என் மலர்tooltip icon

    ஈரோடு

    அரசு பெண் ஊழியர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு முனிசிபல் காலனி வள்ளலார் வீதியை சேர்ந்தவர் தியாகராஜ் மனைவி தமிழ்மணி செல்வி(45). இவர் சித்தோடு ஆவின் நிறுவனத்தில் உள்ள ஆய்வகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    இவர் கடநத் 4ம் தேதி வீட்டை பூட்டி விட்டு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் அன்று மதியம் தமிழ்மணி செல்வி வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த 35 பவுன் நகை மற்றும் ரூ.25ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், தமிழ்மணி செல்வி வீட்டின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது, 2 மர்மநபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த மர்மநபர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து ஈரோடு எஸ்பி சக்திகணேசன் கூறுகையில், ஆவின் நிறுவன ஊழியர் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் 2 மர்மநபர்கள் ஈடுபட்டு இருப்பது சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 2 பேரும் பழங்குற்றவாளிகள் என சந்தேகிக்கிறோம். அதனால், கொள்ளையில் ஈடுபட்ட நபர்களும், அதற்கு உடந்தையாக மற்றும் 2பேர் என 4பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 4பேரும் விரைவில் பிடிபடுவார்கள், என்றார்.

    நம்பியூர் அருகே தனியார் பஸ் மோதி தொழிலாளி பலியானார். டிரைவருக்கு தர்மஅடி கொடுத்த பொதுமக்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள புது சூரிபாளையம் என்ற இடத்தில் தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தியூரில் இருந்து கோவை நோக்கி இந்த பஸ் சென்றது.

    புது சூரிபாளையம் பகுதியில் சென்றபோது முன்னால் அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. முன்னால் சென்ற அரசு பஸ்சை முந்தி செல்ல தனியார் பஸ் டிரைவர் கண்ணன் ( வயது25) ஓட்டினார்.

    அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த கனநாதன் (55) என்பவர் மீது பஸ் மோதியது. இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே கனநாதன் பரிதாபமாக இறந்து விட்டார்.

    விபத்தில் பலியான கனநாதனின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடி ஆகும். புது சூரியபாளையத்தில் உள்ள சிமெண்டு செங்கல் தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் மீது மோதிய தனியார் பஸ் டிரைவர் கண்ணனை அப்பகுதி மக்கள் சூழ்ந்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு நம்பியூர் போலீசார் விரைந்தனர்.

    பிறகு பொதுமக்கள் டிரைவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    “இப்படி சில தனியார் பஸ்கள் வேகமாக வந்து உயிர் பலி வாங்குகிறது. இதை தடுக்க வேண்டும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பொதுமக்கள் ஆவேசமாக கூறினார்கள்.

    விபத்தில் பலியான தொழிலாளி கனநாதனுக்கு தேன்மொழி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.




    ஈரோடு மாவட்டத்தில் 6¾ லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார்.
    ஈரோடு:

    தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாட சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் அரிசி ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அதன்படி ஒவ்வொரு ரேஷன் கார்டு தாரர்களுக்கும் தலா ரூ.1,000, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீளம் உள்ள கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

    இது குறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறும்போது, ‘ஈரோடு மாவட்டத்தில் கடந்த 5-ந்தேதி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.1,000, சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கி தொடங்கி வைத்தனர்.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் 6 லட்சத்து 76 ஆயிரத்து 218 ரேஷன் கார்டு தாரர்களுக்கு தலா 1,000 ரூபாய் ரொக்கத்துடன் ரூ.71 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.14 கோடியே 84 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா வேட்டி, சேலைகளும் வழங்கப்படுகிறது’ என்றார்.

    ஈரோடு சங்குநகர் பகுதியை சேர்ந்த மாவூப்ஜான் கூறும்போது, ‘பொங்கல் திருநாளையொட்டி பல ஆண்டுகளாக தமிழக அரசு வழங்கி வரும் விலையில்லா வேட்டி -சேலைகளை ரேஷன் கடைகளில் இருந்து முறையாக பெற்று வருகிறேன். மாற்றுத்திறனாளியான நான் சமுதாயமும், மற்றவர்களும் கைவிட்ட நிலையில் மற்றவர்களை எதிர்பார்க்காமல் தமிழர் திருநாளை கொண்டாடி மகிழ்ந்திட தமிழக முதல் -அமைச்சர் விலையில்லா வேட்டி -சேலை மற்றும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கி உள்ளார். எனவே முதல் -அமைச்சருக்கு என்னை போன்ற ஆதரவற்ற ஏழை, எளியோரின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.

    கோபி குள்ளம்பாளையத்தை சேர்ந்த சாமியாத்தாள் கூறும்போது, ‘அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கி உள்ளார். இத்தகைய சிறப்பான திட்டத்தை செயல்படுத்திய முதல் -அமைச்சருக்கு நன்றி’ என்றார்.
    பவானி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பவானி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கோனேரிபட்டி பூமணி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் துரைசாமி (வயது 35) பைக் மெக்கானிக்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு துரைசாமி புதிய கார் வாங்கி இருந்தார். நேற்று மாலை காரில் பவானி வந்த துரைசாமி பிறகு அங்கிருந்து மேட்டூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். புதிய கார் என்பதால் காரில் எண் இல்லை.

    இந்த கார் பவானி அருகே உள்ள மாணிக்கம்பாளையம் பிரிவு பகுதியில் சென்றபோது எதிரே வந்த ஒரு லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் கார் நொறுங்கியது. வாலிபர் துரைசாமி இடிபாட்டுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பவானி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விபத்தில் பலியான துரைசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் வெற்றிபெற்றுள்ளதன் மூலம் கிராமங்களிலும் பாஜக எழுச்சி பெற்றுள்ளதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பாஜக சார்பில் ஈரோட்டில் பேரணி நடைபெற்றது. ஈரோடு வ.உ.சி. பூங்கா முன்பு நடந்த பேரணி தொடக்க நிகழ்ச்சிக்கு மாநில வழக்கறிஞர் அணி அமைப்பாளர் என்.பி.பழனிசாமி தலைமை தாங்கினார். ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் சிவசுப்ரமணியன் கட்சியின், தேசிய செயலாளர் சுனில் தியோதார் ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர்.

    தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதா கிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன், இளைஞரணி தேசிய துணைத்தலைவர் எ.பி.முருகானந்தம், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் பேசினர்.

    பேரணியில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் பங்கேற்றார்.

    முன்னதாக வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

    குடியுரிமை திருத்த சட்டம் எந்த விதத்திலேயும் ஒரு இந்திய குடிமகனைக்கூட பாதிக்கவில்லை. திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சிறுபான்மை மக்களை தூண்டிவிட்டு செய்கின்ற பொய் பிரசாரம், அரசியலை எல்லாம் மக்களுக்கு எடுத்துச்சொல்லும் நோக்கில் நாடு முழுவதும் பாஜக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்கிறது.

    தமிழத்தில் நான்கு இடங்களில் பிரமாண்டமான பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. ஈரோட்டிலும் நடத்தப்பட்டது. தொடர்ந்து திருச்சி மற்றும் மதுரையில் நடைபெறவுள்ளது.

    இவை இல்லாமல் வீடுதோறும் சென்று இந்த சட்ட திருத்தம் குறித்து உண்மை அம்சங்களை சொல்வதற்கும், மக்களை தொடர்பு கொள்வதற்குமான பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஒருபுறம் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே மக்களை திசை திருப்புவதற்காகவும், தங்களுடைய அரசியல் வாழ்க்கைக்காகவும், இந்த பிரச்சனையை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். இதைப்பற்றியெல்லாம் ஒவ்வொரு சிறிய கிராமங்களில் இருந்து மிகப்பெரிய நகரங்கள் வரை அத்தனை மக்களையும் தொடர்புகொள்வதற்காக பாஜக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது.

    தமிழகத்தில் பாஜக கூட்டணி கட்சிகள் அனைத்தும், பாராளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை ஆதரித்துள்ளன. இந்த பேரணி முழுக்க பாஜகவால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும். சென்னையில் நடந்த பேரணியில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இதுபோல் வாய்ப்புள்ள இடங்களில் பாஜக நடத்தும் பேரணியில் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

    உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் வெற்றிபெற்றுள்ளதன் மூலம் கிராமங்களிலும் பாஜக எழுச்சி இப்போது தெரிய ஆரம்பித்துள்ளது. கட்சியின் மாநிலத் தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஈரோட்டில் இன்று அதிகாலை குடிபோதையில் பாட்டி தலையில் டி.வி.யை போட்டு கொலை செய்த பேரனை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு, சென்னிமலை ரோடு, விவேகானந்தா நகரைச் சேர்ந்தவர் ஜோகராம்மாள் (வயது79). இவர் தனது மகன் சாதிக்பாஷா, பேரன் பீர்முகமது (39) ஆகியோருடன் வசித்து வந்தார்.

    சாதிக்பாஷா தறிப்பட்டறையில் வேலை செய்து வந்தார். பீர்முகமது மினி வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். பீர்முகமதுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாட்டால் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

    பீர்முகமதுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்து பாட்டியுடன் தகராறில் ஈடுபடுவாராம்.

    அதைப் போன்று இன்று அதிகாலை 2 மணி அளவில் குடிபோதையில் பீர்முகமது வீட்டுக்கு வந்துள்ளார். சாதிக் பாட்ஷா தறிப்பட்டறைக்கு வேலைக்கு சென்று விட்டார். பாட்டி ஜோகராம்மாளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    ஆத்திரமடைந்த பீர்முகமது வீட்டில் இருந்த டி.வி.யை எடுத்து ஜோகராம்மாள் தலையில் போட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் பீர்முகமது வீட்டுக்கு ஓடி வந்து பார்த்தனர். அப்போது ஜோகராம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக இது குறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டவுன் டி.எஸ்.பி. ராஜு மற்றும் சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜோகராம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பீர்முகமதுவை கைது செய்தனர். பாட்டி தலையில் டி.வி.யை போட்டு பேரன் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திங்களூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் திங்களூர், சீனாபுரம், பெருந்துறை கோட்ட பகுதியில் நாளை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    திங்களூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    திங்களுர், கிரே நகர், கல்லாகுளம், வெட்டையன் கிணறு, பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டா கவுண்டன் பாளையம், மேட்டூர், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம் மேற்கு பகுதி மட்டும், தாசம்புதூர், செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம்,

    வீராணம்பாளையம், ராண்டிபாளையம், தலையம்பாளையம், பொன்முடி, நடுவலசு, ஆயிக்கவுண்டன்பாளையம், குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம், கீழேரி பாளையம், பட்டகாரன் பாளையம், நெசவாளர் காலனி, மடத்துப் பாளையம், கோமையன் வலசு, வேலாங்காடு, மானூர்காடு, மம்முட்டி தோப்பு ஆகிய அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் இருக்காது.

    மூலப்பாளையம், சின்னியம்பாளையம் ஈரோடு புறநகர் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த கஸ்பாபேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை கீழ்கண்ட ஈரோடு புறநகர் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

    கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டு வலசு, பொட்டிநாய்க்கன் வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூர், ரங்கம்பாளையம், குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்த நாய்க்கன் பாளையம்,

    நஞ்சை ஊத்துக்குளி, செங்கரைபாளையம், டி.மேட்டுப்பாளையம், ஆண்டக்கேத்தாம் பாளையம், ஆணைக்கல்பாளையம், ஈ.பி.நகர், கே.ஏ.எஸ். நகர், இந்தியன் நகர், டெலிபோன் நகர், பாரதி நகர், மூலப்பாளையம், செட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி கார்டன், முத்துகவுண்டன்பாளையம், கருந்தேவன்பாளையம், சாவடிபாளையம் புதூர், கிளியம்பட்டி, ரகுபதி நாயக்கன்பாளையம், காகத்தான்வலசு.

    இத்தகவலை ஈரோடு தெற்கு செயற் பொறியாளர் முத்துவேல் தெரிவித்தார்.

    பொங்கல் பரிசு நாளை வியாழக்கிழமை முதல் வழங்கப்பட உள்ளது. பொங்கல் பொருட்கள் அனைத்து ரேசன் கடைகளுக்கும் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது
    சூரம்பட்டி:

    பொங்கல் பண்டிகையொட்டி ஒவ்வொரு வருடமும் ரேசன் கடைகளில் அரிசி கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இது போல இந்த ஆண்டும் பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

    இதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு பொங்கல் பரிசு வழங்கப்பட்டதை விட இந்த ஆண்டு அதை மேலும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சர்க்கரை கார்டு வைத்திருப்பவர்கள் அரிசி கார்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்றும் அவர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு கூறி உள்ளது.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் சர்க்கரை கார்டுகள் அரிசி கார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. இவர்களுக்கும் இந்த ஆண்டு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 6 லட்சத்து 74 ஆயிரம் ரேசன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கார்டுகளுக்கும் தலா ரூ. 1000 மற்றும் பச்சரிசி வெல்லம் ஏலக்காய் முந்திரி, பாசிப்பருப்பு போன்ற பொருட்களும் வழங்கப்பட உள்ளன.

    இந்த பொங்கல் பரிசு கடந்த மாதம் 20-ந்தேதியே வழங்கப்படுவதாக இருந்தது. உள்ளாட்சி தேர்தல் நடந்ததால் பொங்கல் பரிசு வழங்குவது தள்ளி வைக்கப்பட்டு நாளை வியாழக்கிழமை முதல் வழங்கப்பட உள்ளது.

    பொங்கல் பொருட்கள் அனைத்து ரேசன் கடைகளுக்கும் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதேபோல் இலவச வேட்டி சேலைகளும் ரேசன் கடைகளில் நாளை முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    பொங்கல் பரிசாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய்க்கு இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக கொடுக்கப்படும்.

    பொங்கல் பரிசு வழங்கப்படும்போது ரேசன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஒவ்வொரு ரேசன் கடைகளிலும் வீதி வாரியாக எந்தெந்த ரேசன் கார்டுகளுக்கு எந்த தேதியில் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று ரேசன் கடைகளில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்படும். இதை தெரிந்து பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு உரிய பொங்கல் பரிசுகளை வாங்கிக் கொள்ளலாம். அரிசி கார்டுகள் வைத்துள்ள அனைவருக்கும் இந்த பொங்கல் பரிசு கிடைக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ஈரோடு அருகே தொடர் நஷ்டம் ஏற்பட்டதால் மளிகை கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    ஈரோடு கவுண்டிச்சிபாளையம் அடுத்த சேனாதிபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (வயது 54). மளிகைக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் பூபதியால் மளிகை கடை நடத்த முடியவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து அவர் ஈரோட்டில் உள்ள பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வீட்டில் படுத்திருந்த பூபதி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பூபதி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை. தொழில் நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் பொது வேலைநிறுத்தம் நடப்பதால் சத்தியமங்கலம், ஈரோட்டிலிருந்து கர்நாடகம் செல்லும் தமிழக அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டன
    ஈரோடு:

    தனியார் மயமாக்கலை கண்டிப்பது, அன்னிய நேரடி முதலீட்டை எதிர்ப்பது என்பன உள்பட 12 அம்ச பொது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 10 மத்திய தொழிற்சாலைகள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்து உள்ளன.

    இந்த வேலைநிறுத்தப்போராட்டத்துக்கு பல்வேறு பொதுத்துறை வங்கி பணியாளர்கள் சங்கம், தேசிய வங்கி அதிகாரிகள் சங்கம் மற்றும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினர் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.

    இந்த வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மாநில அரசுகள் எச்சரித்திருந்தன.

    எனினும் எச்சரிக்கையினை மீறி இன்று அறிவித்தது போல் வேலைநிறுத்தம் தொடங்கியது.

    ஈரோடு மாவட்டத்திலும் மத்திய அரசு பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர்.

    தொழிற்சங்கங்கள் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்து.

    போராட்டத்தையொட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில் ஈரோடு, கோபி, சத்தியமங்கலம் உள்பட முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி கர்நாடக மாநிலம் மைசூர், கொள்ளேகால், சாம்ராஜ்நகர் பகுதிகளிலிருந்து வரும். கர்நாடக மாநில அரசு பஸ்கள் நேற்று நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டன.

    இதேபோல் சத்தியமங்கலம், ஈரோட்டிலிருந்து கர்நாடகம் செல்லும் தமிழக அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டன. சில பஸ்கள் இயக்கப்பட்டாலும் அவை இரு மாநில எல்லையான புளிஞ்சூர் வரை சென்று திரும்பி விடுகிறது.

    நகராட்சி, மாநகராட்சி தேர்தல் நடத்தினால் அதிலும் தி.மு.க. கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று ஈஸ்வரன் கூறியுள்ளார்.

    ஈரோடு:

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசின் தவறான கொள்கையால் பொருளாதார வீழ்ச்சி அடைந்து வருகிறது.

    அதை சமாளிக்க மறைக்கவே மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.

    இதன் மூலம் பொருளாதார வீழ்ச்சியை திசை திருப்பி வருகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் எங்கள் (தி.மு.க.) கூட்டணி அ.தி.மு.க.வை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேற்கு மண்டலத்திலும் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை பிடித்துள்ளது. ஒன்றிய கவுன்சிலர்களாக பலர் வெற்றி பெற்றுள்ளனர்.

    மேலும் பேரூராட்சி நகராட்சி, மாநகராட்சி தேர்தல் நடத்தினால் அதிலும் தி.மு.க. கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும். ஈரோடு மாவட்டத்தில் கோபியை தனியாக பிரித்து புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம்.

    எடப்பாடி, கும்பகோணம் தனிமாவட்ட மாக்கப்படும் என்ற தகவல் ஊடகத்தில் வந்துள்ளது. அப்படி பிரித்தால் கோபியையும் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். கோபி தனி மாவட்டமாக்க இங்குள்ள அமைச்சரே தடுத்து வருகிறார்.

    இன்று படித்தவர்களுக்கு வேலை கிடையாது. என்ஜினீயர் படித்து முடித்த இளைஞர்கள் 20 சதவீதம் பேர் துப்புரவு பணியில் சேர வருகிறார்கள்.

    தமிழகம் மின் மிகை மாநிலமாக உள்ளது என்கிறார்கள். நாட்டில் உள்ள தொழிற்சாலைகளை மூடினால் ஏன் மின்மிகை மாநிலமாக இருக்காது?

    இவ்வாறு ஈஸ்வரன் கூறினார்.

    பேட்டியின் போது மாநில இளைஞர் அணி செயலாளர் சூரிய மூர்த்தி, தொழிற்சங்க தலைவர் ஜெகநாதன் உடனிருந்தனர்.

    ×