என் மலர்
காஞ்சிபுரம்
சோழிங்கநல்லூர்:
சென்னை பெசன்ட் நகர் ஊரூர் குப்பம் முகத்துவாரம் பகுதியில் இன்று காலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்கள் செத்து கரை ஒதுங்கியுள்ளது.
இதை அறிந்த அப்பகுதி மக்கள் விரைந்து சென்று பார்த்தபோது மடவை, ஜிலேபி உள்ளிட்ட பல வகை மீன்கள் அதிகளவில் செத்து கரை ஒதுங்கியிருந்தது.
கடற்கரையோரம் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த மீன்கள் செத்து மிதக்கின்றன.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “கூவம் ஆற்று நீர் கடலில் கலக்கும் இந்த முகத்துவாரம் பகுதியில், ரசாயனம் கலந்த கூவம் நீர் கடலில் கலந்ததால் மீன்கள் இறந்ததா? அல்லது சுனாமி அறிகுறியா? என்ற அச்சத்தில் மீனவர்கள் உள்ளனர்.
மீன்வளத்துறை அமைச்சகம் உடனடியாக தலையிட்டு இறந்த மீன்களை அப்புறப்படுத்தி நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மீன்கள் இறந்தது குறித்த காரணத்தை கண்டறிய வேண்டும்” என்றனர்.
இதே போல் சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் கடல் முகத்துவார பகுதியிலும் இன்று ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன.
பெங்களூரில் நேற்று இரவு பலத்த மழை கொட்டியது. மேலும் வானிலை மோசமாக காணப்பட்டது.
இதையடுத்து நேற்று இரவும், இன்று அதிகாலையும் லண்டன், குவைத், மொரீசியஸ், மும்பை, ஐதராபாத் ஆகிய இடங்களில் இருந்து வந்த விமானங்கள் பெங்களூர் செல்ல முடிநாத நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து 5 விமானங்களும் சென்னையில் தரையிறக்கப்பட்டது. இதே போல் ஐதராபாத்தில் இருந்து பெங்களூர் சென்ற சரக்கு விமானமும் சென்னையில் தரையிறக்கப்பட்டது.
இன்று அதிகாலை முதல் பெங்களூர் செல்லும் விமானங்கள் ஒவ்வொன்றாக தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைதேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று தே.மு.தி.க. ஏற்கனவே அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக அவர் மனைவி பிரேமலதாவுடன் இன்று சிங்கப்பூர் புறப்பட்டு செல்லும் முன்பு இதை தெரிவித்தார். இது தொடர்பாக விஜயகாந்த் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆர்.கே.நகர் இடைதேர்தலில் தே.மு.தி.க. ஆதரவு யாருக்கும் கிடையாது. தே.மு.தி.க. தொண்டர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.

ஆர்.கே.நகரில் வீடுவீடாக சென்று மாலை 5 மணி வரைதான் வாக்கு சேகரிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள் தான் இதை எதிர்ப்பார்கள். காசு கொடுக்காதவர்கள் அதை சரி என்பார்கள்.
ஆளும் கட்சியில் உள்கட்சி பிரச்சனை நிலவுகிறது. மக்கள் நலனில் கவனம் செலுத்தவில்லை என்பது தான் உண்மை.
பள்ளி மாணவர்களின் தற்கொலை சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த அவலநிலையை கண்டிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மாமல்லபுரம்:
தமிழக கவர்னர் பன்வாரிலால் பிரோகித் நேற்று மதியம் குடும்பத்தினருடன் மாமல்லபுரத்துக்கு வந்தார்.
பின்னர் அவர் கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை கல், தலசயன பெருமாள் கோவில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்தார்.
பின்னர் கவர்னர் பன்வாரிலால், ஐந்து ரதம் அருகில் உள்ள தனியார் கடல் சிப்பிகள் கண்காட்சியத்தை சுற்றி பார்க்க சென்றார். அங்கிருந்தவர்களிடம் நுழைவு கட்டணம் எவ்வளவு என்று கவர்னர் கேட்டார். ரூ.100 என்று ஊழியர்கள் கூறியதும், உடன் வந்த அதிகாரிகள் நுழைவு கட்டண பணத்தை கொடுக்க முயன்றனர்.
இதனை கவர்னர் பன்வாரிலால் தடுத்தார். மேலும் உடன் வந்த குடும்பத்தினர் 6 பேருக்கும் சேர்த்து ரூ.700 நுழைவு கட்டணத்தை அவரே கொடுத்தார்.
இதனை கண்ட அதிகாரிகளும், கண்காட்சியகத்தில் இருந்த ஊழியர்களும் ஆச்சரியமடைந்தனர்.
கண்காட்சியகத்தில் இருந்த சிப்பிகள், சங்குகள் குறித்து கவர்னர் பன்வாரிலால் ஆர்வமுடன் கேட்டறிந்தார்.
கவர்னர் வருகையால் மாமல்லபுரத்தில் எந்தவித பாதுகாப்பு கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. சுற்றுலா பயணிகளுடனேயே கவர்னர் சென்று புராதன இடங்களை சுற்றி பார்த்தார். இதனால் சுற்றுலா பயணிகளும் வியப்படைந்தனர்.
காஞ்சீபுரத்தை அடுத்த கோவிந்தவாடி அகரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணியப்பன். அவரது மகன் காமேஷ் (வயது 12). படுநெல்லி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் சரியாக படிக்காமல் நண்பர்களுடன் விளையாடினார். இதனை பெற்றோர் கண்டித்தனர். இதில் மனவேதனை அடைந்த காமேஷ் வீட்டு மாடியில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய காமேசுக்கு ஆபத்தான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து இலங்கை செல்லும் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்ல இருந்தவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சென்னையை சேர்ந்த சம்சுதீன் என்பவரை சோதனை செய்தபோது அவரது ஆடையிலும், சூட்கேசிலும் கட்டு கட்டாக அமெரிக்க டாலர் இருந்தது.
அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அமெரிக்க டாலருக்கான ஆவணம் அவரிடம் இல்லை.
இதையடுத்து சம்சுதீனிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.
மிலாடி நபியை முன்னிட்டு வரும் 2-ந்தேதி மதுக்கடைகளை மூடவேண்டும் என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வரும் 2-ந்தேதி (சனிக்கிழமை) மிலாடி நபியை முன்னிட்டு இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் அன்று முழுவதும் மூடப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
தாம்பரம் அருகே சேலையூரை அடுத்த திருவஞ்சேரி ஊராட்சியில் தாஸ்நகர் உள்ளது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
ஏற்கனவே பெய்த மழைநீர் அங்குள்ள தெருக்கள் மற்றும் வீடுகளை சூழ்ந்து நிற்கின்றன. அவை வெளியேற வடிகால் வசதி இல்லாததால் பல நாட்களாக தண்ணீர் தேங்கி கிடக்கிறது.
இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு நோய்பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வலியுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் அதன்மீது வருவாய்துறை நடவடிக்கை எடுக்கும் என்றார்.
ஆனால் மழைநீர் அகற்றப்படவில்லை. இதற்கிடையே நேற்று மீண்டும் பலத்த மழை பெய்ததால் அங்கு அதிக அளவில் மழைநீர் தேங்கியுள்ளது.
எனவே அவற்றை வெளியேற்ற வலியுறுத்தி தாஸ்நகர் பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் சேலையூர் அருகே அகரம் தென் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதை தொடர்ந்து சமரசம் அடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக இங்கு சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சமீபத்தில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.
பின்னர் திடீரென அவர் கோவை ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகையில் கலெக்டர் ஹரிசரண் மற்றும் அரசு அதிகாரிகளை அழைத்து கோவை மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அரசியல் கட்சி பிரமுகர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் ஆய்வும் நடத்தினார்.
கவர்னரின் திடீர் ஆய்வு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளும் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்தன. சில கட்சியினர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் ஆய்வுப்பணி தொடரும் என்று கவர்னர் தெரிவித்தார்.
இந்த நிலையில் கவர்னர் பன்வாரிலால் இன்று காலை மாமல்லபுரம் சென்று அங்குள்ள முக்கிய சுற்றுலா பகுதிகளான, அர்ச்சுனன் தபசு, கடற்கரைகோவில், ஐந்துரதம் போன்ற பகுதிகளை பார்வையிடுவதாக செய்திகள் பரவியது.
கவர்னர் திடீர் என அரசு அலுவலகங்களுக்குள் நுழைந்து ஆய்வுகள் மேற்கொள்வாரோ என்ற பதட்டத்தில் அரசு ஊழியர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் அலுவலகம் வந்து விட்டனர். இதனால் மாமல்லபுரத்தில் பரபரப்பு காணப்பட்டது.
பின்னர் குடும்பத்துடன் கவர்னர் சுற்றுலா வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து இந்திய தொல்லியல்துறை, மாமல்லபுரம் பேரூராட்சி, கடலோர காவல் படை, தமிழ்நாடு சுற்றுலாத்துறை, மத்திய கப்பல்துறை போன்ற முக்கிய மத்திய, மாநில அரசுத்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இருப்பினும் கவர்னர் வந்து செல்லும் வரை அதிகாரிகள் பதட்டமாக இருப்பதாகவே தெரிகிறது.
நீலாங்கரையை அடுத்த பனையூர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (36). அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் விஜயகுமார் (35), தொழிலாளி.
இருவரும் நேற்று மாலை அதே பகுதியில் ஒருவரிடம் எரிசாராயம் வாங்கி குடித்தனர். சிறிது நேரத்தில் 2 பேரும் மயங்கி விழுந்தனர்.
அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போகும் வழியிலேயே வெங்கடேசன் பலியானார். விஜயகுமாருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி விஜயகுமாரும் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராயம் விற்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜா நகரில் இருந்து நேற்று, திருவனந்தபுரம் வழியாக சென்னைக்கு விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.
அந்த விமானத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து உள்நாட்டு பயணியாக கோழிகோட்டை சேர்ந்த இஸ்ராத் (வயது 33) என்பவர் வந்திருந்தார். இவர் பாதுகாப்பு சோதனைகளை முடித்துக்கொண்டு வெளியேறும் போது சந்தேகத்தின் பேரில் அவரை நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அவர் அணிந்திருந்த ஷூக்கள் வழக்கத்திற்கு மாறாக சற்று உயரமாக இருந்தன. எனவே அதிகாரிகள் அந்த ஷூக்களை பிரித்துப் பார்த்தனர். அப்போது ஒவ்வொரு ஷூவின் அடிப்பாகத்திலும் தலா ஒரு கிலோ தங்கக்கட்டி வீதம் 2 தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதைத்தொடர்ந்து சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள அந்த 2 கிலோ தங்கக்கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இஸ்ராத்தை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது இஸ்ராத் சுங்க இலாகா அதிகாரிகளிடம் கூறுகையில், சார்ஜாவில் இருந்து வரும் விமானத்தில் குறிப்பிட்ட இருக்கையில் இருக்கும் ஷூவை அணிந்து சென்னைக்கு செல்ல வேண்டும் எனவும், பின்னர் விமான நிலையத்தின் கார் பார்க்கிங் பகுதிக்கு சென்று அங்கு வரும் குறிப்பிட்ட நபரிடம் ஷூவை ஒப்படைக்க வேண்டும் என்றும் துபாயில் உள்ள தனது நண்பர் ஒருவர் தெரிவித்ததாக கூறினார். அதனாலேயே அவற்றை கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து இஸ்ராத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கார் பார்க்கிங் பகுதியில் நிற்க வைத்து கண்காணித்தனர். ஆனால் அவர் கூறியது போல தங்கக்கட்டிகளை வாங்க யாரும் வரவில்லை. எனவே அந்த தங்கக்கட்டிகளை அனுப்பியது யார்? அவற்றை பெற்றுக்கொள்ள வந்த நபர் யார்? என அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.






