என் மலர்
காஞ்சிபுரம்
திருப்போரூர்:
சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 28). ரவுடி. பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி கூட்டாளி. இவர் மீது வண்ணாரப்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட வட சென்னை போலீஸ் நிலையங்களில் 14 வழக்குகள் உள்ளன.
கடந்த ஒரு மாதமாக ரவீந்திரன் தனது மனைவி மலர்கொடி மற்றும் குழந்தைகளுடன் திருப்போரூரை அடுத்த தண்டலம், பாரதி நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு அவர் மோட்டார் சைக்கிளில் மனைவி மலர்கொடியுடன் திருப்போரூர் ரவுண்டானா அருகே வந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் மனைவியின் கண் எதிரே ரவீந்திரனை வெட்டி கொலை செய்து தப்பினர்.
இது குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலை கும்பலை பிடிக்க டி.எஸ்.பி. சுப்பராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், ராஜாங்கம் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைகக்ப்பட்டது.
இதற்கிடையில் மாம்பாக்கம் அருகே பதுங்கி இருந்த 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் மாம்பாக்கத்தை அடுத்த கீழக்கோட்டையூராச் சேர்ந்த ராம்கி, வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கமருதீன், அப்துல் கரீம், தண்டையார்பேட்டையை சேர்ந்த சந்தேஷ், குமரேசன் என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜராக வந்த கல்வெட்டு ரவி தரப்பை சேர்ந்த ரவுடி விஜயகுமார் கொலைக்கு பழிவாங்க ரவீந்திரனை தீர்த்து கட்டியதும் தெரிந்தது. விஜயகுமார் கொலைக்கு ரவிந்தீரனும், அவனுடைய தம்பி தேசப்பன் இருவரும் தான் காரணம் என்று கல்வெட்டு ரவி தரப்பு நினைத்தனர்.
எனவே இருவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டினர். அவர்கள் திருப்போரூர் பகுதியில் பதுங்கி இருப்பதை அறிந்து ரவீந்தீரனை கொலை செய்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கைதானவர்களிடம் இருந்து 4 கத்திகளும், கொலையான ரவுடி ரவீந்திரன் வீட்டில் இருந்து ரத்தக்கறை படிந்த கத்தி ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 5 பேரையும் போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
சென்னை காசிமேடு ஒய்.எம்.சி.ஏ. குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன் பிரபல ரவுடி. காக்காதோப்பு பாலாஜி கூட்டாளி. இவர் மீது வண்ணாரப்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
கடந்த 1 மாதத்திற்கு முன்பு மனைவி மற்றும் குழந்தைகளுடன் ரவீந்திரன் திருப்போரூரை அடுத்த தண்டலம் பாரதிநகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி தலைமறைவாக இருந்தார்.
நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் மனைவி மலர்கொடியுடன் திருப்போரூர் ரவுண்டானா அருகே ரவீந்திரன் சென்றபோது அவரை சுற்றிவளைத்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் கழுத்து மற்றும் தலை பகுதியில் சரமாரியாக வெட்டினர்.
ரவீந்திரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். உடனே 6 பேரும் தப்பினர்.
இது குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காக்கா தோப்பு பாலாஜி, கூட்டாளியான அவரை எதிர் கோஷ்டியான கல்வெட்டு ரவி கோஷ்டியினர் கொலை செய்தனரா? அல்லது கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள ரவீந்திரன் மீது பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இதை செய்தனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் கொலையாளிகள் யார்? என்று போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் காசிமேட்டை சேர்ந்த குட்டி, குமரன், கமல், ராம்கி மற்றும் பேர் தெரியாத 2 பேர் எனவும், இன்று சென்னையில் உள்ள ஏதாவது நீதிமன்றத்தில் கொலையாளிகள் சரணடையக்கூடும் எனவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் தேரடி தெருவைச் சேர்ந்தவர் ஓம்குமார். இவரது மகள் நித்தியஸ்ரீ 5-ம் வகுப்பு படித்து வருகிறாள். நித்திய ஸ்ரீக்கு 10 நாட்களாக காய்ச்ல் இருந்தது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாள்.
இந்நிலையில் நித்தியஸ்ரீக்கு உடல்நிலை மிகவும் மோசமானதால் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி நித்தியஸ்ரீ பரிதாபமாக இறந்தார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்று மதுராந்தகம் ஏரி ஆகும்.
சமீபத்தில் பெய்த வட கிழக்கு பருவமழையால் மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இதனால் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. கடந்த சில நாட்களாக மழை பெய்யாததால் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது.
இந்த நிலையில் ‘ஒகி’ புயலால் தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்தது. கிளியாற்றில் இருந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அந்த நீர் அதிக அளவு மதுராந்தகம் ஏரிக்கு வந்தது.
மேலும் உத்திரமேரூர் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரும் மதுராந்தகம் ஏரிக்கு வந்தது. இதையடுத்து ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
இதனால் மதுராந்தகம் ஏரி மீண்டும் தனது முழு கொள்ளளவான 23.3 அடியை இன்று காலை எட்டியது. ஏரிக்கு 9 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் இருந்து 8 ஆயிரத்து 950 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இன்று மதியத்துக்கு பிறகு உத்திரமேரூர் ஏரி திறக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும். அதன்பிறகு ஏரியின் முக்கிய 2 பெரிய மதகுகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து ஏரியில் இருந்து சுமார் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படும். வெள்ளப்பெருக்கு காரணமாக ஏரி கரையோரம் உள்ள 15 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காஞ்சீபுரம் காந்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேசிய சட்ட நாள் விழா நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-
நீதிமன்ற தீர்ப்பினை மக்கள் விமர்சனம் செய்யும் போது அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் ஆராய்ந்து திருத்திக் கொள்ள வேண்டும். அதே போன்று பொது மக்களும் தனிப்பட்ட முறையிலான விமர்சனங்களை நீதிபதிகள் மீது வைப்பது தவறு.
வழக்கின் உண்மை தன்மையினை புரிந்து வழக்கறிஞர்கள் வாதாட வேண்டும். காஞ்சீபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கப்பட என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.
மூத்த வழக்கறிஞர்கள் தங்களிடம் பணிபுரியம் இளம் வழக்கறிஞர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கினால் திறமையான வழக்கறிஞர்களை நாம் இழக்க வேண்டி வராது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் காஞ்சீபுரம் மாவட்ட நீதிபதி ஜி.கருணாநிதி கலந்துகொண்டு புதிய உறுப்பினர்களுக்கு சட்ட புத்தகத்தை வழங்கினார்.
காஞ்சீபுரம் அடுத்த கோவிந்தவாடியகரம் புதிய காலனி பகுதியில் வசிப்பவர் கன்னியப்பன். மின்வாரிய ஊழியர். இவரது மகன் காமேஷ் (வயது 13). இவன் அருகில் உள்ள படுநெல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். காமேஷ் சரியாக படிக்காததால் அவனது பெற்றோர் ஏன் சரியாக படிக்கவில்லை என்று கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த காமேஷ் வீட்டு மாடிக்கு சென்று அங்கிருந்த மண்எண்ணெய்யை தன்னுடைய உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டான்.
காமேஷின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஓடி சென்று தீயை அணைத்து காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மாணவனை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் காமேஷ் நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தான்.
இது குறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
போரூர் அருகே இன்று காலை இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்களது மோட்டார் சைக்கிளில் சோதனை செய்த போது 10 கிலோ கஞ்சா கடந்தி வந்தது தெரிந்தது. விசாரணையில் அவர்கள் மதுரவாயலை சேர்ந்த பிரதீப், சதன், ராஜேஷ், சதீஷ் என்பதும் கோயம்பேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்து 2 மோட்டார் சைக்கிள், 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
காஞ்சீபுரம் மளிகை செட்டி தெருவை சேர்ந்தவர் புல்லட் பரிமளம், டி.டி.வி. தினகரன் ஆதரவாளர். ஜெயலலிதா நினைவு நாளையொட்டி காஞ்சீபுரம் காந்தி ரோட்டில் பிரமாண்ட பேனர் வைக்க ஏற்பாடு செய்து இருந்தார்.
நேற்று இரவு புல்லட் பரிமளம் மற்றும் ஆதரவாளர்கள் அப்பகுதியில் பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ரோந்து வந்த சின்ன காஞ்சீபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர், அவர்களிடம் ‘அனுமதி இல்லாமல் பேனர் வைக்கக்கூடாது’ என்று தெரித்தார்.
இதனால் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரிடம் புல்லட் பரிமளம் மற்றும் ஆதரவாளர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அங்கிருந்த பேனரை போலீசார் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினர். மேலும் புல்லட் பரிமளம் மற்றும் ஆதரவாளர்கள் சுரேஷ், செல்வக்குமார், ராஜ்குமார், ஜலந்தர், காஞ்சி ராஜா, சுப்பிரமணி ஆகிய 7 பேரையும் கைது செய்தனர்.
அவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கைதான 7 பேரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
செங்கல்பட்டு, சிங்க பெருமாள் கோவில், திருப்போரூர் ஆகிய பகுதிகளில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இலவச மடிக்கணினி வழங்கும் விழாவில் அமைச்சர் பெஞ்சமின் கலந்து கொண்டார்.
விழாவையொட்டி பள்ளி முன்பு வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வைத்த பேனரில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.
மேலும் பேனர் வைப்பதிலும் அவர்களிடையே அதிருப்தி இருந்தது. மேடையில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு பொன்னாடை அணிவிக்காததால் விழா நடந்து கொண்டிருக்கும் போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
உடனே அமைச்சர் பெஞ்சமின் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினார். இதையடுத்து அவர்கள் அமைதி அடைந்தனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் இறந்து போன பிரபல ரவுடி ஸ்ரீதரின் கார் டிரைவர். ஸ்ரீதரின் தற்கொலைக்கு பிறகு அவருடன் தொடர் பில் இருந்தவர்கள் தனித் தனி குழுக்களாக செயல்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 25-ந் தேதி மாலை காஞ்சீபுரம் பழைய ரெயில் நிலையம் அருகே தினேஷ் காரை நிறுத்தினார்.
அப்போது மற்றொரு காரில் பின்தொடர்ந்து வந்த ரவுடி தணிகா என்ற தணிகைவேல் மற்றும் அவரது கூட்டாளிகள் தினேஷ் வந்த கார் மீது வெடிகுண்டுகள் வீசி தப்பி சென்றுவிட்டனர்.
இதில் உயிர் தப்பிய தினேஷ் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ரவுடி தணிகாவை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின்பேரில், டிஎஸ்பி முகிலன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் ரவுடி தணிகை காஞ்சீபுரம் வெள்ளகுளம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் விரைந்து சென்று தணிகாவை கைது செய்தனர்.
அவர் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
தாம்பரம்:
பல்லாவரம் நகராட்சிக் குட்பட்ட அஸ்தினாபுரம், நேதாஜிநகர் பிரதான சாலையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் கழிவு நீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டது. மேலும் கழிவுநீர், குடிதண்ணீரிலும் கலந்து வந்தது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக் கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் கழிவு நீர் அடைப்பை சரி செய்யக் கோரி பல்லாவரம் நகர குடியிருப்போர் நல சங்கங் களின் இணைப்பு மையம் சார்பில் இன்று காலை அஸ்தினாபுரம் சாலையில் நூதன போராட்டம் நடை பெற்றது.
சாலையில் பிணம்போல் 2 பேர் படுத்து கிடந்தனர். அவர்கள் மீது பூ மாலையும் போடப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்தில் பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சிட்லபாக்கம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்ற னர்.






