என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    ஸ்ரீபெரும்புதூர் அருகே இளநீர் வியாபாரியை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த போந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், இளநீர் வியாபாரம் செய்து வந்தார்.

    இன்று காலை அவர் வீடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெங்க டேசனை சரமாரியாக வெட்டினார்கள்.

    இதில் தலை, கழுத்து, கைகளில் வெட்டுப்பட்ட வெங்கடேசன் அலறினார். சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடிவருவதை பார்த்ததும் 5 பேரும் தப்பி ஓடி விட்டார்கள்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த வெங்கடேசனை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    வெங்கடேச னுக்கு யாருடனாவது முன் விரோதம் உள்ளதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று விசாரித்து வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருக்கழுக்குன்றத்தில் நாளை ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.

    செங்கல்பட்டு:

    எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவச்சிலை திறப்பு விழா, ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. கொடி ஏற்றி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா திருக்கழுக்குன்றத்தில் நாளை (சனி) நடக்கிறது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் விழாவுக்கு தலைமை தாங்குகிறார். மாவட்ட அவை தலைவர் கே.என்.ராமச்சந்திரன் எம்.பி., கே.மரகதம் குமரவேல் எம்.பி. அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பென்ஜமின், அமைப்புச் செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன், வாலாஜாபாத் கணேசன், முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வேலாயுதம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வி.பக்தவச்சலம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள். #tamilnews

    பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்த மேலும் 100 பேர் வேறு காப்பகத்துக்கு மாற்றப்பட்டனர்.
    காஞ்சீபுரம்:

    உத்திரமேரூர் அருகே உள்ள பாலேஸ்வரம் கருணை இல்லத்துக்கு சென்ற வேனில் காய்கறி மூட்டைகளுடன், இறந்த ஆணின் உடல் எடுத்து செல்லப்பட்டது. அதே வேனில் 2 முதியோர்களும் அழைத்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    கருணை இல்லத்தில் முதியோர்கள் மர்மமாக இறப்பதாகவும், அவர்களது உடல்கள் காங்கிரீட் சுவரில் உள்ள துளையில் அட்டகம் செய்யப்பட்டு பின்னர் எலும்புகள் வெளிநாடுகளுக்கு விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இதையடுத்து மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவுப்படி, வருவாய்த் துறை, சமூகநலத்தறை, போலீசார் உள்ளிட்ட 6 துறை அதிகாரிகள் கருணை இல்லத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது உரிய வசதிகள் இன்றி கருணை இல்லம் செயல்படுவதும் அதன் உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருப்பதும் தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து மருத்துவத்துறை அதிகாரிகள் உதவியுடன் கருணை இல்லத்தில் இறந்தவர்களை பரிசோதனை செய்து வேறு காப்பகத்துக்கு இடமாற்றம் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    கோட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் கடந்த வாரம் கருணை இல்லத்தில் சுய நினைவுடன் இருந்த 58 பேரை அரசுக் காப்பகத்திற்கு மாற்றினர். இதனைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை 128 முதியோர்கள் மாற்றப்பட்டனர்.

    படுத்த படுக்கையாக இருந்த 96 பேர் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் சிகிச்சை முடிந்தவுடன் காப்பகங்களுக்கு அனுப்பப்படுவர்.

    இந்த நிலையில் கருணை இல்லத்தில் இருந்த மேலும் 100 பேர் வேறு காப்பகத்துக்கு மாற்றப்பட்டனர். அனைத்து முதியோர்களும் இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் கருணை இல்லத்தை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    இது குறித்து கோட்டாட்சியர் ராஜு கூறும்போது, கருணை இல்லத்தில் இருந்த 58 பேர் அரசுக் காப்பகங்களிலும், 128 பேர் பனையூர் மன வளர்ச்சி குன்றியோர் பெண்களுக்கான காப்பகம், சோழிங்கநல்லூர் அன்னை இல்லம், தண்டையார் பேட்டை, வாணியம்பாடி பகுதிகளில் இயங்கும் அரசுக் காப்பகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்’ என்றனர்.

    இதற்கிடையே மாவட்ட கலெக்டர் பொன்னையா கருணை இல்லத்தில் இறந்த வர்களின் உடல்கள் வித்தியாசமாக அடக்கும் செய்யப்படும் இடத்தினை அரசுத் துறை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார்.

    காப்பக நிர்வாகி பாதிரியார் தாமசிடம் அடுத்தடுத்து பல்வேறு விபரங்கள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அங்கு பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வரும் மருத்துவக் குழுவினரின் அறிக்கை அளிக்கப்பட்டவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

    தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் காப்பக பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதி தொடர்ந்து பரபரப்பாக காணப்படுகிறது. #tamilnews

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வின் அனைத்து உறுப்பினர்களும் குரல் எழுப்பி வாரியம் அமைக்க பாடுபடுவோம் என்று தம்பிதுரை கூறினார். #Cauveryissue
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற 5-ந்தேதி பாராளுமன்ற கூட்டத் தொடர் கூடுகிறது. அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வின் அனைத்து உறுப்பினர்களும் குரல் எழுப்புவோம். வாரியம் அமைக்க பாடுபடுவோம்.


    ஆந்திராவில் செம்மரம் வெட்ட வருவதாக கூறி தமிழர்கள் 84 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழர்கள் தாக்கப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம். முதல்-அமைச்சர் மீது வெற்றிவேல் ஊழல் குற்றச்சாட்டு கூறியிருப்பது பற்றி எனக்கு தெரியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews

    காஞ்சீபுரம் சங்கரமடத்தின் 70-வது மடாதிபதியாக ஓரிரு நாட்களில் விஜயேந்திரர் பதவி ஏற்க உள்ளார்.
    காஞ்சீபுரம்:

    2,520 வருடங்கள் பழமை வாய்ந்த காஞ்சீபுரம் சங்கரமடத்தின் 69-வது மடாதிபதியாக இருந்த ஜெயேந்திரர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அன்னாரது உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

    இதனையடுத்து அடுத்த மடாதிபதி யார்? என்ற கேள்வி எழுந்தது. ஜெயேந்திரர் மரணம் அடைந்தது குறித்து உடனடியாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் சங்கர மட நிர்வாகிகள் தெரிவித்தனர். மடத்திற்கு மடாதிபதி இல்லாமல் இருக்கக்கூடாது. 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்திற்குள் அடுத்த மடாதிபதி அறிவிக்கப்பட வேண்டும் என்பது மரபு.

    ஜெயேந்திரர் இறந்ததையடுத்து இளைய மடாதிபதி விஜயேந்திரர் சங்கரமடத்தின் 70-வது மடாதிபதியாக பதவி ஏற்க உள்ளார். அவர் புதிய மடாதிபதியாக தேர்வு செய்யப்பட்டது தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து விஜயேந்திரரின் கைரேகைகள் பதியப்பட்டு சங்கர மடத்தின் பொறுப்பாளர்கள் இந்து அறநிலையத்துறைக்கு அனுப்பி உள்ளனர்.

    இன்னும் ஓரிரு நாட்களில் புதிய மடாதிபதியாக விஜயேந்திரர் பதவி ஏற்பார் என்று சங்கர மட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    புதிய மடாதிபதியாக பதவி ஏற்க உள்ள விஜயேந்திரருக்கு தற்போது 49 வயதாகிறது. இவரது இயற்பெயர் சங்கரநாராயணன். திருவள்ளூர் மாவட்டம் தண்டலம் கிராமத்தில் பிறந்தவர். கடந்த 1983-ம் ஆண்டு மே மாதம் 29-ந் தேதி தனது 14-வது வயதில் சங்கரமடத்திற்கு வந்தார்.

    காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரர் பெயரும் சேர்க்கப்பட்டது. இந்த வழக்கில் 2005-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

    சென்னையில் சமீபத்தில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்கவில்லை. அவர் தமிழ் மொழியை அவமதித்து விட்டார் என சர்ச்சை கிளம்பியதால் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தியது நினைவுகூரத்தக்கது.  #tamilnews
    சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் உடல் சங்கர மடத்தில் கூடையில் வைத்து இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகெண்டார். #Kanchishankaracharya #JayendraSaraswathi
    காஞ்சீபுரம்:

    காஞ்சி சங்கர மடத்தின் 69-வது மடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சாமிகள் நேற்று காலை மரணம் அடைந்தார்.

    சங்கர மடத்தில் இருந்த அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை 8.10 மணியளவில் ஸ்ரீஜெயேந்திரர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.

    ஸ்ரீஜெயேந்திரரின் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து காஞ்சி சங்கர மடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மடத்தில் ஜெயேந்திரர் வழக்கமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கும் அறையில் அவரது உடல் அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டது. அவரது நெற்றியில் விபூதி பூசி குங்கும பொட்டு வைத்து பக்தர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    அவரது உடலுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், சேவூர் ராமச்சந்திரன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், இல. கணேசன் எம்.பி, பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, டி.டி.வி.தினகரன், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள், பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினார்கள். இன்று காலையில் ஜெயேந்திரர் உடலுக்கு நித்யானந்தா அஞ்சலி செலுத்தினார்.

    நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய பக்தர்கள் அஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இருந்து பக்தர்கள் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை ஜெயேந்திரர் உடலுக்கு வேதமுறைப்படி பிருந்தாவன பிரவேச காரிய கிரமம் என்று அழைக்கப்படும் இறுதி சடங்கு நடைபெற்றது. இதற்காக காலை 8 மணிக்கு ஜெயேந்திரர் உடலை அறையில் இருந்து சங்கர மட மண்டபத்துக்கு கொண்டு வந்து அமர வைத்தனர்.


    பின்னர் இறுதி சடங்கு நிகழ்ச்சி தொடங்கியது. பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரால் அவரது உடலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சந்தனம், பன்னீர், விபூதி மூலமும் அபிஷேகம் செய்தனர். பின்னர் அவரது உடலுக்கு புதுவஸ்திரம் அணிவிக்கப்பட்டது.

    இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய மந்திரிகள் பொன்.ராதாகிருஷ்ணன், சதானந்தகவுடா, தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மத்திய மந்திரி ஜாபர்செரீப் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

    அதன் பிறகு ஜெயேந்திரர் உடலை அடக்கம் செய்யும் நிகழ்ச்சி தொடங்கியது. இதற்காக சங்கர மடத்தில் உள்ள 68-வது பீடாதிபதி சந்திர சேகரேந்திர சரஸ்வதி சாமிகள் சமாதியின் இடது புறத்தில் 7 அடி நீளத்தில், 7 அடி அகலத்தில் 9 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டது.

    அந்த குழிக்குள் சந்தன கட்டை, நவரத்தினங்கள், தங்கம், வைரம் போன்றவை போடப்பட்டன. பின்னர் ஜெயேந்திரரின் உடலை மூங்கில் கூடைக்குள் அமர வைத்தனர்.

    பின்னர் அவரது உடலை கூடையுடன் குழிக்குள் அமர்ந்த நிலையில் வைத்தனர். அதன் மேலே உப்பு, வசம்பு, மலர்கள் போன்றவை போடப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    உடல் அடக்கம் செய்யும் நிகழ்ச்சியிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். #Kanchishankaracharya #JayendraSaraswathi  #tamilnews
    சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் உடல் சங்கர மடத்தில் பெரியவர் சமாதியின் அருகில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகெண்டார். #Kanchishankaracharya #JayendraSaraswathi
    காஞ்சிபுரம்:

    காஞ்சி சங்கர மடத்தின் 69-வது மடாதிபதியான ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் (வயது 82) நேற்று காலை காலமானார். மடத்தில் வழக்கமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கும் அறையில் அவரது உடல் அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டது. அவரது நெற்றி நிறைய விபூதி பூசப்பட்டு, குங்கும பொட்டு வைக்கப்பட்டு இருந்தது.

    ஜெயேந்திரரின் உடலுக்கு அரசியல் மற்றும் ஆன்மீக தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். ஜெயேந்திரர் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் ஏராளமான பக்தர்கள் சங்கர மடத்துக்கு திரண்டு வந்து நீண்ட வரிசையில் நின்று அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் பக்தர்கள் அவரது உடல் அருகில் நின்று விஷ்ணு சகஸ்ரநாம மந்திரத்தை பக்தி பரவசத்துடன் பாடினார்கள்.

    தமிழ்நாடு மட்டும் இன்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் ஜெயேந்திரரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.



    இன்று காலை வேத முறைப்படி ‘பிருந்தாவன பிரவேச காரிய கிரமம்’ என்று அழைக்கப்படும் இறுதிச்சடங்கு தொடங்கியது. முதலில் ஜெயேந்திரருக்கு அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகம் முடிந்ததும் அவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன. கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேரில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அபிஷேக ஆராதனையில் கலந்துகொண்டார்.

    இறுதிச்சடங்கு முடிந்ததும் ஜெயேந்திரர் உடல் மடத்தில் உள்ள பிருந்தாவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பெரியவர் சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் சமாதியின் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதகளிலும் இருந்து முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் வருகை தந்ததால் காஞ்சிபுரத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது.  #Kanchishankaracharya #JayendraSaraswathi #tamilnews
    காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் இன்று காலமானார். சங்கர மடத்தில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பக்தர்கள் இறுதி மரியாதை செலுத்தி வருகிறார்கள். இதனால் சங்கர மடத்தில் இன்று ஏராளமான பக்தர்கள் திரண்டுள்ளனர். நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை தந்து இறுதி மரியாதை செலுத்த உள்ளனர். இதனால் அவரது உடல் நாளை அடக்கம் செய்யப்பட உள்ளது.



    ஜெயேந்திரர் மறைவுக்கு நாடு முழுவதிலும் உள்ள ஆன்மீக தலைவர்கள் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜெயேந்திரர் மறைவு குறித்து கேள்விப்பட்டு மனவேதனை அடைந்ததாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். உயரிய ஆன்மீக தலைவர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியை நாடு இழந்துவிட்டதாகவும், அவரது சீடர்களுக்கும் அவரது போதனைகளை பின்பற்றுவோருக்கும் தனது இரங்கலை தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஜெயேந்திரர் மறைவு குறித்த செய்தி அறிந்து நான் வேதனை அடைந்தேன். அவரது போதனைகள் உலகெங்கும் உள்ள பக்தர்களால் மதிக்கப்படுகிறது. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன்” என கூறியுள்ளார்.

    ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு அஞ்சலி செலுத்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பா.ஜனதா மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி மற்றும் மத்திய மந்திரிகளும் வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து காஞ்சி மடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. #tamilnews
    பா.ம.க. இளைஞர் அணி தலைவராக அன்புமணி ராமதாஸ் மீண்டும் பொதுக் குழுவில் தேர்வு செய்யப்பட்டார்.
    போரூர்:

    பா.ம.க. மாநில பொதுக் குழு கூட்டம் வேலப்பன் சாவடியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். பொதுக்குழுவில் மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    பா.ம.க. தலைவராக ஜி.கே.மணி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவர் 9-வது முறையாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

    பா.ம.க. இளைஞர் அணி தலைவராக அன்புமணி ராமதாஸ் மீண்டும் பொதுக் குழுவில் தேர்வு செய்யப்பட்டார்.

    மாநில பொது செயலாளராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா, இணை பொது செயலாளராக இசக்கி, அமைப்பு செயலாளராக செல்வக்குமார், மகளிரணி தலைவியாக நிர்மலா ராஜா, செயலாளராக சிலம்பு செல்வி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    மாநில நிர்வாகிகள் 1,500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களால் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு டாக்டர் ராமதாஸ் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

    பொதுக்குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஏ.கே.மூர்த்தி, வேலு மற்றும் கே.என்.சேகர், செல்வராஜ், பாலயோகி, எம்.கே.பிரசாத், ஞானபிரகாஷ், அனந்தகிருஷ்ணன், டெல்லிபாபு உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #tamilnews

    உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார். #Kanchishankaracharya #JayendraSaraswathi
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தில் உலகப் புகழ் பெற்ற காஞ்சி சங்கர மடம் உள்ளது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிசங்கரர் இந்த மடத்தை நிறுவினார். காஞ்சி காமகோடி பீடம் என்றும் இந்த மடம் அழைக்கப்படுகிறது.

    சங்கர மடத்துக்கு தலைமை பொறுப்பு ஏற்று செயல்படுபவர் ‘‘சங்கராச்சாரியார்’’ என்ற பட்டத்துடன் திகழ்வார். பீடாதிபதி, மடாதிபதி என்றும் அழைப்பார்கள்.

    காஞ்சி சங்கரமடத்தின் 69-வது பீடாதிபதியாக ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருந்தார். கடந்த 1994-ம் ஆண்டு மகா பெரியவர் முக்தி அடைந்த பிறகு மடாதிபதி பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.

    காஞ்சீபுரத்தில் உள்ள ஆலயங்களுக்கு வரும் பக்தர்கள் காஞ்சி சங்கர மடத்திற்கும் சென்று ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமியிடம் ஆசி பெற தவறுவதில்லை. காஞ்சி மடத்தில் உள்ள தனது அறையில் அமர்ந்து அவர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார்.

    சில மாதங்களாக அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக அவர் நீண்ட தூர யாத்திரைகளை தவிர்த்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை 7.30 மணிக்கு அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள ஏ.பி.சி.டி. மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

    7 டாக்டர்கள் கொண்ட குழு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமியை காப்பாற்ற தீவிரமாக போராடியது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. 9.10 மணிக்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முக்தி அடைந்தார்.

    இதுபற்றி தகவல் பரவியதும் காஞ்சீபுரத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. காஞ்சி மடத்தின் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் அந்த மருத்துவமனை முன்பு திரண்டனர். இதையெடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

    9.15 மணிக்கு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உடல் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சி மடத்திற்கு எடுத்து வரப்பட்டது. 9.20-க்கு காஞ்சி மடத்திற்குள் கொண்டு செல்லப்பட்டு மட நிர்வாகிகளால் அஞ்சலிக்காக தயார் செய்யப்பட்டது.

    ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு புதிய ஆடை அணிவிக்கப்பட்டு, மாலைகள் சாத்தி அலங்கரிக்கப்பட்டது. பிறகு மடத்தில் உள்ள மண்டபத்தில் உடல் வைக்கப்பட்டது. பக்தர்கள் அங்கு சென்று ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு நாடு முழுவதும் பக்தர்கள் உள்ளனர். அவரது ஆசி பெற்ற பலர் வெளிநாடுகளில் உயர் பதவிகளில் உள்ளனர். எனவே அவரது உடல் அடக்கம் நாளை நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.

    மடத்தில் உள்ள ஒரு இடத்தில் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பக்தர்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக மடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

    முக்தி அடைந்துள்ள ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு வயது 84. இவர் 1935-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ந்தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இருள்நீக்கி எனும் கிராமத்தில் பிறந்தார். அவரது இயற்பெயர் சுப்பிர மணியம் மகாதேவர் அய்யர்.

    சிறுவயதிலேயே புரோகிதத்தன்மையாலும், ஆழ்ந்த புலமையாலும் இவர் இந்து சமய பெரியவர்களிடம் செல்வாக்கு பெற்றார். இதையடுத்து அவரை காஞ்சி மடத்தின் இளைய பீடாதிபதியாக 1954-ம் ஆண்டு மார்ச் 22-ந்தேதி காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சுவாமிகள் அறிவித்தார்.

    சுப்பிரமணியன் என்ற பெயரை ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்று பெயர்சூட்டி பக்தர்களுக்கு அறிமுகம் செய்தார். இளைய மடாதிபதியாக பொறுப்பு ஏற்றபோது அவருக்கு வயது 19.

    1994-ம் ஆண்டு மகா பெரியவர் முக்தி அடைந்த பிறகு இவர் காஞ்சி மடத்தின் முதன்மை மடாதிபதியாக பொறுப்பேற்றார்.



    ஆன்மீகம் தவிர கல்வி, மருத்துவம் உள்பட பல்வேறு பணிகளிலும் அவர் போற்றும் வகையில் செயல்பட்டு வந்தார்.

    காஞ்சி மகா பெரியவரை பின்பற்றி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டார். பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள சங்கரமடங்களுக்கு சென்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

    ஏழை, எளியோர்களுக்காக கல்வியில் அவர் செய்த சேவை மிகுந்த வரவேற்பை பெற்றது. அதுபோல ஏராளமான பழைய ஆலயங்களை சீரமைத்து புதுப்பித்தம் செய்ததிலும் அவருக்கு முக்கிய பங்கு உண்டு.

    1988-ம் ஆண்டு அவர் நேபாளம் சென்றார். நேபாளம் மன்னர் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

    1998-ம் ஆண்டு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மானசரோவர் மற்றும் கைலாய மலைக்கு சென்றார். ஆதி சங்கரருக்கு பிறகு இந்த இடங்களுக்கு சென்ற ஒரே சங்கராச்சாரியார் என்ற சிறப்பை ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெற்றார்.

    கைலாயத்தில் ஆதி சங்கரரின் சிலையை நிறுவி வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்தார். அதுபோல மானசரோவரிலும் ஆதி சங்கரருக்கு சிலை எடுத்தார்.

    2000-ம் ஆண்டு வங்கதேச தலைநகர் டாக்கா சென்றார். அந்த நாட்டிற்கு சென்ற ஒரே சங்கராச்சாரியாரும் இவர்தான். அங்கு அவருக்கு மிகுந்த உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    டாக்காவில் தகேஸ்வரி ஆலயத்திற்கு நுழைவாயில் அமைத்து கொடுத்தார். இப்படி ஏராளமான திருப்பணிகளை அவர் செய்துள்ளார். அயோத்தி பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டார்.

    2004-ம் ஆண்டு காஞ்சி வரதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கர ராமன் கொலை வழக்கில் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்த வழக்கில் கைதான அவர் 2013-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

    கடந்த 4 ஆண்டுகளாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருந்தது. 2 மாதங்களுக்கு முன்பு ஒருதடவை அவருக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் பிறகு மடத்திற்கு திரும்பினார்.

    அதன் பிறகு அவர் மடத்தை விட்டு வெளியில் எங்கும் செல்லாமல் இருந்தார். ஆனால் இன்று காலை அவருக்கு ஏற்பட்ட மூச்சு திணறல் முக்தியை அளித்து விட்டது.

    ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முக்தி அடைந்ததை தொடர்ந்து காமாட்சி அம்மன் கோவில் நடை அடைக்கப்பட்டது. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மதுரை ஆதினம் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #Kanchishankaracharya #JayendraSaraswathi
    படப்பையில் ஆய்வுக்கு வந்த கவர்னர் கார் மீது தி.மு.க.வினர் சிலர் கருப்பு கொடிகளை வீசினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    தாம்பரம்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்து வருகிறார்.

    இதற்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து கவர்னருக்கு கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும் போது போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆய்வு செய்ய கவர்னர் பன்வாரிலால் இன்று காலை காரில் புறப்பட்டார். அவருடன் பாதுகாப்பு அதிகாரிகளும் சென்றனர்.

    கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து படப்பையில் தி.மு.க.வினர் கருப்பு கொடி போராட்டம் நடத்த குவிந்தனர்.

    தி.மு.க. மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், அரவிந்த்ரமேஷ் மற்றும் படப்பை மனோகரன், வைத்திலிங்கம், தமிழ்மணி, மாமல்லபுரம் விசுவநாதன், வெ.கருணாநிதி, பல்லாவரம் ஜோசப் ரமேஷ், ரஞ்சன், செம்பாக்கம் கற்பகம் சுரேஷ், லட்சுமிபதி ராஜா, ஜோதி குமார், பெருங்களத்தூர் புகழேந்தி, உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்டம் முழுவதும் இருந்து வந்து கருப்பு கொடியுடன் திரண்டு இருந்தனர்.

    படப்பையில் கவர்னர் கார் வந்தபோது கோ‌ஷம் எழுப்பினார்கள். திடீரென்று கூட்டத்தில் இருந்த சிலர் கவர்னர் கார் மீது கருப்பு கொடிகளை வீசினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் ரோட்டில் கிடந்த கருப்பு கொடிகளை அகற்றினார்கள்.

    காஞ்சீபுரம் சென்ற கவர்னர் பன்வாரிலால் வாலாஜாபாத் அடுத்த ஏக்கனாம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள சுகாதார கட்டிடம் மற்றும் கழிப்பறைகளை திறந்து வைத்தார்.

    பின்னர் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கு அவர் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மாலை 4 மணிக்கு சங்கரமடம் செல்கிறார். அங்கு சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள், விஜயேந்திர சரசுவதி சுவாமிகள் ஆகியோரை சந்திக்கிறார்.

    மாலை 5 மணிக்கு காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பிறகு சென்னை புறப்பட்டு செல்கிறார். முன்னதாக காஞ்சீபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ. தலைமையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு கருப்புக் கொடி காட்ட ஏராளமானோர் கூடியிருந்தனர். #tamilnews
    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் போலி பெண் டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக உள்ளனர்.

    இன்று காலை வழக்கம் போல் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி பரபரப்பாக காணப்பட்டது. அப்போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தான் சிகிச்சை அளிக்க வந்திருப்பதாக கூறி டாக்டர் உடை, ஸ்டெதஸ்கோப்புடன் சுற்றி வந்தார்.

    திடீரென அவர் ஆஸ்பத்திரி டீன் அறைக்குள் செல்ல முயன்றார். சந்தேகம் அடைந்த ஊழியர்கள் அவரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

    இதையடுத்து அவரை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் மதுராந்தகத்தை அடுத்த மேற்கு செய்யூரைச் சேர்ந்த சகிலாபாபி என்பது தெரிந்தது.

    அவர் போலீசாரிடம் கூறும்போது, காலை 7 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வந்து விட்டேன். டாக்டர் உடை புதுச்சேரியில் உள்ள ஆஸ்பத்திரியில் கிடைத்தது. மருத்துவம் படித்து உள்ளேன். மருத்துவ தேர்வு எழுத வந்தேன் என்று கூறி உள்ளார்.

    முன்னுக்கு பின் முரணாக சகிலாபாபி பேசி வருவதால் அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. அவரிடம் செங்கல்பட்டு டவுன் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    பிடிபட்ட சகிலாபாபி நோயாளிகளுக்கு சிசிச்சை அளித்தாரா? என்று டாக்டர்களும் விசாரித்து வருகின்றனர். செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் போலி டாக்டர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    ×