என் மலர்
திண்டுக்கல்
- 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாவட்டம் 92.32 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
- சாதனை படைத்த மாணவருக்கு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
ஒட்டன்சத்திரம்:
நடந்து முடிந்த 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாவட்டம் 92.32 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. ஒட்டன்சத்திரம் கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர் மனீஸ்குமார் 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் சாதனை படைத்துள்ளார்.
இவர் ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் தலா 100 மதிப்பெண்களும், தமிழ் பாடத்தில் 98 மதிப்பெண்களும் எடுத்துள்ளார். சாதனை படைத்த மாணவருக்கு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
இவரது தந்தை சந்திரசேகர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தாய் ராணி கள்ளிமந்தையம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பஸ் மோதி தூக்கி வீசப்பட்ட மாடுகள் சாலையில் ஆங்காங்கே சிதறி கிடந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
- விபத்தில் மேலும் பல மாடுகளின் கால்கள் முறிந்து காயம் ஏற்பட்டன.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் மஞ்ச நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த தனசேகரன் என்பவர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே டி. கள்ளிப்பட்டி பகுதியில் 80-க்கும் மேற்பட்ட மாடுகளை அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் கிடை அமர்த்தி வந்தார்.
இந்த நிலையில் மாடுகளை வேறு ஒரு விளைநிலத்திற்கு இடம் மாற்றம் செய்வதற்காக ஓட்டிச் சென்றார். அப்போது தேனி-திண்டுக்கல் புறவழிச்சாலையில் சாலையை கடந்து கொண்டிருந்த மாடுகள் மீது அவ்வழியாக வந்த அரசு பஸ் பயங்கரமாக மோதியது. இதில் 15 மாடுகள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தன.
பஸ் மோதி தூக்கி வீசப்பட்ட மாடுகள் சாலையில் ஆங்காங்கே சிதறி கிடந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த பெரியகுளம் தென்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஸ் மோதி பலியாகி சாலையில் கிடந்த மாடுகளை சாலை ஓரத்தில் அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
இந்த விபத்தில் மேலும் பல மாடுகளின் கால்கள் முறிந்து காயம் ஏற்பட்டன. இச்சம்பவம் குறித்து தென்கரை போலீசார் விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சூறாவளி காற்றால் சுமார் 20-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.
- வாழை விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே முசுவனூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 62). இவர் தற்போது வாழை, தென்னை மரங்களை சாகுபடி செய்து இருந்தார். இப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த சூறாவளி காற்றால் சுமார் 20-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.
மேலும் மிளகாய்பட்டி, ஆண்டிபட்டி, முசுவனூத்து உள்ளிட்ட கிராமங்களிலும் மின்வினியோகம் தடைபட்டு இருளில் மூழ்கி கிடந்தன. இந்நிலையில் மின்சார வாரியத்துறையின் நடவடிக்கையால் மீண்டும் மின்வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே மீண்டும் திடீரென இப்பகுதியில் வீசிய சூறாவளி காற்றால் ராஜேந்திரன் என்பவரின் தோட்டத்தில் இருந்த சுமார் 2000 வாழை மரங்களின் நடுப்பகுதி முறிந்து தரையில் சாய்ந்தது. இதைப் பார்த்த விவசாயி ராஜேந்திரன் மற்றும் அவரது உறவினர்கள் மிகுந்த கவலையடைந்தனர்.
மேலும் இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், திண்டுக்கல் மாவட்டத்தில் அக்னி நட்சத்திர சீசனில் மழை பெய்வது ஆறுதலாக இருந்த போதிலும், சூறாவளி காற்றுடன் பெய்த மழை பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. மாவட்டத்தில் வாழை விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலக்கோட்டை, பழனி, சத்திரப்பட்டி, ஆத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் தென்னை மரங்களும் சாய்ந்து விழுந்துள்ளன. எனவே வேளாண் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாய இடங்களில் ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
- விழுப்புரம் மாவட்டத்தில் 192 பள்ளிகள் மூலம் 21,581 பேர் தேர்வு எழுதினர்.
- 95.11 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 18-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
விழுப்புரம்:
தமிழகம் முழுவதும் இன்று காலை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. விழுப்புரம் மாவட்டத்தில் 192 பள்ளிகள் மூலம் 21,581 பேர் தேர்வு எழுதினர். இதில் 20,526 பேர் தேர்ச்சி பெற்றனர். இதனால் 95.11 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 18-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் சிறுவாலை கிராமத்தை சேர்ந்த மாணவன் கோகுல்நாத் பிளஸ்-2 தேர்வு எழுதியிருந்தார். இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியான போது மாணவன் கோகுல்நாத் தேர்வில் தோல்வி அடைந்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிறுவாலை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் குரூப் படித்து பொதுத்தேர்வு எழுதியிருந்தார்.
- தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சுகுமார் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 21-ம் தேதி உயிரிழந்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மல்வார்பட்டி ஊராட்சி ஒத்தையூரை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் வேடசந்தூரில் கரும்பு ஜூஸ் கடை வைத்துள்ளார். இவரது மனைவி அமராவதி வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சத்துணவு ஒருங்கிணைப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுக்கு சுகுமார் என்ற மகனும் சுபாஷினி என்ற மகளும் உள்ளனர். சுபாஷினி மாரம்பாடியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
சுகுமார் (வயது 18) திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் குரூப் படித்து பொதுத்தேர்வு எழுதியிருந்தார்.
இந்தநிலையில் கடந்த மாதம் 6-ம்தேதி சுகுமார் இருசக்கர வாகனத்தில் வேடசந்தூர் சந்தைக்கு சென்று காய்கறி வாங்கி விட்டு ஊருக்கு திரும்பும் போது, தட்டாரப்பட்டி பிரிவு அருகே ஆட்டோ மோதி படுகாயம் அடைந்தார்.
குடும்பத்தினர் அவரை மீட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சுகுமார் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 21-ம் தேதி உயிரிழந்தார்.
இந்த நிலையில் இன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் சுகுமார் 443 மதிப்பெண்கள் (74 சதவீதம்) பெற்றுள்ளார்.
சிறு வயது முதலே கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆக வேண்டும் என்ற கனவில் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் பெற்றிருந்த நிலையில், சாலை விபத்தில் மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பிளஸ்-2 தேர்வில் மாணவிகள் 96.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- மாணவர்கள் 93.16 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
பழனி:
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவ-மாணவிகள் எழுதினர்.
விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி கடந்த மாதம் 4-ந்தேதி தொடங்கியது. 17-ந்தேதி அந்த பணிகள் நிறைவடைந்தன. மதிப்பெண் விவரம் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று முடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து பிளஸ்-2 தோ்வு முடிவுகள் மே-9ந்தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பிளஸ்-2 தேர்வு முடிவுகள் ஒரு நாள் முன்னதாக இன்று வெளியிடப்பட்டது.
தேர்வு எழுதிய 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவ-மாணவிகளில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.03 சதவீதம் ஆகும்.
தேர்வு எழுதிய 3 லட்சத்து 73 ஆயிரத்து 178 மாணவர்களில் 3 லட்சத்து 47 ஆயிரத்து 670 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அது போல தேர்வு எழுதிய 4 லட்சத்து 19 ஆயிரத்து 316 மாணவிகளில் 4 லட்சத்து 5 ஆயிரத்து 472 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ்-2 தேர்வில் மாணவிகள் 96.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.16 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகள் தான் அதிகம் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் 3.54 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி 600-க்கு 599-மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் 2வது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். தமிழ், பொருளாதாரம், வணிகவியல், கணக்கு பதிவியல், கணினி பயன்பாடு ஆகிய பாடங்களில தலா 100 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களும் பெற்று 599 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பழனி பாரத் வித்யா பவன் பள்ளியை சேர்ந்த இந்த மாணவிக்கு ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
- கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
- மீன் பிடி திருவிழா அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வோம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி கிராமம் எட்டையம்பட்டி கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில்பெரிய கண்மாய் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் இங்கு மீன் பிடி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு தற்போது கண்மாயில் தண்ணீர் குறைந்ததால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நடந்தது. இதையொட்டி நத்தம், சிறுகுடி, கொட்டாம்பட்டி, செந்துறை, சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் குளத்தில் இறங்கி மூங்கில் கூடைகளையும், வலைகளையும் பயன்படுத்தி போட்டிப்போட்டு மீன்களை பிடித்தனர்.
இதில் கட்லா, ரோகு, விரால், ஜிலேபி, குரவை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் சிக்கியது. தொடர்ந்து 2 கிலோ முதல் 3 கிலோ வரை கிடைத்த மீன்களை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.
கிராம மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் விதமாக மீன் பிடி திருவிழா ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் பல்வேறு இனங்களை கடந்து மக்கள் ஒற்றுமையாக மீன் பிடிக்கின்றனர். காலங்காலமாக தொடர்ந்து வரும் மீன் பிடி திருவிழா அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வோம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
- போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை என தெரிகிறது.
- சிறுமி புகார் அளித்த வாலிபரிடம் டி.என்.ஏ. சோதனை நடத்தப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில் 13 வயது சிறுமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற போது அவர் கர்ப்பமாக இருந்ததை அறிந்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தன் மகளிடம் கேட்ட போது ஒரு வாலிபர் தன்னை வன்கொடுமை செய்ததாக கூறினார். இதுகுறித்து பெற்றோர் தரப்பில் சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை என தெரிகிறது.
சிறுமி புகார் அளித்த வாலிபரிடம் டி.என்.ஏ. சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அதன் முடிவுகள் வராததால் வாலிபர் கைது செய்யப்படவில்லை. சிறுமி தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருப்பதால் பள்ளிக்கும் செல்ல முடியவில்லை. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியின் தாய் தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் தனது மகளின் நிலைக்கு காரணமான வாலிபர் கைது செய்யப்படாததை நினைத்தும், மனைவி தற்கொலை செய்ததை நினைத்தும் கவலையில் இருந்த சிறுமியின் தந்தை இன்று தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சின்னாளபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- படப்பிடிப்பை காண ரசிகர்கள் வரக்கூடும் என்பதால் அந்த சாலையிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
- நடிகர் விஜய் தங்கி இருந்த தனியார் விடுதிக்குள்ளும், வெளியேயும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கொடைக்கானல்:
அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் தனது கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். எச்.வினோத் இயக்கத்தில் இந்த படம் விஜய்க்கு 69-வது படமாக வர உள்ளது.
ஏற்கனவே பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பு கொடைக்கானல் கீழ்மலை கிராமமான தாண்டிக்குடி அடுத்துள்ள பட்லாங்காடு, மங்களம்கொம்பு, கன்னிமார்துறை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு நடக்கும் படப்பிடிப்பில் நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினர் பங்கேற்க உள்ளனர்.
நடிகர் விஜயை காண நேற்று மதுரை விமான நிலையத்தில் திரண்ட ரசிகர்களை போலவே கொடைக்கானல் மலைச்சாலையிலும் ஏராளமானோர் திரண்டனர்.
நேற்று இரவு சித்தரேவு, தாண்டிக்குடி மலை ரோடு வழியாக மங்களம்கொம்புவில் உள்ள தங்கும் விடுதிக்கு விஜய் வந்தார். அந்த சாலையில் இரவு வரை ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விஜய் காரில் இருந்து இறங்காமல் சைகை காட்டி தனது அறைக்கு சென்று விட்டார். வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி வழியாக நடிகர் விஜய் வரலாம் என்பதால் செம்பட்டியில் இருந்து சித்தையன்கோட்டை, சித்தரேவு வழியிலும் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் அவரது கார் மாற்றுப்பாதையில் சென்றதாக அறிந்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இன்று காலை முதல் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. நேற்று இரவே மலைச்சாலையில் காத்திருந்த ரசிகர்களை போலீசார் அங்கிருந்து வெளியேற்றினர். வனப்பகுதியில் பாதுகாப்பு குறைபாடு ஏற்படலாம் என்பதால் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டது.
மேலும் நடிகர் விஜய் தங்கி இருந்த தனியார் விடுதிக்குள்ளும், வெளியேயும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே ஒய் பிரிவு பாதுகாப்புடன் நடிகர் விஜய்க்கான பிரத்தியேக பாதுகாப்பு அலுவலர்களும் அங்கு இருந்தனர்.
படப்பிடிப்பை காண ரசிகர்கள் வரக்கூடும் என்பதால் அந்த சாலையிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த சாலை கனரக வாகனங்கள் மற்றும் அதிக அளவு வாகனங்கள் வந்து செல்வதற்கு ஏற்றதல்ல என்பதால் குறைந்த அளவு வாகனங்கள் மட்டுமே அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. மோட்டார் சைக்கிள்களில் ரசிகர்கள் வருவதை தடுக்கவும் முக்கிய இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே பகுதியில் நடிகர் ஆர்யா நடித்த கடம்பன் திரைப்படமும், லாரன்ஸ் நடிப்பில் உருவான ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படமும் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொடைக்கானல் மலை கிராமங்களில் நடக்கும் படப்பிடிப்பின்போது நடிகர்கள், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் தங்குவதற்கு கொடைக்கானலில் பல ஓட்டல்கள், விடுதிகள் உள்ளன. ஆனால் கீழ்மலை கிராமங்களில் நடக்கும் படப்பிடிப்பின்போது நடிகர்கள் வந்து செல்ல நீண்ட நேரம் ஆகும் என்பதால் தனியார் விடுதிகள் ஆங்காங்கு கட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக சென்னை, மதுரை நகரங்களில் உள்ளதைப்போல நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய காட்டேஜ்கள் கொடைக்கானல் மலை கிராமங்களில் உள்ளன. அதன்படி மங்களம் கொம்புவில் நடிகர் விஜய் தங்கி உள்ள காட்டேஜ் ராஜபாளையத்தை சேர்ந்த தனி நபருக்கு சொந்தமான விடுதியாகும்.
இந்த விடுதியில் இதற்கு முன் கங்குவா படப்பிடிப்புக்காக வந்த சூர்யா, ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படத்திற்காக வந்த நடிகர் லாரன்ஸ் ஆகியோர் தங்கினர். தற்போது 3வது நடிகராக நடிகர் விஜய் அங்கு தங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- கொடைக்கானலில் அடுத்த மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.
- பிரையண்ட் பூங்கா முழுவதும் பூக்களின் அணிவகுப்பு போல காட்சியளிக்கும்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது குளுகுளு சீசன் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்து குடை பிடித்தபடியும், நனைந்தபடியும் அனைத்து இடங்களையும் கண்டு ரசித்து வருகின்றனர்.
தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும் கோடை வெயில் சுட்டெரித்து வருவதாலும் கொடைக்கானலை நோக்கி உள்ளூர் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
கொடைக்கானலில் அடுத்த மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மலர் நாற்றுகள் வரவழைக்கப்பட்டன.
அந்த மலர் நாற்றுக்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்டன. மேலும் மலர் செடிகளுக்கு கவாத்து செய்யப்பட்டு பராமரிப்பு பணியும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பிரையண்ட் பூங்காவில் உள்ள மலர் செடிகளில் தற்போது பல வண்ணப்பூக்கள் பூத்துக்குலுங்கி வருகின்றன. இவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
குறிப்பாக சால்வியா, பேன்சி, கேலண்டுல்லா, பிங்க் ஆஸ்டர், லில்லியம் உள்ளிட்ட பல்வேறு மலர் செடிகள் பல வண்ணங்களில் பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
அதன் அருகில் நின்று அவர்கள் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். கோடை விழா தொடங்குவதற்கு முன்பாக மற்ற செடிகளில் உள்ள பூக்களும் பூக்கத் தொடங்கி விடும். அப்போது பிரையண்ட் பூங்கா முழுவதும் பூக்களின் அணிவகுப்பு போல காட்சியளிக்கும். மலர் கண்காட்சி நாட்களில் லட்சக்கணக்கான பூக்கள் இங்கு பூத்துக்குலுங்கும். இதனை ரசிப்பதற்காகவே அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நகராட்சி மற்றும் காவல் துறை, சுற்றுலா அதிகாரிகள் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளன. இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டாலும் கோடை சீசன் காலங்களில் கூடுதல் வாகனங்கள் வந்து செல்ல கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாமல் வந்து செல்வதற்கும் அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஏரிச்சாலை உள்ளிட்ட அ னைத்து சுற்றுலா இடங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
- தொடர் விடுமுறையால் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார மலைக்கிராமங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
- கோடை சீசன் களைகட்டியுள்ளதாக வியாபாரிகள், உள்ளூர் பொதுமக்கள் தெரிவித்தனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வந்தபோதிலும் கொடைக்கானலில் அவ்வப்போது சாரல் மழை பெய்து குளிர்வித்து வருகிறது.
மேலும் கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்திருந்தனர். நேற்று பகல் பொழுதில் திடீரென சாரல் மழை பெய்ததது. அதனைத் தொடர்ந்து அப்சர்வேட்டரி, அண்ணாசாலை, பஸ் நிலையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இருந்த போதும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக மழையில் நனைந்தபடியே ஏரிச்சாலையை சுற்றி வந்தனர். மேலும் நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதே போல் முக்கிய சுற்றுலா இடங்களான கோக்கர்ஸ்வாக், மோயர் பாயிண்ட், பைன்பாரஸ்ட், குணா குகை, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், எழும்பள்ளம் ஏரி, முயல்பண்ணை, ஆடு ஆராய்ச்சி நிலையம், பூம்பாறை, பூண்டி, கிளாவரை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று மகிழ்ந்தனர்.
கொடைக்கானலில் சீதோஷ்ண நிலை ஐரோப்பா நாடுகள் போன்று உள்ளதால் பல்வேறு காலங்களில் அங்கிருந்து இடம் பெயரும் பறவைகள் அடிக்கடி கொடைக்கானலுக்கு வருகிறது. அதன்படி தாய்லாந்து, பாங்காங் மற்றும் மலை பிரேதேசங்களில் காணப்படும் பர்ப்பிள் பாண்ட் ஹேரோன் என்ற வெளிநாட்டு பறவை நட்சத்திர ஏரிப்பகுதியில் உலா வந்தது. இதைப் பார்த்ததும் உற்சாகமடைந்த சுற்றுலா பயணிகள் நீண்டநேரம் அதனை கண்டு ரசித்தனர்.
தொடர் விடுமுறையால் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார மலைக்கிராமங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. இதனால் கோடை சீசன் களைகட்டியுள்ளதாக வியாபாரிகள், உள்ளூர் பொதுமக்கள் தெரிவித்தனர்.
- மதுரை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழனிக்கு வந்ததால் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
- நீண்ட வரிசையில் காத்திருந்து மலைக்கோவிலில் தண்டாயுதபாணி சாமியை தரிசனம் செய்தனர்.
பழனி:
தமிழ்கடவுள் முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். முக்கிய திருவிழாக்களான பங்குனி உத்திரம், தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழனிக்கு வந்ததால் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கேரளாவில் இருந்தும் அதிக அளவு பக்தர்கள் வந்திருந்ததால் பஸ் நிலையம், அடிவாரம், கிரிவீதி, யானைப்பாதை, படிப்பாதை, ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில் நிலையம் ஆகியவற்றில் அதிக அளவில் பக்தர்கள் திரண்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்து மலைக்கோவிலில் தண்டாயுதபாணி சாமியை தரிசனம் செய்தனர்.
இதனால் பஸ்நிலையம், அடிவாரம் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் சீரமைத்தனர்.






