என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    பல்லாவரம் அருகே குடும்ப தகராறில் தந்தையை அடித்து கொன்ற மகன் மற்றும் தாயை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாம்பரம்:

    பல்லாவரம் பாரதி நகர் அண்ணா தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜன். கார்பென்டர் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி குளோரியா, மகன் அந்தோணி வின்சென்ட் ராஜ்(25).

    ராஜனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அடிக்கடி மனைவி, மகனுடன் சண்டை போட்டு வந்தார். கடந்த 31-ந் தேதி தந்தைக்கும் மகனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

    இதில் ராஜனுக்கு தலையில் பலத்த அடிபட்டு சுய நினைவின்றி மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    ராஜனை அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டதாக கூறி சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 3-ந் தேதி சிகிச்சை பலனின்றி ராஜன் உயிரிழந்தார்.

    இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் முதன் முதலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்ததாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் எந்த பகுதியில் விபத்து நடந்தது என மனைவி மற்றும் மகனிடம் கேட்ட போது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்.

    அவர்களிடம் போலீசார் துருவித் துருவி கேள்வி கேட்டபோது பின்பு நடந்த சம்பவத்தைப் பற்றி ஒப்புக்கொண்டுள்ளனர் தற்போது கொலை வழக்காக பதிவு செய்து அந்தோணி வின்சென்ட் ராஜ் மற்றும் குளோரியா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். #tamilnews
    காஞ்சிபுரம் அருகே பா.ம.க. நிர்வாகி உள்பட 3 பேரை அரிவாளால் சரமாரி வெட்டிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் (40). இவர் காஞ்சிபுரம் மேற்கு ஒன்றிய பா.ம.க. செயலாளராக உள்ளார்.

    இன்று காலை 6 மணி அளவில் ஜெகநாதன் தனது வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல் ஜெகநாதனை சூழந்து கொண்டு அரிவாளால் வெட்டியது.

    இதைப்பார்த்து ஜெகநாதன் மனைவி விஜயலட்சுமி (36), தம்பி பசுபதி (38) ஆகியோர் தடுக்க முயன்றனர். 3 பேரையும் சரமாரி வெட்டிய அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.

    இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் ஜெகநாதனின் தம்பி உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    போலீஸ் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ரவுடி மணிமாறன் (42), ரூ.3 லட்சம் பணம் கேட்டு ஜெகநாதனை மிரட்டியுள்ளார். அவர் கொடுக்காததால் கும்பலாக வந்து வெட்டி இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது.

    தேர்தல் நேரத்தில் இந்த சம்பவம் நடந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரவுடி கும்பலை தேடி வருகிறார்கள்.
    மதுராந்தகம் அருகே கார் விபத்தில் 2 பேர் பலியாகினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் மீது மோதிய வாகனம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
    மதுராந்தகம்:

    திண்டிவனத்தை சேர்ந்தவர் குமரன். இவர் தனது நண்பருடன் காரில் இன்று காலை சென்னையை நோக்கி வந்து கொண்டு இருந்தார். மதுராந்தகத்தை அடுத்த மேட்டுப்பாளையத்தில் கார் வந்து கொண்டிருந்தது.

    அப்போது பின்னால் வந்த வாகனம் ஒன்று கார் மீது திடீரென மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.இதில் குமரனின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் கவிழ்ந்து உருண்டது.

    இதில் காரில் இருந்த குமரன் உள்பட 2 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காரில் இருந்து 2 பேர் உடலையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் மீது மோதிய வாகனம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    குமரன் எதற்காக சென்னை வந்தார் என்பதும் அவருடன் பயணித்த நண்பரின் பெயர் விவரம் தெரியவில்லை. இதுபற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    பிரசாரத்தின்போது வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் நோக்கத்தில் பேசியதாக புகார் எழுந்ததால், அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யும்படி காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். #LokSabhaElections2019 #AnbumaniRamadoss
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் அதிமுக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார். அப்போது, வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது போன்று அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.



    ‘இந்த பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு வங்கி கிடையாது. திமுகவுக்கு மட்டும் கொஞ்சம் வாக்கு வங்கி உள்ளது. எனவே இங்குள்ள வாக்குச்சாவடிகளில் நாம் மட்டும்தான் இருப்போம். நாம் மட்டும் இருந்தால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும். நமது வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்’ என அன்புமணி பேசினார்.

    இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வாகுச்சாவடிகளை கைப்பற்றும் நோக்கத்தில் அன்புமணி ராமதாஸ் இந்த கருத்தை தெரிவித்ததாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து,  அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்ய திருப்போரூர் தேர்தல் அதிகாரிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். #LokSabhaElections2019 #AnbumaniRamadoss
    காஞ்சிபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற வேட்பாளர் எஸ்.ஆறுமுகம் ஆகியோருக்கு ஆதரவாக அன்புமணிராமதாஸ் திருப்போரூரில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். #Loksabhaelections2019

    திருப்போரூர், ஏப். 5-

    காஞ்சிபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல், மற்றும் திருப்போரூர் சட்டமன்ற வேட்பாளர் எஸ்.ஆறுமுகம் ஆகியோருக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் டாக்டர். அன்புமணிராமதாஸ் திருப்போரூரில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இப்பகுதியில் பல நல்ல திட்டங்களை நிறைவேற்ற இருவரையும் வெற்றி பெற செய்யவும், போக்குவரத்திற்காக பங்கிங்காம் கால்வாய் ஆழப்படுத்தி நீர்வழிச்சாலை நிறைவேற்றப்டும். என கூறினார். அதிமுக இலக்கிய அணி செயலளர் வளாமதி, முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், மாவட்ட செயலாளர் கள் ராஜேந்திரன், வாலாஜா பாத்கணேசன், முன்னால் எம்.எல்.ஏ மனோகரன், பாட்டாளிமக்கள் கட்சி திருக்கச்சூர் ஆறுமுகம், பொன்.கங்காதரன், ராதாகிருஷ்ணன், வாசு, ஏகாம்பரம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் வேலாயுதம், ஆனூர் பக்தவச்சலம், ஒன்றியசெயலாளர் குமரவேல், மாவட்ட,, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மற்றும் பா.ஜ.க, தே.மு.தி.க., த.மா.கா., புரட்சிபாரதம், உள்ளிட்ட கூட்டணி கட்சிநிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மறைமலைநகரில் கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    மறைமலைநகர் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்- இன்ஸ்பெக்டர் நெடுமாறன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் மறைமலைநகர், காந்தி நகரை சேர்ந்த ரெங்கன், ஜெகதீசன் என்பதும் வழிப்பறி மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 பவுன் நகை, 3 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான 2 பேருக்கும் வேறு பகுதியில் நடந்த கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உத்திரமேரூர் அருகே இரும்பு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 3 ஊழியர்கள் உயிரிழந்தனர். #FactoryExplosion

    காஞ்சிபுரம்:

    உத்திரமேரூர் அருகே உள்ள களியாம்பூண்டியில் தனியார் இரும்பு தொழிற்சாலை உள்ளது. இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

    நேற்று நள்ளிரவு ஆலையில் இரவுப்பணி நடந்தது. அப்போது அங்கிருந்த பாய்லர் திடீரென வெடித்தது. இதில் அருகில் இருந்த 8 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக மற்ற ஊழியர்கள் அவர்களை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அகிலேஷ், சுரேந்தர், தினேஷ் என தெரியவந்துள்ளது.

    மேலும் 5 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். #FactoryExplosion

    ஸ்ரீபெரும்புதூர் தொற்சாலைகளில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக டிஆர் பாலூ வாக்குறுதி அளித்துள்ளார். #TRBaalu
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சோகண்டி, காந்தூர், மதுரமங்கலம், எடையார்பாக்கம், சிவபுரம், உள்ளிட்ட இடங்களில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது பொதுக்களிடையே வேட்பாளர் டி.ஆர்.பாலு பேசும்போது, “என்னை வெற்றி பெற செய்தால் சுங்குவார்சத்திரம் பகுதியில் மிக பெரிய பேருந்து நிலையம் அமைத்து தருவேன். நவீன வசதிகளுடன் பத்திரபதிவு அலுவலகம் அமைத்து தருவேன். இலவச பட்டா வழங்க வகை செய்வேன், தொற்சாலைகளில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவேன்” என்றார்.

    பிரச்சாரத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன், மாவட்ட அவை தலைவர் துரைசாமி, ஒன்றிய செயலாளர்கள் கருணாநிதி, கோபால், மாவட்ட நிர்வாகிகள் கு.ப.முருகன், பொடவூர் ரவி, எல்.டி.ஜார்ஜ், செந்தில் தேவராஜ், சிவப்பாதம், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் பாலா என்கிற பால்ராஜ், உள்ளிட்டோர் சென்று உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தனர். முன்னதாக இளைஞர் அணி அமைப்பாளர் பாலா சோகண்டியில் வேட்பாளர் டி.ஆர்பாலுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார். #TRBaalu
    இலங்கையில் இருந்து வந்த சென்னை விமானத்தில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்திய 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #ChennaiAirport
    ஆலந்தூர்:

    இலங்கையில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த சென்னை, மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த 2 வாலிபர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். அவர்கள் இருவரும் உள்ளாடையில் மறைத்து 420 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது.

    இதையடுத்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன்மதிப்பு ரூ.14 லட்சம் ஆகும். இதுதொடர்பாக பிடிபட்ட 2 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். #ChennaiAirport
    கண்ணகிநகரில் ஓட்டு போடுவதற்காக பொதுமக்களுக்கு பணம் விநியோகம் செய்த அ.ம.மு.க. பெண் நிர்வாகியை பறக்கும் படை அதிகாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். #AMMK
    சோழிங்கநல்லூர்:

    சென்னை கண்ணகி நகர், எழில்நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக கண்ணகி நகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் கண்ணகி நகர் சுனாமி குடியிருப்பு மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய பகுதிகளில் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது பெண் ஒருவர் ஓட்டு போடுவதற்காக பொதுமக்களுக்கு பணம் விநியோகம் செய்து கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரது பெயர் ரேகா என்பதும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி என்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவரிடம் இருந்த 10 ஆயிரத்து 400 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரை கண்ணகிநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். #AMMK
    மதுராந்தகம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து சாமி சிலை மற்றும் உண்டியல் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள பெரும்பாக்கத்தில் பழமையான சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு இரவு பூஜை முடிந்து பூசாரி கோவிலை பூட்டிச்சென்றார்.

    மறுநாள் காலை பூஜை செய்ய வந்த போது கோவிலின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது 2 அடி உயரம் உள்ள வெண்கலத்தால் ஆன உற்சவர் அம்மன்சிலை கொள்ளை போய் இருந்தது. மேலும் உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் மாயமாகி இருந்தது.

    நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் அம்மன் சிலையையும், உண்டியல் பணத்தையும் சுருட்டி சென்று இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து மதுராந்தகம், போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

    கோவிலில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படவில்லை. இதனால் கொள்ளையர்களை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    இதையடுத்து அப்பகுதியில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவாக ரஜினி பிரசாரம் செய்தால் சந்தோ‌ஷம்தான் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #kamalhaasan
    ஆலந்தூர்:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் போது எல்லாம் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று தெளிவாகத் தெரிகிறது. நான் போகுமிடம் எல்லாம் மக்களின் அன்பில் நீந்த வாய்ப்பு கிடைக்கிறது. அது எனக்கும், மக்களுக்கும் சந்தோ‌ஷமாக இருக்கிறது. இதனால் எங்களுக்கு பொறுப்பு கடமையும் அதிகமாக இருக்கிறது என்ற உணர்வு ஏற்படுகிறது. அதை மக்கள் எங்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.

    எங்களுடைய மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களுடன் தினம் பேசிக் கொண்டிருக்கிறேன். ஒரு சிலர் பிரசாரத்தில் இருப்பதால் அவருடன் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அனுதினமும் அவரிடம் தொடர்பு கொண்டிருக்கிறேன்.

    தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் கோடிக்கணக்கில் பணம் பிடிக்கப்பட்டு வருகிறது. இதைப்போல செய்திகள் தினமும் கேட்பதால் சாதாரணமாகி விட்டது. இது சாதாரணமான செய்தி கிடையாது.

    இப்படிப்பட்ட செய்திகளை பார்த்து விட்டு எங்கள் கட்சியினர் கூட நாமும் இப்படி செலவு செய்ய வேண்டும் என்று அடையாளம் காட்டுகிறார்கள். அவர்களுக்கு கனிவாக சொல்லுகிறேன் இதைச் செய்யக்கூடாது.

    அதற்குதான் நாம் வந்திருக்கிறோம். அப்படி என் கட்சியினர் யாராவது செய்தால் அவர்களை தேர்தல் ஆணையத்தில் நானே காட்டி கொடுப்பேன் என்று மிரட்ட வேண்டியதாயிருக்கிறது.

    பொதுவாக நல்ல பழக்கமோ, கெட்ட பழக்கமோ அண்ணனைப் பார்த்து தம்பி கற்றுக் கொள்வது தான் நம் குடும்பங்களில் உள்ள வழக்கம் .இது ஒரு தொற்று ஆகிவிட்டது. இந்த தொற்றை பரவாமல் நாம் தடுக்க வேண்டும். எங்கள் கட்சியில் யாராவது ஆசைகாட்டி, போனால் கூட அவர்களை கட்சியிலிருந்து நீக்குவது என்று முடிவு எடுத்து இருக்கிறோம்.

    திராவிடம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. திராவிடம் என்பது ஒரு இனம். நான் திராவிடன், நாம் எல்லோரும் திராவிடர்கள். இந்த இரு கட்சிகள் தங்களுக்கு என்று பகிர்ந்து எடுத்துக்கொண்ட வி‌ஷயம் திராவிடம் அல்ல, எல்லோருக்கும் சொந்தமான வி‌ஷயம்தான் திராவிடம். அப்படி தான் திராவிட கட்சிகளில் உள்ள நல்ல திட்டங்களை நாங்கள் எடுத்திருக்கிறோம்.

    நல்ல திட்டங்கள் எங்கு இருந்தாலும், யார் செய்திருந்தாலும் அதை மீண்டும் மேம்படுத்தி மக்களுக்கு தர மக்கள் நீதி மய்யம் முயற்சி செய்யும்.

    தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளில் தான் தேர்தல் ஆணையம், பறக்கும் படை, வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது என்று குற்றச்சாட்டு சொல்லப்பட்டு வருகிறது. தேர்தல் கமி‌ஷன் ஒருதலைப்பட்சமாக செயல் படக்கூடாது.

    சே‌ஷன் மாதிரி இருந்தவர்கள் இயக்கிய தேர்தல் கமி‌ஷன், இன்னும் அழுத்தமாக செயல்பட வேண்டும் என்பதுதான் எங்கள் வேண்டுகோள். ஆட்சியில் இருப்பவர்கள் காவல்துறையை ஏவல் துறையாக மாற்ற முடியும் ஏனென்றால் அவர்கள் ஆட்சிக்கு உட்பட்டவர்கள் மாறாமல் இருக்க முடியும் என்று எப்படி சொல்வது.

    ரஜினி என்னிடத்தில் பேசும்போது எனக்கு ஆதரவு தருவதாக சொன்னார். எனக்கு ஆதரவு தரக்கோரி திருப்பி திருப்பி அவரிடம் வலியுறுத்த முடியாது. எனக்கு ஆதரவாக ரஜினி பிரசாரம் செய்வாரா என்று தெரியாது. பிரச்சாரம் செய்தால் சந்தோ‌ஷம்தான்.

    கோப்புப்படம்

    வேலூரில் திமுக பிரமுகர் குடோனில் பதுக்கி வைத்திருந்த பணத்தை குறித்து அறிக்கையை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்த இடத்திலாவது தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் பரிந்துரைக்கிறது, வேண்டுகோள் வைக்கிறது.

    இங்கே இப்படிப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் இதைவிட அதிகமாக மற்ற எதிர்க்கட்சிகள் வைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இது சரியான பதில் கிடையாது. அழுக்கு அழுக்கு தான்.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan
    ×