என் மலர்
திண்டுக்கல்
- மைசூரில் இருந்து அனைத்து வகையான காய்கறிகள் கேரளாவிற்கு அதிகளவு கொண்டு வருவதால் கேரளா வியாபாரிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு வருவதில்லை.
- திருமணம் மற்றும் கோவில் திருவிழாக்கள் இல்லாததாலும் காய்கறிகளின் தேவை குறைந்துள்ளது.
இடையக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள இடையக்கோட்டை, புல்லாக்கவுடனூர், மார்க்கம்பட்டி, சின்னக்காம்பட்டி, கொ.கீரனூர், கள்ளிமந்தையம், பொருளுர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சிம்ரன் கத்திரிக்காய் எனப்படும் நாட்டு ரக கத்தரி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அமோக விளைச்சல் கண்டுள்ளது.
கூலி ஆட்களை கொண்டு விவசாய நிலங்களில் இருந்து கத்திரிக்காய் அறுவடை செய்து அதை தரம் பிரிக்கப்பட்டு ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டி காந்தி காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது ஒரு கிலோ ரூ.3 முதல் ரூ.5 வரை மட்டுமே விற்பனை ஆனதால் அறுவடை கூலிக்கு கூட கட்டுப்படியான விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
இது குறித்து காந்தி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் செயலாளர் ராசியப்பன் கூறுகையில், ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் விளையும் தக்காளி, கத்தரி, வெங்காயம், பூசணி, சுரைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து அதை தரம் பிரித்து அதிகளவு கேரளாவிற்கு விற்பனைக்கு அனுப்புவோம்.
இந்நிலையில் மைசூரில் இருந்து அனைத்து வகையான காய்கறிகள் கேரளாவிற்கு அதிகளவு கொண்டு வருவதால் கேரளா வியாபாரிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு வருவதில்லை. இதனால் அதிக வரத்து இருப்பதால் சாரியாக விற்பனையாவதில்லை. இதன் காரணமாக பெரும்பாலான காய்கறிகளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. திருமணம் மற்றும் கோவில் திருவிழாக்கள் இல்லாததாலும் காய்கறிகளின் தேவை குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றார்.
- நிஷாகந்தி மலர்கள் பொதுவாக இரவில் மட்டுமே மலரக்கூடிய அரிய வகை மலர்.
- காய்ச்சல், சளி, மூச்சுக் குழாய் அலர்ஜி மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் உகார்தே நகர் பகுதியில் ஜான் கென்னடி என்பவர் வீட்டில் பிரம்மகமலம் என்றழைக்கப்படும் நிஷாகந்தி மலர்செடிகளை மாடித்தோட்டத்தில் பல வருடங்களாக வளர்த்து வருகிறார்.
அரிய வகை பிரம்ம கமலப்பூ நிஷாகந்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த மலர்களின் செடிகள் கள்ளிச்செடி இனத்தை சேர்ந்தவை ஆகும். இவற்றின் தண்டுகளை வெட்டி வைத்தாலே வளரக்கூடிய தன்மை உடையது.
நிஷாகந்தி மலர்கள் வெண்ணிற வண்ணத்தில் 3 இதழ்களை கொண்டதாகவும் மிகவும் அழகாகவும் இருக்கும். மலரும் பொழுது சுமார் 10 மீட்டர் சுற்றளவு பூவின் நறுமணம் இருக்கும்.
நிஷாகந்தி மலர்கள் பொதுவாக இரவில் மட்டுமே மலரக்கூடிய அரிய வகை மலர். மலர்ந்த சில மணி நேரங்களில் குவிந்து மொட்டுகள் போல் காட்சி அளிக்கும். மலர்ந்த சில மணி நேரங்களில் பலர் விளக்கேற்றி வழிபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நிஷாகந்தி மலர்கள் மருத்துவ குணம் கொண்டது என்று கூறப்படுகிறது. காய்ச்சல், சளி, மூச்சுக் குழாய் அலர்ஜி மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
கொடைக்கானலில் உகார்தே நகர் பகுதியில் வசிக்கும் ஜான் கென்னடி வீட்டில் மாடி தோட்டத்தில் மலர்ந்திருக்கும் நிஷாகந்தி பூக்களை அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ரசித்து புகைப்படம் எடுத்து சென்றனர்.
- சவுக்கு சங்கர் வீட்டில் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது.
- எடப்பாடி பழனிசாமியின் முடிவால் அ.தி.மு.க. சிதைந்து கொண்டு இருக்கிறது.
பழனி:
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி வருகை தந்தார். அங்கு சாமி தரிசனம் செய்த பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
நாட்டில் ஒற்றுமைதான் மிகவும் முக்கியம். பிரிவினைவாதம் அல்ல. இந்திய எல்லைக்குள் வாழ்பவர்கள் அனைவரும் இந்தியர் என மகாத்மா காந்தி கூறினார். அவர்களை மத ரீதியாக பிரிக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.
இந்தியா வலிமை மிக்க நாடாக இருப்பதற்கு காரணம் வேற்றுமையில் ஒற்றுமை மட்டும்தான். ஆனால் இன்று துணை ஜனாதிபதியோ உச்சநீதிமன்ற நீதிபதியை அச்சுறுத்தும் வகையில் பேசி வருகிறார்.
ஜனநாயகத்தில் குடியரசு தலைவர் உள்பட யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். கவர்னருக்கு எதிரான வழக்கை கொண்டு சென்று இந்தியாவுக்கான தீர்ப்பை முதல்-அமைச்சர் ஸ்டாலின் பெற்றுத் தந்துள்ளார்.
தமிழகத்தின் பல்கலைக்கழக வேந்தராகவும் உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதை சட்டத்தின் வாயிலாக பெற்றுள்ளார்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி என்பது எழுச்சி இல்லாத கூட்டணியாக உள்ளது. ஒரு கூட்டணி அமைந்தால் அது 2 தரப்பைச் சேர்ந்த தொண்டர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்த வேண்டும்.
ஆனால் எடப்பாடி பழனிசாமியின் முடிவால் அ.தி.மு.க. சிதைந்து கொண்டு இருக்கிறது. அந்த கட்சி தொண்டர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் தி.மு.க. கூட்டணியில் அது போன்ற பிரச்சினை இல்லை.
வருகிற தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியே மகத்தான வெற்றி பெறும். 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் கேட்போம்.
அமைச்சர் பொன்முடி பேசியது தவறானது. அதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார். கட்சி பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. ஒரு தவறுக்கு ஒரு தண்டனைதான். பெரியார் பேசியதை விடவா பொன்முடி பேசி விட்டார். இதை எதிர்கட்சிகள் அரசியலாக்கி வருகின்றனர்.
சவுக்கு சங்கர் வீட்டில் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. ஆனால் அதற்கும் காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகைக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாடு முழுவதும் நீட் தேர்வு முறை கொண்டு வந்தது தி.மு.க.
- டாஸ்மாக்கில் ஊழல் செய்த அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் சிறை செல்வது உறுதி.
பழனி:
பா.ஜ.க. மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பழனிக்கு வருகை தந்த நயினார் நாகேந்திரனுக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து திருஆவினன்குடி கோவிலுக்கு சென்று குழந்தை வேலாயுத சுவாமியை தரிசனம் செய்தார். பின்னர் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற ஆளுநரை மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான தபால்காரர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சிப்பது அவர் வகித்து வரும் பதவிக்கு அழகல்ல. நாம் தமிழர் கட்சி நிறுவனர் சீமான் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என கூறி இருப்பது அவருடைய சொந்த கருத்து. மேலும் அ.தி.மு.க. தொடர்பான கேள்விகள் வேண்டாம் என்றார்.
பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நாடு முழுவதும் நீட் தேர்வு முறை கொண்டு வந்தது தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி. நீட் தேர்வை முன் மொழிந்தது தி.மு.க. எம்.பி.யாக இருந்த காந்தி செல்வன். தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியின்போது 2013ம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடைபெற்றது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு காரணமாகவே நீட் தேர்வு நடைமுறையில் உள்ளது. உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு செய்யாமல் முதலமைச்சர் நாடகமாடுகிறார். டாஸ்மாக்கில் ஊழல் செய்த அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் சிறை செல்வது உறுதி. டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் மதுபான ஊழலில் சிறை சென்றார். அதே போல் தமிழகத்திலும் நடக்கும். தமிழகம் முழுவதும் வளைத்து வளைத்து கஞ்சாவை பிடிக்கும் தமிழக போலீசார் சிந்தடிக் போதைப் பொருட்களை கண்டுகொள்ளவில்லை என்று தமிழக ஆளுநர் கேட்ட கேள்விக்கு இதுவரை தமிழக முதலமைச்சர் பதில் சொல்லாதது ஏன்? என்றார். அவருடன் மாநில பொதுச் செயலாளர் ராமசீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.
- இருவரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்தனர்.
- ஊருக்கு சென்ற காதலன் விவேக் பெற்றோர் பார்த்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்வது தெரியவந்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் விவேக் (வயது 29). இவர் 15 வேலம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து ஸ்ரீபதி நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கு 23 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகி வந்தனர். நாளடைவில் இது காதலாக மாறியது.
இதையடுத்து இருவரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்தனர். இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். இது குறித்து காதலனிடம் அந்த பெண் கூறியுள்ளார்.
உடனே அவர் நாம் திருமணம் செய்து கொள்ளலாம்,அதற்கு முன் நான் ஊருக்கு சென்று பெற்றோரிடம் நமது காதல் விவகாரங்களை கூறி சம்மதம் பெற்று வருகிறேன் என கூறிவிட்டு சொந்த ஊருக்கு சென்றார். காதலன் வந்து திருமணம் செய்து கொள்வார் என்று காத்திருந்த அந்த பெண்ணுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஊருக்கு சென்றவர் திரும்பி வரவே இல்லை.செல்போன் மூலம் தொடர்பு கொண்டாலும் போனையும் எடுப்பதில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்தப்பெண் தனது காதலன் குறித்து விசாரித்த போது பெற்றோரிடம் சம்மதம் வாங்கி வருவதாக ஊருக்கு சென்ற காதலன் விவேக் பெற்றோர் பார்த்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்வது தெரியவந்தது.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விவேக் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் மற்றும் சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
- பணத்தை கட்டிய பிறகு டாக்டர்கள் நாச்சிமுத்து, சுதாகர், தீபக் ஆகிய 3 பேரும் அறுவை சிகிச்சை செய்தனர்.
- ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள செம்மடைப்பட்டி பலக்கனூத்து கிராமத்தைச் சேர்ந்த சண்முகம்-காவேரி தம்பதியின் மகள் நந்தினி (வயது 14). இவர் 7ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு காதில் கட்டி ஏற்பட்டு வலி இருந்து வந்தது.
இதனால் கடந்த 9.10.2021 அன்று நந்தினியை ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மல்டி லெவல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். காதில் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், முன் பணமாக ரூ.20 ஆயிரம் கட்டுமாறும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
பணத்தை கட்டிய பிறகு டாக்டர்கள் நாச்சிமுத்து, சுதாகர், தீபக் ஆகிய 3 பேரும் அறுவை சிகிச்சை செய்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே சிறுமிக்கு காதில் இருந்து தொடர்ந்து ரத்தம் வந்து கொண்டே இருந்தது. இதனால் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
உடனடியாக அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதைக் கேட்டதும் பெற்றோர்கள் கதறி அழுதனர். தங்கள் மகளுக்கு தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்ததால்தான் அவர் உயிரிழந்து விட்டதாக ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. மாணவியின் தரப்பில் வக்கீல்கள் ஆரோக்கிய செல்வரமேஷ், கார்த்திகேயன் ஆகியோர் வாதாடினர். விசாரணை நிறைவடைந்த நிலையில் குறைதீர் ஆணைய தலைவர் சித்ரா, உறுப்பினர் பாக்கியலெட்சுமி ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். தவறான சிகிச்சையால் சிறுமி உயிரிழந்தது உறுதியானதால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ரூ.30 லட்சம், டாக்டர் நாச்சிமுத்து ரூ.4 லட்சம், டாக்டர்கள் சுதாகர், தீபக் ஆகியோர் தலா ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.40 லட்சம் வழங்க வேண்டும். மேலும் அறுவை சிகிச்சைக்கு அவர்கள் செலுத்திய ரூ.20 ஆயிரம் பணத்துடன் சேர்த்து 2 மாதத்துக்குள் வழங்காவிட்டால் 12 சதவீத வட்டியுடன் வழங்க நேரிடும் என்று உத்தரவிட்டனர்.
- ஆயம்மா கழுத்தில் கரண்டியால் சூடு வைத்ததாக கூறினாள்.
- குழந்தை சேட்டை செய்ததால் சூடு வைத்தேன் என்று தெரிவித்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அடுத்த கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய் பட்டி கிழக்குத் தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி சினேகா. இவர்களது மகள் தர்ஷிகா ஸ்ரீ (வயது2½). அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடியில் தர்ஷிகாஸ்ரீ படித்து வருகிறார். இங்கு அதே பகுதியைச் சேர்ந்த 13 குழந்தைகள் படித்து வருகின்றனர்.
தர்மத்துப்பட்டியை சேர்ந்த பாப்பாத்தி பணியாளராக உள்ளார். அவருக்கு உதவியாளராக சுரக்காய்பட்டியை சேர்ந்த செல்லம்மாள் இருந்து வருகிறார். தினந்தோறும் சினேகா, தனது மகள் தர்ஷிகா ஸ்ரீயை காலையில் அங்கன்வாடிக்கு அழைத்து சென்றும் மாலை 3 மணிக்கு மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று அங்கன்வாடியில் இருந்து வீட்டிற்கு வந்த தர்ஷிகா ஸ்ரீ சோர்வடைந்து காணப்பட்டாள். இரவு வீட்டிற்கு வந்த தந்தை ராஜபாண்டியிடம், அழுது கொண்டே ஆயம்மா கழுத்தில் கரண்டியால் சூடு வைத்ததாக கூறினாள்.
இதயைடுத்து காயத்திற்கு மருந்து தடவி தூங்க வைத்தனர். இதனையடுத்து செல்லாம்மாள் வீட்டிற்கு சென்று குழந்தையின் பெற்றோர் இது குறித்து கேட்டபோது, ஆமாம், உனது குழந்தை சேட்டை செய்ததால் சூடு வைத்தேன் என்று தெரிவித்தார். இதனையடுத்து ராஜபாண்டி, கன்னிவாடி போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே குழந்தைக்கு சூடு வைத்த சம்பவம் மற்ற குழந்தைகளின் பெற்றோருக்கும் தெரிந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசாக உள்ளது.
- வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல காதணி விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் த.மா.கா. அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெற்று அ.தி.மு.க. தலைமையில் சிறப்பாக ஆட்சி அமையும். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் ஒரே எண்ணத்தில் இருக்கும் மேலும் பல கட்சிகள் சேரக்கூடும். தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசாக உள்ளது. டாஸ்மாக்கில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அந்த ஊழல் வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் தமிழக அரசு அதனை கண்டு கொள்ளவில்லை. டாஸ்மாக் கடைகளை குறைப்பதற்கான எண்ணம் அவர்களுக்கு இல்லை. எனவே மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். இதனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
இங்கு சித்தன் எம்.பி.யாக இருந்த போது நத்தம் தொகுதிக்கு அதிக வளர்ச்சித்திட்ட பணிகள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து மக்கள் பணியில் த.மா.கா. ஈடுபடும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சினிமா படத்தின் கிளைமாக்ஸ் காட்சி போல் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இணைந்தது.
- வருகிற சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணி நிச்சயமாக தி.மு.க.வை டெபாசிட் இழக்கச் செய்யும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகர வடக்கு பகுதி அ.தி.மு.க. சார்பில் 2026 சட்டமன்ற தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், அ.தி.மு.க. மாநில அமைப்பு செயலாளர் மருதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், "கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் மருத்துவம் படிக்க முடிந்தது. குடிமராமத்து பணிகள் மூலம் விவசாயிகள் இலவசமாக மண் அள்ளிக்கொள்ள அனுமதி கொடுத்ததும் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தான். இன்றைய பரபரப்பான அரசியல் சூழலில், சினிமா படத்தின் கிளைமாக்ஸ் காட்சி போல் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இணைந்தது. வருகிற சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணி நிச்சயமாக தி.மு.க.வை டெபாசிட் இழக்கச் செய்யும் என்றார்.
இதனிடையே, சைத்தான் கூட்டணியால் தான் தோற்றோம் என்று கூறிவிட்டு மீண்டும் ஏன் சைத்தாவுடன் கூட்டணி வைத்தீர்கள் என பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, திண்டுக்கல் சீனிவாசன், அரசியல்வாதிகள் சூழலுக்கேற்ப மாற்றிமாற்றிதான் பேசுவோம். பழசை எல்லாம் துடைத்துவிடவேண்டும் என்றார்.
- பா.ம.க.வில் நடப்பது உள்கட்சி விவகாரம். அதில் நாங்கள் தலைமையிட முடியாது.
- அமைச்சர் பொன்முடியை போல தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் பெண்களை பற்றி அவதூறாக பேசி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகர் வடக்கு பகுதி அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்து பேசியதாவது,
சட்டமன்றத் தேர்தலுக்கு அ.தி.மு.க. தலைமையிலான சிறப்பான கூட்டணியை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ளார். அவருக்கு 1½ கோடி அ.தி.மு.க. உறுப்பினர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். பொதுமக்களிடம் விலைவாசி உயர்வு, தி.மு.க. ஆட்சியின் வேதனைகள், கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகள், தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக் ஊழல்களை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இந்த ஆட்சி எப்போது முடியும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். வருங்காலம் நமது காலம். நமது பணியை செவ்வனே செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி அமையும். இந்த கூட்டணியில் பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் இடங்களை பிரித்துக் கொடுப்பதை எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார். தேர்தல் நேரத்தில் இதுகுறித்து பேசி முடிவெடுக்கப்படும். வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழக சட்டப் பேரவையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்த போது அதனை ஆதரித்து அ.தி.மு.க. வாக்களித்தது. எனவே நாங்கள் சிறுபான்மையின மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. பா.ம.க.வில் நடப்பது உள்கட்சி விவகாரம். அதில் நாங்கள் தலைமையிட முடியாது.
அமைச்சர் பொன்முடியை போல தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் பெண்களை பற்றி அவதூறாக பேசி வருகின்றனர். ஆனால் அவர்கள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பதில்லை. அவரது கட்சியில் என்ன நடக்கிறது என்றே அவருக்கு தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
- 16 வகை தீபாராதனை நடந்தது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக போற்றப்படும் பழனி முருகன் கோவிலில் நடக்கும் திருவிழாக்களில் பங்குனி உத்திரம் சிறப்பு வாய்ந்தது. இந்த திருவிழாவையொட்டி பல்லாயிரகணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பு அம்சமாகும்.
இந்த ஆண்டு திருவிழா கடந்த 5-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 6-ம் நாளான நேற்று முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக காலை 9 மணிக்கு சன்னதி வீதி, கிரிவீதிகளில் தந்தப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. மதியம் 3 மணிக்கு அடிவாரம் சவுமிய நாராயண கவர நாயக்கர் மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் மாலை 5.30 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து புண்ணியாக வாஜனம், கலசபூஜை, மாங்கல்ய பூஜை, கந்த யாகம், பூர்ணாகுதி நடைபெற்றது. அதையடுத்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
மாலை 6 மணிக்கு முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா', 'தண்டாயுதபாணிக்கு அரோகரா' என்று விண்ணே அதிரும் வகையில் கோஷமிட்டனர். தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி, 16 வகை தீபாராதனை நடந்தது. பின்னர் ஓதுவார்கள் தேவாரம் பாடினர்.
பங்குனி உத்திர திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு பழனி கிரிவல பாதையில் நடைபெறுகிறது. தேரில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்து அருள்பாலிக்க உள்ளார். தேரோட்டத்தையொட்டி காவடி எடுத்து பக்தர்கள் பழனி நோக்கி படையெடுத்து வருகின்றனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பு எதிரொலியாக பழனியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- கொடைக்கானலுக்கு அனுமதிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்து அரிய இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது.
- சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு வார இறுதி நாட்களில் கூடுதலாக 2 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கோடை சீசனின் போது லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கொடைக்கானலுக்கு அனுமதிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்து அரிய இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது.
மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவின்படி தற்போது அனைத்து வாகனங்களிலும் இ-பாஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதிலிருந்து உள்ளூர் வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரும் வாகனங்கள், அரசு பஸ்கள் ஆகியவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ்களில் வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்ட பின்னர் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி தற்போது பயணிகளின் வருகையை குறித்து கொடைக்கானலில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்கள் தவிர புதிதாக ஏ.சி. பஸ் இயக்கப்படுகிறது. மேலும் சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு வார இறுதி நாட்களில் கூடுதலாக 2 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. 20ம் தேதிக்கு பின்னர் கொடைக்கானலில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை காண்பதற்காக அரசு சிறப்பு சைட்சீயிங் பஸ் இயக்கப்பட உள்ளது. குறைவான கட்டணத்தில் அரசு பஸ்சில் சுற்றுலா இடங்களை கண்டு ரசிக்க முடியும். பயணிகளின் வருகையை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். மேலும் அவர்கள் வசதிக்காக மதுரை, திண்டுக்கல், வத்தலக்குண்டு, கொடைக்கானல் உள்ளிட்ட பஸ் நிலையங்களில் அலுவலர்கள் வழிகாட்டுவதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.






