என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வைகோவுக்கு எம்.பி. பதவி வழங்காததால் வருத்தம் உள்ளது - துரை வைகோ
- வைகோவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்காததால் தொண்டர்கள், நிர்வாகிகள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர்.
- ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கையெழுத்து போட்டுள்ளனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் ம.தி.மு.க. நிர்வாகி இல்ல திருமணத்தில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைவைகோ எம்.பி. கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வைகோவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்காததால் தொண்டர்கள், நிர்வாகிகள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர். அவர் அவையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து மக்கள் மன்றத்தில் தனது பணியை செய்வார் என்பதில் ஐயமில்லை.
மாநிலங்களவை உறுப்பினர் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் எங்களால் கலந்து கொள்ள முடியவில்லை. நான் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டதாலும் வைகோ கோவையில் வேறு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாலும் அங்கு செல்ல முடியவில்லை.
ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கையெழுத்து போட்டுள்ளனர். மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்காததால் மன வேதனை இருந்தாலும் அனைத்தையும் கடந்து செல்வோம். 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






