என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன்
    X
    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன்

    நகராட்சி-மாநகராட்சி தேர்தலிலும் தி.மு.க.கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும்- ஈஸ்வரன்

    நகராட்சி, மாநகராட்சி தேர்தல் நடத்தினால் அதிலும் தி.மு.க. கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று ஈஸ்வரன் கூறியுள்ளார்.

    ஈரோடு:

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசின் தவறான கொள்கையால் பொருளாதார வீழ்ச்சி அடைந்து வருகிறது.

    அதை சமாளிக்க மறைக்கவே மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.

    இதன் மூலம் பொருளாதார வீழ்ச்சியை திசை திருப்பி வருகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் எங்கள் (தி.மு.க.) கூட்டணி அ.தி.மு.க.வை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேற்கு மண்டலத்திலும் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை பிடித்துள்ளது. ஒன்றிய கவுன்சிலர்களாக பலர் வெற்றி பெற்றுள்ளனர்.

    மேலும் பேரூராட்சி நகராட்சி, மாநகராட்சி தேர்தல் நடத்தினால் அதிலும் தி.மு.க. கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும். ஈரோடு மாவட்டத்தில் கோபியை தனியாக பிரித்து புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம்.

    எடப்பாடி, கும்பகோணம் தனிமாவட்ட மாக்கப்படும் என்ற தகவல் ஊடகத்தில் வந்துள்ளது. அப்படி பிரித்தால் கோபியையும் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். கோபி தனி மாவட்டமாக்க இங்குள்ள அமைச்சரே தடுத்து வருகிறார்.

    இன்று படித்தவர்களுக்கு வேலை கிடையாது. என்ஜினீயர் படித்து முடித்த இளைஞர்கள் 20 சதவீதம் பேர் துப்புரவு பணியில் சேர வருகிறார்கள்.

    தமிழகம் மின் மிகை மாநிலமாக உள்ளது என்கிறார்கள். நாட்டில் உள்ள தொழிற்சாலைகளை மூடினால் ஏன் மின்மிகை மாநிலமாக இருக்காது?

    இவ்வாறு ஈஸ்வரன் கூறினார்.

    பேட்டியின் போது மாநில இளைஞர் அணி செயலாளர் சூரிய மூர்த்தி, தொழிற்சங்க தலைவர் ஜெகநாதன் உடனிருந்தனர்.

    Next Story
    ×