என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திண்டுக்கல்லில் சிறுமியின் குடலில் சிக்கிய 'சேப்டி பின்' அகற்றம்
- சிறுமி வயிற்றில் சேப்டி பின் இருப்பதை பார்த்த டாக்டர்கள் அதனை அகற்ற 3 முறை முயற்சித்தும் முடியவில்லை.
- சிறுமிக்கு மலக்குடல் வழியாக ரத்தம் வெளியேறியது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லை சேர்ந்த 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் தவறுதலாக ஊக்கு எனப்படும் சேப்டி பின்னை விழுங்கி விட்டார். அதன் பிறகு சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டு சரியாக உணவு உட்கொள்ள முடியாத நிலை உருவானது.
அவரை அங்குள்ள ஆஸ்பத்திரியில் பெற்றோர்கள் சேர்த்தனர். பரிசோதனைக்குப் பிறகு வயிற்றில் சேப்டி பின் இருப்பதை பார்த்த டாக்டர்கள் அதனை அகற்ற 3 முறை முயற்சித்தும் முடியவில்லை. இந்நிலையில் சேப்டி பின்னில் வாய் திறந்த நிலையில் குடலுக்குள் இருப்பதால் அதனை அகற்ற முடியாது என டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சொந்த ஊர் திரும்பினர்.
அதன் பிறகு சிறுமிக்கு மலக்குடல் வழியாக ரத்தம் வெளியேறியது. இதனால் பெற்றோர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தங்கள் மகளை சிகிச்சைக்காக சேர்த்தனர். அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் குடல் உள்நோக்கி (எண்டோஸ்கோபி) மூலம் சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்து சேப்டி பின்னை அகற்றினர்.
தற்போது சிறுமி இயல்பு நிலைக்கு திரும்பியதால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்து டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். இதேபோல தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளும் அறுவை சிகிச்சை போல அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களும் சாதித்து காட்டியதால் அவர்களுக்கு டீன் சுகந்தி ராஜகுமாரி, கண்காணிப்பாளர் வீரமணி ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.






