என் மலர்
கடலூர்
தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்தது. தமிழகம் முழுவதும் வாகனங்களில் பணம் கடத்தப்படுவதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட 9 சட்டசபை தொகுதிக்கும் தனித்தனியாக பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
திட்டக்குடி அருகே எழுத்தூரில் இன்று அதிகாலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும்படையை சேர்ந்த முகமதுஅசேன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் ஆகியோர் அந்த வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்னை நோக்கி கார் ஒன்று வேகமாக வந்தது. உடனே பறக்கும் படையினர் அந்த காரை வழிமறித்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த காருக்குள் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம் 11 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் இருந்தது. உடனே காரை ஓட்டி வந்த ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் திருச்சி அருகே சிறுகனூரில் பிளாஸ்டிக் டேங்க் கம்பெனி நடத்தி வருவதாகவும், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு பணத்தை எடுத்து செல்வதாகவும் கூறினார். ஆனால், அந்த பணம் எடுத்து செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை திட்டக்குடி தாசில்தார் புகழேந்தியிடம் ஒப்படைத்தனர். அதனை அவர் திட்டக்குடி அரசு கருவூலகத்தில் ஒப்படைத்தார்.
வடலூர், மார்ச்.11-
தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் வடலூரில் நடைபெற் றது.
கட்சி தலைவர் வேல்முருகன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இருப்பினும் செல்போன் மூலமாக அவர் பேசியது, கூட்டத்தில் ஒலிபரப்பப்பட்டது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-
உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் என்னால் கூட்டத்திற்கு வர முடியவில்லை. விரைவில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன். பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்து போட்டியிடும். ஒரு சீட்டுக்காக யாரிடமும் விலை போக மாட்டேன். தொடர்ந்து தமிழர்களின் வாழ்வுக்காகவும், உரிமைக்காகவும் குரல் கொடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறி னார். பின்னர் கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் தேர்தல் கமிட்டி தலைவர் ஜம்புலிங்கம், அமைப்பு செயலாளர் சின்னதுரை, மாநில இளைஞரணி அமைப்பாளர் ஜெரோன்குமார், நகர செயலாளர் அய்யப்பன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த ஊ.மங்கலம் எலுமிச்சை காலனியை சேர்ந்தவர் அபிமன்யூ (வயது 20). இவரது நண்பர் அம்பேத்கார் (21).
இவர்கள் 2 பேரும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை மிரட்டி செல்போனில் ஆபாசமாக படம் பிடித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். உடனே சிறுமியின் தாய் ஊ.மங்கலம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் அபிமன்யூ, அம்பேத்கார் ஆகிய 2 பேர் மீதும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து அபிமன்யூவை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அம்பேத்காரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கடலூர் மாவட்டம் புவனகிரியில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் உடைந்த மேஜை நாற்காலிகள் மற்றும் பயன்படாத பொருட்களை பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு அறையில் பூட்டி வைத்திருந்தனர்.
தற்போது இந்த பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 பொது தேர்வு நடந்து வருகிறது. புவனகிரியை சுற்றியுள்ள தனியார் பள்ளி மாணவர்களும் இந்த பள்ளியில் தான் தேர்வு எழுதுகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு அந்த அறையில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக சிதம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கும், பள்ளி தலைமை ஆசிரியருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ பற்றி எரிந்த அறையில் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் அந்த அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமடைந்தது. இதுகுறித்து புவனகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் பள்ளி அறைக்கு மர்ம மனிதர்கள் யாரும் தீ வைத்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீ பற்றி எரிந்த பள்ளி அறையின் அருகில்தான் பள்ளியின் அலுவலக அறை உள்ளது. அதில் தற்போது பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு தாள்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த அறைக்கு தீ பரவுதற்கு முன் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் தேர்வு தாள்கள் தப்பின.
திருச்சியிலிருந்து 45 பயணிகளை ஏற்றிக் கொண்டு இன்று காலை அரசு பஸ் ஒன்று கடலூர் நோக்கி புறப்பட்டது.
அந்த பஸ் இன்று மதியம் 11.20 மணியளவில் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் கிழக்கு வால்பட்டறை பஸ்நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் முதியவர் ஒருவர் திடீரென சாலையை கடக்க முயன்றார்.
அந்த முதியவர் மீது பஸ் மோதாமல் இருக்க அரசு பஸ் டிரைவர் பஸ்சை திருப்பினார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதியது. அப்போது டிரான்பார்மரிலிருந்து தீப்பொறிகள் விழுந்தன.
இந்த விபத்தில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது.
இதில் அதிர்ச்சி அடைந்த பயணிகள் பஸ்சில் இருந்து அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கினர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அரசு பஸ் மோதியதால் டிரான்ஸ்பார்மர் சேதமடைந்தது. இதனால் அந்த பகுதியில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. டிரான்ஸ்பார்மரை சீரமைக்கும் பணியில் மின்சார ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் கீழமாளிகை கிராமத்தை சேர்ந்தவர் ராசக்கண்ணு(55), விவசாயி. இவர் நேற்று தனது தம்பி ஜெயவேலுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் மதகளிர்மாணிக்கத்தில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். திட்டக்குடி-விருத்தாசலம் சாலையில் பெண்ணாடம் அடுத்த பெரியகொசப்பள்ளம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, பெண்ணாடத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், ராசக்கண்ணு, ஜெயவேல் ஆகியோர் சென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன.
இதில் ராசக் கண்ணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜெயவேல், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த வெண்கரும்பூர் கிராமத்தை சேர்ந்த கலைமணி(35), திருமலை அகரத்தை சேர்ந்த மலைச்செல்வன்(49) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்களை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விபத்தில் பலியான ராசக்கண்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயமடைந்த மலைச்செல்வன் நெய்வாசல் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொது தீட்சிதர்கள் சார்பில் கின்னஸ் சாதனைக்காக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று காலை முதலே தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் பல்வேறு மாநிலங்கள், மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்க மாணவ-மாணவிகள் மற்றும் கலைஞர்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தனர்.
பின்பு சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம், 4 வெளிப்புற பிரகாரங்களிலும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி காலை 8 மணிக்கு தொடங்கி 8.45 மணிவரை நடைபெற்றது. இதில் 7 ஆயிரத்து 195 நாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியை நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் முருகேசன் வாழ்த்தி பேசினார். கின்னஸ் உலக சாதனை பதிவு அதிகாரி இங்கிலாந்தை சேர்ந்த ரிஷிநாத் கலந்து கொண்டு உலக சாதனையில் இதனை பதிவு செய்தார்.
இதற்கு முன்பு சென்னை வேல்டெக் வளாகத்தில் 4 ஆயிரத்து 500 பேர் கலந்து கொண்ட நாட்டியாஞ்சலி நடத்தப்பட்டது. தற்போது அதனை முறியடித்து 7 ஆயிரத்து 195 நாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளனர்.
கின்னஸ் சாதனைக்காக நடத்தப்பட்ட இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர். இதையொட்டி போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நெய்வேலி:
நெய்வேலி புதுநகர் 21-வது வட்டத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு சூப்பர் வைசராக வடக்குவெள்ளூர் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
நேற்று இரவு 9 மணியளவில் வெங்கடேசன் கடையில் பணியில் இருந்தார். அப்போது கொள்ளிருப்பு பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 35) என்பவர் மது குடிக்க வந்தார்.
அங்கிருந்த வெங்கடேசனிடம், தனக்கு இலவசமாக மது கொடுக்கும்படி கேட்டார். அதற்கு வெங்கடேசன் மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து வெங்கடேசன் நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடை சூப்பர்வைசருக்கு கொலை மிரட்டல் விடுத்த சுரேசை கைது செய்தார்.
கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். விவசாயி. இவரது மகன் மகேந்திரன் (வயது 12).
இவன் புவனகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று மாலை புவனகிரி அருகே உள்ள மேலமணக்குடி தபால் நிலையம் அருகே மகேந்திரன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான்.
அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி மகேந்திரனின் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மகேந்திரன் பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மகேந்திரனை மீட்டு புவனகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே மகேந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து புவனகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடலூர் கிழக்கு மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறார். நேற்று மாலை 4-வது நாளாக நெல்லிக்குப்பம் பகுதியில் மக்களை சந்தித்து பேசினார்.
முன்னதாக அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு திரண்டிருந்த மக்கள் முன்பு டி.டி.வி. தினகரன் பேசியதாவது:-
இன்று இரட்டை இலை சின்னம் எனக்கு மறுக்கப்பட்டு உள்ளது. இரட்டை இலை சின்னத்தில் தேர்தலில் நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் இல்லை. இது உங்களுக்கு தெரியும். இதற்கு காரணம் துரோகிகள் கையில் சிக்கிய சின்னமாக அது உள்ளது. இதனால்தான் ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை மக்களே தோற்கடித்தார்கள். குக்கர் சின்னம் வெற்றி பெற்றது.
இதனை விட பெரிய அங்கீகாரம் நமக்கு தேவையில்லை. நீதிமன்றத்தில் நான் குக்கர் சின்னம் மட்டுமே கேட்டேன். இதற்கு காரணம் குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்று நாம் இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் தான் போராடி வருகிறோம்.
தமிழகம் மற்றும் புதுவையில் வேறு யாருக்கும் குக்கர் சின்னம் கொடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்து நமது உரிமையை மீட்டு எடுப்போம். மேலும் ஆர்.கே. நகர் தேர்தலில் குறித்த நேரத்தில் நான் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். இதனால் குக்கர் சின்னம் நமக்கு வழங்க வேண்டும். நாம் உச்சநீதிமன்றத்தில் கண்டிப்பாக குக்கர் சின்னத்தை பெறுவோம். தமிழகம் முழுவதும் குக்கர் சின்னம் பட்டிதொட்டியெல்லாம் தெரிந்து வெற்றி சின்னமாக உள்ளது.
சின்னம் ஒரு பிரச்சனை இல்லை. ஏனென்றால் பழக்கப்பட்ட சின்னத்தில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றால் ஆர்கேநகர் தேர்தலில் 70 ஆண்டு உள்ள உதயசூரியன் சின்னம் டெபாசிட் இழந்தது. இரட்டை இலை சின்னம் அந்த தொகுதியில் இரண்டு முறை ஜெயலலிதாவை வெற்றி பெற செய்தது. இது மக்களுக்கு தெரியாதா? அதனால்தான் சின்னம் என்பது முக்கியமல்ல அது யாரிடம் உள்ளது என்பதுதான் முக்கியம்.
ஆகையால் குக்கர் சின்னம் 100 சதவீதம் எங்களுக்கு கிடைக்கும். உச்சநீதிமன்றம் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஒருவேளை எங்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்றாலும் 40 தொகுதியிலும் 40 சின்னத்தில் நின்றாலும் கண்டிப்பாக மக்கள் தெரிந்து கொண்டு வெற்றி பெற செய்வார்கள்.
மக்களை பற்றி கவலைப்படாமல் கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க.வுக்கு நீங்கள் தக்க பாடம் கற்பிக்க வேண்டும்.
தமிழகம் தலை நிமிரவும், மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி மலரவும் இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு குக்கர் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #AMMK #TTVDhinakaran
பா.ம.க.பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் கடலூருக்கு வருகை தந்தார்.

கே: அ.தி.மு.க.வுடன் நீங்கள் கூட்டணி வைத்தது குறித்து டி.டி.வி. தினகரன் விமர்சித்து பேசி வருகிறாரே?
ப: நான் ஒன்றும் கருத்து சொல்ல விரும்பவில்லை.
கே: அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி பற்றி உங்கள் கருத்து என்ன?
ப: தற்போது அமைத்துள்ள கூட்டணி இயற்கையான கூட்டணி. வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெறும்.
கே: அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததையடுத்து பா.ம.க. மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறதே?
ப: அரசியலில் பல்வேறு விமர்சனங்கள் வரும். அதனை எதிர்கொள்பவன் தான் அரசியல்வாதி. விமர்சனங்களை எதிர்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார். #PMK #Ramadoss #ADMKAlliance






