என் மலர்
திண்டுக்கல்
- தாடிக்கொம்பு துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- தாடிக்கொம்பு, கிரியம்பட்டி, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாடிக்கொம்பு:
தாடிக்கொம்பு துணை மின் நிலையத்தில் நாளை (10ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாடிக்கொம்பு, கிரியம்பட்டி, சத்திரப்பட்டி, இன்னாசிபுரம், பிரகரை, உண்டார்பட்டி. தவசிகுளம், திருகம்பட்டி, மறவபட்டி, காப்பிளியபட்டிபுதூர், முனியபிள்ளைபட்டி, அலக்குவார்பட்டி, கள்ளிப்பட்டி, அகரம், சுக்காம்பட்டி, சென்னம்பட்டி, உலகம்பட்டி, கொண்டசமுத்திரம்பட்டி, சில்வார்பட்டி, கன்னிமானூத்து,
கொண்டமநாயக்கன்பட்டி, மல்லனம்பட்டி, கோட்டூர் ஆவாரம்பட்டி, பாப்பணம்பட்டி, அழகுபட்டி, தெப்பக்குளத்துப்பட்டி, கெச்சாணிபட்டி, வெள்ளையம்பட்டி, தாதங்கோட்டை, ரெங்கப்பனூர், விட்டல்நாயக்கன்பட்டி, கதிரனம்பட்டி, ஜக்கனநாயக்கன்பட்டி, கஞ்சிப்பட்டி, மாக்கிநாயக்கன்பட்டி, கே.புதுக்கோட்டை, ராமகவுண்டன்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- வைகோவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்காததால் தொண்டர்கள், நிர்வாகிகள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர்.
- ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கையெழுத்து போட்டுள்ளனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் ம.தி.மு.க. நிர்வாகி இல்ல திருமணத்தில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைவைகோ எம்.பி. கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வைகோவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்காததால் தொண்டர்கள், நிர்வாகிகள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர். அவர் அவையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து மக்கள் மன்றத்தில் தனது பணியை செய்வார் என்பதில் ஐயமில்லை.
மாநிலங்களவை உறுப்பினர் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் எங்களால் கலந்து கொள்ள முடியவில்லை. நான் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டதாலும் வைகோ கோவையில் வேறு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாலும் அங்கு செல்ல முடியவில்லை.
ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கையெழுத்து போட்டுள்ளனர். மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்காததால் மன வேதனை இருந்தாலும் அனைத்தையும் கடந்து செல்வோம். 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல்வேறு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது.
- திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
வேடசந்தூர்:
உலகையே உலுக்கிய கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் பல்வேறு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது வரை 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதற்கான தீவிரம் இன்னும் தொடங்காத நிலையில் சுகாதாரத்துறை சார்பில் எவ்வித அச்சமும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.
வேடசந்தூர் ரெங்கநாதபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 32 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி நிமித்தமாக பெங்களூர் சென்று சொந்த ஊருக்கு வந்தார்.
தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடையாததால் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதித்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை வேடசந்தூர் அரசு தலைமை மருத்துவர் டாக்டர் லோகநாதன் உறுதி செய்தார்.
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வலையுடன் கூடிய 8 படுக்கைகள் கொண்ட வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை இங்கு கொரோனா தொற்றுடையவர்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வார்டில் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- கொடி கட்டி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
- விழாவின் 6ம் நாள் நிகழ்ச்சியாக வருகிற 8ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் வைகாசி விசாக திருவிழாவும் ஒன்றாகும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று காலை நடைபெற்றது. கொடி கட்டி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
பின்னர் கொடி படத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உட்பிரகாரமாக வலம் கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கொடி மண்டபத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் சுவாமி ரதவீதிகளில் தங்கமயில், வெள்ளிமயில், ஆட்டுக்கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவின் 6ம் நாள் நிகழ்ச்சியாக வருகிற 8ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. அன்று இரவு 8.30 மணிக்கு மேல் மணக்கோலத்தில் சுவாமி எழுந்தருளி வெள்ளி தேரில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 9ம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் தேரேற்றம் நடைபெறும். அன்று மாலை 4.30 மணிக்குமேல் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெறும். 4 ரதவீதிகளில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
வருகிற 12ம் தேதி காலை திருவூடல் நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்.
- கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 24-வது நாய்கள் கண்காட்சி கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடந்தது.
- கண்காட்சியில் 15 வகைகளை சேர்ந்த 57 நாய்கள் இடம்பெற்றன.
கொடைக்கானல்:
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் மலர் கண்காட்சியுடன் கோடைவிழா கடந்த 24-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தினமும் பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 24-வது நாய்கள் கண்காட்சி கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நேற்று நடந்தது. இந்த கண்காட்சியில் சைபீரியன் ஹாஸ்டர், கோல்டன் ரெட்ரீவர், பிக்புல், டாபர்மேன், பிகில், கிரேட்டேன், அமெரிக்கன்புல்கீ, மினியேச்சர், பாக்சர், சிசு, இங்கிலீஷ் பாயிண்டர் உள்ளிட்ட 15 வகைகளை சேர்ந்த 57 நாய்கள் இடம்பெற்றன. மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.
முதல் பிரிவில் ஜெர்மன் ஷெப்பர்ட், 2-வது பிரிவில் கிரேட்டேன் வகைகள் 3-வது பிரிவில் குட்டிநாய்கள், 4-வது பிரிவில் சிறிய வகை நாய்களுக்கான போட்டிகள் நடந்தது. வளையம் தாண்டுதல், உரிமையாளர்கள் கைகளை கோர்த்து தாண்டுதல், கீழ்ப்படிதல் உள்ளிட்ட பல்வேறு சாகசங்களை செய்து காட்டின.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கையில் குடைகளுடன் கண்டு ரசித்தனர்.
விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கி கிராமத்தை சேர்ந்த ராகவன் என்பவரின் டாபர்மேன் நாய் தட்டி சென்றது.
இந்த நாய் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தது குறிப்பிடத்தக்கதாகும். போட்டிகளைத் தொடர்ந்து வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
- செம்மறி ஆடுகள் வாங்க அதிக அளவில் ஆர்வம் காட்டியதால் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனையானது.
- பல வருடங்களாக நடைபெறும் அய்யலூர் சந்தை தமிழக அளவில் பிரபலமானதாகும்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வியாழக்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஆடு, நாட்டுக்கோழி, காய்கறிகள் மற்றும் மலை கிராமங்களில் விளையக்கூடிய மருத்துவ குணம் கொண்ட பல்வேறு பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பொருட்களை வாங்க வருகின்றனர். அதிகாலையில் தொடங்கும் சந்தை சுமார் 10 மணி வரை நடைபெறும். கடந்த சில நாட்களாக குறைந்த அளவே வியாபாரிகள் வந்திருந்தனர். இந்த நிலையில் அடுத்த மாதம் 7ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் இஸ்லாமியர்கள் குர்பாணி கொடுப்பது வழக்கம்.
இதில் தாங்கள் உணவின் ஒரு பகுதியை ஏழைகளுக்கு கொடுப்பது சிறப்பு அம்சமாகும். எனவே இதற்கான ஆடுகள் வாங்க பல்வேறு பகுதிகளிலிருந்து இன்று வியாபாரிகள் குவிந்தனர். இதனால் நீண்ட நாட்களுக்கு பின்னர் அய்யலூர் சந்தை களைகட்டியது.
செம்மறி ஆடுகள் வாங்க அதிக அளவில் ஆர்வம் காட்டியதால் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனையானது. 10 கிலோ கொண்ட வெள்ளாடு ரூ. 7500 முதல் ரூ.8000 வரை விற்பனையானது.
நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.450 வரை விற்பனையானது. இதனால் இன்று ஒரே நாளில் ரூ. 3 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பல வருடங்களாக நடைபெறும் அய்யலூர் சந்தை தமிழக அளவில் பிரபலமானதாகும். ஆனால் பெரும்பாலும் சாலையிலேயே நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் பயணிகள் உள்ளிட்டோர் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மேலும் இங்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாகும். எனவே மாவட்ட கலெக்டர் நேரடியாக பார்வையிட்டு அய்யலூர் வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இன்று தேனி, திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- பருவமழை எச்சரிக்கையையொட்டி பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவினர் கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.
கொடைக்கானல்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கி விட்டது. இதனைத் தொடர்ந்து அரபிக்கடலில் உருவான புயல் சின்னம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும் என தென் மண்டல ஆராய்ச்சி மையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களிலும் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி, திண்டுக்கல் மாவட்டத்திலும் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கொடைக்கானலில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மேலும் இன்று தேனி, திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சியையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்திருந்தனர். இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அவர்கள் அவசர அவசரமாக தங்களது சொந்த வாகனங்கள், அரசு பஸ்களில் ஊருக்கு கிளம்பிச் செல்ல தொடங்கினர். இதனால் மதியத்துக்கு பின்னர் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தே காணப்பட்டது.
இந்த நிலையில் பருவமழை எச்சரிக்கையையொட்டி பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவினர் கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அவர்கள் ஆய்வு செய்தனர்.
கொடைக்கானல் ரோஜா பூங்கா 12, பிரையண்ட் பூங்கா 7, பழனி 2, வேடசந்தூர் தாலுகா அலுவலகம் 2.6, புகையிலை ஆராய்ச்சி நிலையம் 2.6, சத்திரப்பட்டி 3, காமாட்சிபுரம் 2.7 என மாவட்டம் முழுவதும் 31.90 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- சுகுமாரும், ராணி சித்ராவும் ஒன்றாக இருந்ததை நாராயணசாமி, துர்க்கைராஜ் ஆகியோர் வீடியோ எடுத்துள்ளனர்.
- சுகுமார் மிரட்டல் குறித்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
திண்டுக்கல்:
பழனியை சேர்ந்தவர் சுகுமார் (வயது42). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர்கள் பழனி நேதாஜிநகரை சேர்ந்த நாராயணசாமி (44) மற்றும் அடிவாரத்தை சேர்ந்த துர்க்கைராஜ் (45).
சுகுமாரிடம் அதே பகுதியை சேர்ந்த செந்தில் மனைவி ராணிசித்ரா (40) என்பவர் பணம் வட்டிக்கு வாங்கி இருந்தார். சுகுமாரிடம் பணம் நிறைய இருப்பதை பார்த்து அதனை அபகரிக்க முடிவு செய்தார். அதன்படி அடிக்கடி ராணிசித்ரா வீட்டிற்கு சுகுமாரை வரவழைத்து அங்கு மது குடித்து ஒன்றாக இருந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகுமாரும், ராணி சித்ராவும் ஒன்றாக இருந்ததை நாராயணசாமி, துர்க்கைராஜ் ஆகியோர் வீடியோ எடுத்துள்ளனர்.
பின்னர் அந்த வீடியோவை சுகுமாரிடம் காட்டி ரூ.10 லட்சம் பணம் தராவிட்டால் இந்த வீடியோவை உனது குடும்பத்திற்கு அனுப்பி விடுவதாக மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுகுமார் இது குறித்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் ராணிசித்ரா மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து பணம் கேட்டு மிரட்டியது உறுதியானது. இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் இவர்கள் இதேபோல வேறு சிலரிடமும் மது குடிக்க வைத்து ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் பழனி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். ராணிசித்ரா நிலக்கோட்டை சிறையிலும், துர்க்கைராஜ், நாராயணசாமி ஆகியோர் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
- கொடைக்கானலில் நாயுடுபுரம் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் இடமாகும்.
- கடந்த சில நாட்களாகவே பகல் பொழுதில் மிதமான வெப்பமும் மாலை மற்றும் இரவு நேரங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடை விழா மற்றும் 62-வது மலர் கண்காட்சி நாளை மறுநாள் (24-ந் தேதி) தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கோடை கொண்டாட்டம் என்ற பெயரில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இசை நாற்காலி போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து ரோஜா பூங்காவில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், பொய்க்கால்குதிரை நடனம், புலியாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம் நடைபெற்றது. இலை தழைகளை கட்டிக் கொண்டு மலைவாழ்பெண்கள் நடனமாடிய பாரம்பரிய இசை நிகழ்ச்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
கலைக்குழுவினருடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் நடனமாடி மகிழ்ந்தனர். மேலும் மகிழ்ச்சி ஆரம்பம் என்ற பெயரில் கோடை விழாவை முன்னிட்டு தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
விளையாட்டு போட்டிகள், படகு அலங்கார போட்டிகள், அலங்கார அணிவகுப்பு, நாய்கள் கண்காட்சி உள்ளிட்டவையும் நடைபெற உள்ளது. கோடை விழாவுக்கு முன்னதாகவே சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து குவிய தொடங்கியுள்ளனர்.

கொடைக்கானலில் நாயுடுபுரம் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் இடமாகும். இந்த வழியாகத்தான் வில்பட்டி, பள்ளங்கி, கோம்பை மற்றும் பாக்கியபுரம், பெரும்பள்ளம், சின்ன பள்ளம் போன்ற பல பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இப்பகுதியில் தங்கும் விடுதிகளும் அதிகமான அளவில் உள்ளது. இந்நிலையில் தற்பொழுது உள்ள சீசன் காலங்களிலும், சாதாரண நாட்களிலும், பள்ளி நாட்களிலும் கடும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
இதனால் பொதுமக்கள் அன்றாட பணிகளுக்கு செல்வோர் சுற்றுலாப்பயணிகள், என பலரும் குறித்த நேரத்தில் தங்கள் பணிகளுக்கு செல்ல முடியாமலும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.
இதனை தவிர்க்க இப்பகுதியில் நிரந்தரமாக போக்குவரத்து காவலர்களை நியமித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் அவல நிலையை போக்க போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது தவிர முக்கிய சுற்றுலா இடங்களில் பார்கிங் வசதி இல்லாததால் ஆங்காங்கு வாகனங்களை நிறுத்திச் செல்லும் நிலை உள்ளது. இதனை தடுக்க போக்குவரத்து காவலர்கள் உரிய முன்னேற்பாடு பணிகளை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
கொடைக்கானலில் கோடை விழா, மலர் கண்காட்சி நடக்கும் பிரையண்ட் பூங்காவில் 9 நாட்களுக்கு மட்டும் நுழைவு கட்டணம் 2 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ.75 சிறியவர்களுக்கு ரூ.35, கேமராவுக்கு ரூ.50, வீடியோ கேமராவுக்கு ரூ.100 என உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவிக்காக அழைத்து வரும் நபர் ஒருவரும் நுழைவு கட்டணம் செலுத்தாமல் இலவசமாக மலர் கண்காட்சியை பார்வையிடலாம் என தோட்டக்கலைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே பகல் பொழுதில் மிதமான வெப்பமும் மாலை மற்றும் இரவு நேரங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனை சுற்றுலா பயணிகள் இனிமையாக ரசித்து வருகின்றனர். குறிப்பாக மலை முகடுகளில் இருந்து இறங்கும் மேக கூட்டத்தின் நடுவே நின்று புகைப்படம் எடுப்பதிலும், படகு சவாரி செய்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- மலைக்கோட்டைக்கு உள்ளேயும், அதனைச் சுற்றியும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் அமைந்துள்ளன.
- மலைக்கோட்டையில் உள்ள அய்யன் குளத்தை முறையாக சுத்தம் செய்து பராமரிக்க அதிகாரிகள் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை
மதுரை:
திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த செந்தில்வேலு என்பவர் மதுரை ஐகோர்ட்டு மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதி தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் பிரபலமான சுற்றுலா தளம். மலைக்கோட்டை பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட நுழைவாயில்கள் உள்ள நிலையில், அனைத்து நுழைவாயில்களிலும் காவலர்கள் நியமிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மலைக்கோட்டைக்கு உள்ளேயும், அதனைச் சுற்றியும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் அமைந்துள்ளன. இவை மலைக்கோட்டையின் தனித்தன்மையும், பழமையும் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளன. மலைக்கோட்டையில் உள்ள அய்யன் குளத்தை முறையாக சுத்தம் செய்து பராமரிக்க அதிகாரிகள் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அக்குளம் குப்பை கூழங்கள் நிறைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது.
அதோடு திண்டுக்கல் மலைக்கோட்டை அருகே கிறித்தவ அலங்கார வளைவும் அமைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இவை தொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் மனு அளித்து எவ்வித பயனும் இல்லை. ஆகவே திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அய்யன் குளத்தை சுத்தம் செய்து தூய்மையாக பராமரிக்கவும், அப்பகுதியில் வழிபட அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும். அதோடு மலைக்கோட்டை அருகிலேயே கிறிஸ்தவ அலங்கார நுழைவு வாயில் அமைக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஸ்ரீமதி, விஜயகுமார் அமர்வு, திண்டுக்கல், மலைக்கோட்டை அருகே கிறிஸ்தவ அலங்கார நுழைவு வாயில் அமைக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலையை தொடரவும், வழக்கு தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஜூன் 18-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
- பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது.
- முக்கிய நிகழ்வாக திருக்கல்யாணம் ஜூன் மாதம் 8-ந் தேதி நடைபெறுகிறது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் வரிசையில் வைகாசி விசாகத் திருவிழாவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த வருடத்துக்கான திருவிழா ஜூன் 3-ந் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி சப்பரம், தந்தப்பல்லக்கு, தோளுக்கினியாள், தங்ககுதிரை, வெள்ளியானை, காமதேனு, ஆட்டுக்கிடா, வெள்ளிமயில், தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
முக்கிய நிகழ்வாக திருக்கல்யாணம் ஜூன் மாதம் 8-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 7 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து வைகாசி விசாகத் தேரோட்டம், மறுநாள் 9-ந் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறும்.
திருவிழா நடக்கும் 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோவிலில் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், இன்னிசை, வீணை இசை, நாட்டுப்புற பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
- காளைகளை போட்டிப்போட்டு அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
- விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொறிப்பாறைபட்டி- சங்கரன்பாறையில் முத்துமாரியம்மன், பாலமுருகன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே வீரர்கள், காளைகள் தேர்வு நடைபெற்ற நிலையில் போதிய பாதுகாப்பு வசதி செய்யப்படவில்லை என ரத்து செய்யப்பட்டது. மீண்டும் போட்டி நடத்த அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி இன்று காலை நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், தாசில்தார் ஆறுமுகம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த ஜல்லிக்கட்டில் திண்டுக்கல், திருச்சி, நத்தம், புதுக்கோட்டை, தேனி, மதுரை போன்ற மாவட்டங்களிலிருந்து 700 காளைகளும், 300 மாடுபிடிவீரர்களும் கலந்து கொண்டனர். போட்டி தொடங்குவதற்கு முன்பு வீரர்கள் அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
மேலும் காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு போட்டிக்கு அனுமதிக்கப்பட்டன. முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதை யாரும் பிடிக்கவில்லை. தொடர்ந்து வாடிவாசல் வழியாக சீறி பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடிவீரர்கள் திமிலை பிடித்து அடக்க முயன்ற போது மாடுபிடி வீரர்களுக்கு பிடியில் சிக்காமல் காளைகள் துள்ளி தாவி சென்றன.
காளைகளை போட்டிப்போட்டு அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதே போல் பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கபட்டது. கட்டில், சேர், அண்டா, டைனிங் டேபிள், பேன், வேஷ்டிகள் என பல பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டு பாதுகாப்பிற்காக டி.எஸ்.பி சிபி சாய் சவுந்தர்யன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 6 பேர் உள்பட 10 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்த 3 பேர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
போட்டியை காண திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் வந்திருந்ததால் கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது.






