search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லிக்குப்பத்தில் டிரைவர்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல் - ஒருவர் காயம்
    X

    நெல்லிக்குப்பத்தில் டிரைவர்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல் - ஒருவர் காயம்

    நெல்லிக்குப்பத்தில் டிரைவர்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லிக்குப்பம்:

    நெல்லிக்குப்பத்தில் தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. தற்போது சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், பண்ருட்டி, மருதாடு உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள்,

    டிராக்டர்கள், மாட்டு வண்டி மூலமாக கரும்புகளை ஏற்றிக் கொண்டு வருவார்கள். பின்னர் தனியார் ஆலையின் யார்டில் 1 முதல் 3 நாட்கள் தங்கி இருந்து கரும்புகளை இறக்கி வைத்து விட்டு செல்வார்கள்.

    இந்த நிலையில் வாகனங்களில் வரக்கூடிய டிரைவர்கள் யார்டில் இரவு நேரங்களில் தூங்குவார்கள். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென்று ஒரு கும்பல் பயங்கர ஆயுதத்துடன் யார்டில் புகுந்தனர். பின்னர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த டிரைவர்களை 20-க்கும் மேற்பட்டவர்களை சரமாரியாக பயங்கர ஆயுதங்களால் தாக்கினார்கள். அப்போது டிரைவர்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வெளியில் ஓடினார்கள்.

    இருந்த போதிலும் அந்த கும்பல் அவர்களை தொடர்ந்து சரமாரியாக தாக்கினார்கள். இதில் மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்த டிரைவர் ஒருவர் மண்டை உடைந்து பலத்த காயமடைந்தார். இதனை தொடர்ந்து அந்த கும்பலை மடக்கி பிடிக்க முயன்றபோது அவர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர். பின்னர் காயமடைந்த டிரைவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை அங்கு இருந்த 200க்கும் மேற்பட்ட டிரைவர்களும் தனியார் ஆலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது டிரைவர்கள் கூறுகையில், ஒரு கும்பல் எந்தவித காரணமுமின்றி பயங்கர ஆயுதங்களுடன் எங்களை தாக்கினார். அப்போது அந்த கும்பலை நாங்கள் பிடிக்க சென்று அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் ஒரு டிரைவர் பலத்த காயமடைந்து உள்ளார். ஆகையால் தாக்குதலில் ஈடுபட்ட அந்த கும்பலை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடை பெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்கள்.

    இதனை தொடர்ந்து நெல்லிக் குப்பம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்களுடன் ஆலை நிர்வாகம் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அந்த நபர்களை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×