என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • திண்டுக்கல் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • சிறுமலை பழையூர், அகஸ்தியார்புரம், தென்மலை உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் துணை மின்நிலையத்தில் நாளை (25-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழக்காபட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை, என்.ஜி.ஓ. காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி. காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, நாகல்புதூர், பாரதிபுரம், ரெயில் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    காந்திகிராமம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காந்திகிராம பல்கலைக்கழகம், செட்டியபட்டி, கல்லுப்பட்டி, பூத்தாம்பட்டி, சாமியார்பட்டி, தொப்பம்பட்டி, ஜாதிக்கவுண்டன்பட்டி, அமலிநகர், முருகன்பட்டி, இந்திராபுரம், பெருமாள் கோவில்பட்டி வேளாங்கன்னிபுரம், சின்னாளப்பட்டி, கிழக்கோட்டை, பூஞ்சோலை, மேட்டுப்பட்டி, அம்பாத்துரை, கலைமகள் காலனி, திருநகர், சிறுமலை பழையூர், அகஸ்தியார்புரம், தென்மலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நத்தம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி, மற்றும் ஒடுகம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.

    நத்தம்:

    நத்தம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (23-ந் தேதி) திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நத்தம், கோவில்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூர், அரவங்குறிச்சி, சமுத்திராப்பட்டி, கோட்டையூர், சிறுகுடி, பூசாரிபட்டி, பூதகுடி, பன்னியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி, மற்றும் ஒடுகம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும் என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் புண்ணியராகவன் தெரிவித்துள்ளார்.

    • வழக்கு திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • மாணவியும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அடுத்துள்ள நந்தவனப்பட்டியை சேர்ந்த சங்கர் மகன் சரவணன் (வயது 19). இவர் டாட்டு போடும் மையத்தில் வேலை பார்த்து வருகிறார். தினமும் ஷேர் ஆட்டோவில் வேலைக்கு செல்லும் போது உடன் வந்த 15 வயதுடைய பிளஸ்-1 மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.

    பின்னர் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகினார். அதன் பின்னர் கடந்த வாரம் பள்ளிக்கு வந்த மாணவியை பஸ் நிலையத்தில் வைத்து திருமணம் செய்து கொள்வதாக கடத்தி சென்றார். செம்பட்டி, மதுரை, வேளாங்கன்னி என பல்வேறு ஊர்களுக்கு மாணவியை அழைத்துச் சென்று தனி அறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    அதன் பிறகு திருச்சிக்கு அழைத்துச் சென்று தங்கி உள்ளார். இதனிடையே தனது மகளை காணாமல் பெற்றோர் திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மாணவியை சரவணன் கடத்திச் சென்றது உறுதியானது. இதனையடுத்து திருச்சிக்கு சென்ற போலீசார் அவர்கள் 2 பேரையும் திண்டுக்கல் அழைத்து வந்தனர்.

    பின்னர் இந்த வழக்கு திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துமணி, சப்-இன்ஸ்பெக்டர் வனிதா ஆகியோர் பள்ளி மாணவியை கடத்திய சரவணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் மாணவியும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். 

    • தி.மு.க.வை கொச்சைப்படுத்தும் வகையில் வாசகங்கள் இடம்பெற்றதுடன் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தும், நிர்வாகிகள் பெயர்கள் இடம் பெற்றிருந்தது.
    • போஸ்டர் ஒட்டப்பட்ட பகுதிகளுக்கு போலீசார் நேரடியாக சென்று அதனை கிழித்தனர்.

    நிலக்கோட்டை:

    தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கட்சி நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியும், பேனர்கள் வைத்தும் கொண்டாடி வருகின்றனர். மேலும் கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, வத்தலக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் த.வெ.க. சார்பில் சர்ச்சையான வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் தி.மு.க.வை கொச்சைப்படுத்தும் வகையில் வாசகங்கள் இடம்பெற்றதுடன் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தும், நிர்வாகிகள் பெயர்கள் இடம் பெற்றிருந்தது.

    இதுகுறித்து தி.மு.க. நகர செயலாளர் ஜோசப் கோவில்பிள்ளை நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சர்ச்சைக்குரிய வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டியதாக த.வெ.க. கிழக்கு மாவட்ட நிர்வாகி நல்லு மகன் ஜெயச்சந்திரன் (வயது 45) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இவ்வழக்கில் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

    இதனிடையே போஸ்டர் ஒட்டப்பட்ட பகுதிகளுக்கு போலீசார் நேரடியாக சென்று அதனை கிழித்தனர்.

    • கொட்டகை, டேபிள், சேர் மற்றும் பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்-கரூர் சாலையில் எரியோடு அ.தி.மு.க. கட்சி அலுவலகம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் முன்பாக தென்னை ஓலைகளால் வேயப்பட்ட பந்தல் போடப்பட்டிருந்தது. இன்று அதிகாலை 3.30 மணி அளவில் இங்கு வந்த மர்ம நபர்கள் பந்தலில் தீ வைத்து சென்று விட்டனர்.

    தீ கொளுந்து விட்டு எரிவதை பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். மேலும் இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை போராடி அணைத்தனர். இருந்தபோதும் அங்கிருந்த கொட்டகை, டேபிள், சேர் மற்றும் பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இது குறித்து எரியோடு அ.தி.மு.க. செயலாளர் அறிவாளி எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டனர். இதன் அருகே அரசு பள்ளி, போலீஸ் நிலையம் மற்றும் வணிக வளாகங்கள் என எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த இடத்தில் நடந்த தீ விபத்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் உதவியுடன் தீ வைத்தவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செங்குறிச்சி துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • செங்குறிச்சி, எஸ்.குரும்பபட்டி மற்றும் அதனை சார்ந்த கிராமங்களில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது.

    திணடுக்கல்:

    செங்குறிச்சி துணை மின்நிலையத்தில் நாளை (20ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் ராஜக்காபட்டி புகையிலைப்பட்டி, சிலுவத்தூர், வி.டி.பட்டி, வி.எஸ்.கோட்டை, மார்க்கம்பட்டி, வி.மேட்டுப்பட்டி, தேத்தாம்பட்டி, கம்பிளியம்பட்டி, காட்டுப்பட்டி, செங்குறிச்சி, எஸ்.குரும்பபட்டி மற்றும் அதனை சார்ந்த கிராமங்களில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

    • பாகிஸ்தானில் இருந்து வந்த ஆன்லைன் லிங்கில் அரபி கற்றுக் கொடுத்தவர்களில் சிலர் என்.ஐ.ஏ.வின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளனர்.
    • ராஜா முகமதுவின் வீட்டுக்கு வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் அவரிடம் சுமார் 1 மணி நேரம் வரை விசாரணை நடத்தினர்.

    பழனி:

    கோவையில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பு, நவம்பர் மாதத்தில் மங்களூருவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அமைப்பினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெரியகலையம்புத்தூரைச் சேர்ந்த ராஜா முகமது (வயது 35) என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மற்றும் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது ராஜா முகமதுவின் செல்போன், லேப்டாப், ஹார்டு டிஸ்குகளை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். தற்போது ராஜா முகமது பழனி பகுதியில் தேங்காய் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்த ராஜா முகமது கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைனில் டிப்ளமோ சான்றிதழுக்காக அரபி மொழி கற்றுக் கொண்டிருந்தார். இது தொடர்பாக சில புத்தகங்களை ஆன்லைனில் வாங்கியுள்ளார்.

    பாகிஸ்தானில் இருந்து வந்த ஆன்லைன் லிங்கில் அரபி கற்றுக் கொடுத்தவர்களில் சிலர் என்.ஐ.ஏ.வின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளனர். இந்நிலையில் ராஜா முகமதுவின் வீட்டுக்கு வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் அவரிடம் சுமார் 1 மணி நேரம் வரை விசாரணை நடத்தினர்.

    பின்பு அவரை பழனி டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்ததுடன் மேல் விசாரணைக்காக கோவைக்கு அழைத்துச் சென்றனர். அவர் கைது செய்யப்பட்டாரா? என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் தெரியவில்லை.

    • மிகுந்த மனவேதனையடைந்த பவித்ராவின் தாய் காளீஸ்வரி தனது பேத்திகள் 2 பேருடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
    • சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னக்குளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 65). இவரது மகள் காளீஸ்வரி (45). இவரது மகள் பவித்ரா (28).

    இவருக்கும் பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு லிக்திக்ஷா (7), தீப்திஷா (5) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பிரபாகரன் என்டர்பிரைசஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    பவித்ராவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பைனான்சியர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் வீட்டை விட்டு பைனான்சியருடன் சென்றார். அதன் பிறகு உறவினர்கள் அனைவரும் சேர்ந்து அவருக்கு அறிவுரை கூறி வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

    இந்நிலையில் பவித்ராவுக்கும் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த கொத்தனார் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வேலைக்கு வந்த கொத்தனாருடன் பேசி பழகிய பவித்ரா அதன் பிறகும் அவருடன் செல்போனில் பேசி வந்துள்ளார்.

    இந்த விபரம் கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு தெரியவரவே அவர்கள் கண்டித்துள்ளனர். 2 குழந்தைகள் உள்ள நிலையில் இது போன்ற விஷயம் ஊருக்கு தெரிய வந்தால் நமது குடும்பத்துக்கு அவமானம் என அறிவுரை கூறியுள்ளனர்.

    ஆனால் அதனையெல்லாம் கேட்காமல் கொத்தனாருடன் தொடர்ந்து பேசி வந்த பவித்ரா நேற்று திடீரென மாயமானார். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இந்த விபரம் அக்கம் பக்கத்தினருக்கு தெரிந்ததால் வீட்டில் வந்து விசாரிக்கத் தொடங்கினர். இதனால் மிகுந்த மனவேதனையடைந்த பவித்ராவின் தாய் காளீஸ்வரி தனது பேத்திகள் 2 பேருடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    இந்த விபரத்தை தனது தாய் செல்லம்மாளிடம் கூறவே நானும் உங்களுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    நேற்று இரவு தூங்கச் சென்ற போது காளீஸ்வரி மற்றும் செல்லம்மாள் ஆகியோர் தங்கள் மனதை கல்லாக்கிக் கொண்டு தூங்கிக் கொண்டு இருந்த பேத்திகள் 2 பேரையும் தூக்கில் தொங்க விட்டனர். அதன் பிறகு தாங்கள் 2 பேரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இரவில் எழுந்து பார்த்த பிரபாகரன் தனது குழந்தைகள் மற்றும் மாமியாரை தேடினார். அப்போது அவர்கள் 4 பேரும் ஒரே அறையில் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து கதறி அழுதார்.

    பின்னர் இது குறித்து இடையகோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
    • வெள்ளரிக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    பெரும்பாறை:

    அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18 ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் அய்யம்பாளையம், கோம்பை, பட்டிவீரன்பட்டி, மருதாநதி அணை, தேவரப்பன்பட்டி, சித்தரேவு, அய்யங்கோட்ட, சேவுகப்பட்டி,

    சிங்காரக்கோட்டை, செங்கட்டாம்பட்டி, போடிகாமன்வாடி, தேவரப்பன்பட்டி, கதிர்நாயக்கன்பட்டி, பெரும்பாறை, கொங்கப்பட்டி, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி, கட்டக்காடு, வெள்ளரிக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    • இன்று முதல் 120 நாட்களுக்கு முதல்போக பாசனத்திற்காக 900 கன அடி நீர் வீதம் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
    • தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் 45,041 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதாலும், பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து இன்று காலை 61.22 அடியை எட்டியது.

    அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பகுதிகளுக்கு முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் இன்று தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    அமைச்சர்கள் இ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா, தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பெரியகுளம் சரவணக்குமார், ஆண்டிபட்டி மகாராஜன், கம்பம் ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இன்று முதல் 120 நாட்களுக்கு முதல்போக பாசனத்திற்காக 900 கன அடி நீர் வீதம் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. 45 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும், மீதமுள்ள 75 நாட்களுக்கும் தண்ணீரின் இருப்பை பொறுத்து முறைநீர் பாசனம் மூலம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

    தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் 45,041 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. இதற்காக அணை திறக்கப்படும் மதகு பகுதியில் அதிகாரிகள் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டனர். மேலும் அங்கிருந்த தேன்கூடுகளை தீயணைப்பு துறையினர் மூலம் அகற்றினர். அணைக்கு 1230 கனஅடி நீர் வருகிறது. 3841 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளதால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து 2131 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 1622 கனஅடி நீர் தமிழக பகுதிக்கு திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 128.40 அடியாக உள்ளது. அணையில் 4352 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    கூடுதல் தண்ணீர் திறப்பால் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்ப் நீர் மின் உற்பத்தி நிலையத்தில் மின்உற்பத்தி 118 மெகாவாட்டில் இருந்து 144 மெகாவாட் உற்பத்தி அதிகரித்துள்ளது. 4 ஜெனரேட்டர்களில் தலா 36 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.05 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 87.08 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 45.90 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.

    வீரபாண்டி 2.2, போடி 0.8, உத்தமபாளையம் 3.4, கூடலூர் 2.4, பெரியாறு அணை 24.4, தேக்கடி 19.8, சண்முகாநதி 2.8 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது. 

    • பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சாதாரண நாட்களிலும் அதிகரித்து காணப்படுகிறது.
    • தினமும் பிற்பகல் 3 மணிமுதல் 4 மணிவரை 1 மணிநேரம் ஒதுக்கப்படும்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். முக்கிய விஷேச நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம்.

    இங்கு இலவச தரிசனம் மட்டுமின்றி ரூ.10 மற்றும் ரூ.100 கட்டண தரிசன வசதியும் உள்ளது. இவை தவிர பிரபலமானவர்கள், அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் ஆகிய பிரமுகர்களுக்கு வி.ஐ.பி. தரிசனம் எனப்படும் சிறப்பு தரிசன வசதிக்கு கோவில் நிர்வாகம் அனுமதி வழங்குகிறது. சமீப காலமாக பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சாதாரண நாட்களிலும் அதிகரித்து காணப்படுகிறது.

    இந்நிலையில் அதிக பக்தர்கள் வரும் முக்கிய கோவில்களில் பிரேக் தரிசனம் எனப்படும் இடைநிறுத்த தரிசன வசதி ஏற்படுத்தப்படும் என்று சட்டப்பேரவை கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். இதனையடுத்து பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் விரைவில் இந்த வசதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தில் விரைவாக சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தினமும் பிற்பகல் 3 மணிமுதல் 4 மணிவரை 1 மணிநேரம் ஒதுக்கப்படும். இந்த சேவை தைப்பூசம், பங்குனி உத்தரம் உள்ளிட்ட திருவிழாக்கள் நடைபெறும் 10 நாட்கள், மாத கார்த்திகை, தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு உள்பட முக்கிய விஷேசங்கள் வரும் 44 நாட்கள் செயல்படுத்தப்படமாட்டாது.

    இந்த தரிசன சேவைக்கு பக்தர் ஒருவருக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படும்.

    பிரேக் தரிசன சேவையை பயன்படுத்தும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பஞ்சாமிர்த டப்பா, தேங்காய், பழம், விபூதி, மஞ்சள் பை அடங்கிய தொகுப்பு பிரசாதமாக வழங்கப்படும். இந்த தரிசன வசதி குறித்து பக்தர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை அல்லது ஆலோசனைகள் இருந்தால் எழுத்துப்பூர்வமாக வருகிற 29ம் தேதிக்குள் பழனி தேவஸ்தான அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ கோவில் நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம்.

    • கடந்த 6 முறை ஆட்சிக்கு வந்துள்ளோம். 7 வது முறையும் தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வருவார்.
    • தமிழகத்தில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறப்போகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணைகளை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    கேள்வி : தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் கூறியதற்கு?

    பதில் : திட்டங்கள் அத்தனையும் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சட்டமன்றத்தில் ஒவ்வொரு துறையிலும் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சண்முகம் இதை கூறினாரா? என்று எனக்குத் தெரியவில்லை. அவர் கூட்டணியில் அதிக இடங்கள் வேண்டும் என கூறியுள்ளார். அது அவரின் உரிமை. 7 ஆண்டு காலமாக ஒரு தூசி கூடப்படாமல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணியை பார்த்து வருகிறார்.

    இந்தியாவில் வலதுசாரிகள் ஒரு பக்கமும் இடதுசாரிகள் ஒரு பக்கமும் உள்ளனர். தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையில் ஜனநாயக கூட்டணி மிக சிறப்பாக உள்ளது. மக்களுக்கான கூட்டணி இது. எந்த பிரச்சனையும் இல்லை. எந்த திட்டங்கள் எனக்கூறினால் அதனையும் நிறைவேற்றித் தர எங்களது முதல்வர் தயாராக உள்ளார்.

    கேள்வி : தி.மு.க. கூட்டணியில் இருந்து முக்கிய கட்சிகள் விலக உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியது பற்றி?

    பதில் : அது பகல் கனவு. யாரும் போக மாட்டார்கள். கண்கள் தெரியும் போதே தண்ணீர் இல்லாத பாறை கிணற்றில் எப்படி விழுவார்கள். தண்ணீர் இருந்தால் குதிக்கலாம். தண்ணீர் இல்லாமல் எப்படி குதிக்க முடியும்.

    இந்தியாவில் தலைசிறந்த அரசாக தலைசிறந்த மாநிலமாக தலை சிறந்த முதலமைச்சராக தமிழ்நாட்டில் திட்டங்கள் வளர்ச்சியிலிருந்து எல்லோரிடத்திலும் முதன்மையான அரசாங்கம் எல்லாத்துறைகளும் உயர்ந்துள்ளது.

    அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 100க்கு 100 சதவீதம் வந்துள்ளது என்றால் படிப்பதற்கு ஆர்வமாக வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் போகாத பள்ளிக்கூடங்களிலும் மாணவர்கள் நிரம்பி வழிகின்றனர். கல்லூரிக்கு சென்றால் பணம், பள்ளிகளில் காலை உணவு, மதிய உணவு உள்ளது. படிப்பதற்கு இலவசம், கல்லூரி வரை இலவசம் எல்லாமே இலவசம். ஆனால் இதனை இலவசம் என கூற மாட்டேன். கட்டணமில்லா கல்வி பெறுவதற்கு முதலமைச்சர் வலியுறுத்தி வருகிறார்.

    கேள்வி : ஆட்சி, அதிகாரத்தில் பங்கு குறித்து?

    பதில் : ஆட்சியில் யாரும் இதுவரை பங்கு கேட்டது இல்லை. கடந்த 6 முறை ஆட்சிக்கு வந்துள்ளோம். 7 வது முறையும் தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வருவார்.

    தமிழகத்தில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறப்போகிறது.

    கேள்வி : கூட்டணி கட்சிகள் அதிக இடங்கள் கேட்பது குறித்து?

    பதில் : நான் சாப்பிட வேண்டும் என்றால் எனக்கு மூன்று புரோட்டாக்கள் வைத்தால் சாப்பிட முடியாது. 2 அல்லது 3 இட்லிகள் தான் சாப்பிட முடியும். அவரவர் தகுதிக்கு ஏற்றாற் போல் கடந்த காலங்களில் எந்தெந்த இயக்கங்களுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதோ அந்த அடிப்படையில் முதலமைச்சர் முடிவு செய்து வழங்குவார். எந்தக் கூட்டணியும் எங்களை விட்டு போகாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×