search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drug seized"

    சென்னை விமான நிலையத்தில் ரூ.5½ கோடி மதிப்பிலான போதைப்பொருளை கடத்திய போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த வாலிபரை கைது செய்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில், பிரேசிலில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5½ கோடி மதிப்பிலான போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் போதைப்பொருள் கடத்தப்பட்டு வருவதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பிரேசில் நாட்டில் இருந்து துபாய் வழியாக சென்னைக்கு விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, அந்த விமானத்தில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த மெண்டஸ் அபோசன் டோம்மிங்கோஸ் (வயது 28) என்பவர் சுற்றுலா விசாவில் சென்னை வந்திருந்தார்.

    அவர் மீது சந்தேகம் அடைந்த போதை பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரித்தனர். மெண்டஸ் அபோசன் டோம்மிங்கோஸ் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் உணவு பெட்டிகள் இருந்தது.

    அவற்றை பிரித்து பார்த்தபோது உயர்ரக போதை பொருளான கொக்கைன் இருந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு, ரூ.5½ கோடி ஆகும். இதையடுத்து மெண்டஸ் அபோசன் டோம்மிங்கோசை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் இருந்த 1 கிலோ 800 கிராம் கொக்கைன் போதை பொருளை கைப்பற்றினர்.

    விசாரணையில், வேலை இல்லாத காரணத்தால் போதைப்பொருளை கடத்தி வந்ததாக அவர் தெரிவித்தார். பிரேசிலில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட போதைப்பொருளை யாருக்கு கொடுக்க இருந்தார்? இவருக்கும், சர்வதேச கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×