என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கொடைக்கானலில் கோடை கொண்டாட்டம்- பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
- கொடைக்கானலில் நாயுடுபுரம் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் இடமாகும்.
- கடந்த சில நாட்களாகவே பகல் பொழுதில் மிதமான வெப்பமும் மாலை மற்றும் இரவு நேரங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடை விழா மற்றும் 62-வது மலர் கண்காட்சி நாளை மறுநாள் (24-ந் தேதி) தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கோடை கொண்டாட்டம் என்ற பெயரில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இசை நாற்காலி போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து ரோஜா பூங்காவில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், பொய்க்கால்குதிரை நடனம், புலியாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம் நடைபெற்றது. இலை தழைகளை கட்டிக் கொண்டு மலைவாழ்பெண்கள் நடனமாடிய பாரம்பரிய இசை நிகழ்ச்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
கலைக்குழுவினருடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் நடனமாடி மகிழ்ந்தனர். மேலும் மகிழ்ச்சி ஆரம்பம் என்ற பெயரில் கோடை விழாவை முன்னிட்டு தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
விளையாட்டு போட்டிகள், படகு அலங்கார போட்டிகள், அலங்கார அணிவகுப்பு, நாய்கள் கண்காட்சி உள்ளிட்டவையும் நடைபெற உள்ளது. கோடை விழாவுக்கு முன்னதாகவே சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து குவிய தொடங்கியுள்ளனர்.
கொடைக்கானலில் நாயுடுபுரம் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் இடமாகும். இந்த வழியாகத்தான் வில்பட்டி, பள்ளங்கி, கோம்பை மற்றும் பாக்கியபுரம், பெரும்பள்ளம், சின்ன பள்ளம் போன்ற பல பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இப்பகுதியில் தங்கும் விடுதிகளும் அதிகமான அளவில் உள்ளது. இந்நிலையில் தற்பொழுது உள்ள சீசன் காலங்களிலும், சாதாரண நாட்களிலும், பள்ளி நாட்களிலும் கடும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
இதனால் பொதுமக்கள் அன்றாட பணிகளுக்கு செல்வோர் சுற்றுலாப்பயணிகள், என பலரும் குறித்த நேரத்தில் தங்கள் பணிகளுக்கு செல்ல முடியாமலும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.
இதனை தவிர்க்க இப்பகுதியில் நிரந்தரமாக போக்குவரத்து காவலர்களை நியமித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் அவல நிலையை போக்க போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது தவிர முக்கிய சுற்றுலா இடங்களில் பார்கிங் வசதி இல்லாததால் ஆங்காங்கு வாகனங்களை நிறுத்திச் செல்லும் நிலை உள்ளது. இதனை தடுக்க போக்குவரத்து காவலர்கள் உரிய முன்னேற்பாடு பணிகளை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
கொடைக்கானலில் கோடை விழா, மலர் கண்காட்சி நடக்கும் பிரையண்ட் பூங்காவில் 9 நாட்களுக்கு மட்டும் நுழைவு கட்டணம் 2 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ.75 சிறியவர்களுக்கு ரூ.35, கேமராவுக்கு ரூ.50, வீடியோ கேமராவுக்கு ரூ.100 என உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவிக்காக அழைத்து வரும் நபர் ஒருவரும் நுழைவு கட்டணம் செலுத்தாமல் இலவசமாக மலர் கண்காட்சியை பார்வையிடலாம் என தோட்டக்கலைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே பகல் பொழுதில் மிதமான வெப்பமும் மாலை மற்றும் இரவு நேரங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனை சுற்றுலா பயணிகள் இனிமையாக ரசித்து வருகின்றனர். குறிப்பாக மலை முகடுகளில் இருந்து இறங்கும் மேக கூட்டத்தின் நடுவே நின்று புகைப்படம் எடுப்பதிலும், படகு சவாரி செய்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.






