என் மலர்
ஈரோடு
கோபி:
கோபி பஸ் நிலையத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து ஊற்றி முகாமை தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் சுகாதாரத்துறை இந்தியாவிலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் முயற்சியால், தமிழகத்தில் அதிகமான மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும். வேறு இடத்திற்கு மாற்றப்பட மாட்டாது. வதந்திகளை நம்ப வேண்டாம். மத்திய அரசின் கேந்திரீய வித்யாலயா பள்ளிகள் அந்தந்த தாலுக்காக்களில் அமைப்பது குறித்து தமிழக முதல்வர் முடிவு செய்வார். ஜல்லிக்கட்டு குறித்து பாடப் புத்தகங்களில் சேர்ப்பதாக சொல்லவில்லை. சி.டி மூலமாகத்தான் வழங்கப்படும் என்றுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியார் பற்றி ரஜினிகாந்த் பேசியதால், அவர் மீது போலீஸ் நிலையங்களில் பலர் புகார் கொடுத்து வருகிறார்கள் என்பது குறித்து கேட்டதற்கு, இது பற்றி நடிகர் ரஜினியைத் தான் கேட்க வேண்டும் என்றார்.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகேயுள்ள கீழ்வாணி மூங்கில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எம்.என்.காளியண்ணனின் 24-வது நினைவு நாள் பொதுக்கூட்டம், உள்ளாட்சி தேர்தல் வெற்றி விழா கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி கலந்து கொண்டார்.
பின்னர் பாலபாரதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நான் காரில் வந்த போது கரூர் மாவட்டம் மணவாசி சுங்கச்சாவடியில் அனுமதி சீட்டு இருந்தும் தனது காரை சுங்கசாவடி ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. இது குறித்து சுங்கச்சாவடி ஊழியர்களுடன் பேசி கொண்டிருக்கும் போதே துப்பாக்கி காட்டி ஒருவர் என்னை அச்சுறுத்தினார்.
இது குறித்து கரூர் மாவட்ட கலெக்டர் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், சுங்கச்சாவடியில் ஆயுதம் ஏந்திய நபர்களை வைத்திருப்பது பொது மக்களிடம் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் ஒரு தனியார் நிறுவனம் சுங்கச்சாவடியில் கன்மேன் நிற்க வைப்பது சரியான நடவடிக்கை இல்லை.
கேரளா மற்றும் வட மாநிலங்களைப் போல் சுங்கச்சாவடிகளை உடனடியாக முற்றிலும் நீக்கவேண்டும். சுங்கச்சாவடிகளால் தமிழகத்தில் தொழில்கள் முடங்கியுள்ளது. முறையற்று வசூலிக்க செய்யப்படும் தொகைகளை மாநில அரசு கண்காணித்து முறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பவானி:
பவானி அருகே உள்ள சங்கரகவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன் அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி ரேணுகா (36). இவருக்கு ஒரு மகன் உள்ளான். பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான்.
ரேணுகாவிற்கு கடந்த ஐந்து வருடங்களாக வயிற்றிலுள்ள கர்ப்ப பையில் கட்டியுள்ளதாக சிகிச்சை பெற்று வந்தாராம். இந்நிலையில் நேற்று அவரது கணவர் அவருடைய பெற்றோர்களை பார்க்க மயிலம்பாடி சென்றுவிட்டார். மகன் வெளியில் விளையாடச் சென்றபோது அவரது வீட்டில் தனியாக இருந்த நிலையில் வலி தாங்க முடியாமல் ரேணுகா தூக்கிப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலின் பேரில் பவானி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரஸ்வதி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.
ஈரோட்டில் இன்று இரண்டாவது ஆண்டாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மேலும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியதைப் போல் சேவல் சண்டைக்கும் அனுமதி வழங்குவதற்கு தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு:
தைப்பூசத்தையொட்டி பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக நடந்து சென்ற வண்ணம் உள்ளனர்.
காங்கயம் அருகே ஊதியூர் பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் பக்தர்கள் ரோட்டோரம் பழனிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இருந்து வந்த ஒரு கார் திடீரென நிலை தடுமாறி நடந்து சென்ற பக்தர்கள் கூட்டத்தில் புகுந்து அவர்கள் மீது மோதியது. இதில் மொடக்குறிச்சி அடுத்த ஆலாங்காட்டு வலசை சேர்ந்த விவசாயி குமார் (வயது 48), சேலம் பொன்னம்மா பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெயப்பிரகாஷ் (19) ஆகிய இருவரும் பலியானார்கள்.
மேலும் இந்த விபத்தில் பள்ளிபாளையத்தை சேர்ந்த குருநாதன் (60), மாரி (48) உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரி சேர்க்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக ஊதியூர் போலீசார் வழக்குபதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள். காரை டிரைவர் சென்னிமலையை சேர்ந்த அசோக்குமார் கைது செய்யப்பட்டார்.
பெருந்துறை:
கேரள மாநிலம் வயநாடு, பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் (வயது 46), கார் வாடகைக்கு வைத்து ஓட்டி வருகிறார்.
இவர் கடந்த 2007-ம் ஆண்டு சேலத்தில் இருந்து கேரளா செல்வதற்காக தனது காரில் பெருந்துறை வழியாக வந்தார். பெருந்துறையை அடுத்த ஏரிக்கருப்பராயன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு 7 பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டிருந்தது. அவர்கள் ஜோஸ் காரை நிறுத்தி ஈரோடு வாடகைக்கு செல்ல வேண்டும் என கூறி காரில் ஏறினர்.
காரில் ஏறிய அவர்களில் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி ஜோஸின் கை கால்களை கட்டினர். பிறகு அவர்கள் அவரை காரில் இருந்து இறக்கி அருகில் இருந்த பள்ளத்தில் போட்டு விட்டு காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டனர்.
இது குறித்து பெருந்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அந்த கும்பளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த நந்து என்ற நந்த குமார் உள்பட 7 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பான வழக்கு ஈரோடு கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் அவர்கள் 7 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து அங்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு நந்தகுமார் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார்.
தலைமறைவானவரை தனிப்படை அமைத்து பெருந்துறை போலீசார் தேடிவந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், ஊட்டி அருகே உள்ள தேவாலா, நாடுகாணி பகுதியில் உள்ள அவனது வீட்டிற்கு வந்த நந்தகுமாரை பெருந்துறை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தவரை கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம் அருகே உள்ள கரட்டாங்காடு பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் விக்னேஷ் (வயது 21). கட்டிட தொழிலாளி.
சம்பவத்தன்று விக்னேஷ் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். விக்னேஷின் தந்தை அரச்சலூருக்கு வேலை விஷயமாக சென்றுவிட்டார். விக்னேஷின் தாயார் வயல் வேலைக்கு சென்று விட்டார்.
பின்னர் மாலை விக்னேஷின் தாயார் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டில் உள்ள ஒரு அறையில் மகன் விக்னேஷ் தூக்குப்போட்டு தொங்கிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் விக்னேஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விக்னேஷ் எதற்காக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
கோவையை சேர்ந்த ரேவதி (வயது 40) என்ற பெண் பண்ணாரி கோயிலுக்கு செல்ல கோவையிலிருந்து சத்தியமங்கலத்துக்கு வந்தார்.
புஞ்சை புளியம்பட்டி அருகே பஸ் வந்த போது ரேவதி பையில் வைத்திருந்த 10 ஆயிரம் பணத்தை யாரோ அபேஸ் செய்து விட்டனர்.
பணம் திருடப்பட்டதை கண்டு அவர் கூச்சலிட்டார். உடனே பஸ்சின் டிரைவர்-கண்டக்டர் மற்றும் பயனிகள் அதிர்ச்சி அடைந்து விசாரித்தனர். அப்போது அதே பஸ்சில் வந்த 3 பெண்கள் தான் ரேவதியிடம் இருந்து பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது.
இவர்கள் ஒருவருக்கொருவர் பணத்தை மாற்றி மாற்றி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
பிறகு அந்த 3 பெண்களையும் கையும்-களவுமாக பிடித்த சக பயணிகள் அவர்களை சத்தியமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி அருகேயுள்ள குள்ளம்பாளையத்தில் புதிய விளையாட்டு மைதானம், அம்மா இளைஞர் விளையாட்டு திட்ட துவக்க விழா நடைபெற்றது. அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கைப்பந்து விளையாடி துவக்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் இந்த அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறது. இளைஞர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்பதுதான் இந்த அரசின் நோக்கமாக உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னையில் 7 மாதத்தில் நேரு ஸ்டேடியத்தை கட்டி சாதனை படைத்தார். அவரது வழியில் இந்த அரசு விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
தமிழகத்தில் 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளிலும், 528 பேரூராட்சிகளிலும் இத்திட்டம் இன்று எல்லா மாவட்டங்களிலும் துவக்கப்பட உள்ளது. இது இந்த அரசின் தொலை நோக்கு சிந்தனையை காட்டுகிறது. கபடி விளையாட்டு படிப்படியாக மாறி கிரிக்கெட்டாக மாறி விட்டது.
ஈரோடு-கோபி வரை 4 வழிச்சாலை விரைவில் துவங்கப்பட உள்ளது. அதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. கோபி ஆர்ச்-ஆர்ச் செல்வதற்கு போக்குவரத்து நெருக்கடியாக உள்ளது. இதற்காக புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.
இந்த ஆட்சியில் கோப்புகள் தேங்குவதில்லை. உடனடியாக பணிகள் நடைபெறுகின்றன. சுற்றுச்சூழல் துறை மூலமாக குள்ளம்பாளையம் ஏரியில் படகு சவாரி துவக்கப்பட உள்ளது. கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் உடை மாற்றுவதற்கு கூடுதல் அறைகள் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் விரைவில் செய்து தரப்படும்.
5 மற்றும் 8 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் சாதி சான்று சமர்ப்பிக்க வேண்டும் என எந்த உத்தரவும் அரசு பிறப்பிக்கவில்லை. மாணவர்கள் பயன்படுத்திய புத்தகங்களை திரும்ப பெற்று அதனை பாதுகாப்பாக வைத்து மீண்டும் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து முதல்வருடன் ஆலோசித்து வருகிறோம்.
ஊராட்சிகளில் கட்டப்பட்டுள்ள சேவை மையங்கள் விரைவில் செயல்படத் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கட்சியை வலுப்படுத்தும் வகையில் மாவட்டந்தோறும் புதிய பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார்.
அதன்படி ஈரோடு தென் மேற்கு மாவட்டத்தின் புதிய மாநகர ஒன்றிய செயலாளர்கள், ஈரோடு தென் மேற்கு மாவட்ட செயலாளர் துரைசேவுகன் ஒப்புதலின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி ஈரோடு தென்மேற்கு நகர செயலாளர்களாக ஜே .கண்ணன், ஆர் .முரளி, பா.அற்புதராஜ், அழ.கணேசனும், ஈரோடு ஒன்றிய செயலாளராக புவனேஸ்வரியும், பெருந்துறை ஒன்றிய செயலாளராக வி.சேமாள் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் ஒன்றிணைந்து கட்சி வளர்ச்சிக்காக பாடுபடவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சித்தோடு:
பவானி லட்சுமி நகர் அருகே உள்ள வாசவி கல்லூரி கோவை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் உதவி பேராசிரியை இறந்தார். மேலும் சிகிச்சை பலனின்றி கணவர் நேற்று இறந்தார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் கே.ஒ.என். தியேட்டர் பகுதியை சேர்ந் தவர் மெய்யரசு (வயது 29). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் பவானி, ஒரிச்சேரி பகுதியை சேர்ந்த தேவராஜ் மகள் சங்கீதா (26)வுக்கும் திருமணம் நடந்தது.
இவர் வெள்ளாளர் பார்மசி கல்லூரியல் உதவி பேராசிரியையாக பணி புரிந்தார். இருவருக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி காலை குமாரபாளையத்தில் இருந்து ஈரோடு செல்ல மெய்யரசு ஓட்டிச் சென்ற மொபட்டில் பின்னால் அமர்ந்து சங்கீதாவும் சென்று கொண்டு இருந்தார். சேலம்-கோவை நெடுஞ்சாலை பவானி, லட்சுமி நகர், வாசவி கல்லூரி அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக கோழி லோடு ஏற்றிக் கொண்டு வந்த ஈச்சர் வேன் மோதி மொபட் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி விழுந்த சங்கீதா தலையில் பலத்த அடிப்பட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயத்துடன் மீட்கப்பட்ட மெய்யரசு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீஸ் இன்ஸ் பெக்டர் கதிர்வேல் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
திருமணமாகி ஒரே மாதத்தில் கணவன் மனைவி என இருவரும் விபத்தில் பலியான சம்பவம் 2 குடும்பத்தாரையும் மிகுந்த சோகத்தில் மூழ்கடித்து உள்ளது.






