என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயமான மடாதிபதி பெங்களூர் நித்யானந்தா ஆசிரமத்தில் இருக்கிறார்
    X

    மாயமான மடாதிபதி பெங்களூர் நித்யானந்தா ஆசிரமத்தில் இருக்கிறார்

    மாயமான மடாதிபதி பெங்களூர் நித்யானந்தா ஆசிரமத்தில் இருக்கும் சம்பவம் காஞ்சீபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    காஞ்சீபுரம்:

    பெரிய காஞ்சீபுரம் பரமசிவம் தெருவில் பழமை வாய்ந்த தொண்டை மண்டல ஆதீனம் மடம் உள்ளது.

    இந்த மடத்தின் 232-வது பட்டம் மடாதிபதியாக ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 18 ஆண்டுகளாக உள்ளார்.

    மடத்துக்கு தமிழகம் முழுவதும் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. மேலும் விலை மதிக்க முடியாத மரகத லிங்கமும், பாண லிங்கமும் மடத்தில் உள்ளது.

    கடந்த சில மாதங்களாக மடத்தில் பெங்களூரில் உள்ள பிடதி ஆசிரமத்தின் நித்யானந்தா சாமியாரின் சீடர்கள் சிலர் தங்கி இருந்து பூஜைகள் செய்தனர். அவர்கள் பாரம்பரியமான சிவலிங்க பூஜையை மாற்றி, நித்யானந்தா பூஜை செய்து வந்ததாக தெரிகிறது.

    இதனை அறிந்த தொண்டை மண்டல முதலியார்கள் சங்க அமைப்பினர் மடாதிபதியிடம் கேட்டனர். இது குறித்து பேசுவதற்கு நேற்று முன்தினம் மாலை வரும் படி அவர் கூறி இருந்தார்.

    முதலியார் சங்க அமைப்பினர் சென்ற போது மடத்தின் கதவுகள் பூட்டப்பட்டு இருந்தது. மேலும் மடாதிபதியும் மாயமாகி இருந்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த முதலியார் சங்க அமைப்பினர், “மடத்தின் சொத்துக்களை அபகரிக்க மடாதிபதியை நித்யானந்தா சீடர்கள் கடத்தி சென்று உள்ளனர். அவரை மீட்க வேண்டும் என்று பெரிய காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரவணன் மடத்துக்கு சென்று அங்கிருந்த நித்யானந்தா சீடர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது மடாதிபதி குறித்து சில தகவல்கள் கிடைத்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் மாயமான மடாதிபதி பெங்களூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.

    அவரிடம் பெரிய காஞ்சீபுரம் இன்ஸ்பெக்டர் சரவணன் (பொறுப்பு) தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். அப்போது இங்குள்ள நிலைமை குறித்து அவர் விளக்கியதாக தெரிகிறது.

    இது குறித்து இன்ஸ்பெக்டர் சரவணனிடம் கேட்ட போது கூறியதாவது:-

    பெங்களூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் மாயமான மடாதிபதி தங்கி இருக்கிறார். அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளேன்.

    அப்போது நலமாக இருப்பதாக மடாதிபதி தெரிவித்தார். மேலும் பெங்களூர் நித்யானந்தா ஆசிரமத்தில் ஒரு சொற்பொழிவுக்காக வந்துள்ளேன் என்றும் கூறினார்.

    வருகிற 4-ந் தேதி காஞ்சீபுரம் திரும்பி வந்தவுடன் விபரங்களை தெரிவிப்பதாக கூறி இருக்கிறார். அவர் வந்த உடன் விசாரணை நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது குறித்து முதலியார் சங்க அமைப்பினர் கூறும்போது, “2 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்து உடைய ஆதீனத்தை கைப்பற்றினால் தனக்கு எதிர்ப்பு ஏதும் வராது என்று நித்யானந்தா நினைத்து உள்ளார். ஆனால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் ஆதீனத்தை பெங்களூரு கொண்டு சென்று பேட்டிகள் கொடுக்க வைத்து எதிர்ப்பினை அடக்க நித்யானந்தா முயற்சி செய்கிறார்” என்று குற்றம் சாட்டினர்.

    மாயமான மடாதிபதி பெங்களூர் நித்யானந்தா ஆசிரமத்தில் இருக்கும் சம்பவம் காஞ்சீபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×