என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பயணம் செய்த காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். #Loksabhaelections2019
    பண்ருட்டி:

    பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதையொட்டி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பரிசு பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    கடலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பண்ருட்டியில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பால கிருஷ்ணன் கட்சி நிர்வாகிகளுடன் காரில் கடாம்புலியூர் வழியாக பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படை அதிகாரிகள் பால கிருஷ்ணனின் காரை தடுத்து நிறுத்தினர்.

    பின்னர் அவரது காரில் சோதனை நடத்தினர். அவருடன் வந்த கட்சி நிர்வாகிகளின் கார்களையும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அந்த காரில் எந்தவித பொருளும் கிடைக்கவில்லை. அதன் பிறகு பாலகிருஷ்ணன் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த வாகன சோதனையால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அதன் பின்னர் பண்ருட்டியில் நடந்த தி.மு.க தேர்தல் பிரசார கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பால கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பணம் எடுத்து செல்லும் வண்டிக்கு பாதுகாப்பு கொடுக்கின்றனர். தேவையில்லாமல் பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் வாகன சோதனை என்ற பெயரில் தொல்லை கொடுக்கின்றனர் என்று குறிப்பிட்டார். #Loksabhaelections2019
    காட்டுமன்னார்கோவில் அருகே பள்ளிக்கூட கழிப்பறையில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    காட்டுமன்னார்கோவில்:

    காட்டுமன்னார்கோவில் அருகே பள்ளிக்கூட கழிப்பறையில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி மெய்யத்தூரை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 39). உப்பு வியாபாரி. இவரது 2-வது மகள் துர்கா தேவி (13). இவள் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    வீட்டின் அருகே பள்ளிக்கூடம் இருந்ததால், கடந்த சில நாட்களாக தினமும் காலை பள்ளி மாணவி துர்காதேவி தான் திறந்து வைப்பது வழக்கம். அதன்படி, நேற்று காலை 8.15 மணிக்கு வீட்டில் இருந்து பெற்றோரிடம் பள்ளிக்கூடத்திற்கு செல்வதாக கூறிவிட்டு துர்காதேவி புறப்பட்டாள். பள்ளிக்கூடத்திற்கு சென்ற அவள், 8.30 மணிக்கு நுழைவு வாயில், வகுப்பறை கட்டிடங்கள், தலைமை ஆசிரியர் அறை மற்றும் கழிப்பறையை திறந்துள்ளாள். பின்னர் கழிப்பறைக்கு சென்ற அவள், திடீரென துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.

    இந்த நிலையில் பள்ளிக்கு வழக்கம் போல் மாணவ-மாணவிகள் வர தொடங்கினர். சில மாணவிகள் கழிப்பறைக்கு சென்ற போது, அங்கு துர்காதேவி பிணமாக தொங்கியதை கண்டு அலறி கூச்சலிட்டனர். இந்த சத்தம்கேட்ட ஆசிரியர்கள் விரைந்து வந்து பார்த்த போது, மாணவி துர்காதேவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து குமராட்சி போலீசார் மற்றும் துர்காதேவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் துர்காதேவியின் பெற்றோர் பள்ளிக்கூடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால் மாணவி தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்த விவரம் தெரியவில்லை.

    இதையடுத்து துர்காதேவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் குமராட்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வழக்குப்பதிவு செய்து தினமும் பள்ளியை திறப்பதால் ஏற்பட்ட மனஉளைச்சலால் துர்காதேவி தற்கொலை செய்து கொண்டாளா? அல்லது ஆசிரியர்கள், பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்டாளா? என விசாரணை நடத்தி வருகிறார்.

    பள்ளிக்கூட கழிப்பறையில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெகுவிரைவில் தேர்தல் பிரசாரம் செய்ய வருவார் என்று பிரேமலதா தெரிவித்தார். #LokSabhaElections2019 #DMDK #Vijayakanth #Premalatha
    ஸ்ரீமுஷ்ணம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்துவருகிறார். பண்ருட்டி, கடலூர் உழவர்சந்தை, விருத்தாசலம் பாலகரை ஆகிய இடங்களில் கடலூர் பாராளுமன்றதொகுதி பா.ம.க. வேட்பாளரை ஆதரித்தும், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி ஆகிய இடங்களில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்தும் திறந்தவேனில் நின்றபடி பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.

    ஸ்ரீமுஷ்ணம் காமராஜ் சிலை அருகே உள்ள கடை வீதியில் நேற்று இரவு பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க. கூட்டணி மெகா கூட்டணி. இந்த கூட்டணி புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும். நமது வேட்பாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக டெல்லிக்கு சென்று தமிழகத்தில் உள்ள மக்களுக்கு வேண்டிய வாழ்வாதார பிரச்சனைபற்றி பேசி திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்றால் இந்திய பிரதமராக மீண்டும் மோடி வரவேண்டும். நமது கூட்டணி தமிழகம் வரவேற்கும் கூட்டணி. ஒட்டுமொத்த இளைஞர்கள், பெண்கள் ஆதரவுடன் அமோக வரவேற்பு பெற்ற கூட்டணி.

    இந்த கூட்டணி அமையக்கூடாது என தி.மு.க. எத்தனையோ சூழ்ச்சிகள் செய்தது. அவற்றை எல்லாம் முறியடித்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், கேப்டன் ஆகியோர் சேர்ந்து இந்த கூட்டணி அமைத்துள்ளனர். இந்த கூட்டணி இயற்கையாக பூ, இலை, பழம் என அமைந்துள்ள கூட்டணி. இங்குநிற்கும் இந்த கூட்டத்தை பார்க்கும்போது, ஆற்றல்மிகு இளைஞர்களின் கூட்டமாக உள்ளது.

    தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்க்க பலமுறை முயற்சி செய்தனர். ஆனால் அதற்கு கேப்டன் விஜயகாந்த் மறுத்துவிட்டு தற்போது வலுவான கூட்டணியில் சேர்ந்துள்ளார். தேனீக்கள் போல் தே.மு.தி.க. கட்சியின் பொறுப்பாளர்கள் கூட்டணி கட்சிகளுடன் இணக்கமாக செயல்பட்டு வாக்குகளை சிதறாமல் வாக்குச்சாவடிகளில் சேர்க்க வேண்டும்.

    பொதுமக்களின் ஆசீர்வாதத்தால் விஜயகாந்த் தற்போது நல்ல உடல்நலத்துடன் நன்றாக இருக்கிறார். மேலும் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், பொதுமக்களின் நலன் குறித்தும் எங்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார். நீங்கள் எதிர்பார்த்தபடி விஜயகாந்த் வெகுவிரைவில் தேர்தல் பிரசாரம் செய்ய வருவார். அவர் பிரசாரத்துக்கு வருகிற தேதியை கட்சி தலைமை விரைவில் அறிவிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #DMDK #Vijayakanth #Premalatha

    பாராளுமன்ற தேர்தலையொட்டி பண்ருட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் உரிய ஆவணம் இல்லாததால் வியாபாரியிடம் இருந்து ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
    பண்ருட்டி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுத்து பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும்படை கண்காணிப்பு குழு தலைவர் அருள் கணேஷ் தலைமையில் பண்டரக்கோட்டையில் அதிகாலை 2 மணியளவில் வாகன சோதனை செய்தார்.

    அப்போது கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை கிழக்கு தெருவை சேர்ந்த ‌ஷபியுல்லா என்பவர் மினிலாரியை நிறுத்தி சோதனை செய்தார். அதில் ரூ.1 லட்சத்து 25ஆயிரம் இருந்தது அந்தபணத்திற்கு எந்தவித ஆவணமும் இல்லை. எனவே அந்த பணத்தை பறக்கும் படையினர் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பணம் பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கீதா, துணை தாசில்தார் தனபதியிடம் ஒப்படைத்தனர்.

    அதேபோல் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும்படை கண்காணிப்பு குழு தலைவர் சீனுவாசன் தலைமையில் ஆநத்தம் பகுதியில் மாலை 5 மணியளவில் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் வந்த பண்ருட்டி வியாபாரி ராஜா என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அவரிடம் எந்தவித ஆவணமின்றி இருந்த 2 லட்சத்து 93ஆயிரத்து 530 ரூபாயை குழுவினர் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பணம் பண்ருட்டி தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் கீதா, துணை தாசில்தார் தனபதியிடம் ஒப்படைத்தனர்.
    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே டிராக்டர் மோதிய விபத்தில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி வேதவள்ளி (வயது 74).

    இன்று காலை வீட்டின் கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது பெண்ணாடத்தில் இருந்து கெள்ளாத்தான்குறிச்சியை நோக்கி ஒரு டிராக்டர் வேகமாக வந்தது. அந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக வேதவள்ளி மீது மோதியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே வேதவள்ளி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பெண்ணாடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வேதவள்ளி உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து வேதவள்ளியின் மகன் வெங்கடேசன் பெண்ணாடம் போலீசில் புகார் செய்தார்.

    விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விபத்து தொடர்பாக பெண்ணாடம் தெற்கு ரத வீதியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் பாலுவை (52) போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
    பண்ருட்டி

    பண்ருட்டி அருகே உள்ள சி.என்.பாளையத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 34). இவரது நண்பர் பெரியசாமி. சம்பவத்தன்று பெரியசாமி மோட்டார் சைக்கிளில் சண்முகசுந்தரம் மற்றும் அவரது பாட்டி யசோதை (70) ஆகியோரை ஏற்றிக்கொண்டு மேல்மாம்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்தார். 

    அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து யசோதை தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்தார். 

    இது குறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாராளுமன்ற தேர்தலுடன் தி.மு.க ஆளுங்கட்சியாக வரப்போவதில்லை. தி.மு.க.வின் அத்தியாயம் முடியப்போகிறது என்று டாக்டர் ராமதாஸ் பேசியுள்ளார். #ramadoss #dmk #parliamentelection

    விருத்தாசலம்:

    கடலூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் விருத்தாசலத்தில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு, அக்கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பேசினார்.

    அ.தி.மு.க. தலைமையில் பலமான வெற்றி கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணி கட்சியினர் பாகுபாடின்றி வெற்றிக்காக பாடுபட்டு வருகிறார்கள். அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன்.

    இந்த கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்று, தமிழக உரிமையை டெல்லியில் மீட்டெடுக்கும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை தேர்தல் முடிந்த உடன் நிறைவேற்றுவோம்.

    தி.மு.க ஆளுங்கட்சியாக வரப்போவதில்லை. தி.மு.க.வின் அத்தியாயம் முடியப்போகிறது. அதனால் அரசு ஊழியர்கள் தவறான முடிவை எடுக்க வேண்டாம். அரசு ஊழியர்கள் தவறு செய்ய மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக ராமத்தம், திட்டக்குடியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்ல முறையில் ஆட்சி செய்து வருகிறார். ஆனால் அவர் மீது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டுகளை கூறி அவதூறு பரப்பி வருகிறார். அதனை மக்கள் நம்ப மாட்டார்கள்.

    தி.மு.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ரே‌ஷன் கடை, நெல் கொள்முதல் நிலையம் ஆகியவற்றை மூடிவிடுவார்கள். மேலும் உரமானியத்தையும் ரத்து செய்து விடுவார்கள்.

    டாஸ்மாக் கடைகளால் தான் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். டாஸ்மாக் கடை திறந்து இருக்கும் நேரத்தை படிப்படியாக குறைத்து, பூரண மதுவிலக்கு கொண்டு வரநடவடிக்கை எடுக்கப்படும். ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைப்போல் தமிழகத்திலும் விவசாயிகளுக்காக தனியாக ஒரு பட்ஜெட் போட வேண்டும் என முதல்-அமைச்சரிடம் வலியுறுத்துவேன். விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ramadoss #dmk #parliamentelection

    வடலூர் அருகே குட்டையில் மூழ்கி எஸ்.எஸ்.எல்.சி. மாணவன் பலியானான். தேர்வு முடிந்த மகிழ்ச்சியில் நண்பர்களுடன் குளித்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
    வடலூர்:

    வடலூர் அருகே குட்டையில் மூழ்கி எஸ்.எஸ்.எல்.சி. மாணவன் பலியானான். தேர்வு முடிந்த மகிழ்ச்சியில் நண்பர்களுடன் குளித்தபோது நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    குறிஞ்சிப்பாடி அருகே உள்ள விருப்பாட்சி கிராமத்தை சேர்ந்தவர் அரசப்பன். இவர் விருப்பாட்சி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார். இவருடைய மகன் அகிலன்(வயது 15). இவன், நெய்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தான். நேற்று எஸ்.எஸ்.எல்.சி. இறுதி தேர்வான சமூக அறிவியல் தேர்வை எழுதினான். தேர்வு முடிந்ததும் மதியம் தனது நண்பர்கள் 5 பேருடன் வடலூர் அருகே தென்குத்து புதுநகர் அடுத்த கல்லுக்குழியில் உள்ள குட்டையில் குளிப்பதற்காக அகிலன் சென்றான்.

    அப்போது மாணவர்கள் அனைவரும் குட்டையில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர். இதில் அகிலன் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் நீச்சல் தெரியாததால், தத்தளித்த அகிலன் தண்ணீரில் மூழ்கி பலியானான். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    இந்த நிலையில் மாலையில் குளிப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த சிலர் அங்கு சென்றனர். அப்போது குட்டை நீரில் மாணவன் பிணமாக மிதந்தான். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுபற்றி வடலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டனர்.

    இதற்கிடையே இதுபற்றி அறிந்த அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்து வந்து அகிலனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து போலீசார் அகிலனின் உடலை, பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே பிளஸ்-2 தேர்வு முடிவடைந்ததும் கடலூர் சில்வர் பீச் கடலில் குளித்த 4 மாணவர்கள் மூழ்கி பலியாகினர். அதை தொடர்ந்து நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிந்த அன்று மாணவன், குட்டையில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    பாராளுமன்ற தேர்தலில் பேரம்பேசி கூட்டணி அமைத்தவர்கள் என் மீது குற்றம் சுமத்துகிறார்கள் என்று ராமதாசை திருமாவளவன் சாடியுள்ளார். #Thirumavalavan #Ramadoss

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அ.தி.மு.க. வின் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இளைஞர்களை திருமாவளவன் தவறாக வழி நடத்துகிறார் என்பது உள்பட பல்வேறு கருத்துகளை கூறி திருமாவளவனை தாக்கி பேசினார்.

    இந்த நிலையில் நேற்று சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று சிதம்பரத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு ராமதாஸ் தன் மீது கூறிய கருத்துகளுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசினார். அதில் அவர் கூறியதாவது:-

    என்னை தைலாபுரம் தோட்டத்துக்கு அழைத்து வாழை இலையில் சாப்பாடு பறிமாறிய ராமதாஸ் தி.மு.க. ஒரு துரோக கட்சி, அது அழிந்துபோககூடியது. ஆகவே தி.மு.க. வில் இருந்து வெளியே வரவேண்டும் என்று என்னை வற்புறுத்தினார். அதை நான் ஏற்றுக் கொள்ள வில்லை.


    அதில் இருந்து என் மீது வீண் பழி சுமத்தி சேற்றைவாரி தூற்றி வருகிறார். நான் ஒளிவு மறைவு இன்றி திறந்த புத்தகமாக வாழ்ந்து வருகிறேன்.

    தி.மு.க.வில் கூட்டணி சேர்ந்தால் சீட்டு மட்டும் தான் கிடைக்கும், நோட்டு கிடைக்காது என்று எண்ணி சாதி அடிப்படையில் வாக்கு சதவீதத்தை காட்டி, பேரம்பேசி கூட்டணி அமைத்துள்ளனர். அது வர்த்தக ரீதியான வியாபார கூட்டணி.

    நம்மிடம் ஒரே குரல்தான் ஒழிக்க வேண்டும். மோடியை விரட்டி அடிக்க வேண்டும். ராகுலை பிரதமர் ஆக்க வேண்டும் என்பது தான்.

    மோடி மறுபடியும் பிரதமராக வந்தால் இனிமேல் நாட்டில் தேர்தல் நடக்காது. மாநில கட்சிகளை ஒழிக்க பா.ஜ.க. அனைத்து வேலைகளையும் செய்துள்ளது. மோடியால் சிறு, குறு தொழில்கள் அழிந்து விட்டன.

    விவசாயம், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கார்ப்ரேட்டுகளின் செல்லப் பிள்ளையாக மோடி திகழ்கிறார். அம்பானி, அதானிக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வெளி நாடு சென்றுவருகிறார். மொத்தத்தில் கார்ப்ரேட் பிரதமராகவே உள்ளார்.

    இந்து சமூகத்தின் முதல் எதிரி மோடி. சாதி வாரியாக மக்களை பிரித்து மொத்த வியாபாரியாக செயல்படுகிறார். இந்த தேர்தலில் மதவாதமா? ஜனநாயகமா? என்று முடிவு செய்யவேண்டும். சாதி வெறி தூண்டல்களில் சிக்கவேண்டாம். எந்த காலத்திலும் சாதியவாதம், மதவாதம் உள்ள பா.ஜ.க. வுடன் விடுதலை சிறுத்தைகள் கூட்டணியில் இருக்காது. என்னை சாதியை சொல்லிமட்டுமே குற்றம் சுமத்த முடியும். வேறு எந்த குற்றமும் சொல்ல முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார். #Thirumavalavan #Ramadoss

    மத்தியில் மீண்டும் மோடி ஆட்சிதான் வரும் என்று பிரசார பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார். #LokSabhaElections2019 #Ramadoss
    சிதம்பரம்:

    அ.தி.மு.க. கூட்டணி சார்பில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து நேற்று இரவு பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் பல்வேறு சாதனைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களை பற்றி கவலைப்படுகிற ஆட்சியாக இருக்கிறது. நாங்களும் ஆலோசனைகளை கூறி வருகிறோம். முதல்-அமைச்சரும், நானும் விவசாயி. எனக்கு விவசாயத்தை பற்றி நன்றாக தெரியும். சிதம்பரம் தொகுதியில் 400 கோடி ரூபாயில் கொள்ளிடம் தடுப்பு அணை திட்டத்தை அமல்படுத்துவதாக அருண்மொழிதேவன் சொன்னார். அது ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம்.



    மத்தியில், மோடி ஆட்சி தான் மீண்டும் வரப்போகிறது. 40 தொகுதிகளிலும் நம்ம கூட்டணி தான் வெற்றி பெறப்போகிறது. மோடி ஆட்சிக்கு வந்ததும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வராதபடி நாம் அழுத்தம் கொடுப்போம். மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்ததே எதிர்க்கட்சி தலைவர் தான். அவர் என்னை பற்றி ஏதேதோ பேசி வருகிறார். கோபம் குடியை கெடுக்கும், நாம் மக்களை பற்றி சிந்திக்கிறோம்.

    நமது கூட்டணி வளர்ச்சிக்கான கூட்டணி. தமிழ்நாட்டின் வளர்ச்சி பற்றி தான் அக்கறை கொள்கிறோம். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் அதிக வாக்குகள் பெறுவார். அரியலூர் ஜெயங்கொண்டம் குன்னம் தொகுதிகளில் இதை விட அதிகமாக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார். 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.  #LokSabhaElections2019 #Ramadoss

    பரங்கிப்பேட்டை அருகே ஓட்டல் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பரங்கிப்பேட்டை:

    பரங்கிப்பேட்டை அருகே தீர்த்தாம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் பிரபுதேவா (வயது 25). இவர் சென்னையில் தங்கி ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கோவில் திருவிழாவிற்காக பிரபுதேவா தனது சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவருடைய தாய் செலவுக்கு பணம் தேவைப்படுகிறது. எனவே உனது சம்பளப் பணத்தை தா என்று பிரபுதேவாவிடம் கேட்டுள்ளார்.

    ஆனால் அவரிடம் பணம் இல்லாததால் மனமுடைந்த பிரபுதேவா வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் பலனின்றி பிரபுதேவா பரிதாபமாக இறந்தார். இதையறிந்த அவருடைய உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து சந்திரசேகரன் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்மகரம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த வாகன சோதனையில் மொத்தம் ரூ.22¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் தாசில்தார் சிவா தலைமையிலான பறக்கும் படையினர் வடலூர்-கும்பகோணம் சாலையில் உள்ள கருங்குழியில் நேற்று மதியம் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக வந்த தனியார் ஏஜென்சியின் வாகனத்தை தாசில்தார் சிவா நிறுத்தி சோதனை செய்தார். அந்த வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 19 லட்சம் ரூபாய் இருந்ததால் அதனை தாசில்தார் சிவா பறிமுதல் செய்து அதை குறிஞ்சிப்பாடி தாசில்தார் உதயகுமாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து அந்த பணம் குறிஞ்சிப்பாடி கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல் ரெட்டிச்சாவடியில் பறக்கும் படை தாசில்தார் நாராயணன் தலைமையிலான குழுவினர் புதுச்சேரி-கடலூர் சாலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக மரக்காணம் மஞ்சக்குப்பத்தைச்சேர்ந்த மீன் வியாபாரி கஜேந்திரன் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.58 ஆயிரம் கொண்டு வந்தார். அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கடலூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    பண்ருட்டி அருகே உள்ள கொள்ளுக்காரன்குட்டையில் கும்பகோணம்- சென்னை மெயின்ரோட்டில் நெய்வேலி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும்படை தாசில்தார் மணிவண்ணன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், காரில் பயணம் செய்த நடுக்குப்பத்தை சேர்ந்த தேவராஜ் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி 3 லட்சத்து 30 ஆயிரத்து 200 ரூபாய் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, பண்ருட்டி தாசில்தார் கீதாவிடம் ஒப்படைத்தனர்.

    நேற்று ஒரே நாளில் 3 இடங்களில் வாகன சோதனையில் மொத்தம் 22 லட்சத்து 88 ஆயிரத்து 200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
    ×