என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கொடைக்கானலுக்கு படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள்- சுற்றுலா பயணிகள் உற்சாகம்
- தொடர் விடுமுறையால் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார மலைக்கிராமங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
- கோடை சீசன் களைகட்டியுள்ளதாக வியாபாரிகள், உள்ளூர் பொதுமக்கள் தெரிவித்தனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வந்தபோதிலும் கொடைக்கானலில் அவ்வப்போது சாரல் மழை பெய்து குளிர்வித்து வருகிறது.
மேலும் கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்திருந்தனர். நேற்று பகல் பொழுதில் திடீரென சாரல் மழை பெய்ததது. அதனைத் தொடர்ந்து அப்சர்வேட்டரி, அண்ணாசாலை, பஸ் நிலையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இருந்த போதும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக மழையில் நனைந்தபடியே ஏரிச்சாலையை சுற்றி வந்தனர். மேலும் நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதே போல் முக்கிய சுற்றுலா இடங்களான கோக்கர்ஸ்வாக், மோயர் பாயிண்ட், பைன்பாரஸ்ட், குணா குகை, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், எழும்பள்ளம் ஏரி, முயல்பண்ணை, ஆடு ஆராய்ச்சி நிலையம், பூம்பாறை, பூண்டி, கிளாவரை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று மகிழ்ந்தனர்.
கொடைக்கானலில் சீதோஷ்ண நிலை ஐரோப்பா நாடுகள் போன்று உள்ளதால் பல்வேறு காலங்களில் அங்கிருந்து இடம் பெயரும் பறவைகள் அடிக்கடி கொடைக்கானலுக்கு வருகிறது. அதன்படி தாய்லாந்து, பாங்காங் மற்றும் மலை பிரேதேசங்களில் காணப்படும் பர்ப்பிள் பாண்ட் ஹேரோன் என்ற வெளிநாட்டு பறவை நட்சத்திர ஏரிப்பகுதியில் உலா வந்தது. இதைப் பார்த்ததும் உற்சாகமடைந்த சுற்றுலா பயணிகள் நீண்டநேரம் அதனை கண்டு ரசித்தனர்.
தொடர் விடுமுறையால் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார மலைக்கிராமங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. இதனால் கோடை சீசன் களைகட்டியுள்ளதாக வியாபாரிகள், உள்ளூர் பொதுமக்கள் தெரிவித்தனர்.






