என் மலர்
காஞ்சிபுரம்
மதுராந்தகத்தை அடுத்த அச்சரப்பாக்கம், கன்னிமேடு இருளர் காலனி உள்ள அரசு தொகுப்பு வீட்டில் வசித்து வந்தவர் அய்யம்மாள். கணவரை இழந்த இவர் தனியாக வசித்து வந்தார்.
இவரது மகன் குமார் அருகில் உள்ள மற்றொரு வீட்டில் தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்றிரவு அய்யம்மாள் வீட்டை பூட்டி விட்டு தூங்கினார். அதிகாலை 2 மணியளவில் அப்பகுதியில் திடீரென பலத்த மழை கொட்டியது.
இடி தாக்கியதில் அய்யம்மாளின் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அய்யம்மாளின் உடலை மீட்டனர். அச்சரப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “இப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட அரசு தொகுப்பு வீடுகள் உள்ளன. அனைத்தும் இடியும் நிலையில் உள்ளது.
இதனை சீர்செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றி இருந்தால் வீடு இடிந்து உயிர் பலி ஏற்பட்டு இருக்காது. மேலும் வீடுகள் இடிந்து விழுவதற்குள் அதனை சரி செய்ய வேண்டும்” என்றனர்.
மதுராந்தகம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக 15 செ.மீ. மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
தோகாவில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் மதுரையை சேர்ந்த முகமது இப்திகார் பயணம் செய்தார். இவர் துபாயில் கடந்த 4 ஆண்டுகளாக டிரைவர் வேலை பார்த்தார். சொந்த ஊருக்கு வருவதற்காக துபாயில் இருந்து விமானத்தில் பயணம் செய்தார்.
இரவு பயணிகளுக்கு உணவு பரிமாறப்பட்டது. அப்போது முகமது இப்திகார் எழுந்து கழவறைக்கு சென்று சிகரெட் புகைத்தார். இதனால் அபாய சிக்னல் காட்டியது. உடனே கழிவறையில் புகை வருவதை பார்த்த விமான ஊழியர்கள் முகமது இப்திகாரிடம், விமானத்தில் புகை பிடிக்க கூடாது என்று கூறினர்.
ஆனால் அவர் விமான ஊழியர்களிடம் தான் புகை பிடிக்கவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நள்ளிரவு விமானம் சென்னையில் தரையிறங்கியதும், விமான நிலைய போலீசில் ஊழியர்கள் புகார் செய்தனர்.
இதையடுத்து முகமது இப்திகாரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினர். அவர் மீது விமானத்தில் தகராறு செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தை சேர்ந்தவர் ரமேஷ் (26). ரவுடியான இவர் மீது நம்பேடு போலீசில் இரட்டை கொலை வழக்கு உள்ளது. இவர் கம்பெனிகளில் மீதமாகும் பழைய உணவை காண்டிராக்டர் எடுத்து அவற்றை பன்றி வளர்ப்பவர்களுக்கு விற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே தில்லைபாக்கத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட ரமேசிடம் வேலை பார்த்த ராஜூ கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த சரத்குமார், சாந்த குமார், திருநாவுக்கரசு, தாஸ், விஜயகாந்த், ரகுபதி, வினோத், காத்தவராயன், தொடுகாடு பகுதியை சேர்ந்த ஸ்டீபன் ஆகிய 10 பேரை கைது செய்தார். தொழில் போட்டி காரணமாக ரமேசை கொலை செய்ததாக இவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
காஞ்சீபுரத்தில் பழமை வாய்ந்த தொண்டை மண்டல ஞானபிரகாச மடத்தின் 232-வது மடாதிபதியாக ஞானபிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆதீனமாக பொறுப்பேற்று 18 வருடங்கள் ஆகிறது. இந்த மடத்திற்கு பல ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துகள் உள்ளன.
கடந்த சில மாதங்களாக ஞானபிரகாச மடத்தில் பெங்களூருவை சேர்ந்த பிடதி ஆசிரம நித்யானந்தாவின் சீடர்கள் சிலர் வந்து தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள், அங்கு சிவலிங்க பூஜையை மாற்றி, நித்யானந்தா பூஜையை செய்து வருவதாகவும், மடத்தின் சொத்துகளையும், நிர்வாகத்தையும் கைப்பற்ற முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த தொண்டை மண்டல முதலியார்கள் சங்க அமைப்பினர் மடாதிபதியிடம் சென்று கேட்டதற்கு, இதுகுறித்து பேச கடந்த 30-ந் தேதி மாலை வருமாறு அவர் அழைப்பு விடுத்திருந்தார். இதற்காக முதலியார் அமைப்பினர் சென்றபோது, மடத்தின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. மடாதிபதியும், நித்யானந்தாவின் சீடர்களும் அங்கு இல்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள், மடாதிபதி ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை, நித்யானந்தா சீடர்கள் கடத்தி இருக்கலாம் என்றும், அவரை மீட்டு தர வேண்டும் எனவும் பெரிய காஞ்சீபுரம் போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரவணன், அந்த மடத்தில் தங்கி இருந்த நித்யானந்தா சீடர்களிடம் விசாரணை நடத்தினார். மடாதிபதியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, என்னை யாரும் கடத்தவில்லை, சமய சொற்பொழிவு ஆற்றவே பெங்களூரு பிடதி மடத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து காஞ்சீபுரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி தலைமையில் அதிகாரிகள் மடத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்தநிலையில் ஞானபிரகாச தேசிக பரமாச்சாரியா சுவாமிகள் நேற்று மாலை திடீரென பெங்களூருவில் இருந்து பெரிய காஞ்சீபுரம் தொண்டை மண்டல ஆதீன மடத்திற்கு திரும்பினார்.
இதற்கிடையே, தொண்டைமண்டல முதலியார் அமைப்புகள் வரும் 4-ந்தேதி காந்திரோடு பெரியார் தூண் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தவும், 7-ந்தேதி காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணாவிரதம் இருக்கவும் பெரிய காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் அனுமதி கேட்டு மனு அளித்தனர்.
சென்னை, முகப்பேர் மேற்கு, நொளம்பூர், கோல்டன் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் வில்சன் (வயது 68). ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர். இவர் கடந்த 2015-ம் ஆண்டு தனது மகளை மருத்துவக்கல்லூரியில் சேர்க்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது குமரி மாவட்டம் நாகர்கோவில், வடசேரி கிராமம், பள்ளவிளை, அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வமணி என்பவரது மனைவி செல்லதங்கம் (45) என்பவர், நண்பர் ஒருவர் மூலம் வில்சனுக்கு அறிமுகமானார்.
சென்னை குரோம்பேட்டை பகுதியில் செல்லதங்கத்தை சந்தித்து வில்சன் பேசினார். அப்போது செல்லதங்கம் ரூ.30 லட்சம் தந்தால் தனியார் மருத்துவக்கல்லூரியில் உங்களது மகளை சேர்த்து விடுவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய வில்சன் ரூ.30 லட்சத்தை குரோம்பேட்டை பகுதியில் வைத்து செல்லதங்கத்திடம் கொடுத்துள்ளார். ஆனால் பேசியபடி அவர் மருத்துவக்கல்லூரியில் சேர்த்து விடவில்லை.
இது தொடர்பாக வில்சன், செல்லதங்கத்தை சந்தித்து கேட்டபோது அவர் ரூ.19 லட்சத்து 40 ஆயிரத்தை மட்டும் வில்சனிடம் திரும்ப கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.10 லட்சத்து 60 ஆயிரத்தை நீண்ட நாட்களாக கொடுக்காமல் மோசடி செய்து விட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து வில்சன் குரோம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லதங்கத்தை தேடி வந்தனர்.
இந்த நிலையில் செல்லதங்கத்தை நேற்று முன்தினம் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
பெரிய காஞ்சீபுரம் பரமசிவம் தெருவில் பழமை வாய்ந்த தொண்டை மண்டல ஆதீனம் மடம் உள்ளது.
இந்த மடத்தின் 232-வது பட்டம் மடாதிபதியாக ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 18 ஆண்டுகளாக உள்ளார்.
மடத்துக்கு தமிழகம் முழுவதும் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. மேலும் விலை மதிக்க முடியாத மரகத லிங்கமும், பாண லிங்கமும் மடத்தில் உள்ளது.
கடந்த சில மாதங்களாக மடத்தில் பெங்களூரில் உள்ள பிடதி ஆசிரமத்தின் நித்யானந்தா சாமியாரின் சீடர்கள் சிலர் தங்கி இருந்து பூஜைகள் செய்தனர். அவர்கள் பாரம்பரியமான சிவலிங்க பூஜையை மாற்றி, நித்யானந்தா பூஜை செய்து வந்ததாக தெரிகிறது.
இதனை அறிந்த தொண்டை மண்டல முதலியார்கள் சங்க அமைப்பினர் மடாதிபதியிடம் கேட்டனர். இது குறித்து பேசுவதற்கு நேற்று முன்தினம் மாலை வரும் படி அவர் கூறி இருந்தார்.
முதலியார் சங்க அமைப்பினர் சென்ற போது மடத்தின் கதவுகள் பூட்டப்பட்டு இருந்தது. மேலும் மடாதிபதியும் மாயமாகி இருந்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த முதலியார் சங்க அமைப்பினர், “மடத்தின் சொத்துக்களை அபகரிக்க மடாதிபதியை நித்யானந்தா சீடர்கள் கடத்தி சென்று உள்ளனர். அவரை மீட்க வேண்டும் என்று பெரிய காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரவணன் மடத்துக்கு சென்று அங்கிருந்த நித்யானந்தா சீடர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது மடாதிபதி குறித்து சில தகவல்கள் கிடைத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் மாயமான மடாதிபதி பெங்களூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.
அவரிடம் பெரிய காஞ்சீபுரம் இன்ஸ்பெக்டர் சரவணன் (பொறுப்பு) தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். அப்போது இங்குள்ள நிலைமை குறித்து அவர் விளக்கியதாக தெரிகிறது.
இது குறித்து இன்ஸ்பெக்டர் சரவணனிடம் கேட்ட போது கூறியதாவது:-
பெங்களூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் மாயமான மடாதிபதி தங்கி இருக்கிறார். அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளேன்.
அப்போது நலமாக இருப்பதாக மடாதிபதி தெரிவித்தார். மேலும் பெங்களூர் நித்யானந்தா ஆசிரமத்தில் ஒரு சொற்பொழிவுக்காக வந்துள்ளேன் என்றும் கூறினார்.
வருகிற 4-ந் தேதி காஞ்சீபுரம் திரும்பி வந்தவுடன் விபரங்களை தெரிவிப்பதாக கூறி இருக்கிறார். அவர் வந்த உடன் விசாரணை நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து முதலியார் சங்க அமைப்பினர் கூறும்போது, “2 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்து உடைய ஆதீனத்தை கைப்பற்றினால் தனக்கு எதிர்ப்பு ஏதும் வராது என்று நித்யானந்தா நினைத்து உள்ளார். ஆனால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் ஆதீனத்தை பெங்களூரு கொண்டு சென்று பேட்டிகள் கொடுக்க வைத்து எதிர்ப்பினை அடக்க நித்யானந்தா முயற்சி செய்கிறார்” என்று குற்றம் சாட்டினர்.
மாயமான மடாதிபதி பெங்களூர் நித்யானந்தா ஆசிரமத்தில் இருக்கும் சம்பவம் காஞ்சீபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பரம்:
பிராட்வே சேவியர் தேருவை சேர்ந்தவர் இக்பால் (வயது 48). இவர் குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் பிரியாணி கடை வைத்து இருந்தார்.
நேற்று இரவு அவர் வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிகளில் வீட்டுக்கு புறப்பட்டார்.
குரோம்பேட்டை, மேம்பாலத்தில் எதிர்ப்புறமாக வந்த போது வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
தூக்கி வீசப்பட்ட இக்பால் 30 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து குரோம் பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த அனகாபுத்தூரை சேர்ந்த டாக்டரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சீபுரம், பரமசிவன் தெருவில் பழமை வாய்ந்த தொண்டைமண்டல ஆதீனம் ஞானபிரகாச மடம் உள்ளது.
இந்த மடத்தின் 232-வது பட்டம் மடாதிபதியாக ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார். இவர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஆதீனமாக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.
மடத்துக்கு சென்னை, காஞ்சீபுரம், திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுமார் ரூ.2000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பெங்களூரை சேர்ந்த நித்யானந்தா சீடர்களான ஒரு ஆணும், பெண்ணும் மடத்துக்குள் வந்தனர். அவர்கள் மடாதிபதிக்கு பணிவிடையும், சேவையும் செய்வதாக கூறி இருந்தனர்.
இதற்கிடையே மடத்தில் உள்ள மரகதத்திலான சிவலிங்கத்துக்கு பாரம்பரிய பூஜை முறைகளை நித்யானந்தா சீடர்கள் மாற்றி அமைத்ததாக தெரிகிறது. மேலும் நித்யானந்தா பெயரைச் சொல்லி பூஜை நடப்பதாக கூறப்படுகிறது. இதே போல மடத்துக்கு வரும் பக்தர்களுக்கு நித்யானந்த சீடர்கள் ஆசி வழங்கியும் வந்தனர்.
இது குறித்து அறிந்த தொண்டை மண்டல முதலியார்கள் சங்க அமைப்பினர் மடாதிபதியிடம் கேட்டனர். இது பற்றி பேசுவதற்காக வரும்படி அவர் கூறி இருக்கிறார்.
நேற்று மாலை முதலியார் சமூகத்தினர் சென்ற போது மடத்தின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. மடாதிபதியும், நித்யானந்த சீடர்களும் மாயமாகி இருந்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த தொண்டை மண்டல முதலியார்கள் அமைப்பினர் பெரிய காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதில் மடாதிபதி ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமி, நித்யானந்த சீடர்களால் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறி இருந்தனர்.
மாயமான மடாதிபதி எங்கே இருக்கிறார் என்பது மர்மமாக உள்ளது. அவர் பயன்படுத்தி வந்த செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்கிறது. மடத்திலிருந்த நித்யானந்தா சீடர்கள் பற்றிய விவரங்களும் போலீசாருக்கு தெரியவில்லை.
இதனால் மடாதிபதியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் இது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து தொண்டை மண்டல முதலியார்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
பாரம்பரியமான மடத்தை விட்டு நித்யானந்தா சீடர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள். மடத்திற்கு சொந்தமான ரூ.2000 கோடி சொத்துக்களை நித்யானந்தா சீடர்கள் அபகரிக்க முயற்சி செய்கிறார்கள். மாயமான மடாதிபதியை மீட்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் காஞ்சீபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
சோழிங்கநல்லூர்:
திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் தில்வார் உசேன் (வயது 38). இவர் நண்பர்கள் சித்திக் பியா, சுமன் ஆகியோருடன் சோழிங்கநல்லூர் நேரு நகர் லட்சுமி தெருவில் உள்ள வாடகை வீட்டில் தங்கி இருந்தார்.
இவர்களில் தல்வார் உசேன் ஓட்டலிலும், சித்திக்பியாவும், சுமனும் வெல்டிங் கம்பெனியிலும் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு வாடகை கொடுக்க வில்லை என்று தெரிகிறது. இதையடுத்து வாடகை பணம் பிரிப்பது குறித்து நேற்று இரவு நண்பர்கள் 3 பேரும் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது தல்வார் உசேனுக்கும், சித்திக்பியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சித்திக்பியா அருகில் கிடந்த கத்தியால் தல்வார் உசேனை குத்தினார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். உடனே சித்திக் பியா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தல்வார்உசேன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் சோழிங்கநல்லூர் பகுதியில் பதுங்கி இருந்த சித்திக்பியாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
தாம்பரம்:
தாம்பரத்தை அடுத்த கடப்பேரி, அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் கோபிநாதன், தாம்பரம் நகராட்சி முன்னாள் துணைத் தலைவர். தற்போது அ.தி.மு.க. நகர பேரவை செயலாளராக உள்ளார்.
இவர் அதே பகுதியில் கட்சி அலுவலகம் வைத்து உள்ளார். நேற்று இரவு அலுவலகம் அருகில் உள்ள கொட்டகையில் காரை நிறுத்தி இருந்தார்.
இந்நிலையில் நள்ளிரவு திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென கொட்டகையிலும் பரவி தீப்பற்றியது.
அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தாம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் கொட்டகையும், காரும் முற்றிலும் எரிந்து நாசமானது.
காரில் பெட்ரோல் டேங்க் உடைக்கப்பட்டு இருந்தது. மர்மக்கும்பல் பெட்ரோல் டேங்கை உடைத்து தீவைத்து இருக்கலாம் என்று தெரிகிறது.
கோபிநாதன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தொழில் போட்டியில் கார் தீவைக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவருக்கு ஏற்கனவே கொலை மிரட்டல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீபெரும்புதூர்:
திருவள்ளூரை அடுத்த தாமரைப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ரமேஷ் (வயது 30).
இவர் திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் உணவு கழிவுகளை வாங்கும் தொழில் செய்து வந்தார்.
நேற்று மாலை ரமேஷ், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கம் கிராமத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 2012-ம் ஆண்டு மப்பேடு பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் ரமேசும், அவரது அண்ணன் சுரேசும் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
கடந்த ஆண்டு சுரேஷ் படுகொலை செய்யப்பட்டார். இரட்டை கொலை வழக்கில் அவர் பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் ரமேசும் கொலை செய்யபப்பட்டு இருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவரும் இரட்டை கொலைக்கு பழி வாங்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரமேசிடம், ராஜ் என்பவர் பணிக்கு சேர்ந்துள்ளார். அவருடன் சென்றபோது ரமேஷ் படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
தற்போது ராஜ் தலை மறைவாக உள்ளார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து நேற்று இரவு 10.30 மணிக்கு ஒரு பயணிகள் விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது காரைக்காலை சேர்ந்த ஹஜா இப்ராகிம் (40) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அவரது கைப்பையில் 20 தங்க கட்டிகள் மறைத்து வைத் திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரை தனி அறையில் வைத்து சோதனை செய்த னர். அவரது உடலில் மேலும் 20 தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரிடம் இருந்து மொத்தம் 4 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.
அவரிடம் விசாரித்த போது அவற்றை சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.






