என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • தி.மு.க.வினரே இந்த ஆட்சியின் மீது கடும் அதிர்ச்சியுடன் இருந்து வருகிறார்கள்.
    • அ.தி.மு.க.வை போன்று தி.மு.க. பலமான கட்சி கிடையாது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் அந்தக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி 4 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது. இந்த ஆட்சியில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ஆட்சி மாற்றத்திற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.

    தி.மு.க.வினரே இந்த ஆட்சியின் மீது கடும் அதிர்ச்சியுடன் இருந்து வருகிறார்கள். அ.தி.மு.க.வை போன்று தி.மு.க. பலமான கட்சி கிடையாது.

    எனவே வருகிற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமரும். அடுத்த ஒரு வருடம் சுறு சுறுப்புடன் நம்பிக்கையோடு பணியாற்றுங்கள்.

    பூத் கமிட்டி நிர்வாகிகள் திறம்பட செயல்பட்டு அ.தி.மு.க.வின் வெற்றிக்காக பாடுபட வேண்டும். விளையாட்டு அணி உட்பட அனைத்து அணிகளை சேர்ந்தவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நிச்சயம் நாம் வெற்றி பெற முடியும்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கு தயாராகிவிட்டார்கள்.

    வருகிற தேர்தலில் நிச்சயம் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

    எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் புதிய ஆட்சி அமையும்.

    இவ்வாறு நத்தம் விஸ்வநாதன் பேசினார்.

    • பணம் இருந்தால் வெற்றி பெற்று விடலாம் என நினைக்கின்றனர்.
    • திருமாவளவன் ஒரு நாளைக்கு ஒரு நிலைப்பாடு எடுப்பவர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசியதாவது:-

    தமிழக மக்கள் மனதில் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். எனவே அ.தி.மு.க.வுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. எனவே நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்ற வேண்டும். உங்களால் சரியாக உழைக்க முடியவில்லை என்றால் ஒதுங்கிக் கொள்ளுங்கள். உழைப்பவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும். வீடுதோறும் நிர்வாகிகள் சென்று அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். குறிப்பாக இளைஞர்களை கட்சியில் இணைக்க முயல வேண்டும். விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி, போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும் என்றார்.

    அதன் பின் நத்தம் இரா.விசுவநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க.வுக்கு தமிழகத்தில் 10 சதவீத வாக்கு வங்கி கூட கிடையாது. கூட்டணி மற்றும் சிறுபான்மையினரின் ஆதரவை வைத்துக் கொண்டு தங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என கூறி வருகின்றனர். விஜய் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறுவரா? என்பதை தற்போது கூற இயலாது. அரசியல் களத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.

    தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்பதை வைத்து தமிழகத்தில் எதிர்கட்சிகள் பல்வேறு அரசியல் செய்து வருகின்றனர். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் அனைத்து கட்சிகளும் கூட்டணியில் இடம்பெறும். வருகிற தேர்தலிலும் இந்த கூட்டணிதான் மகத்தான வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்பார்.

    பணம் இருந்தால் வெற்றி பெற்று விடலாம் என நினைக்கின்றனர். அப்படி இருந்தால் டாடா பிர்லா போன்ற தொழிலதிபர்கள் பணத்தை வாரி இறைத்து வெற்றி பெற்று இருக்கலாம். திருமாவளவன் ஒரு நாளைக்கு ஒரு நிலைப்பாடு எடுப்பவர். அவர் கூறுவதையெல்லாம் ஏற்க முடியாது. அ.தி.மு.க. கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த சிலர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அது ஒரு போதும் நடக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களின் வருகையால் இங்குள்ள இளைஞர்களின் வேலை வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
    • திரைப்படங்களில் நடிகைகளுடன் டூயட் பாடிவிட்டு பின்னர் அரசியலில் புகுந்து முதலமைச்சர் ஆகிவிடலாம் என சிலர் கனவு காண்கின்றனர்.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் நடந்த தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில், அக்கட்சியின் தலைமைக்குழு உறுப்பினரும், வீரப்பனின் மனைவியுமான முத்துலட்சுமி கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    எனது கணவர் வீரப்பன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தமிழக அரசு மணிமண்டபம் கட்டித்தர வேண்டும். இதற்காக அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களை சந்தித்து மனு அளிக்க உள்ளேன். தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களின் வருகையால் இங்குள்ள இளைஞர்களின் வேலை வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. குறைந்த சம்பளத்திற்கு வடமாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி உள்ளூர் வாலிபர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

    திரைப்படங்களில் நடிகைகளுடன் டூயட் பாடிவிட்டு பின்னர் அரசியலில் புகுந்து முதலமைச்சர் ஆகிவிடலாம் என சிலர் கனவு காண்கின்றனர். இதுபோன்ற நபர்களிடம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பா.ஜ.க. பல்வேறு மாநிலங்களில் சிறு சிறு கட்சிகளை அழித்து அவற்றை தன்னுடன் இணைத்துக் கொண்டது போல தமிழகத்திலும் கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்தி வருகிறது. அந்த கட்சியுடன் கூட்டணி சேரும் கட்சிகளுக்கு எதிர்காலம் இருக்காது என்பதை உணர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரரின் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தன.
    • சேப்பாக், திருப்பூர், திண்டுக்கல், திருச்சி அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரரின் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

    லீக் சுற்றுகள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.

    திருப்பூர் தமிழன்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வி என 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

    திண்டுக்கல் டிராகன் அணி விளையாடிய 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் நீடிக்கின்றது.

    திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில், நாளை நடைபெறும் குவாலிபையர் 1 சுற்றில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்துள்ள சேப்பாக்கம், திருப்பூர் அணிகள் மோதுகின்றன.

    நாளை மறுதினம் நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் 3வது மற்றும் 4வது இடம்பிடித்த திண்டுக்கல் மற்றும் திருச்சி அணிகள் மோத உள்ளன.

    குவாலிபையர் 1 சுற்றில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விடும். இதில் தோல்வி அடைந்த அணி குவாலிபையர் 2 சுற்றில், எலிமினேட்டரில் வென்ற அணியுடன் மோதும்.

    குவாலிபையர் 2 சுற்றில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இறுதிப்போட்டி ஜூன் 6ம்தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் பேட் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவரில் 150 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய திருச்சி அணி 151 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    திண்டுக்கல்:

    9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற கடைசி மற்றும் 28-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது.

    விமல் குமார் 55 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். ஷிவம் சிங் 37, ஹனி சைனி 21 ரன்கள் எடுத்தனர்.

    திருச்சி அணி சார்பில் அதிசயராஜ் டேவிட்சன், சரவணகுமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் திருச்சி கிராண்ட் சோழாஸ் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். 24 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    5வது விக்கெட்டுக்கு கவுசிக், சஞ்சய் யாதவ் ஜோடி 98 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு துணை நின்றது. கவுசிக் 42 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய சஞ்சய் யாதவ் அரை சதம் கடந்தார்.

    இறுதியில், திருச்சி அணி 19.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து வென்றதுடன் 4வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.

    • திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
    • பூம்பாறையில் டாக்டர்கள், செவிலியர்கள் குடியிருப்பு கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நேற்று திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சி.டி. ஸ்கேன், டிஜிட்டல் ஸ்கேனர் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    இந்த நிலையில் கொடைக்கானலில் 11 புதிய கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களையும் திறந்து வைத்தார். முன்னதாக பூம்பாறை மலைக்கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த கள பணியாளர்களை பாராட்டி தேனீர் விருந்து அளித்தார்.

    அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    தமிழகத்தில் 8713 துணை சுகாதார நிலையங்களிலும், 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், ஆஸ்பிரின், கிளோபிடோக்ரல், அட்ரோவாஸ்டாட்டின் ஆகிய 3 மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பூம்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜூன் மாதத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாய்கடி, பாம்பு கடிக்கு மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் குணமடைந்தவர்களை தொடர்பு கொண்டு பேசி வருகின்றேன். அனைவரும் நன்றாக இருக்கின்றனர். பூம்பாறையில் டாக்டர்கள், செவிலியர்கள் குடியிருப்பு கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது.

    முதலமைச்சர் வழிகாட்டுதல்படி ரூ.87 லட்சம் மதிப்பில் தங்கும் விடுதி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் 3 செவிலியர்கள் தங்கும் விடுதி, 2 மருத்துவர்கள் குடியிருப்பு ஆகியவை அடங்கும் என தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய கோவை அணி 203 ரன்களைக் குவித்தது.
    • அடுத்து ஆடிய சேலம் 135 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது.

    திண்டுக்கல்:

    நடப்பு டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 4வது கட்ட போட்டிகள் திண்டுக்கல்லில் நடைபெறுகிறது.

    இந்நிலையில், இன்றைய 26-வது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேலம் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக ஆட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    அதன்படி, முதலில் ஆடிய கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 203 ரன்களைக் குவித்தது. பாலசுப்ரமணியம் சச்சின் அபாரமாக ஆடி சதமடித்து 116 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய ஷாருக் கான் 14 பந்தில் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது. அபிஷேக் 32 ரன்னும், லோகேஷ்வர் 29 ரன்னும், நிதிஷ் ராஜகோபால் 22 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். தேவ் ராகுல் 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், சேலம் அணி 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 68 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றி பெற்றது.

    கோவை அணி சார்பில் வித்யுத் 5 விக்கெட்டும், திவாகர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    நடப்பு டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் முதல் மூன்று கட்ட லீக் போட்டிகள் கோவை, சேலம், நெல்லையில் நடந்து முடிந்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (12 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (8 புள்ளி), நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் (8 புள்ளி) ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

    இந்நிலையில், கடைசி சுற்று போட்டிகள் திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கிறது.

    இன்றைய 26-வது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேலம் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக ஆட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    அதன்படி, கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சித்தார்த் டக் அவுட்டானார். சுரேஷ் லோகேஷ்வர் 3 ரன்னில் வெளியேறினார். விஷால் வைத்யா 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    பாலசுப்ரமணியம் சச்சின் அபாரமாக ஆடி சதமடித்து 116 ரன்னில் அவுட்டானார்.

    ஆட்டத்தின் 18வது ஓவரில் ஷாருக் கான் ஹாட்ரிக் சிக்சர் உள்பட 28 ரன்கள் எடுத்தார். அவர் 14 பந்தில் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 203 ரன்களைக் குவித்தது.

    இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்குகிறது.

    • காலை உணவு திட்டத்திற்காக 2 பெண் ஊழியர்கள் சிலிண்டர் அடுப்பை பற்ற வைத்துள்ளனர்.
    • பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்ததால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து ஓடினர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் பாலப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    4 ஆசிரியர் ஆசிரியைகள் உள்ளனர். 2 பள்ளி கட்டிடங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கட்டிடத்தின் அருகிலேயே சமையல் கூடம் கட்டப்பட்டுள்ளது. அங்கு இன்று காலை உணவு திட்டத்திற்காக 2 பெண் ஊழியர்கள் சிலிண்டர் அடுப்பை பற்ற வைத்துள்ளனர். அப்போது கியாஸ் கசிவின் காரணமாக திடீரென தீப்பற்றியது. இதனையடுத்து பணியாளர்கள் இருவரும் தப்பி வெளியே ஓடி வந்தனர்.

    அருகிலேயே பள்ளிக்கு வந்த 2 குழந்தைகள் மட்டும் இருந்தனர். அவர்களையும் அழைத்துக் கொண்டு தூரமாகச் சென்று விட்டனர். தீ பிடித்த சிறிது நேரத்தில் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் சமையலறை கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து சுக்கு நூறானது. மேலும் கட்டிடங்கள் முழுவதும் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    பள்ளிக்கு மாணவ-மாணவிகள் வருவதற்கு முன்பாகவே இந்த விபத்து நடைபெற்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்ததால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து ஓடினர். தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தி அணைத்தனர். மேலும் குழந்தைகளுக்கு மாற்று இடத்தில் உணவு சமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆபத்தான நிலையில் இருந்த கட்டிடம் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

    • சிறுமி வயிற்றில் சேப்டி பின் இருப்பதை பார்த்த டாக்டர்கள் அதனை அகற்ற 3 முறை முயற்சித்தும் முடியவில்லை.
    • சிறுமிக்கு மலக்குடல் வழியாக ரத்தம் வெளியேறியது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லை சேர்ந்த 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் தவறுதலாக ஊக்கு எனப்படும் சேப்டி பின்னை விழுங்கி விட்டார். அதன் பிறகு சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டு சரியாக உணவு உட்கொள்ள முடியாத நிலை உருவானது.

    அவரை அங்குள்ள ஆஸ்பத்திரியில் பெற்றோர்கள் சேர்த்தனர். பரிசோதனைக்குப் பிறகு வயிற்றில் சேப்டி பின் இருப்பதை பார்த்த டாக்டர்கள் அதனை அகற்ற 3 முறை முயற்சித்தும் முடியவில்லை. இந்நிலையில் சேப்டி பின்னில் வாய் திறந்த நிலையில் குடலுக்குள் இருப்பதால் அதனை அகற்ற முடியாது என டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சொந்த ஊர் திரும்பினர்.

    அதன் பிறகு சிறுமிக்கு மலக்குடல் வழியாக ரத்தம் வெளியேறியது. இதனால் பெற்றோர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தங்கள் மகளை சிகிச்சைக்காக சேர்த்தனர். அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் குடல் உள்நோக்கி (எண்டோஸ்கோபி) மூலம் சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்து சேப்டி பின்னை அகற்றினர்.

    தற்போது சிறுமி இயல்பு நிலைக்கு திரும்பியதால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்து டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். இதேபோல தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளும் அறுவை சிகிச்சை போல அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களும் சாதித்து காட்டியதால் அவர்களுக்கு டீன் சுகந்தி ராஜகுமாரி, கண்காணிப்பாளர் வீரமணி ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.

    • ஆனந்தகுமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
    • ஆனந்தகுமார் கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை தலைவராக இருப்பவர் ஆனந்தகுமார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    அன்பு அண்ணன், மக்கள் தளபதி விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என அவர் பதிவிட்டிருந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனிடையே ஆனந்தகுமாரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

    கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை தலைவர் ஆனந்தகுமார் கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அவருடன் கட்சியினர் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, தேனி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
    • வைகை ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    திண்டுக்கல்:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்குகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே வைகை அணையில் ஓரளவு தண்ணீர் இருந்தது.

    தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் முன்கூட்டியே தொடங்கியது. இதைத்தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, தேனி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி, மூல வைகை ஆறு, கொட்டக்குடி ஆறு உள்ளிட்ட ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர் மழை பெய்தது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. மேலும் அணையின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்தது. தற்போது அணையின் 64 அடியாக உள்ளது.

    இதற்கிடையே வைகை அணையில் இருந்து ஏற்கனவே மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்காக வினாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் வைகை அணையின் பூர்வீக பாசன பகுதியாக உள்ள ராமநாதபுரம் மாவட்ட தேவைக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து வைகை அணையில் போதுமான அளவு நீர் இருப்பு உள்ளதால் ராமநாதபுரம் பூர்வீக பாசன பகுதிகளுக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, இன்று (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி வரை 7 நாட்களில், மொத்தம் 1,251 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. அதாவது அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் வைகை ஆற்றுப்படுகை வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது. ஏற்கனவே வினாடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட கலெக்டர்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் முன்எச்சரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அதில், வைகை ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆற்றில் இறங்கவோ, ஆற்றை கடக்கவோ கூடாது என்று முன்எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×