என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பெங்களூர் சென்று திரும்பிய வேடசந்தூர் வாலிபருக்கு கொரோனா
- பல்வேறு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது.
- திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
வேடசந்தூர்:
உலகையே உலுக்கிய கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் பல்வேறு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது வரை 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதற்கான தீவிரம் இன்னும் தொடங்காத நிலையில் சுகாதாரத்துறை சார்பில் எவ்வித அச்சமும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.
வேடசந்தூர் ரெங்கநாதபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 32 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி நிமித்தமாக பெங்களூர் சென்று சொந்த ஊருக்கு வந்தார்.
தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடையாததால் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதித்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை வேடசந்தூர் அரசு தலைமை மருத்துவர் டாக்டர் லோகநாதன் உறுதி செய்தார்.
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வலையுடன் கூடிய 8 படுக்கைகள் கொண்ட வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை இங்கு கொரோனா தொற்றுடையவர்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வார்டில் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






