என் மலர்
செய்திகள்

காஞ்சீபுரத்தில் சொத்து தகராறில் விவசாயி கொலை: தங்கை கணவர் கைது
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த களக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி என்கிற ராஜசேகர் (வயது 45). விவசாயி.
இவரது தங்கை தன லட்சுமி. இவர் கணவர் பாலாஜியுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். பாலாஜிக்கும், ராஜ சேகருக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது.
மேலும் பணம், கொடுக்கல்-வாங்கலிலும் பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.
இன்று காலை ராஜசேகர் அதே பகுதியில் உள்ள வயலில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த பாலாஜி சொத்து பிரச்சினை குறித்தும், பணம் குறித்தும் கேட்டார். அப்போது 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த பாலாஜி அருகில் கிடந்த கம்பியால் ராஜசேகரை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து மாகரல் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் குமார் மற்றும் போலீசார் பாலாஜியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






