபட நாடகத்தையே காட்டுகிறது.
உண்மையான அ.தி.மு.க. என்பது நாங்கள்தான் என்பதை இங்கு பல்லாயிரக்கணக்காண அளவில் பாசத்துடன் கூடியுள்ள புரட்சித்தலைவர் மீதும் அம்மா மீதும் பாசம்கொண்டு திரண்டுள்ள பெண்களே சாட்சி.
பணம் அவர்கள் பக்கம் இருந்தாலும் பாசம் நம் பக்கம் தான் உள்ளது. நாளைய அரசியல் வரலாறு உங்கள் ஒத்துழைப்புடன் நிச்சயம் மாறும். ஊழல் மலிந்த இந்த ஆட்சி அகற்றப்பட்டு உண்மையான அ.தி.மு.க. ஆட்சி மலரும்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா வரும் அக்டோபர் மாதம் 17-ந் தேதி சென்னையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உறுதியளித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் எம்ஜிஆருயுடன் கலைத்துறையில் பணியாற்றியவர்களு மூத்த கழக தொண்டர்களும் கவுரவிக்கப்படுவார்கள்.
அணிகள் இணைய அம்மாவின் மரணம் குறித்து நீதிவிசாரணை வேண்டும் என்ற எங்கள் நிபந்தனை அப்படியே தான் உள்ளது.
அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அம்மாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து எந்தவிதமான விசாரணைக்கும் தயார் என அறிவித்த பிறகும் அது குறித்த நீதி விசாரணைக்கு உத்தரவிட எடப்பாடியின் அரசு தயங்குவது ஏன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மதுசூதனன், பொன்னையன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், ம.பா.பாண்டியராஜன், செம்மலை, ஜே.சி.டி.பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊரப்பாகத்தை சேர்ந்தவர் கணேஷ். இவரது மகள் நேத்ராஸ்ரீ (வயது 13). மாம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தங்கை ரோஷினி (9).
அதே பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை அக்காள்- தங்கை இருவரும் பள்ளி வேனில் சென்றனர். உடன் மேலும் 11 மாணவிகள் இருந்தனர்.
மாம்பாக்கத்தை அடுத்த வெங்கம்பாக்கம் கூட்டு ரோடு அருகே வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் சென்றபோது முன்னால் சென்ற லாரியை வேன் டிரைவர் முந்தி செல்ல முயன்றார். அப்போது லாரி மீது திடீரென வேன் உரசியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இதில் மாணவி நேத்ராஸ்ரீ பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது தங்கை ரோஷினி உள்பட 12 மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.
விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அக்கம் பக்கத்தினர் காயமடைந்த மாணவிகளையும், வேன் டிரைவரையும் மீட்டு மாம்பாக்கம், கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேன் டிரைவரிடம் தாழம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தை அடுத்த மானாம் பதியை சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 20). இவர் இன்று அதிகாலை நண்பர்கள் 2 பேருடன் மோட்டார் சைக்கிளில் திருக்கழுக்குன்றம் நோக்கி சென்றார்.
எச்சூர் அருகே வந்த போது திருக்கழுக்குன்றத்தில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது.
இதில் சம்பவ இடத்திலேயே ஜஸ்டின் உள்பட 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல் பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பலியான மற்ற 2 பேரின் விபரம் உடனடியாக தெரிய வில்லை. அவர்கள் அனுமந்த புத்தேரி பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.
இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






