என் மலர்
செய்திகள்

உத்திரமேரூர் அருகே இரும்பு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்தது - 3 ஊழியர்கள் பலி
காஞ்சிபுரம்:
உத்திரமேரூர் அருகே உள்ள களியாம்பூண்டியில் தனியார் இரும்பு தொழிற்சாலை உள்ளது. இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
நேற்று நள்ளிரவு ஆலையில் இரவுப்பணி நடந்தது. அப்போது அங்கிருந்த பாய்லர் திடீரென வெடித்தது. இதில் அருகில் இருந்த 8 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக மற்ற ஊழியர்கள் அவர்களை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அகிலேஷ், சுரேந்தர், தினேஷ் என தெரியவந்துள்ளது.
மேலும் 5 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். #FactoryExplosion






