என் மலர்
காஞ்சிபுரம்
சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்ல வந்த பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது இலங்கையை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரது சூட்கேசை திறந்து பார்த்த போது கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.
அதற்கான ஆவணம் அவரிடம் இல்லை. இதையடுத்து அமெரிக்க டாலரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ. 20 லட்சம் ஆகும்.
அமெரிக்க டாலர் அவருக்கு எப்படி? கிடைத்தது. யாருக்காக கடத்தப்படுகிறது என்பது குறித்து திருநாவுக்கரசுவிடம் விசாரணை நடந்து வருகிறது. #Tamilnews
உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து 3 விமானங்களை பெண்களே இயக்க ஏர்-இந்தியா விமானம் ஏற்பாடு செய்து இருந்தது.
அதன்படி இன்று அதிகாலை 5.05 மணிக்கு அந்தமான் செல்லும் விமானத்தை விமானி தீபா ஸ்த்யா தலைமையிலான குழுவினர் இயக்கினர். இந்த விமானம் அந்தமான் சென்று அங்கிருந்து காலை 10 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு வந்தது.
இதேபோல் காலை 5.55 மணிக்கு இலங்கைக்கு சென்ற விமானத்தை விமானிகள் ரூபா, நிமிஷா ஆகியோர் இயக்கினர். இந்த விமானம் மீண்டும் காலை 10 மணிக்கு இலங்கையில் இருந்து டெல்லிக்கு இயக்கப்பட்டது.

மதியம் 11.15 மணிக்கு விமானிகள் ரம்யா ரங்கராஜ், பிருந்தா நாயர் குழுவினர் கோவைக்கு விமானத்தை இயக்கினர். கோவையில் இருந்து 4.15 மணிக்கு இந்த விமானம் சென்னைக்கு வந்து சேரும்.
பெண்களால் இயக்கப்பட்ட 3 விமானங்களில் பணியாளர்களும் பெண்களே நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து மகளிர் தின வாழ்த்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் பெண்களால் இயக்கப்பட்ட விமானத்தில் பயணம் செய்ய வந்தவர்களுக்கும் பூங்கொத்து கொடுக்கப்பட்டது. #tamilnews
சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்த பிரபல ரவுடி பினு. கடந்த சில நாட்களுக்கு முன்பு குன்றத்தூர் அருகே உள்ள காலி இடத்தில் ரவுடி கும்பலுடன் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார்.
அப்போது அங்கு வந்த போலீசார் 100-க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரும்பாக்கத்தைச் சேர்ந்த மற்றொரு ரவுடி ராதாகிருஷ்ணனை தீர்த்து கட்ட பினு திட்டமிட்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து ரவுடி கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். சில நாட்களுக்கு முன்பு ரவுடி பினு அம்பத்தூர் துணை கமிஷனர் முன்பு சரண் அடைந்தார். அவரை போலீசார் விசாரணை செய்து புழல் செயிலில் அடைத்தனர்.
இதற்கிடையே அரும்பாக்கம் ரவுடி ராதா என்கிற ராதாகிருஷ்ணன் ஏற்கனவே சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்து இருந்தார். அவரை போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
போலீஸ் காவல் முடிந்ததால் நேற்று மாலை அல்லிகுளம் 5-வது நடுவர் நீதி மன்றத்தில் ராதாகிருஷ்ணனை போலீசார் ஆஜர்படுத்தினர்.
அப்போது அதே நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணனின் எதிரியான மற்றொரு ரவுடி தட்சிணாமூர்த்தியும் ஆஜராக வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோர்ட்டு வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதற்கிடையே ரவுடி ராதாகிருஷ்ணனை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அண்ணா நகர் உதவி கமிஷனர் குணசேகர் மற்றும் அரும்பாக்கம் இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் ராதாகிருஷ்ணனை புழல் சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.
ஆனால் அங்கு ராதாகிருஷ்ணனின் எதிரிகளான பினு, கனகு, தட்சிணாமூர்த்தி ஆகியோர் ஏற்கனவே இருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக ராதாகிருஷ்ணனை அடைக்க சிறை நிர்வாகம் மறுத்து விட்டது.
இதையடுத்து உடனடியாக போலீசார் ராதாகிருஷ்ணனை கடலூர் சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர். #tamilnews
போரூர்:
வளசரவாக்கம், சவுத்ரி நகர் 8-வது தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ் (வயது 70). ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியர். இவரது மனைவி வனிதா. இவர்களது மகன் அமெரிக்காவில் உள்ளார். மகள் திருமணமாகி கணவருடன் பெங்களூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் வனிதா பெங்களூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டார்.
நேற்று மாலை துரை ராஜன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வளசரவாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் முத்து ராஜா மற்றும் போலீசார் விரைந்து வந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு படுக்கையறையில் அழுகிய நிலையில் துரை ராஜ் பிணமாக கிடந்தார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
துரைராஜ் எப்படி? இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு:
சென்னை அயனாவரம் ரெயில்வே குடியிருப்பில் வசித்து வருபவர் ஜெகதீசன். ரெயில்வே ஊழியர். இவர் திருவண்ணாமலையில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குடும்பத்துடன் காரில் சென்றார்.
பின்னர் நேற்று இரவு அவர்கள் சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அதிகாலை 2 மணி அளவில் மறைமலைநகரை அடுத்த மகேந்திரா சிட்டி தொழில் பூங்கா அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது சாலை ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு ஜெகதீசன் இறங்கினார்.
அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் திடீரென ஜெகதீசனை சரமாரியாக தாக்கினர். பின்னர் கார் கண்ணாடியை உடைத்து ஜெகதீசன் மனைவி அணிந்திருந்த 14 பவுன் நகையை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
பலத்த காயம் அடைந்த ஜெகதீசனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தாம்பரத்தை அடுத்த முடிச்சூரை சேர்ந்தவர் தியாகராஜன். கால் டாக்சி டிரைவர். நேற்று இரவு அவர் சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள ஓட்டலில் பயணியை இறக்கிவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
மறைமலைநகர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது காரை நிறுத்திவிட்டு இறங்கினார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் தியாகராஜனை கத்தி முனையில் மிரட்டி சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்து ரூ.3 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பினர்.
ஊரப்பாக்கம் பிரியா நகரை சேர்ந்தவர் தாயுமானவன். மறைமலைநகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு அவர் மறைமலைநகர் ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்தார். அங்கு வந்த மர்மகும்பல் தாயுமானவனை தாக்கி பணத்தை பறித்து சென்றுவிட்டது.
காயம் அடைந்த அவருக்கு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மறைமலைநகர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார்களை நிறுத்துபவர்களை குறி வைத்து கொள்ளை சம்பவம் அதிக அளவில் நடந்து வருகிறது. கொள்ளையை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டாலும் குற்றச்செயல்கள் குறையவில்லை. எனவே கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பயணிகளை அதிகாரிகள் கண்காணித்தனர்.
அப்போது சென்னையில் இருந்து கொல்கத்தா செல்ல இருந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த சென்னையை சேர்ந்த முகமது லாபீர் (வயது 35) என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் இனிப்புகள் வைக்கும் பெட்டியில் போதைப்பொருளை அடைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
இவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 8½ கிலோ எடை கொண்ட இந்த போதைப்பொருள் ரூ.40 லட்சம் மதிப்பு கொண்டதாகும். இதைத்தொடர்ந்து முகமது லாபீரை கைது செய்து சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
கைதான முகமது லாபீர், கொல்கத்தா வழியாக மலேசியாவிற்கு போதைப்பொருளை கடத்த முயன்றதாகவும், இவர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. #tamilnews
ஆலந்தூர்:
ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் குரேஷ், சுக்கூர், பயாஸ், அக்பர். இவர்கள் வெளிநாடுகளில் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்கள்.
இலங்கை செல்வதற்காக 5 பேரும் திருவல்லிக்கேணியில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தனர். நேற்று அதிகாலை அங்கிருந்து சென்னை விமான நிலையத்துக்கு வாடகை காரில் புறப்பட்டனர்.
கிண்டி கத்திப்பாராவில் உள்ள ஆலந்தூர் மெட்ரோ ரெயில் அருகே வந்த போது மற்றொரு காரில் வந்த 5 பேர் வழிமறித்தனர்.
அவர்கள், “நாங்கள் போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் உங்களிடம் விசாரிக்க வேண்டும்” என்று கூறி குரேஷ் உள்பட 5 பேரையும் தங்களது காரில் ஏற்றினர்.
இதையடுத்து வாகை காரை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து சென்று விட்டார். காரில் வைத்து வியாபாரிகள் 5 பேரையும் அதில் இருந்தவர்கள் துப்பாக் கியை காட்டி மிரட்டினர்.
பின்னர் அவர்களிடம் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர், யூரோ, தினார் உள்ளிட்ட வெளிநாட்டு பணத்தையும் ரூ.16 ஆயிரம் இந்திய பணத்தையும் பறித்தனர்.
இதைத்தொடர்ந்து வியாபாரிகள் 5 பேருக்கும் தலா ரூ.200 கொடுத்து ஊருக்கு செல்லும்படி கூறி ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு என்று தனித்தனியாக சாலை யோரம் இறக்கி விட்டு மர்ம கும்பல் தப்பி சென்று விட்டனர்.
பரங்கிமலை வந்த 5 வியாபாரிகளும் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். மர்ம கும்பல் அதிகாரிகள் போல் நடந்து வியாபாரிகளிடம் பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இது தொடர்பாக இணை கமிஷனர் மகேஸ்வரி, துணை கமிஷனர் முத்துச்சாமி ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொள்ளை கும்பலை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வியாபாரிகளை இறக்கி விட்ட இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதில் கொள்ளை கும்பல் வந்தது வாடகை கார் என்பது தெரிந்தது. அதன் பதிவு எண் சரியாக தெரியவில்லை. இதையடுத்து டோல்கேட் பகுதியில் உள்ள கேமிரா காட்சியை ஆய்வு செய்ய முடிவு செய்து இருக்கிறார்கள்.
வியாபாரிகள் 5 பேரில் பிர்தோசை தவிர மற்ற 4பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். அனைவரும் ‘குருவி’களாக வெளி நாடுகளுக்கு சென்று பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்தனர்.
அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசுவது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. வியாபாரிகளிடமும் விசாரணை நடக்கிறது.
மேலும் அவர்களை அழைத்து சென்ற கால் டாக்சி டிரைவர் குரோம்பேட்டையை சேர்ந்த சையது யூசுப்பிடமும் விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே இந்த கொள்ளை தொடர்பாக திருவல்லிக்கேனில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய 2 பேரை போலீசார் பிடித்து உள்ளனர்.
இன்று காலை வியாபாரிகள் 5 பேரையும் திருவல்லிக்கேணி அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
பாடியை சேர்ந்தவர் சதீஷ். இவரது மகன் பிரதீஷ் (வயது 6). இருவரும் காரில் கல்பாக்கத்தை அடுத்த விட்டிலாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு இரவு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் கிழக்கு கடற்கரை சாலை ஆலமரம் பஸ் ஸ்டாப் எதிரே வந்த போது சாலையின் குறுக்கே மாடு பாய்ந்தது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், மாடு மீது மோதியது. இதில் கார் தீப்பிடித்து எரிந்தது.
அதிர்ச்சி அடைந்த சதீஷ், மகன் பிரதீசுடன் அலறியடித்து கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பற்றியது.
தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் விரைந்து மீட்பு பணியில் இடுபட்டனர். இதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. கார் மோதியதில் காயம் அடைந்த மாடு பலியானது.
காரில் தீப்பிடித்தவுடன் சதீஷ், மகனுடன் கீழே இறங்கியதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
தாம்பரம் ரெயில் நிலையம் 3-வது முனையமாக எற்கனவே அறிவிக்கப்பட்டது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் இங்கிருந்து இயக்கப்படும் என்றும் கூறப்பட்டது. அதற்கான பணிகள் நடந்து வருகிறது,
இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக 3-வது முனையமான தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு முன் பதிவு இல்லாத அந்தோரியா ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று முதல் தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு அந்தோதியா ரெயில் போக்குவரத்து தொடங்கியது. முதல் ரெயில் இன்று காலை புறப்பட்டு சென்றது.
தாம்பரத்தில் இருந்து திங்கட்கிழமை மற்றும் புதன் கிழமை காலை 7 மணிக்கு இந்த ரெயில் புறப்பட்டு சென்று இரவு 10.30 மணிக்கு செங்கோட்டையை அடைகிறது. அதேபோல் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை காலை 6 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது.
இந்த ரெயிலில் பயணிகள் பயணம் செய்வதற்காக 16 பெட்டிகள் உள்ளன. இந்த ரெயிலுக்கு முன்பதிவு கிடையாது.
இந்த ரெயிலுக்கு முன்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். தினசரி ரெயிலாக இதை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த ரெயிலை இன்று காலை தாம்பரம் ரெயில் நிலைய மேலாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். இன்று காலை 7 மணிக்கு ரெயில் புறப்பட இருந்த நிலையில் பெட்டிகள் இணைக்கும் பகுதியில் திடீர் பழுது ஏற்பட்டது.
இதை ஊழியர்கள் சரி செய்தனர். இதனால் அரைமணிநேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. முதல் நாளில் இந்த ரெயிலில் தாம்பரத்தில் இருந்து 50 பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர். #tamilnews
சென்னை:
தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை இளைஞர் எழுச்சி நாள் விழாவாக காஞ்சி வடக்கு மாவட்டத்தில் மாவட் டச்செயலாளர் தா.மோ. அன்பரசன் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி 2257 கிளைகளிலும் தி.மு.க.கொடி ஏற்றினார்கள்.
மாவட்டத்தில் உள்ள 38 ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள 3 ஆயிரம் பேருக்கு உணவு-உடை வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் 1 லட்சம் ஏழை எளியவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கினார்கள்.
இதை மாவட்டம் முழுவதும் சென்று தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பல இடங்களில் பிரியாணியும் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களும் வழங்கினார்.
மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1-ந்தேதி அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என்று தா.மோ.அன்பரசன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன்படி செங்கல்பட்டு, குரோம்பேட்டை,குன்றத்தூர் உள்ளிட்ட ஆஸ்பத்திரிகளுக்கு சென்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணி வித்தார்.
செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், நகரச் செயலாளர் நரேந்திரன் தலைமையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் 29 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கினார்.
குழந்தைகளுக்கு புத்தாடைகள், பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது. படப்பையில் ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதே போல் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று நலத் திட்ட உதவிகளை தா.மோ. அன்பரசன் வழங்கினார்.
தாம்பரம்:
சேலையூரை அடுத்த ராஜகீழ்ப்பாக்கம் வி.ஜி.பி. சரவனா நகரை சேர்ந்தவர் மனோஜ்குமார். தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
இவரிடம் செல்போனில் தொடர்பு கொண்ட ஒரு கும்பல் பிரபல நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், குறைந்த வட்டியில் கடன் வாங்கித் தருவதாகவும் கூறினார்கள்.
இதை நம்பிய மனோஜ் குமாரிடம் அக்கும்பல் முதலில் கமிஷனாக ரூ. 63 ஆயிரம் தர வேண்டும் என்று கூறியது. இதையடுத்து அவர் ரூ. 63 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் அந்த கும்பல் கொடுத்த வங்கி கணக்கில் பண பரிமாற்றம் செய்தார்.
ஆனால் கடன் வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். அதன்பிறகு அக்கும்பலை தொடர்பு கொண்டபோது செல்போன் ’சுவிட்ச்-ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.
இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மனோஜ்குமார் சேலையூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆல்பின் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில் மோசடி செய்த பள்ளிக்கரணையை சேர்ந்த வரதராஜன், அலெக்ஸ், விக்கி, இம்ரான், ராஜேஷ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
சோழிங்கநல்லூர்:
சென்னை கேளம்பாக்கத்தை சேர்ந்தவர் ஆனந்த் ஒ.எம்,ஆர் சாலையில் தனியார் சாப்ட்வர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இரவு வேலை முடித்து ஒ.எம்.ஆர். சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் ஆனந்த் சென்றார்.
அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியது. 30 மீட்டர் தூரத்துக்கு மோட்டார் சைக்கிளுடன் ஆனந்த் இழுத்து செல்லப்பட்டார். இதில் ஆனந்த் உடல் சிதறி பலியானார்.
சோழிங்கநல்லூர் போக்கு வரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவின் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






