என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • பல்வேறு மாநிலங்களிலும் சிறப்பாக பணியாற்றிய சுகாதார ஊக்குவிப்பாளர்களை கவுரவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
    • சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு இன்று புறப்பட்டு செல்கின்றனர்.

    திண்டுக்கல்:

    நாட்டின் 75-வது குடியரசு தினவிழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களிலும் சிறப்பாக பணியாற்றிய சுகாதார ஊக்குவிப்பாளர்களை கவுரவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ஊராட்சிகளில் திடக்கழிவு, திரவக்கழிவு மேலாண்மை செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட சுகாதார ஊக்குவிப்பாளர்களுக்கு டெல்லி குடியரசு தினவிழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தமிழகத்தில் திண்டுக்கல், திருநெல்வேலி, பெரம்பலூர், வேலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலிருந்து மொத்தம் 7 ஊக்குவிப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் பலக்கனூத்து ஊராட்சியை சேர்நத நாச்சம்மாள், காளாஞ்சிபட்டியை சேர்ந்த கற்பகம், நெல்லை மாவட்டம் கீழகோட்டத்தை சேர்ந்த சுமதி, வேலூர் மாவட்டம் மெட்டுகுளத்தை சேர்ந்த புஷ்பா, செங்கல்பட்டு மாவட்டம் புத்தூரை சேர்ந்த சத்யா, பெரம்பலூர் மாவட்டம் புதுநடுவனூரை சேர்ந்த சுதா, ஆலம்பாடியை சேர்ந்த புஷ்பலதா ஆகியோர் டெல்லி குடியரசு தினவிழாவில் பங்கேற்கின்றனர்.

    முழுசுகாதார இயக்கத்தின் மாநில தொடர்பு அலுவலர் ஏகாம்பரம், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமாநிதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் ஆகியோருடன் சுகாதார ஊக்குவிப்பாளர்கள் 7 பேர் என மொத்தம் 10 பேர் கொண்ட குழுவினர் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு இன்று புறப்பட்டு செல்கின்றனர். குடியரசு தினவிழாவை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுகாதார ஊக்குவிப்பாளர்களுடனான கலந்தாய்வு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டள்ளது.

    இந்த கூட்டத்தில் திடக்கழிவு, திரவக்கழிவு, மேலாண்மை செயல்பாடு, நீடிக்கும் சவால்கள், அதனை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஊரகவளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • இன்று மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.
    • கோவில் வண்ண மலர்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்தது.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 6-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் அரோகரா கோசம் முழங்க கண்டு தரிசனம் செய்தனர்.

    இதனைதொடர்ந்து வெள்ளித்தேரில் சாமி வீதிஉலா நடைபெற்றது. தைப்பூச திருவிழாவின் 7-ம் நிகழ்ச்சியாக இன்று மாலை தேரோட்டம் நடைபெறுகிறது. இதனைமுன்னிட்டு தோழுக்கினியானில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை சண்முகநதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு சாமி திருத்தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெறுகிறது.

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாகவே பழனியில் பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகளவில் காணப்பட்டது. கூட்டம் கூட்டமாக வரும் பக்தர்களுக்கு வழி நெடுகிலும் பல்வேறு அமைப்புகளால் அன்னதானம், பழங்கள், இளநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    கோவில் நிர்வாகம் சார்பில் தற்காலிக கழிப்பறைகள், குளியல்அறைகள், பக்தர்கள் தங்கும் இடங்கள் ஆகியவை ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளன. இடும்பன்குளம், சண்முகாநதி பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் திரண்டு நீராடி வருகின்றனர். அவர்கள் பாதுகாப்பான முறையில் குளித்து செல்வதை உறுதி செய்யும் வகையில் அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முக்கிய இடங்களில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் சுமார் 2000-ககும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருக்கல்யாண நிகழ்ச்சியை நாளை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் 1லட்சத்து 80 ஆயிரம் பக்தர்கள் பழனியில் சாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் பழனி நகரமே குலுங்கியது.

    தைப்பூசத்தை முன்னிட்டு பழனி கோவில் பாரவேல் மண்டபம் உள்பட முக்கிய இடங்களில் வண்ண மலர்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்தது.


    • முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி.
    • திருவிழாவின் 7-ம் திருநாளான இன்று தேரோட்டம்.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில், தைப்பூச திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 6-ம்நாளான நேற்று இரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவில் வெளிப்பிரகாரத்தில் வண்ண மலர்களால் திருமண மேடை அலங்கரிக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு திருமண மேடையில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வனையுடன் எழுந்தருளினார். அப்போது 16 வகை அபிஷேகம் நடந்தது.

    அதன் பின்னர் விநாயகர் பூஜை, சங்கல்பம், வருண பூஜை, பஞ்சகவ்யபூஜை, சுப்பிரமணிய பூஜை, வேதபாராயணம், சுப்ரமணியா யாகம், வாத்திய பூஜை நடைபெற்றது. மணமேடைக்கு முன்பு பல வகையான பழங்கள், பட்டுச்சேலை, வேட்டி, திருமாங்கல்யம், வண்ண மலர்கள், இனிப்பு வகைகள் மற்றும் பல்வேறு வகை சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

    அதன்பின்னர் பொற்சின்னம் இடித்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, கன்னிகா தானம், மாங்கல்ய பூஜை நடந்தது. பின்னர் வள்ளி-தெய்வானைக்கு பழனி கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

    அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் "கந்தனுக்கு அரோகரா...! முருகனுக்கு அரோகரா"...! என சரண கோஷம் எழுப்பினர். மாங்கல்யம் அணிவித்தலை தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்மன்களுக்கு தீபாராதனை, அர்ச்சனை, ரட்சை சாற்றுதல், 16 வகை உபசாரம் நடைபெற்றது. தொடர்ந்து திருமுறை பாராயணம், வாத்திய கோஷம் முழங்க மகா தீபாராதனை நடந்தது.

    வெள்ளிரத உலா

    பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருமண கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். திருமணம் மற்றும் பூஜை நிகழ்ச்சிகளை செல்வசுப்பிரமணியம் மற்றும் குருக்கள் செய்தனர். இரவு 9.30 மணிக்கு மேல் வெள்ளிரதத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் நான்கு ரத வீதிகளில் உலா வந்தார்.

    இன்று தேரோட்டம்

    தைப்பூச திருவிழாவின் 7-ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) தைப்பூச தேரோட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக இன்று அதிகாலை 5 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தோளுக்கினியாள் வாகனத்தில் எழுந்தருளி, சண்முகநதியில் தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 10.30 மேல் மீன லக்னத்தில் திருத்தேரேற்றமும், தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம் நடக்கிறது. தேர் நிலை வந்தடைந்த பின்னர் தேர்கால் பார்த்தல் நிகழ்ச்சியும், ரதவீதிகளில் சுவாமி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    • கூடுதல் நபர்கள் பயணிக்கும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய மின் இழுவை ரெயிலில் பொருத்த முடிவு செய்யப்பட்டது.
    • பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பஞ்சாமிர்த டின்களை அடுக்கி வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் சிரமமின்றி மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய வசதியாக 3 மின் இழுவை ரெயில் இயக்கப்படுகின்றன. இந்த மின் இழுவை ரெயிலின் பயணம் நேரம் 8 நிமிடம் ஆகும்.

    இந்த மின் இழுவை ரெயிலில் பயணிக்க சிறப்புக் கட்டணம் ரூ.25ம், ரூ.10ம் வசூலிக்கப்படுகிறது. இதில் ஒருமுறைக்கு தற்போது 32 பேர் மட்டுமே பயணிக்க முடியும். இதனால் பக்தர்கள் பயணிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் கூடுதல் நபர்கள் பயணிக்கும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய மின் இழுவை ரெயிலில் பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதனால் புதிய மின் இழுவை ரெயிலில் நன்கொடையாளர் மூலம் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் டி.வி, குளிர்சாதன வசதிகளுடன் 72 பேர் பயணிக்கக் கூடிய வகையிலான நவீனமயமாக்கப்பட்ட மின் இழுவை ரெயில் பெட்டிகள் கொண்டு வரப்பட்டன.

    இதனைத்தொடர்ந்து புதிய மின் இழுவை ரெயில் செல்வதற்கு வசதியாக நிலைய நடைமேடைகளில் மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து இழுக்கும் எந்திரத்தில் அதிக திறன் வாய்ந்த ஷாப்ட் எந்திரம் பொருத்தப்பட்டது. பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பஞ்சாமிர்த டின்களை அடுக்கி வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

    2 முறை ஐ.ஐ.டி. குழுவினர் இந்த சோதனை ஓட்டத்தை ஆய்வு செய்தனர். இக்குழுவின் ஒப்புதலைத் தொடர்ந்து இன்று முதல் பக்தர்களின் பயன்பாட்டிற்காக இயக்கி வைக்கப்பட்டது. முன்னதாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. புதிய நவீன மின் இழுவை ரெயிலை அமைச்சர் அர.சக்கரபாணி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அறங்காவலர் குழுத்தலைவர் சந்திரமோகன், சுப்ரமணி, மணிமாறன், ராஜசேகரன் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு 3வது மின் இழுவை ரெயில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • வாகன உரிமையாளர் ஜோசப் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • மதன்ராஜை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே தனியார் பழக்கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனம் மர்ம நபரால் திருடப்பட்டது. இது குறித்து வாகன உரிமையாளர் ஜோசப் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இந்தத் திருட்டுசம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க எஸ்.பி.பிரதீப் தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்த தனிப்படை போலீசார் சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது சரக்கு வாகனத்தை திருடிய நபர் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த சேகர் மகன் மதன்ராஜ் (வயது28) என்பது தெரிய வந்தது. இதையடுத்து மதன்ராஜை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேலும் அவரிடமிருந்து சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. திருடுபோன 10 மணி நேரத்தில் சரக்கு வாகனத்தை மீட்டுக் கொடுத்த தனிப்படை போலீசாரை எஸ்.பி. பிரதீப் பாராட்டினார்.

    மேலும் இவர் மீது பல்வேறு மாவட்டங்களில் ஏழுமலை, மணிகண்டன் மற்றும் வெவ்வேறு பெயர்களில் கார் திருட்டு வழக்குகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    • அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடு பழனி.
    • இன்று முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற தைப்பூசத்திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு தேவையான சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

    தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனி கோவிலில் தினந்தோறும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி புறப்பாடு நடந்து வருகிறது.

    6-ம் நாளான இன்று இரவு 7 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நாளை மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை முதல் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் பழனியை நோக்கி குவிந்த வண்ணம் உள்ளனர். காவடி எடுத்தும், அலகு குத்தியும், மேளதாளம் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக வருவதால் பழனி நகரின் அனைத்து சாலைகளும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளிக்கிறது.

    • கோடையின் வெப்பமே தெரியாத அளவுக்கு இங்கு குளிர் வாட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் இதனை உற்சாகமாக அனுபவித்து வருகின்றனர்.
    • விடுமுறை முடிந்த பிறகும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது கடும் குளிர் சீசன் நிலவி வருகிறது. கடந்த வாரம் உறை பனி காணப்பட்ட நிலையில் புல்வெளிகள் மற்றும் நட்சத்திர ஏரியில் பனித்துளிகள் படர்ந்து காணப்பட்டது. வழக்கமாக கொடைக்கானலில் டிசம்பர் மாத இறுதியில் உறை பனி சீசன் தொடங்கி ஜனவரி மாதம் வரை நீடிக்கும். ஆனால் இந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் உறை பனி சீசன் தாமதமானது. இருந்த போதும் கடும் குளிர்ந்த சீதோஷ்ணம் காணப்படுகிறது.

    மலை கிராமங்களில் பனி மூட்டத்துடன் கூடிய மேக கூட்டங்கள் தவழ்ந்து செல்லும் காட்சி பகல் பொழுதையும், ரம்மியமாக்கி வருகிறது. கோடையின் வெப்பமே தெரியாத அளவுக்கு இங்கு குளிர் வாட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் இதனை உற்சாகமாக அனுபவித்து வருகின்றனர்.

    கொடைக்கானல் அருகே உள்ள மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், மற்றும் ஏரி பகுதியில் வெண் நுரையுடன் கடல் அலைகள் வருவது போல பனி மூட்டம் காணப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    விடுமுறை முடிந்த பிறகும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    அவர்கள் கொடைக்கானலில் நிலவும் ரம்மியமான சூழலை அனுபவித்து வருகின்றனர். ஏரியில் படகு சவாரி செய்தும், குதிரை சவாரியில் ஈடுபட்டும் பிரையண்ட் பூங்கா, குணாகுகை, பசுமை பள்ளத்தாக்கு மோயர் பாயிண்ட் உள்ளிட்ட சுற்றுலா இடங்களை கண்டு ரசித்து வருகின்றனர். 

    • புறநகர் பகுதிகளான பல்வேறு கிராமங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
    • பரவலாக பெய்த மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்தும் குறைந்து காணப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் ஒருங்கிணைந்த பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் புறநகர் பகுதிகளான பல்வேறு கிராமங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

    பின்னர் இங்கிருந்து வியாபாரிகள் அதனை வாங்கிச்சென்று விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதம் மார்கழி என்பதால் எந்தவித திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை. மேலும் பரவலாக பெய்த மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்தும் குறைந்து காணப்பட்டது.

    இந்நிலையில் ஒரு மாதத்திற்கு பின்பு நாளை தை மாதத்தின் முதல் வளர்பிறை முகூர்த்த நாள் வருகிறது. நாளை திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷேச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளநிலையில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

    திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இன்று 30 கிலோ மல்லிகை மட்டுமே விற்பனைக்கு வந்தது. இதனால் ஒரு கிலோ மல்லிகை ரூ.4000-க்கு விற்பனையானது. இதேபோல் முல்லைப்பூ ரூ.1800, ஜாதிப்பூ ரூ.1300, காக்கரட்டான் ரூ.1300, சம்பங்கி ரூ.300, அரளி ரூ.150, செவ்வந்தி ரூ.200, செண்டுமல்லி ரூ.70, கோழிக்கொண்டை ரூ.130, பட்டன்ரோஸ் ரூ.200, பன்னீர்ரோஸ் ரூ.150 என விற்பனையானது.

    வழக்கமாக மார்க்கெட்டுக்கு வரும் பூக்களில் பாதிஅளவு கூட இன்று விற்பனைக்கு வராததால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர். அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வர உள்ள நிலையில் பூக்களின் விலையேற்றம் சாமானிய மக்களை அதிர்ச்சி அடைய வைத்தள்ளது.

    • குறிப்பாக கார்கில் போரின் போது ஜம்மு காஷ்மீரில் நான் பணியாற்றிய அனுபவம் என் வாழ்நாளில் மறக்க முடியாதது.
    • ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது ராணுவத்தில் பணியாற்றி முடிந்தவரை நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள முத்துலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ் (வயது 70). இவரது மனைவி கருப்பாயம்மாள். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் 3 பேருமே ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர்.

    இதில் முதல் மகனான கண்ணன் கடந்த 19-வது வயதில் ராணுவத்தில் சேர்ந்தார். 28 ஆண்டுகள் தனது பணியை முடித்துவிட்டு ஊருக்கு திரும்பிய அவருக்கு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மிகப்பெரிய தலைவருக்கு அளிக்கப்படும் வரவேற்பை போல நகர் முழுவதும் பிரம்மாண்ட பேனர்கள் வைத்து கண்ணனுக்கு மாலை அணிவித்து அதிர்வேட்டுகள் வெடித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். இது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து ராணுவ வீரர் கண்ணன் கூறுகையில், கடந்த 1995ம் ஆண்டு 19வது வயதில் ராணுவத்தில் பணியில் சேர்ந்தேன். 28 ஆண்டுகள் நல்ல முறையில் நாட்டுக்காக சேவையாற்றி தற்போது பணி முடித்து ஊருக்கு திரும்பியுள்ளேன்.

    எனக்கு நித்யதாரணி என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். எனது பணியின் போது உயர் அதிகாரிகள் பல முறை என்னை சிறப்பாக பணியாற்றியதற்காக கவுரவித்துள்ளனர். குறிப்பாக கார்கில் போரின் போது ஜம்மு காஷ்மீரில் நான் பணியாற்றிய அனுபவம் என் வாழ்நாளில் மறக்க முடியாதது. நாட்டிற்காக பணியாற்றிய போது கிடைத்த மகிழ்ச்சியை போல் தற்போது கிராம மக்கள் அளித்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    பள்ளி படிப்பின் போதே எனது நண்பர்கள் பலர் டாக்டர், கலெக்டர், என்ஜினீயர் ஆக வேண்டும் என்று பேசி வந்தனர். அப்போதிருந்தே எனக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்பதுதான் குறிக்கோளாக இருந்தது. எனது ஆசைக்கு எனது பெற்றோரும் உறுதுணையாக இருந்தனர்.

    ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது ராணுவத்தில் பணியாற்றி முடிந்தவரை நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என்றார்.

    தனது மகனுக்கு அளித்த வரவேற்பு குறித்து தந்தை ராஜ் தெரிவிக்கையில்,

    எனது 3 மகன்களையுமே ராணுவத்தில் சேர்த்துள்ளேன். அவர்கள் இதன் மூலம் நாட்டுக்கு சேவையாற்றுவதுடன் ஒழுக்கத்துடன் வாழ கற்றுக் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். ராணுவத்தில் இருந்து திரும்பிய எனது மகனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு என்னை கண் கலங்க வைத்தது. இதன் பிறகு எங்கள் கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்து ராணுவத்தில் பணியாற்ற அவன் உதவ வேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என்றார்.

    • 10 நாட்கள் நடைபெறும் தைப்பூசத்திருவிழாவில் தினமும் காலை தந்தபல்லக்கில் முத்துக்குமாரசாமி வீதி உலா நடைபெறும்.
    • தைப்பூசத்திருவிழா களைகட்டி வரும் நிலையில் பழனியில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும்.

    இத்திருவிழாவின் சிறப்பு அம்சமே பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து முருகபெருமானை தரிசனம் செய்வதுதான். அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூசத்திருவிழா கொடியேற்றம் இன்று பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு விநாயகர் பூஜை, புன்னியாகவாஜனம், முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

    அதன்பின் காலை 7.30 மணிக்கு கொடிபூஜை, வாத்தியபூஜை நடைபெற்றது. கொடி படம் மங்கள வாத்தியங்கள் முழங்க கோவில் உட்பிரகாரத்தில் கொண்டுவரப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க முருகனை வழிபட்டனர்.

    திருவிழாவில் இன்று மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் திருஆவினன்குடி, மலைக்கோவிலில் உள்ள விநாயகர், மூலவர், சண்முகர், உச்சவர், துவார பாலகர்கள் மற்றும் வாகனங்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    10 நாட்கள் நடைபெறும் தைப்பூசத்திருவிழாவில் தினமும் காலை தந்தபல்லக்கில் முத்துக்குமாரசாமி வீதி உலா நடைபெறும். மேலும் தினந்தோறும் இரவு 7.30 மணிக்கு வெள்ளி ஆட்டு கிடா, காமதேனு, தங்கமயில், தங்ககுதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 24ந் தேதியும், தேரோட்டம் 25ந் தேதியும் நடைபெறுகிறது. தைப்பூச திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி கோவிலுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

    பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேவஸ்தானம் சார்பில் சிறப்பாக செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தைப்பூசத்திருவிழா களைகட்டி வரும் நிலையில் பழனியில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. 

    • ரெயிலின் சத்தம் வித்தியாசமாக தென்படவே உடனடியாக ரெயிலை நிறுத்தி இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
    • இந்த வழித்தடத்தில் இன்று மாலையில்தான் அடுத்தடுத்து 3 ரெயில்கள் இயக்கப்படும்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல்லில் இருந்து ஒட்டன்சத்திரம், பழனி வழியாக பாலக்காடு வரை தினந்தோறும் 4 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதே வழித்தடத்தில் மதுரையில் இருந்து கோவை செல்லும் ரெயிலும், திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ், சென்னையில் இருந்து பழனி செல்லும் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஒட்டன்சத்திரம், பழனி வழியாக செல்கிறது.

    இன்று காலை பாலக்காட்டில் இருந்து 500க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திண்டுக்கல் நோக்கி ரெயில் வந்து கொண்டிருந்தது. பழனி ரெயில் நிலையத்தை கடந்து ஒட்டன்சத்திரம் நோக்கி காமாட்சிபுரம் பகுதியில் வந்தபோது தண்டவாளத்தில் உடைப்பு இருந்தது என்ஜின் டிரைவருக்கு தெரியவந்தது.

    ரெயிலின் சத்தம் வித்தியாசமாக தென்படவே உடனடியாக ரெயிலை நிறுத்தி இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு அவர்கள் விரைந்து வந்தனர். உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு ரெயிலை மெதுவாக இயக்குமாறு டிரைவர்களுக்கு அறிவுறுத்தினர். அதன்படி உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மெதுவாக ரெயிலை இயக்கி அந்த இடத்தில் இருந்து கடந்து சென்றது.

    தண்டவாளத்தில் ஏற்பட்ட உடைப்பு டிரைவரின் சாமர்த்தியத்தால் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு 500 பயணிகள் உயிர் தப்பினர்.

    இந்த வழித்தடத்தில் இன்று மாலையில்தான் அடுத்தடுத்து 3 ரெயில்கள் இயக்கப்படும். எனவே தண்டவாளத்தில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உடைப்பு ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்தனர். இச்சம்பவத்தால் ஒட்டன்சத்திரம் ரெயில்வே பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • வருடந்தோறும் மாட்டுபொங்கல் தினத்தன்று இங்கு குதிரை பொங்கல் விழா கொண்டாடப்படும்.
    • குதிரைகளுக்கு முழு ஓய்வு அளித்து அதை சுதந்திரமாக மேய்ச்சலுக்கு விட்டுள்ளோம்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலை மற்றும் அதனை சுற்றி 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. சாலை போக்குவரத்து வசதி இல்லாத இங்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குதிரைகளை பயன்டுத்தி வருகின்றனர். இங்கு மா, பலா, எலுமிச்சை, சவ்சவ், அவரை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. இவற்றை விளை நிலங்களில் இருந்து சந்தைகளுக்கு கொண்டு வரவும், மீண்டும் தங்கள் ஊருக்கு வந்து செல்லவும் குதிரைகளை பயன்படுத்தி வருகின்றனர். வருடந்தோறும் மாட்டுபொங்கல் தினத்தன்று இங்கு குதிரை பொங்கல் விழா கொண்டாடப்படும். அதன்படி இன்று கிராம மக்கள் குதிரை பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

    இது குறித்து சிறுமலையை சேர்ந்த விவசாயி தங்கபாண்டி கூறுகையில்,

    மலைப்பகுதிகளில் சாலை வசதி இல்லாததால் விவசாய நிலங்களில் விளைவிக்கக்கூடிய மலை பயிர்களான வாழை, பலா, எலுமிச்சை, சவ்சவ் உள்ளிட்ட பயிர்களை குதிரைகளில் ஏற்றி பழையூர், புதூர், தென்மலை ஆகிய பகுதிகளுக்கு கொண்டு வருகின்றோம். இவ்வாறு விவசாயிகளுக்கு உதவும் குதிரைகளை இன்று குளிக்க வைத்து வண்ண வண்ண கலரில் பொட்டுவைத்து, மாலை அணிவித்து, சலங்கை கட்டி அலங்காரம் செய்து அவை உண்பதற்கு பொங்கல் வைத்து வழிபட்டு வருகிறோம்.


    மேலும் இன்று குதிரைகளுக்கு முழு ஓய்வு அளித்து அதை சுதந்திரமாக மேய்ச்சலுக்கு விட்டுள்ளோம். எந்த வேலையும் கொடுக்க மாட்டோம். எங்கள் விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கக்கூடிய குதிரைகளை தெய்வமாக வழிபட்டு பொங்கல் வைத்து கொண்டாடி வருகிறோம். மேலும் எங்களுக்கு உற்ற துணையாக இருக்கும் கால்நடைகளுக்கு சிறுமலையில் கால்நடை மருத்துவமனை இல்லாததால் வாடகை வாகனம் பிடித்து மருத்துவமனைக்கு செல்லும் சூழ்நிலை உள்ளது. இதனால் எங்களுக்கு வீண் செலவு ஏற்படுகிறது. எனவே சிறுமலையில் கால்நடை மருத்துவமனை அமைக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×