என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

13 வயது சிறுமி கர்ப்பம்: விரக்தியில் தாய், தந்தை தற்கொலை
- போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை என தெரிகிறது.
- சிறுமி புகார் அளித்த வாலிபரிடம் டி.என்.ஏ. சோதனை நடத்தப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில் 13 வயது சிறுமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற போது அவர் கர்ப்பமாக இருந்ததை அறிந்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தன் மகளிடம் கேட்ட போது ஒரு வாலிபர் தன்னை வன்கொடுமை செய்ததாக கூறினார். இதுகுறித்து பெற்றோர் தரப்பில் சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை என தெரிகிறது.
சிறுமி புகார் அளித்த வாலிபரிடம் டி.என்.ஏ. சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அதன் முடிவுகள் வராததால் வாலிபர் கைது செய்யப்படவில்லை. சிறுமி தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருப்பதால் பள்ளிக்கும் செல்ல முடியவில்லை. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியின் தாய் தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் தனது மகளின் நிலைக்கு காரணமான வாலிபர் கைது செய்யப்படாததை நினைத்தும், மனைவி தற்கொலை செய்ததை நினைத்தும் கவலையில் இருந்த சிறுமியின் தந்தை இன்று தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சின்னாளபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.