என் மலர்
செய்திகள்

துப்பாக்கி முனையில் வியாபாரிகளை கடத்திய கும்பலை பிடிக்க 8 தனிப்படை
ஆலந்தூர்:
ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் குரேஷ், சுக்கூர், பயாஸ், அக்பர். இவர்கள் வெளிநாடுகளில் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்கள்.
இலங்கை செல்வதற்காக 5 பேரும் திருவல்லிக்கேணியில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தனர். நேற்று அதிகாலை அங்கிருந்து சென்னை விமான நிலையத்துக்கு வாடகை காரில் புறப்பட்டனர்.
கிண்டி கத்திப்பாராவில் உள்ள ஆலந்தூர் மெட்ரோ ரெயில் அருகே வந்த போது மற்றொரு காரில் வந்த 5 பேர் வழிமறித்தனர்.
அவர்கள், “நாங்கள் போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் உங்களிடம் விசாரிக்க வேண்டும்” என்று கூறி குரேஷ் உள்பட 5 பேரையும் தங்களது காரில் ஏற்றினர்.
இதையடுத்து வாகை காரை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து சென்று விட்டார். காரில் வைத்து வியாபாரிகள் 5 பேரையும் அதில் இருந்தவர்கள் துப்பாக் கியை காட்டி மிரட்டினர்.
பின்னர் அவர்களிடம் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர், யூரோ, தினார் உள்ளிட்ட வெளிநாட்டு பணத்தையும் ரூ.16 ஆயிரம் இந்திய பணத்தையும் பறித்தனர்.
இதைத்தொடர்ந்து வியாபாரிகள் 5 பேருக்கும் தலா ரூ.200 கொடுத்து ஊருக்கு செல்லும்படி கூறி ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு என்று தனித்தனியாக சாலை யோரம் இறக்கி விட்டு மர்ம கும்பல் தப்பி சென்று விட்டனர்.
பரங்கிமலை வந்த 5 வியாபாரிகளும் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். மர்ம கும்பல் அதிகாரிகள் போல் நடந்து வியாபாரிகளிடம் பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இது தொடர்பாக இணை கமிஷனர் மகேஸ்வரி, துணை கமிஷனர் முத்துச்சாமி ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொள்ளை கும்பலை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வியாபாரிகளை இறக்கி விட்ட இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதில் கொள்ளை கும்பல் வந்தது வாடகை கார் என்பது தெரிந்தது. அதன் பதிவு எண் சரியாக தெரியவில்லை. இதையடுத்து டோல்கேட் பகுதியில் உள்ள கேமிரா காட்சியை ஆய்வு செய்ய முடிவு செய்து இருக்கிறார்கள்.
வியாபாரிகள் 5 பேரில் பிர்தோசை தவிர மற்ற 4பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். அனைவரும் ‘குருவி’களாக வெளி நாடுகளுக்கு சென்று பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்தனர்.
அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசுவது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. வியாபாரிகளிடமும் விசாரணை நடக்கிறது.
மேலும் அவர்களை அழைத்து சென்ற கால் டாக்சி டிரைவர் குரோம்பேட்டையை சேர்ந்த சையது யூசுப்பிடமும் விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே இந்த கொள்ளை தொடர்பாக திருவல்லிக்கேனில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய 2 பேரை போலீசார் பிடித்து உள்ளனர்.
இன்று காலை வியாபாரிகள் 5 பேரையும் திருவல்லிக்கேணி அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.






