என் மலர்
கடலூர்
கடலூர் மோகினி பாலத்தில் இருந்து மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை வரைக்கும் சாலையின் இருபுறமும் வடிகால் வசதியுடன் சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் சாலையின் குறுக்கே உள்ள சிறு பாலங்களை அகற்றிவிட்டு அகலமான பாலம் அமைக்கப்படுகிறது. ஆனால் இந்த பணிகள் அரைகுறையான நிலையில் மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக இம்பீரியல் சாலையில் இடை இடையே பள்ளம் தோண்டப்பட்டு சில இடங்களில் வடிகால்கள் அமைத்தும், சில இடங்களில் உள்ள பள்ளங்கள் குப்பை சேகரிப்பு கிடங்காகவும், கழிவுநீர் சேகரிப்பு நிலையமாகவும் இருப்பதை காண முடிகிறது. மேலும் வடிகாலுக்காக பள்ளம் தோண்டப்பட்ட இடங்களில் பள்ளம் இருப்பதை வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கும் வகையில் பள்ளத்தை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அல்லது பிரதிபலிப்பான்கள் அமைக்க வேண்டும் என்பது சாலை பாதுகாப்பு விதிமுறை ஆகும். ஆனால் இந்த பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாததால் அவ்வப்போது சிறு விபத்துகள் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று காலை சிதம்பரம் மார்க்கத்தில் இருந்து கடலூர் நோக்கி கார் ஒன்று வந்துகொண்டிருந்தது. முல்லை கோ-ஆப்டெக்ஸ் சிக்னலை கடந்து வந்தபோது அங்குள்ள ஒரு கடை அருகே காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு டிரைவர் டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் காரை அங்கிருந்து அப்புறப்படுத்தும்படி வாகன ஓட்டிகள் வற்புறுத்தினர். இதையடுத்து டிரைவர் அந்த காரை நகர்த்தி டீ கடையின் அருகில் ஓரமாக நிறுத்த முயன்றார். அப்போது எதிர்பாரத விதமாக சாலையோர வடிகால் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுபற்றிய தகவல் அறிந்து கடலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாண்டை ராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு பள்ளத்தில் கவிழ்ந்த கார் அப்புறப்படுத்தப்பட்டது.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனுக்கு பண்ருட்டி பகுதி தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்தல் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் மேற்பார்வையில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், பாக்கியலட்சுமி, பால சுப்பிரமணியன் மற்றும் போலீசார் பண்ருட்டி பகுதியில் மணல் கடத்தல் தடுப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புலவனூரில் இருந்து மாட்டுவண்டிகளில் மணல் அள்ளி வந்தவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து மாட்டுவண்டிகளை ஓட்டி வந்த தட்டாம்பாளையத்தை சேர்ந்த சிவராமன்(வயது 35), தட்சிணாமூர்த்தி(52), சந்திரவேல்(39) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் மேல்குமாரமங்கலம் தென்பெண்ணையாற்றங்கரை அருகே மாட்டுவண்டிகளில் மணல் கடத்தி வந்த மேல்குமாரமங்கலத்தை சேர்ந்த பொன்மன்னன்(40), அம்பிகாபதி(27), லோகநாதன்(27), காசிநாதன்(37), அழகுநாதன்(45), ராமமூர்த்தி(40), கிருஷ்ணமூர்த்தி(53), லட்சுமணன்(48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இவர்களிடம் இருந்து 11 மாட்டுவண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்ததை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதி அமலில் உள்ளது.
இதன் காரணமாக கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் தலைமையில் 27 பறக்கும் படை குழுவும், 27 தேர்தல் விதிமுறைகள் கண்காணிப்பு குழுக்கள், 9 வீடியோ கிராபர்கள் மற்றும் போலீசார் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி பணமோ, நகையோ அல்லது பொருட்களை எடுத்துச் சென்றால் அதற்கான உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே எடுத்துச் செல்லும் நபர்களிடம் ஒப்படைக்கப்படும்.
உரிய ஆவணம் செலுத்தாவிட்டால் அவர்கள் முறைப்படி ஆவணங்கள் காண்பித்து அதன் பிறகு தங்கள் பணமோ அல்லது பொருட்களை வாங்கி செல்லலாம்.
இந்த நிலையில் கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பச்சையாங்குப்பம் என்ற பகுதியில் தாசில்தார் சிவா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனையிட்டனர்.
காரில் இருந்த பணத்தை பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது 4 லட்ச ரூபாய் இருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த பணத்தை எடுத்து வந்த நபர் யார்? என்று விசாரணை செய்தனர். அவர் கடலூர் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் பாலமுருகனின் தம்பி முருகன் என்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், காட்டுமன்னார்கோவிலில் இருந்து கடலூருக்கு வந்தாகவும், இந்த பணம் காண்டிராக்ட் தொழிலுக்கு கொண்டு செல்வதாகவும் கூறினார். ஆனால் இதற்கான ஆவணங்கள் எதுவும் அவர் காண்பிக்கவில்லை. மேலும் இதனை தொடர்ந்து இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி பணம் மற்றும் பரிசு பொருட்களை கடத்துவதை தடுக்க பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். கடலூர் மாவட்டத்திலும் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் விடிய, விடிய அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த முத்தாண்டிக்குப்பம்- காட்டுக்கூடலூர் பகுதியில் பறக்கும் படை தாசில்தார் ஜெயக்குமார் (வயது 43) தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் (56) மற்றும் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் ஜீப்பில் ஏறி பண்ருட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் வந்த ஜீப் காடாம்புலியூர் தாமரைகுளம் அருகே நள்ளிரவு 1.30 மணி அளவில் வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி முன்னால் சென்று கொண்டிருந்த பறக்கும் படை அதிகாரி ஜீப் மீது மோதியது.
இதில் ஜீப்பின் பின்பகுதி நொறுங்கி சேதமடைந்தது. அதில் பயணம் செய்த தாசில்தார் ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல், ஏட்டுகள் சரவணன், ஆனந்தபாபு, போட்டோ கிராபர் சார்லஸ் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் காயம் அடைந்த 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சக்திநகர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் மோசின் (வயது 14). இவன் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்தநிலையில் நேற்று இரவு அப்துல்மோசின் அவரது உறவினர் பாலமுருகன் (28) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் விருத்தாசலத்தில் இருந்து வடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது நெய்வேலி அருகே உள்ள ஊ.மங்கலம் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பாலமுருகன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அப்துல்மோசின் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். பாலமுருகன் படுகாயம் அடைந்தார்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாலமுருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஊ.மங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெய்ஹிந்த்தேவி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விருத்தாசலம்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி பணம் மற்றும் பரிசு பொருட்களை கடத்தப்படுவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று காலை கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த பறக்கும் படை அதிகாரிகள் சிறுபாக்கம் பகுதியில் வாகனசோதனை நடத்திக்கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. அதில் 2 பேர் இருந்தனர். பறக்கும் படை அதிகாரிகள் அந்த மோட்டார்சைக்கிளை வழிமறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த காட்டுக்கொட்டகை பகுதியை சேர்ந்த முருகேசன்(50), செந்தில் குமார்(50) என்பது தெரிந்தது.
முருகேசன் வைத்திருந்த பையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. மொத்தம் ரூ.4 லட்சத்து 27 ஆயிரத்து 350 இருந்தது. இதுகுறித்து அதிகாரிகள் அவர்களிடம் கேட்டபோது, மரவள்ளி கிழங்கு வெட்டிய விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பணம் என்று கூறினர்.
இந்த பணத்தை எடுத்து செல்ல அவர்களிடம் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை. இதனால் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கள்ளக்குறிச்சியில் இருந்து நெய்வேலியை நோக்கி கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த காரையும் சிறுபாக்கம் அருகே பறக்கும் படையினர் வழிமறித்தனர். அந்த காரில் விழுப்புரம் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா செயலாளர் மகேந்திரன்(33), ரம்யா(35) ஆகியோர் இருந்தனர்.
பின்னர் ரம்யா வைத்திருந்த பையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரூ.90 ஆயிரம் இருந்தது. இந்த பணத்தை எடுத்து செல்ல அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. இதனைத்தொடர்ந்து இந்த பணத்தையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.
பறக்கும் படையினர் தொடர்ந்து அந்த பகுதியில் வாகனசோதனை நடத்தி வருகின்றனர். #tamilnews
பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்த கும்பலை கைது செய்யக் கோரி கடலூரில் சி.ஐ.டி.யூ., வாலிபர் சங்கம், மாதர் சங்கம்-மாணவர் சங்கம், விவசாயிகள் சங்கம் சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நகர செயலாளர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார்.
சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் கருப்பையா, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாதவன், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் சுப்புராயன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் தேன்மொழி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் அமர்நாத், அனைத்து குடியிருப்பு கூட்டமைப்பின் மாவட்ட பொதுசெயலாளர் மருதவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #PollachiCase
கடலூர்:
காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பயங்ரவாதிகள் தாக்குதலில் 40-க் கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ராணுவத்தினர் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் அதிநவீன பாதுகாப்பு ரோந்து கப்பல் சென்னையிலிருந்து புறப்பட்டு இன்று கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் கடற்கரைக்கு வந்தது. அதில் கடற்படை வீரர்கள் 5 பேர் இருந்தனர். கடலூர் கடலோர பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சங்கீதா, சப்- இன்ஸ்பெக்டர் சிவகுரு நாதன் மற்றும் போலீசார் அவர்களை வரவேற்றனர். இந்த கப்பலை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
கடலூருக்கு வந்த இந்த கப்பல் தண்ணீரிலும் மற்றும் தரையிலும் செல்லக் கூடியது ஆகும். இந்த கப்பல் மூலம் கடற்கரை மற்றும் கடற்கரை ஓரமாகவும் சென்னை உள்ளிட்ட பல்வேறு கடற்கரைப் பகுதியில் கடற்படை வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர்:
பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதையடுத்து பொது இடங்களில் உள்ள சுவர் விளம்பரங்களை அழிக்கும்பணி, கொடிக்கம்பங்களை அகற்றும் பணி நடைபெற்றது.
கடலூர் பெருநகராட்சியில் நகரசபை ஆணையர்(பொறுப்பு) டாக்டர் அரவிந்த்ஜோதி தலைமையில் நகராட்சி ஊழியர்கள் கடலூர் புதுப்பாளையம், ஆல்பேட்டை, கடலூர் முதுநகர், பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அகற்றினர். சில அரசியல் கட்சியினர் தாங்களாவே முன்வந்து கட்சி கொடிக்கம்பங்களை அப்புறப்படுத்தினர். மேலும் சில கட்சி தலைவர்களின் சிலைகளையும் ஊழியர்கள் துணியால் மூடி மறைத்தனர்.
இது குறித்து நகரசபை ஆணையர்(பொறுப்பு) டாக்டர் அரவிந்த் ஜோதி கூறும்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி கடலூர் நகராட்சியில் பொது இடங்களில் உள்ள 30 கொடிக்கம்பங்களை அப்புறப்படுத்தி இருக்கிறோம். அதேபோல் தலைவர்களின் சிலைகளையும் மூடி மறைத்துள்ளோம் என்றார்.
விருத்தாசலம் ராமசந்திரன்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் 17 வயது சிறுமிக்கு இன்று (புதன்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது. இதையொட்டி நேற்று இரவு பெண் அழைப்பு, மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ஜெயபிரபா, நல்லூர் தமிழரசி, ஊர்நல அலுவலர் விஜயா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆதி தலைமையிலான போலீசார் நேற்று இரவு அந்த திருமண மண்டபத்துக்கு சென்றனர்.
அவர்கள் சிறுமியின் பெற்றோரை அழைத்து, 17 வயது சிறுமிக்கு திருமணம் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் அவர்கள் அந்த திருமணத்தை நிறுத்தினர். இதையடுத்து அந்த சிறுமியை மீட்டு கடலூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். திருமணத்துக்கு முதல் நாள் சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.






