search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானதி சீனிவாசன்
    X
    வானதி சீனிவாசன்

    கிராமங்களிலும் பா.ஜனதா எழுச்சி பெற்றுள்ளது- வானதி சீனிவாசன்

    உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் வெற்றிபெற்றுள்ளதன் மூலம் கிராமங்களிலும் பாஜக எழுச்சி பெற்றுள்ளதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பாஜக சார்பில் ஈரோட்டில் பேரணி நடைபெற்றது. ஈரோடு வ.உ.சி. பூங்கா முன்பு நடந்த பேரணி தொடக்க நிகழ்ச்சிக்கு மாநில வழக்கறிஞர் அணி அமைப்பாளர் என்.பி.பழனிசாமி தலைமை தாங்கினார். ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் சிவசுப்ரமணியன் கட்சியின், தேசிய செயலாளர் சுனில் தியோதார் ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர்.

    தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதா கிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன், இளைஞரணி தேசிய துணைத்தலைவர் எ.பி.முருகானந்தம், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் பேசினர்.

    பேரணியில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் பங்கேற்றார்.

    முன்னதாக வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

    குடியுரிமை திருத்த சட்டம் எந்த விதத்திலேயும் ஒரு இந்திய குடிமகனைக்கூட பாதிக்கவில்லை. திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சிறுபான்மை மக்களை தூண்டிவிட்டு செய்கின்ற பொய் பிரசாரம், அரசியலை எல்லாம் மக்களுக்கு எடுத்துச்சொல்லும் நோக்கில் நாடு முழுவதும் பாஜக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்கிறது.

    தமிழத்தில் நான்கு இடங்களில் பிரமாண்டமான பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. ஈரோட்டிலும் நடத்தப்பட்டது. தொடர்ந்து திருச்சி மற்றும் மதுரையில் நடைபெறவுள்ளது.

    இவை இல்லாமல் வீடுதோறும் சென்று இந்த சட்ட திருத்தம் குறித்து உண்மை அம்சங்களை சொல்வதற்கும், மக்களை தொடர்பு கொள்வதற்குமான பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஒருபுறம் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே மக்களை திசை திருப்புவதற்காகவும், தங்களுடைய அரசியல் வாழ்க்கைக்காகவும், இந்த பிரச்சனையை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். இதைப்பற்றியெல்லாம் ஒவ்வொரு சிறிய கிராமங்களில் இருந்து மிகப்பெரிய நகரங்கள் வரை அத்தனை மக்களையும் தொடர்புகொள்வதற்காக பாஜக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது.

    தமிழகத்தில் பாஜக கூட்டணி கட்சிகள் அனைத்தும், பாராளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை ஆதரித்துள்ளன. இந்த பேரணி முழுக்க பாஜகவால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும். சென்னையில் நடந்த பேரணியில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இதுபோல் வாய்ப்புள்ள இடங்களில் பாஜக நடத்தும் பேரணியில் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

    உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் வெற்றிபெற்றுள்ளதன் மூலம் கிராமங்களிலும் பாஜக எழுச்சி இப்போது தெரிய ஆரம்பித்துள்ளது. கட்சியின் மாநிலத் தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×