search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sslc student death"

    வடலூர் அருகே குட்டையில் மூழ்கி எஸ்.எஸ்.எல்.சி. மாணவன் பலியானான். தேர்வு முடிந்த மகிழ்ச்சியில் நண்பர்களுடன் குளித்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
    வடலூர்:

    வடலூர் அருகே குட்டையில் மூழ்கி எஸ்.எஸ்.எல்.சி. மாணவன் பலியானான். தேர்வு முடிந்த மகிழ்ச்சியில் நண்பர்களுடன் குளித்தபோது நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    குறிஞ்சிப்பாடி அருகே உள்ள விருப்பாட்சி கிராமத்தை சேர்ந்தவர் அரசப்பன். இவர் விருப்பாட்சி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார். இவருடைய மகன் அகிலன்(வயது 15). இவன், நெய்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தான். நேற்று எஸ்.எஸ்.எல்.சி. இறுதி தேர்வான சமூக அறிவியல் தேர்வை எழுதினான். தேர்வு முடிந்ததும் மதியம் தனது நண்பர்கள் 5 பேருடன் வடலூர் அருகே தென்குத்து புதுநகர் அடுத்த கல்லுக்குழியில் உள்ள குட்டையில் குளிப்பதற்காக அகிலன் சென்றான்.

    அப்போது மாணவர்கள் அனைவரும் குட்டையில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர். இதில் அகிலன் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் நீச்சல் தெரியாததால், தத்தளித்த அகிலன் தண்ணீரில் மூழ்கி பலியானான். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    இந்த நிலையில் மாலையில் குளிப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த சிலர் அங்கு சென்றனர். அப்போது குட்டை நீரில் மாணவன் பிணமாக மிதந்தான். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுபற்றி வடலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டனர்.

    இதற்கிடையே இதுபற்றி அறிந்த அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்து வந்து அகிலனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து போலீசார் அகிலனின் உடலை, பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே பிளஸ்-2 தேர்வு முடிவடைந்ததும் கடலூர் சில்வர் பீச் கடலில் குளித்த 4 மாணவர்கள் மூழ்கி பலியாகினர். அதை தொடர்ந்து நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிந்த அன்று மாணவன், குட்டையில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ×