search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Money Sized"

    அவனியாபுரத்தில் தே.மு.தி.க. பிரமுகர் ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.1½ லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.
    மதுரை:

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்படுவதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    நேற்று பெருங்குடி சோதனை சாவடி அருகே பறக்கும்படை அதிகாரி மதுரைவீரன் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரித்தனர்.

    அதில் வந்தவர், அவனியாபுரம் காவேரி நகரைச் சேர்ந்த செந்தில் குமார் என்பதும், தே.மு.தி.க.வைச் சேர்ந்தவர் ரூ.1½ லட்சத்தை கொண்டு வந்ததும் தெரியவந்தது. அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை.

    இதைத்தொடர்ந்து போலீசார் பணத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அவனியாபுரம் பை-பாஸ் ரோடு பகுதியில் அனுமதியின்றி அ.தி.மு.க.பேனர் மற்றும் கட்சிக்கொடி வைத்ததோடு, பட்டாசுகளும் வெடிக்கப்பட்டதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் புகார் செய்தார். அதன் பேரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் ரோந்து சென்றபோது பெருங்குடி தேவர் சிலை அருகே தி.மு.க.வினர் அனுமதியின்றி பேனர் மற்றும் கட்சிக்கொடி வைத்து பட்டாசு வெடித்ததாக புகார் தெரிவித்தார். அதன் பேரிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தெற்குவாசல் மகால் ரோடு பகுதியில் உள்ள பள்ளி சுவற்றில் அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டியதாக பாண்டியன் கூட்டுறவு அண்ணா சங்கம் நிர்வாகிகள் மீது தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    பொதுமக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்து கொண்டிருந்த அரசியல் கட்சியினர் பறக்கும் படையினரை பார்த்ததும் ரூ.13 லட்சத்தை ரோட்டில் வீசி சென்றனர்.
    சென்னை:

    வேலூர் மாவட்டம் ஆம்பூர் பன்னீர்செல்வம் நகரில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக ஆம்பூர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. பறக்கும் படையினர் அப்பகுதிக்கு சென்றனர். அப்போது 2 பேர் தங்கள் கையில் வைத்து இருந்த பையை கீழே போட்டு விட்டு தப்பி ஓடினர்.

    அந்த பையை கைப்பற்றி பார்த்தபோது அதில் ரூ.13 லட்சத்து 60 ஆயிரம் இருப்பது தெரிய வந்தது. ரூ.13.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் கிடைத்ததை தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் ஆம்பூர் தாலுகா அலுவலகத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் ஆம்பூர் பகுதியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். பணத்தை நடுரோட்டில் போட்டுவிட்டு ஓடியவர்கள் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள தச்சூர் என்ற கிராமத்தில் உள்ள பொது மக்களுக்கு இன்று காலை ஓட்டுக்கு பணம் கொடுக்கபடுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அந்த பகுதியில் அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் தங்களது கட்சிக்கு வாக்களிக்க கோரி அங்கிருந்த பொது மக்களுக்கு பணம் கொடுத்து கொண்டு இருந்தனர்.

    பறக்கும் படை அதிகாரிகளை பார்த்ததும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கையில் வைத்திருந்த 1 லட்சத்து 17 ஆயிரத்து 800 ரூபாயை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

    உடனே பறக்கும் படை அதிகாரிகள் அவர்களை விரட்டி சென்று பிடிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
    இந்தியா முழுவதும் இதுவரை ரூ.2,464.2 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. #ElectionCommission
    புதுடெல்லி:

    மக்களவை தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க, தேர்தல் ஆணையம்  பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, ஆவணமில்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட, நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்தியா முழுவதும் மொத்தம் ரூ2464.2 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் ரூ475.95 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.#ElectionCommission
    வேலூரில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    வேலூர்:

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.

    முதல் கட்ட பிரசாரம் தொடங்கிய சில நாட்களிலேயே துரைமுருகன், அவரது கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் ரூ.10.50 லட்சம் பணம் சிக்கியது. அந்த பணத்துக்கு கணக்கு காட்ட முடியும் என்று துரைமுருகன் கூறினார்.

    கடந்த 1-ந்தேதி காட்பாடியில் தி.மு.க. பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் 2-வது கட்டமாக சோதனை நடத்தினர். அப்போது மூட்டைகளில் கட்டுகட்டாக வைக்கப்பட்டிருந்த ரூ.11.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதனால் எந்த நேரத்திலும் தேர்தல் ரத்தாகும் என்று பரவலாக பேசப்பட்டது.

    வருமான வரித்துறை அதிகாரிகளின் அறிக்கையை பொருத்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் செலவின கண்காணிப்பு அலுவலர் சிலுப்பன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    அவர் அளித்துள்ள மனுவின்மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காட்பாடி மாஜிஸ்திரேட் ஜெயசுதாகரிடம் போலீசார் ஆலோசனை நடத்தினர். நேற்று இரவு வெகுநேரம் நடந்த ஆலோசனையில் முழுமையான முடிவு கிடைக்கவில்லை. இதனால் மாஜிஸ்திரேட் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

    இன்று மீண்டும் மாஜிஸ்திரேட்டிடம் காட்பாடி டி.எஸ்.பி. சங்கர், இன்ஸ்பெக்டர் புகழ் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து மாஜிஸ்திரேட் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

    அதைத் தொடர்ந்து வேட்பாளர் கதிர்ஆனந்த் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டின் உரிமையாளர் சீனிவாசன், தாமோதரன் ஆகிய 3 பேர் மீதும் காட்பாடி போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    கதிர் ஆனந்த் மீது 125 (ஏ) பிரிவின் கீழ் பிரமான பத்திரத்தில் தவறான தகவல் அளித்தல், சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது 171 (இ மற்றும்சி) பிரிவின் கீழ் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்க முயற்சி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் தாக்கல் செய்ய வேட்புமனுவில் தன்னிடம் ரூ.98 ஆயிரத்து 450-ம், தனது மனைவி சங்கீதாவிடம் ரூ.6 லட்சத்து 45 ஆயிரம் பணம் கையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால் வருமான வரித்துறை சோதனையில் ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த முரண்பட்ட தகவல் காரணமாக வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #tamilnews
    பறக்கும் படையினரின் அதிரடி சோதனையில் மேலூர், உசிலம்பட்டியில் ரூ.6½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
    உசிலம்பட்டி:

    உரிய ஆவணங்களின்றி பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    அனைத்து தொகுதிக்கும் பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    உசிலம்பட்டி அருகே தேனி மாவட்ட எல்லையில் கணவாய் மலைப்பகுதியில் டாஸ்மாக் தாசில்தார் தமிழ்செல்வி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் அடங்கிய குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கேரளாவில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் வந்த கேரள மாநிலம் கட்டப்பனை பகுதியைச் சேர்ந்த ஜேக்கப் (வயது 47) உரிய ஆவணமின்றி ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்து 190 வைத்திருந்தது தெரியவந்தது.

    அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். ஜேக்கப் கூறுகையில், ஆஸ்பத்திரி சிகிச்சைக்கு பணம் எடுத்து வந்ததாக தெரிவித்தார்.

    மதுரை செல்லூரைச் சேர்ந்த என்ஜினீயர் மூர்த்தி, உறவினர் மதனுடன் காவல் காரைக்குடி சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

    மேலூர் அருகே உள்ள இ.மலம்பட்டி பகுதியில் வந்தபோது பறக்கும்படை அதிகாரி ரத்தினவேல், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் சோதனை செய்தனர்.

    இதில் மூர்த்தியிடம் இருந்து ரூ.3 லட்சமும், மதனிடம் இருந்து ரூ.2 லட்சமும் ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்தப்பணம் தாசில்தார் சிவசாமிநாதன் வசம் ஒப்படைக்கப்பட்டது. #tamilnews
    தஞ்சையில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.4 லட்சதது 57 ஆயிரத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்த பறக்கும் படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திலையில் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள க்ரூப்ஸ் நகரில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் நாராயணமூர்த்தி, ஏட்டு கணேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த வங்கிக்கு பணம் எடுத்துச்செல்லும் ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் இருந்தவர்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுத்துச்செல்வதாக கூறினர். அவர்களிடம் சோதனை செய்த போது ரூ.4 லட்சத்து 57 ஆயிரத்து 22 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லை. இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து தஞ்சை தாலுகா அலுவலகத்திற்கு எடுத்து வந்தனர். தாசில்தார் அருணகிரி பறிமுதல் செய்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். #tamilnews

    கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.1 கோடியே 42 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #ParliamentaryElections
    கோவை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 6 நிலையான கண்காணிப்புகுழுக்களையும், பறக்கும் படைகளையும் அமைத்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    கோவை மாவட்டத்தில் கடந்த 11-ந் தேதி முதல் இதுவரை எந்த ஆவணங்களும் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 43 லட்சத்து 57 ஆயிரத்து 540 மற்றும் 64 பட்டுச்சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இதில் உரிய ஆவணங்கள் கொடுக்கப்பட்டதில் 2 பேரிடம் ரூ.5 லட்சத்து 47 ஆயிரத்து 500 விடுவிக்கப்பட்டது. மீதமுள்ள ரூ.1 கோடியே 38 லட்சத்து 10 ஆயிரத்து 40 சம்பந்தப்பட்ட கருவூலகத்திலும், மேலும் 1076 மதுபாட்டில்களும், ஒரு ஏர்பிஸ்டல் கைப்பற்றப்பட்டு போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேலந்தாவளம் நாச்சிபாளையம் ரோட்டில் குமிட்டிபதி பகுதியில் பறக்கும்படை அதிகாரி ஜெயக்குமார் தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அந்த காரில் ரூ.2 லட்சத்து 66 ஆயிரம் இருந்தது. விசாரணையில் காரில் வந்தவர் கேரள மாநிலம் பாலக்காடு வெண்ணக்கரை பகுதியை சேர்ந்த கண்ணன் என்பதும், வெற்றிலை வியாபாரி என்பதும் தெரியவந்தது. அவரிடம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் தாராபுரம் கண்ணன் நகரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.53 ஆயிரம் வைத்திருந்தார். இதையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    நீலாம்பூர் சோதனை சாவடி பகுதியில் செந்தில் குமார் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். வந்தனர். அப்போது சேலத்தில் இருந்து வந்த காரை சோதனை செய்தனர். காரில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 133 பட்டுப்புடவைகள் இருந்தது. காரை ஓட்டிவந்த திருச்சூரைச் சேர்ந்த தேவதாசை விசாரித்த போது அவர் கொண்டுவந்த பட்டுப்புடவைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்று தெரிய வந்தது.

    அதனை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் சூலூர் தாசில்தார் ஜெயராஜிடம் ஒப்படைத்தனர். கருமத்தம் பட்டியைச் அடுத்த பதுவம் பள்ளி பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் தலைமையிலான தேர்தல் செலவினப்பார்வையாளர் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வந்த பசூரைச் சேர்ந்த ராமசாமி என்பவரிடம் ரூ.84 ஆயிரம் இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்தனர். #ParliamentaryElections
    அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.6 லட்சம் பணம் மற்றும் 23 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. #ParliamentaryElections
    குளித்தலை:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மகிமைபுரம் பகுதியில் தேர்தல் பிரிவு பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கல்லாத்தூரில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற இரு சக்கர வாகனத்தில் மேலணிகுழியை சேர்ந்த தனியார் நுண்கடன் நிறுவன ஊழியர் மணிகண்டன் என்பவர் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.1.39 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் பிரிவு பறக்கும் படையினர் அரியலூர்-பெரம்பலூர் சாலை அல்லிநகரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த கார்த்திக்கேயன் என்பவர் இரு சக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற 23 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.76 ஆயிரம் ஆகும்.

    மேலும் இதே குழுவினர் பேரளி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.57,200 ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேல கொரப்பாளையம் பிரிவு கரூர்- திருச்சி புறவழிச்சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் போலீசார், அதிகாரிகள் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக கரூர் இனங்கூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவர், கேரள மாநிலம் பையனூரில் வாழைத்தார்களை இறக்கி விட்டு மினி லாரியில் வந்தார். அதில் சோதனையிட்ட போது அவர் உரிய ஆவணங்களின்றி ரூ.1.32 லட்சம் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் திருச்சி சிறு காம்பூரை சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் கேரள மாநிலம் கம்மநாட்டுக்கரையில் வாழைத்தார்களை இறக்கி விட்டு மினிலாரியில் திருச்சி முக்கொம்புக்கு திரும்பி கொண்டிருந்தார். அவரது லாரியில் சோதனையிட்ட போது ரூ.1.61 லட்சம் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. அதனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ஷானவாஸ் என்பவர் மினி லாரியில் வாழைத்தார்களை ஏற்றுவதற்காக திருச்சி பெட்ட வாய்த்தலைக்கு லாரியில் வந்து கொண்டிருந்தார். மேலும் அவர் உரிய ஆவணங்களின்றி ரூ.1.90 லட்சம் எடுத்து வந்தார். அந்த பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ.4.83 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் உதவி தேர்தல் அலுவலரான குளித்தலை கோட்டாட்சியர் லியாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. #ParliamentaryElections
    குமரி மாவட்டம் முழுவதும் இதுவரை ரூ.58 லட்சத்து 86 ஆயிரத்து 655 ரொக்கப்பணத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். #ParliamentaryElections
    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தலை அடுத்து நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதையடுத்து கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பறக்கும்படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இவர்கள் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் நேற்று வரை 40 லட்சத்து 8 ஆயிரம் ரொக்கப்பணமும், 4 ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    குளச்சல் சட்டமன்ற தொகுதியில் ரூ.5 லட்சம் ரொக்கப்பணமும், 6 மதுபான பாட்டில்களும் சிக்கி உள்ளது. பத்மநாபபுரம் தொகுதியில் ரூ.9 லட்சத்து 24 ஆயிரத்து 785 ரொக்கப்பணமும், சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்க கொண்டு சென்ற 11 மிக்சியும், 8 கார்களும், ஒரு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    பத்மநாபபுரம் தொகுதியில் நேற்று இரவு நடத்திய சோதனையில் ரூ.2 லட்சத்து 51 ஆயிரத்து 900-மும், மற்றொரு இடத்தில் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் ரொக்க பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    கிள்ளியூர் தொகுதியில் ரூ.77 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. குமரி மாவட்டம் முழுவதும் இதுவரை ரூ.58 லட்சத்து 86 ஆயிரத்து 655 ரொக்கப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.

    நாகர்கோவில், களியக்காவிளை, மார்த்தாண்டம், கன்னியாகுமரி பகுதிகளில் இன்று காலையிலும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். #ParliamentaryElections
    சிறுபாக்கம் அருகே பறக்கும்படை நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.5 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    விருத்தாசலம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி பணம் மற்றும் பரிசு பொருட்களை கடத்தப்படுவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று காலை கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த பறக்கும் படை அதிகாரிகள் சிறுபாக்கம் பகுதியில் வாகனசோதனை நடத்திக்கொண்டிருந்தனர்.

    அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. அதில் 2 பேர் இருந்தனர். பறக்கும் படை அதிகாரிகள் அந்த மோட்டார்சைக்கிளை வழிமறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த காட்டுக்கொட்டகை பகுதியை சேர்ந்த முருகேசன்(50), செந்தில் குமார்(50) என்பது தெரிந்தது.

    முருகேசன் வைத்திருந்த பையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. மொத்தம் ரூ.4 லட்சத்து 27 ஆயிரத்து 350 இருந்தது. இதுகுறித்து அதிகாரிகள் அவர்களிடம் கேட்டபோது, மரவள்ளி கிழங்கு வெட்டிய விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பணம் என்று கூறினர்.

    இந்த பணத்தை எடுத்து செல்ல அவர்களிடம் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை. இதனால் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் கள்ளக்குறிச்சியில் இருந்து நெய்வேலியை நோக்கி கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த காரையும் சிறுபாக்கம் அருகே பறக்கும் படையினர் வழிமறித்தனர். அந்த காரில் விழுப்புரம் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா செயலாளர் மகேந்திரன்(33), ரம்யா(35) ஆகியோர் இருந்தனர்.

    பின்னர் ரம்யா வைத்திருந்த பையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரூ.90 ஆயிரம் இருந்தது. இந்த பணத்தை எடுத்து செல்ல அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. இதனைத்தொடர்ந்து இந்த பணத்தையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.

    பறக்கும் படையினர் தொடர்ந்து அந்த பகுதியில் வாகனசோதனை நடத்தி வருகின்றனர். #tamilnews

    ஈரோடு அருகே உள்ள வீரப்பன்சத்திரம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார் ஆயிரக்கணக்கில் பணத்தை பறிமுதல் செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு காம்ப்ளக்சில் பணம் வைத்து சூதாடிய ஈரோடு மாவட்டம் பொய்க்குற்றம் சாட்டி கணவருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து எஸ்.பி. சக்தி கணேசன் உத்தரவின் பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஈரோடு வீரப்பன்சத்திரம் அதியமான் வீதியில் உள்ள ஒரு காம்ப்ளக்ஸில் சிலர் பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்தது தெரியவந்தது இதையடுத்து போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் சுந்தரமூர்த்தி (40), குமார் (42), பழனிச்சாமி (48), தன்சுக் (44), தங்கராஜ் (40) என தெரியவந்தது. இவர்களிடமிருந்து சீட்டு கட்டுகளும் ரூ.78 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    வேலூரில் கணக்கில் வராத ரூ.1¼ லட்சம் பணம் கைப்பற்றியதை தொடர்ந்து டாஸ்மாக் மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சோபியா ஜோதிபாய் தனது கட்டுப்பாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒருநாளைக்கு ஒரு லட்சத்துக்கு மேல் மதுபானங்கள் விற்பனையானால் ரூ.2 ஆயிரம் வீதமும், ரூ.4 லட்சத்துக்கு மேல் விற்பனையானால் ரூ.5 ஆயிரம் வீதமும் வசூலில் ஈடுபட்டு வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்றுமுன்தினம் மாலை டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் 90-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர் கடந்த (ஆகஸ்டு) மாதம் டாஸ்மாக் கடைகளில் இருந்து வர வேண்டிய பணத்தை மேற்பார்வையாளர்களிடம் இருந்து தனித்தனியாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த தகவல் வேலூர் லஞ்சஒழிப்பு துறை போலீசாருக்கு கிடைத்தது. உடனடியாக வேலூர் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணக்குமார், இன்ஸ்பெக்டர்கள் விஜய், விஜயலட்சுமி உள்பட போலீசார் மாலை 6 மணி அளவில் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    விடிய விடிய சோதனை நடைபெற்றது. அப்போது சோபியா ஜோதிபாயின் கைப்பையில் இருந்து ரூ.80 ஆயிரமும், அவருடைய காரில் இருந்து ரூ.25 ஆயிரமும், மேற்பார்வையாளர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரமும் என ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றினர். கணக்கில் வராத பணம் கைப்பற்றியதை தொடர்ந்து டாஸ்மாக் மேலாளர் சோபியா ஜோதிபாய் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
    ×