search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "returned"

    • மேட்டூர் அணையிலிருந்தும், பவானிசாகர் அணையில் இருந்தும் காவிரி ஆறு மற்றும் பவானி ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீரால் ஈரோடு மாவட்ட கரையோர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
    • அம்மாபேட்டை, பவானி, ஈரோடு, கருங்கல்பாளையம், கொடுமுடி போன்ற அனைத்து காவிரி ஆற்றிலும் இயல்பு நிலை திரும்பியது.

    ஈரோடு:

    மேட்டூர் அணையிலிருந்தும், பவானிசாகர் அணையில் இருந்தும் காவிரி ஆறு மற்றும் பவானி ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீரால் ஈரோடு மாவட்ட கரையோர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஒரே நேரத்தில் காவிரி ஆறு, பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    குறிப்பாக மேட்டூர் அணையில் இருந்து 2.15 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் அம்மாபேட்டை, பவானி, நெருஞ்சிப்பேட்டை, கருங்கல்பாளையம் காவிரிக்கரை, கொடுமுடி போன்ற கரையோரப் பகுதியில் வசித்த 1,400-க்கும் மேற்பட்ட மக்கள் 14 முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    அதேபோல் பவானிசாகர் அணையில் இருந்தும் 25 ஆயிரம் கன அடி நீர் பவானி ஆற்றுக்கு திறக்கப்பட்டது. பவானி ஆறு, காவிரி ஆற்றில் ஒரே நேரத்தில் உபரி நீர் அதிக அளவில் திறக்கப்பட்டதால் பவானி கூடுத்துறையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பவானி பகுதியில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    இதேப்போல் கொடுமுடியிலும் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.

    இதேப்போல் பவானிசாகர் அணைக்கும் நீர்வரத்து குறைய தொடங்கியது. இதனால் உபரி நீர் திறப்பு குறைந்தது. இதனால் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியது.

    இன்று மேட்டூர் அணையிலிருந்து 45 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து குறைந்தது. இதேபோல் பவானிசாகர் அணைக்கு 5 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைந்தது.

    இதனால் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது வீடுகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

    வீடுகளில் சூழ்ந்த வெல்லம் வடியத் தொடங்கிவிட்டது. எனினும் வீடுகளில் சேரும் சகுதியுமாக காட்சியளிக்கிறது. இதனை பொதுமக்கள் சுத்தம் செய்து வருகின்றனர்.

    அம்மாபேட்டை, பவானி, ஈரோடு, கருங்கல்பாளையம், கொடுமுடி போன்ற அனைத்து காவிரி ஆற்றிலும் இயல்பு நிலை திரும்பியது. தற்போது முகாமில் ஒரு சில மக்களே தங்கியுள்ளனர். அவர்களும் நாளைக்குள் வீடு திரும்பி விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் பணிக்கு திரும்பினர் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி தெரிவித்தார். #JactoGeo
    தர்மபுரி:

    9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தை கைவிட்டு பணியில் சேர வேண்டும் அல்லது சேருவதாக தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்தது.

    இதைத்தொடர்ந்து நேற்று தர்மபுரி மாவட்டத்தில் 95 சதவீதத்துக்கு மேல் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர் என்றும், அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்பட்டதாகவும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி தெரிவித்தார்.

    மேலும், தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதால் யார் மீதும் சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 90 சதவீத ஆசிரியர்கள் வேலைக்கு வந்து விட்டதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி கூறினார்.

    இன்று வேலைக்கு வராத ஆசிரியர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்தார்.  #JactoGeo


    திண்டுக்கல் மாவட்டத்தில் 90 சதவீத அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர். #JactoGeoStrike #TeachersProtest
    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் மாணவர் சமுதாயம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு பணிகள் முடங்கியுள்ளது. எனவே போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

    பணிக்கு வராமல் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு வருகிறார்கள். மறியலில் ஈடுபடுபவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அரசின் கெடுபிடியால் தற்போது ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியவண்ணம் உள்ளனர்.

    இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தகுமார் கூறுகையில்,

    ஆசிரியர்கள் வருகை இல்லாத பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தில் ஈடுபடும் சங்க பொறுப்பாளர்கள் மட்டும் பணிக்கு வரவில்லை. மற்றவர்கள் வந்துவிட்டனர்.

    மாவட்டத்தில் 90 சதவீத அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர் என்றார்.  #JactoGeoStrike #TeachersProtest


    போராட்டம் நடத்திய ஆசிரியர்களில் மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 96 சதவீதம் பேர் இன்று பணிக்கு திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. #JactoGeoStrike #TeachersProtest
    சென்னை:

    அரசு ஊழியர்-ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத சம்பள நிலுவை தொகை, ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

    கடந்த 22-ந்தேதி தொடங்கிய போராட்டம் இன்று 8-வது நாளாக நீடித்தது. ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது.



    போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் இல்லையெனில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது.

    ஆனாலும் அரசின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் போராட்டம் நீடித்து வருகிறது. மாவட்ட தலை நகரங்களில் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போராட்டத்தின் பின்னணியில் இருக்கும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. முதல்கட்டமாக பணிக்கு வராத 400 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    அடுத்த கட்டமாக போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் நியமிக்கும் பணியில் பள்ளி கல்வித்துறை ஈடுபட்டது.

    இதற்காக தமிழ்நாடு முழுவதும் முதன்மை கல்வி அலுவலகங்களில் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    முதுநிலை பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கு படித்து வேலைக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து உள்ளனர்.

    அரசு ஊழியர்கள் போராட்டத்தால் அரசு அலுவலகங்களில் அன்றாட பணிகள் முடங்கி உள்ளன. ஆசிரியர்கள் பணிக்கு வராததால் 65 சதவீத அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.

    10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் திருப்புதல் (ரிவிசன்) தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்டனர். வருகிற 1-ந்தேதி முதல் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்க உள்ளது.

    இதுபோன்ற நிலையில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் மாணவர்களின் கல்வியை கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டது.

    மாணவர்கள் நலன் பாதிக்கப்படுவதால் ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை நேற்றும் எச்சரிக்கை விடுத்தது.

    எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப் மூலமாக முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு பணியில் சேரலாம் என்றும் அவகாசம் அளித்தது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்.

    உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 96 சதவீதம் பேரும், தொடக்கப்பள்ளியில் 70 சதவீதம் பேரும் இன்று பணிக்கு திரும்பியதாக தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

    சென்னையில் மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகள் இன்று வழக்கம் போல செயல்பட்டதாகவும். 99.9 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு வந்திருந்தனர் என்றும் சென்னை முதன்மை கல்வி அதிகாரி திருவளர்செல்வி கூறினார்.

    இதற்கிடையே பணிக்கு வராத ஆசிரியர்களை சஸ்பெண்டு செய்து தற்காலிக ஆசிரியர்களை கல்வித்துறை நியமித்து வருகிறது.

    ஏற்கனவே 400 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட நிலையில் நேற்று தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 602 ஆசிரியர்கள் இன்று சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை கல்வித்துறை பிறப்பித்தது. மொத்தம் 1002 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

    சஸ்பெண்டு நடவடிக்கையை தொடர்ந்து 1002 பணியிடங்களை காலியிடமாக அறிவித்து அவற்றுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

    சென்னையில் 3 இடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரம் பேர் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து உள்ளனர்.

    இதுபோல் தமிழ்நாடு முழுவதும் 1.5 லட்சம் பேர் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள். #JactoGeoStrike #TeachersProtest
    டார்ஜிலிங்கில் சினிமா படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். #Rajinikanth
    நடிகர் ரஜினிகாந்த் காலா படத்திற்கு பின்னர், பிரபல டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இன்னும் படத்தின் தலைப்பு முடிவு செய்யப்படவில்லை.

    இந்த படத்திற்கான படப்பிடிப்பு மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்கில் நடந்து வந்தது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்று இருந்தார். அவருடன் படப்பிடிப்பு குழுவினரும் சென்று இருந்தனர்.

    அங்கு சினிமா படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அவர் நேற்று இரவு 11 மணிக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பை ஏற்றுக்கொண்ட ரஜினிகாந்த், ரசிகர்களை பார்த்து கையசைத்தபடி சென்றார்.

    சினிமா படப்பிடிப்பு முடிவடைந்து சென்னை திரும்பியுள்ள ரஜினிகாந்த், வரும் நாட்களில் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.  #Rajinikanth
    நேபாளத்தில் தவித்தபோது மீட்க நடவடிக்கை எடுத்ததற்காக தமிழகம் திரும்பிய பக்தர்கள் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
    சென்னை:

    நேபாளத்தில் தவித்தபோது மீட்க நடவடிக்கை எடுத்ததற்காக தமிழகம் திரும்பிய பக்தர்கள் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இமயமலையில் அமைந்துள்ள கைலாஷ் மானசரோவருக்கு ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில், நாடு முழுவதிலிருந்தும் பக்தர்கள் யாத்திரை செல்கின்றனர். கடந்த மாதம், தமிழ்நாட்டிலிருந்து யாத்திரை சென்றவர்கள் மோசமான பருவநிலை காரணமாக நேபாளத்தில் சிக்கி தவிப்பதாக தகவல் அறிந்து, அவர்களை பாதுகாப்புடன் மீட்க தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

    அதன்படி, தமிழக அரசு அதிகாரிகள், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் அமைந்துள்ள இந்திய தூதரகத்திடம் தொடர்பு கொண்டு, சிமிகோட் பகுதியில் சிக்கி தவித்த 18 பக்தர்களை அங்கிருந்து நேபாள்கஞ்ச் என்ற இடத்துக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். பின்னர் டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் அதிகாரிகள் நேபாள்கஞ்ச் சென்று, இந்திய தூதரகம் மற்றும் நேபாள அரசின் ஒத்துழைப்போடு, பக்தர்களை பாதுகாப்பாக தமிழகத்துக்கு அழைத்து வந்தனர்.

    தமிழக அரசின் உதவியால் பாதுகாப்பாக மீட்கப்பட்ட பக்தர்கள் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், எல்.ஹரிஹரன், சி.என்.ரவி, டி.வி.சாந்தமூர்த்தி, கே.எஸ்.விஜயலட்சுமி, பி.அன்னபூர்ணா, ஜி.ஆனந்தம், வி.கோபாலகிருஷ்ணன், பி.பிரேமலதா, டி.எம்.சுப்பிரமணியம், ஏ.எஸ். லட்சுமி, ஆர்.சுப்பிரமணி, எஸ்.மீனாட்சி, என்.சக்திவேல் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை இன்று (நேற்று) தலைமைச்செயலகத்தில் சந்தித்து, தங்களை பாதுகாப்பாக மீட்டு, சொந்த ஊர் திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததற்காக நன்றி தெரிவித்தனர்.

    இந்த நிகழ்வின்போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பேரிடர் மேலாண்மைத் துறை கமிஷனர் ராஜேந்திர ரத்னூ, சென்னை மாவட்ட கலெக்டர் வி.அன்புச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    சங்கரன்கோவிலில் கடந்த 40 நாட்களாக நடந்து வந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் இன்று முதல் விசைத்தறிகள் வழக்கம் போல் இயங்க தொடங்கின.
    நெல்லை:

    சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் 60 சதவீதம் கூலி உயர்வு, விடுமுறை கால சம்பளம் ரூ. 300 என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இதேபோல் சுப்புலாபுரம் கிராம பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்களும் கூலி உயர்வு கேட்டு போராடி வந்தனர். இதனால் பல கோடி ரூபாய் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கூலி உயர்வு தொடர்பாக நெல்லை தொழிலாளர் துறை அதிகாரிகள் விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர் களுடன் ஏற்கனவே 4 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த நிலையில் பாளையில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் 5-வது கட்டமாக முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    நீண்டநேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. முடிவு எதுவும் எட்டவில்லை. இதனால் பேச்சுவார்த்தை 5-வது முறையாக‌ தோல்வியில் முடிவடைந்தது.

    இதையடுத்து கடந்த 5-ந்தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நேற்று 40-வது நாளாக நீடித்தது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ. 50 லட்சம் மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சுமார் 20 கோடி ரூபாய் வரையிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் பாளையில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தொழிற் சங்கத்தினர், விசைத்தறி உரிமையாளர்கள், அதிகாரிகள் தரப்பு என முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

    இதில் அனைத்து தொழிலாளர்களுக்கும் 19 சதவீத கூலி உயர்வு, விசைத்தறி உரிமையாளர்களுக்கு 17 சதவீத ஒப்பந்த தொகை உயர்வு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

    இதை தொடர்ந்து கடந்த 40 நாட்களாக நடந்து வந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் இன்று முதல் விசைத்தறிகள் வழக்கம் போல் இயங்க தொடங்கின.

    தூத்துக்குடியில் 5 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்பியது. காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகள் காலையில் வழக்கம் போல் திறக்கப்பட்டு கூட்டம் அலைமோதியது. #SterliteProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த சென்றனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் உண்டானது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.



    அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் தூத்துக்குடி முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டன‌ர். கடைகள் அடைக்கப்பட்டன.

    பஸ்கள் இயங்காததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்ப செய்ய மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து நேற்று மதியத்திற்கு பிறகு தூத்துக்குடியில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. காய்கறி மார்க்கெட்டில் காலையில் வழக்கம் போல் கடைகள் திறக்கப்பட்டன. இன்றும் காய்கறி கடைகளில் கூட்டம் அலைமோதியது.

    ஏராளமான மக்கள் வந்து வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனர். தூத்துக்குடியில் இருந்து நெல்லை, மதுரை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்களில் குறைந்த அளவே பயணிகள் இருந்தனர். மேலும் ஆட்டோக்கள், வேன்கள் வழக்கம் போல் ஓடின. கார், மோட்டார் சைக்கிள்களில் மக்கள் வழக்கமான பணிகளுக்கு சென்றனர். இன்று காலை பழக்கடைகள், சிறு சிறு ஓட்டல்கள் திறக்கப்பட்டன.

    ஆட்டோக்கள் முழு அளவில் ஓடத்தொடங்கியது. நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிக்கு செல்லவேண்டிய மினி பஸ்கள் மட்டும் இயக்கப்படவில்லை. இன்று மாலைக்குள் மினி பஸ்களையும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நகர பகுதியில் உள்ள 10 அம்மா உணவகங்களிலும் 3 நாட்களுக்கு இலவசமாக உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    ஆவின் நிறுவனம் சார்பில் சிறப்பு வேன்கள், பூத்கள் அமைக்கப்பட்டு பால் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் காயமடைந்தவர்களுக்கும், அவரது உறவினர்களுக்கும், ஏற்கனவே அங்கு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் பால், ரொட்டி, உணவுகள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநகராட்சி மூலமாக நகர் முழுவதும் கூடுதலாக குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கலவர பகுதிகள் முழுவதும் நேற்று ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டனர். இன்று அந்த பகுதியில் ஊழியர்கள் சுகாதார பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

    தூத்துக்குடியில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதால் ஏ.டி.எம் சேவை முடங்கியுள்ளது. நகரில் உள்ள 75 ஏ.டி.எம் மையங்களும் முடங்கியுள்ளன. நகர்பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து போலீசார் தூத்துக்குடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். தூத்துக்குடி அண்ணாநகர், பிரைண்ட் நகர், கலெக்டர் அலுவலக பகுதி உள்ளிட்ட பகுதிகளில் அதிவிரைவுப்படை போலீசார் நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.  #SterliteProtest

    ×