என் மலர்tooltip icon

    கடலூர்

    பாராளுமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று கடலூரில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார். #dinakaran #parliamentelection

    கடலூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து மக்கள் சந்திப்பு பயணத்தை நடத்தி வருகிறார். நேற்று மாலை அவர் கடலூர் உழவர் சந்தை, ரெட்டிச்சாவடி, குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி போன்ற பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தார்.

    பொதுமக்கள் மத்தியில் திறந்த ஜீப்பில் நின்றபடி டி.டி.வி. தினகரன் பேசினார்.

    வருகிற ஏப்ரல் மாதம் இறுதியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிந்தவுடன் தமிழகத்தில் உள்ள 21 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிறது. பாராளுமன்ற தேர்தல் வர இருக்கும் சமயத்தில் இன்று கூட்டணி என்ற நாடகம் கடந்த ஒரு வாரமாக நடப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள்.

    தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறை செலுத்துவதை விட எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் அமைச்சர் பொறுப்பை வாங்கி தங்கள் நிலையை பாதுகாத்து கொள்ள தங்களை பலப்படுத்திக் கொள்ள ஒரு கூட்டணியை அ.தி.மு.க. அமைத்து உள்ளது.

    தமிழகத்தை வஞ்சிக்கிற மத்திய பாரதீய ஜனதா கட்சியும், தமிழக மக்களால் வெறுக்கப்பட்டு உள்ள ஆளுங்கட்சியும், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு குற்றவாளி என்றும் தற்போது உயிரோடு இருந்திருந்தால் அவர் சிறைச்சாலையில் இருந்து இருப்பார் என்றும் தவறாக பேசியவர்களும் கூட்டணி வைத்துள்ளார்கள்.

    காவிரி டெல்டா பகுதியில் விவசாயிகளை பாதிக்கும் வகையில் மக்களை அச்சுறுத்தும் திட்டமான மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவைகளுக்கு அனுமதி தந்தது காங்கிரஸ் ஆட்சி. இதனை அனுமதித்தது தி.மு.க. ஆட்சி. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் இந்த திட்டத்துக்கு அனுமதி அளித்து தொடங்கி வைத்தார். ஆனால் ஜெயலலிதா இந்த திட்டத்தை வராமல் மக்கள் நலன் கருதி தடுத்தார்.

    ஆனால் ஜெயலலிதா பெயரை சொல்லி ஆட்சி நடத்துபவர்கள் மத்திய அரசுக்கு பணிந்து விட்டனர். தமிழகத்தில் பா.ஜ.க.வின் கிளை கட்சியாக அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது.

    தற்போது தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி 2 முறை வந்து விட்டார். ஆனால் கஜா புயல் தாக்கியபோது மக்கள் பாதிக்கப்பட்டபோது வராதவர்கள் தற்போது வாக்குகளுக்காக வருகிறார்கள். அவர்களை நீங்கள் முறியடிக்க வேண்டும்.

    ஜெயலலிதா இருக்கும்போது கடலூர் பாராளுமன்ற தொகுதி உள்பட 37 தொகுதியில் வேட்பாளர்களை வெற்றி பெற செய்தீர்கள். அதுபோல 95 சதவீதம் தொண்டர்களை வைத்திருக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. குக்கர் சின்னத்தில்தான் போட்டியிடும். எத்தனை சதி நடந்தாலும் உச்சநீதிமன்றம் சென்று இந்த சின்னத்தை பெறுவோம். இளைஞர்களும், மக்களும் எங்களுடன் இருப்பதால் வேறு கூட்டணி தேவையில்லை.

    வரும் தேர்தலில் பிரதமரை நிர்ணயம் செய்பவர்கள் தமிழக மக்களாகத் தான் இருப்பார்கள். அப்படியொரு வாய்ப்பினை அ.ம.மு.க.வினருக்கு பொதுமக்கள் வழங்க வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார். #dinakaran #parliamentelection

    கடலூர் அருகே மகன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் தூக்குபோட்டு தற்கொலை கொண்டார்.

    கடலூர்:

    கடலூரை அடுத்த காரைக்காடு அங்காளம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் காத்தவராயன்(வயது 45) தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி(40). இவர்களது மகன் விக்னேஷ்(20). இவர் கடலூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

    இன்று காலை தனது தாய் ராஜலட்சுமியிடம் கல்லூரியில் தேர்வு எழுத பணம் கட்டவேண்டியுள்ளது. பணம் தருமாறு கேட்டுள்ளார். உடனே ராஜலட்சுமி ஏ.டி.எம்.கார்டை கொடுத்து அருகில் உள்ள ஏ.டி.எம்.மையத்துக்கு சென்று பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு கூறினார்.

    ஏ.டி.எம்.கார்டை பெற்றுக்கொண்ட விக்னேஷ் அங்குள்ள ஏ.டி.எம்.மையத்துக்கு சென்று பணம் எடுக்க முயன்றார். ஆனால் ஏ.டி.எம்.மில் பணம் ஏதும் வரவில்லை. உடனே வீட்டுக்கு வந்து தனது தாயிடம் ஏ.டி.எம்.கார்டு மூலம் வரவில்லை என்று கூறினார்.

    அப்போது ராஜலட்சுமி வங்கி கணக்கில் ரூ.4 ஆயிரத்து 500 உள்ளது. ஏன்? பணம் வரவில்லை என்றார்.

    இதைத்தொடர்ந்து அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு விக்னேஷ் வீட்டை விட்டு வெளியே சென்றார். கேப்பர் குவாரி ரெயில்நிலையம் அருகே இன்று காலை 8.40 மணியளவில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்தவழியாக மன்னார்குடியில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. உடனே விக்னேஷ் ரெயில் முன் பாய்ந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    விக்னேஷ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி முழுவதும் காட்டு தீ போல் பரவியது. இந்த தகவல் அவரது தாய் ராஜலட்சுமிக்கும் தெரியவந்தது.

    மகன் ரெயில் முன் பாய்ந்து இறந்த தகவல் அறிந்ததும் அவர் கதறி அழுது துடித்தார். பின்னர் மனவேதனை அடைந்து வீட்டுக்குள் சென்றார். அங்கு அவர் தூக்குபோட்டு தற்கொலை கொண்டார்.

    இந்த தகவல் அறிந்ததும் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய ராஜலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அதேபோல ரெயிலில் அடிப்பட்டு இறந்த மாணவர் விக்னேஷ் உடலை கடலூர் ரெயில்வே போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பாலிடெக்னிக் மாணவர் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து அவரது தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    நெல்லிக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் வங்கி ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    நெல்லிக்குப்பம்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த சித்தரசூர் சேர்ந்தவர் சதீஷ் குமார் (வயது 29). தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் கடலூர் நோக்கி காராமணிக்குப்பம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சாலையில் விபத்து ஏற்படாமல் இருக்க தடுப்பு கம்பி போலீசார் வைத்திருந்தனர். அதனை கடக்கும்போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் சதீஷ்குமார் தூக்கி வீசப்பட்டு சாலையில் வைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பியில் மோதி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இதில் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இத்தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த சதீஷ்குமார் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

    இந்த விபத்து காரணமாக கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மக்கள் நீதிமய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் டெல்லியில் எங்கள் கட்சியின் தேசிய தலைவர்களை சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து பேசினார் என்று கே பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். #kbalakrishnan #kamal #marxistcommunist

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 2 தினங்களில் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். தமிழக பிரச்சனைக்காக பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் தற்போது அதே பா.ஜ.கவுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது.

    பிரதமர் நரேந்திரமோடி குஜராத்தில் ரூ.3 ஆயிரம் கோடியில் படேல் சிலையை திறந்து வைத்தார். ஆனால் தமிழகத்தில் கஜா புயல் பாதிப்புக்கு ரூ.300 கோடி மட்டுமே நிதி வழங்கியுள்ளார். தமிழக நலனுக்கு எதிராக செயல்படும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது.

    இந்த கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடையும். ஜெயலலிதா தற்போது உயிருடன் இருந்திருந்தால் பா.ஜ.க., பா.ம.க.வுடன் கூட்டணி வைத்திருக்கமாட்டார்.


    மக்கள் நீதிமய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் டெல்லியில் எங்கள் கட்சியின் தேசிய தலைவர்களை சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து பேசியுள்ளார். அதற்கு தமிழகத்தில் தி.மு.க.வுடன் இணைந்து வலுவான கூட்டணி அமைப்பது என முடிவு செய்துள்ளதால், தங்களுடன் கூட்டணி குறித்து பேச வாய்ப்பில்லை. நட்புடன் இருப்போம் என்று எங்களது கட்சித்தலைவர்கள் அவருக்கு பதில் அளித்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலுடன் 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை நடத்த வேண்டும். அப்படி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட தொகுதிப் பங்கீடு கோரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #kbalakrishnan #kamal #marxistcommunist

    அதிமுக- பாமக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று நெய்வேலியில் டிடிவி தினகரன் எம்எல்ஏ பேசினார். #dinakaran #pmk #admk

    நெய்வேலி:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலை 2-வது நாளாக மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டார்.

    குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சத்திரத்தில் இருந்து அவர் தனது பயணத்தை தொடங்கினார். முத்தாண்டிகுப்பம் கடைவீதி, நெய்வேலி புதுநகர் மெயின் பஜார், வடலூர் ஆகிய இடங்களுக்கு சென்றார். அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்றபடி பேசினார்.

    அ.தி.மு.க. கூட்டணியில் பாரதீய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ளது. பா.ம.க. இணைந்தது கேள்விக்குறியான செய்தியாக உள்ளது. பா.ம.க. இனிமேல் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம் என கூறியிருந்தனர். ஆனால் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது.


    அ.தி.மு.க. தலைமையிலான இந்த கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியாகும். இந்த கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அ.தி.மு.க. அரசு மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டது. மக்கள் நம்பிக்கையை இழந்த இந்த அரசை இனிமேலும் தொடரவிடக்கூடாது. எனவே மக்கள் பொறுத்திருந்தது போதும்.

    எனவே உங்களுடைய பொன்னான வாக்குகளை அளித்து எங்களை வெற்றி பெற செய்யவேண்டும். தமிழர்கள் தான் இனிமேல் பாராளுமன்றத்தில் தலைநிமிர்ந்து நிற்கவேண்டும். பாரத பிரதமரை தேர்ந்தெடுக்கும் முழு உரிமை தமிழர்களுக்கு மட்டுமே தரக்கூடிய எங்கள் அணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

    நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு மக்கள் என்னிடம் பலகுறைகளை கூறினார்கள். அதில் மிக முக்கியமாக நடந்து முடிந்த ஊதிய மாற்று ஒப்பந்தம் மூலம் நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்களுக்கு தரவேண்டிய புதிய ஊதியத்தை காலம் தாழ்த்தி வருவது தெரியவந்தது.

    இதில் மத்திய நிலக்கரி துறை மந்திரி உடனடியாக கவன ஈர்ப்பு கொண்டு வந்து தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய புதிய ஊதிய மாற்று ஒப்பந்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

    மேலும் வீடு, நிலம் இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும்

    ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #dinakaran #pmk #admk

    பண்ருட்டியில் அரசு பள்ளி மாணவன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லூர் புதுகாலனியை சேர்ந்தவர் சண்முகம்(57) இவரது மகன் ரோஸ்பாண்டியன்(வயது 15). இவர் இதே பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்தநிலையில் ரோஸ்பாண்டியன் திடீரென பூச்சிமருந்து குடித்தார். அவரை ஆபத்தான நிலையில் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர். ஆனால் உடலை பரிசோதித்த டாக்டர்கள் ரோஸ்பாண்டியன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த பள்ளியில் இதற்கு முன்பு குறிப்பிட்ட ஒரு ஆசிரியரின் வகுப்பறையில் 2 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த சம்பவம் இங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்மந்தப்பட்ட ஆசிரியரை பணி மாற்றம் செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    பண்ருட்டியில் ஓட்டல் அதிபரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த அம்மாபேட்டை மெயின்ரோட்டை சேர்ந்தவர் அருணாசலம்(வயது 55). இவரது மகன் பிரகதீஸ்வரன்(20). இவர் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகின்றார். நேற்று மாலை 4 மணியளவில் பிரகதீஸ்வரன் ஒட்டலில் இருக்கும் போது நத்தம் கிராமத்தை சேர்ந்த திருவேங்கடம்(42) என்பவர் பிரகதீஸ்வரினிடம் டிபன் கேட்டார். அதற்கு டிபன் இல்லை என அவர் கூறினார்.

    இதன் காரணமாக திருவேங்கடம் பிரகதீஸ்வரனை அசிங்கமாக திட்டி, தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த பிரகதீஸ்வரன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் அருணாசலம் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிந்து திருவேங்கடத்தை கைது செய்தனர். #tamilnews
    மாற்றுத்திறனாளிகளை சித்தரித்து அரசியல் கட்சி தலைவர்கள் பேசுவதை கண்டித்து கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் லட்சிய முன்னேற்ற சங்கம் சார்பில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கடலூர்:

    மாற்றுத்திறனாளிகளை சித்தரித்து அரசியல் கட்சி தலைவர்கள் பேசுவதை கண்டித்து கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் லட்சிய முன்னேற்ற சங்கம் சார்பில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் சந்தோஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சண்முகம், மாவட்ட பொருளாளர் தட்சிணா மூர்த்தி, பண்ருட்டி தலைவர் தனுஷ் பத்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் விருத்தாச்சலம் தலைவர் அமரேசன், மாவட்ட மகளிரணி தலைவர் சித்ரா, நிர்வாகிகள் பாலமுருகன், கொளஞ்சிநாதன், மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    விருத்தாசலம் அருகே நண்பனின் காதலியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கடலூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா பெரியகோட்டிமூளை பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(வயது 26). இவரது நண்பர் விஜயேந்திரன். இவருக்கு 16 வயதில் காதலி ஒருவர் உள்ளார்.

    கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி வாலிபர் சத்தியமூர்த்தி தனது நண்பனின் காதலியிடம் விஜயேந்திரன் கோவையில் வி‌ஷம் குடித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவரை பார்க்க வரும்படி அழைத்தார்.

    அதற்கு அந்த இளம்பெண் மறுத்து விட்டார். உடனே சத்தியமூர்த்தி வராவிட்டால் போலீஸ் வழக்கு பதிவாகிவிடும் என மிரட்டினார். இதனைத்தொடர்ந்து அந்த இளம்பெண் சத்தியமூர்த்தியுடன் கோவைக்கு சென்றார். அங்கு சென்றதும் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் வேறு ஒரு இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    மேலும் அவரை திருப்பூருக்கு அழைத்து சென்று அங்கு வைத்து ஒரு வாரம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையே இளம்பெண்ணின் பெற்றோர் தன் மகளை காணவில்லை என சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் ஸ்ரீமுஷ்ணம் பஸ்நிலையத்தில் சத்தியமூர்த்தி அந்த இளம்பெண்ணுடன் பஸ்சில் வந்து இறங்கினார். உடனே அங்கு நின்ற போலீசார் சத்தியமூர்த்தியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை கடலூர் மகிளா நீதீமன்றத்தில் நடந்து வந்தது.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படும் என்று நீதிபதி லிங்கேஸ்வரன் அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை வழக்கு விசாரணை தொடங்கியது. சத்தியமூர்த்தியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நண்பனின் காதலியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சத்தியமூர்த்திக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி லிங்கேஸ்வரன் உத்தரவிட்டார்.

    இந்தவழக்கில் அரசு சார்பில் வக்கீல் செல்வபிரியா ஆஜராகி வாதாடினார்.
    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் கிளீனர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    வேப்பூர்:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 45). இவர் நேற்று இரவு வாடிபட்டியில் இருந்து குடிநீர் கொண்டு செல்லும் டிராக்டரை சென்னையை நோக்கி ஓட்டி சென்றார்.

    அந்த டிராக்டரில் மதுரை ராமலிங்கபுரத்தை சேர்ந்த கணேசன் (39) என்பவர் கிளீனராக இருந்தார்.

    இவர்கள் வந்த டிராக்டர் இன்று காலை 5.30 மணிக்கு கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுநெசலூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது அந்த வழியாக சிமெண்ட் பாரம் ஏற்றிய லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரி எதிர்பாராதவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதியது. இதில் டிராக்டரில் இருந்த கணசேன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவர் டிராக்டரின் பின்புற சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    அதன் பின்னர் டிராக்டர் தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிராக்டர் டிரைவர் சந்திரன் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இது குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லிக்குப்பத்தில் டிரைவர்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லிக்குப்பம்:

    நெல்லிக்குப்பத்தில் தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. தற்போது சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், பண்ருட்டி, மருதாடு உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள்,

    டிராக்டர்கள், மாட்டு வண்டி மூலமாக கரும்புகளை ஏற்றிக் கொண்டு வருவார்கள். பின்னர் தனியார் ஆலையின் யார்டில் 1 முதல் 3 நாட்கள் தங்கி இருந்து கரும்புகளை இறக்கி வைத்து விட்டு செல்வார்கள்.

    இந்த நிலையில் வாகனங்களில் வரக்கூடிய டிரைவர்கள் யார்டில் இரவு நேரங்களில் தூங்குவார்கள். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென்று ஒரு கும்பல் பயங்கர ஆயுதத்துடன் யார்டில் புகுந்தனர். பின்னர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த டிரைவர்களை 20-க்கும் மேற்பட்டவர்களை சரமாரியாக பயங்கர ஆயுதங்களால் தாக்கினார்கள். அப்போது டிரைவர்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வெளியில் ஓடினார்கள்.

    இருந்த போதிலும் அந்த கும்பல் அவர்களை தொடர்ந்து சரமாரியாக தாக்கினார்கள். இதில் மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்த டிரைவர் ஒருவர் மண்டை உடைந்து பலத்த காயமடைந்தார். இதனை தொடர்ந்து அந்த கும்பலை மடக்கி பிடிக்க முயன்றபோது அவர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர். பின்னர் காயமடைந்த டிரைவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை அங்கு இருந்த 200க்கும் மேற்பட்ட டிரைவர்களும் தனியார் ஆலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது டிரைவர்கள் கூறுகையில், ஒரு கும்பல் எந்தவித காரணமுமின்றி பயங்கர ஆயுதங்களுடன் எங்களை தாக்கினார். அப்போது அந்த கும்பலை நாங்கள் பிடிக்க சென்று அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் ஒரு டிரைவர் பலத்த காயமடைந்து உள்ளார். ஆகையால் தாக்குதலில் ஈடுபட்ட அந்த கும்பலை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடை பெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்கள்.

    இதனை தொடர்ந்து நெல்லிக் குப்பம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்களுடன் ஆலை நிர்வாகம் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அந்த நபர்களை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தமிழக கவர்னர் சட்டத்தை மதித்து பேரறிவாளன் உள்பட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார். #Arputhammal
    கடலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளவன் உள்பட 7 பேர் சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தமிழக கவர்னரிடம் மனு கொடுத்தார். ஆனால், இதுவரை அதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

    இந்த நிலையில் அற்புதம்மாள் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று 7 பேரின் விடுதலை குறித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

    அதன்படி நேற்று கடலூருக்கு வந்த அற்புதம்மாள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தின் கோப்பு கவர்னருக்கு அனுப்பி வைத்து 6 மாதங்கள் ஆகியும் கவர்னர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய அரசு உறுதியாக உள்ளது. ஆனால், கவர்னர் முட்டுக்கட்டையாக உள்ளார்.

    இது தொடர்பாக ஏற்கனவே கவர்னரை சந்தித்து வலியுறுத்திய நிலையில் மீண்டும் அவரை சந்திக்க சட்டத்தில் இடமில்லையாம். எனவே மக்களை சந்திக்க முடிவெடுத்து இதுவரை 16 மாவட்டங்களில் மக்களை சந்தித்துள்ளேன். எனது 71 வயதிலும் சட்டத்தின் வழிகாட்டுதலின்படியே போராட்டம் நடத்தி வருகிறேன்.

    அடுத்த மாதம் (மார்ச்) 9-ந் தேதி சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், புதுவை ஆகிய இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது. தமிழக கவர்னர் சட்டத்தை மதித்து பேரறிவாளன் உள்பட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

    மும்பை குண்டு வெடிப்பில் 254 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் கைதான பிரபல நடிகர் 5 ஆண்டுகளில் வெளியே வந்தார். சி.பி.ஐ. விசாரித்த அந்த வழக்கில் அந்த மாநில கவர்னரே அவரை விடுதலை செய்தார்.

    ஆனால், தமிழகத்துக்கு மட்டும் வேறு ஒரு சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. எனவே பேரறிவாளன் உள்பட 7 பேரின் சட்டப் படியான விடுதலையை எதிர்நோக்கியுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Arputhammal

    ×