என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தேனி, திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஆரஞ்ச் அலர்ட்: கொடைக்கானலுக்கு பேரிடர் மீட்பு குழுவினர் வருகை
- இன்று தேனி, திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- பருவமழை எச்சரிக்கையையொட்டி பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவினர் கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.
கொடைக்கானல்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கி விட்டது. இதனைத் தொடர்ந்து அரபிக்கடலில் உருவான புயல் சின்னம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும் என தென் மண்டல ஆராய்ச்சி மையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களிலும் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி, திண்டுக்கல் மாவட்டத்திலும் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கொடைக்கானலில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மேலும் இன்று தேனி, திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சியையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்திருந்தனர். இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அவர்கள் அவசர அவசரமாக தங்களது சொந்த வாகனங்கள், அரசு பஸ்களில் ஊருக்கு கிளம்பிச் செல்ல தொடங்கினர். இதனால் மதியத்துக்கு பின்னர் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தே காணப்பட்டது.
இந்த நிலையில் பருவமழை எச்சரிக்கையையொட்டி பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவினர் கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அவர்கள் ஆய்வு செய்தனர்.
கொடைக்கானல் ரோஜா பூங்கா 12, பிரையண்ட் பூங்கா 7, பழனி 2, வேடசந்தூர் தாலுகா அலுவலகம் 2.6, புகையிலை ஆராய்ச்சி நிலையம் 2.6, சத்திரப்பட்டி 3, காமாட்சிபுரம் 2.7 என மாவட்டம் முழுவதும் 31.90 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.






