search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veppur accident"

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் கிளீனர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    வேப்பூர்:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 45). இவர் நேற்று இரவு வாடிபட்டியில் இருந்து குடிநீர் கொண்டு செல்லும் டிராக்டரை சென்னையை நோக்கி ஓட்டி சென்றார்.

    அந்த டிராக்டரில் மதுரை ராமலிங்கபுரத்தை சேர்ந்த கணேசன் (39) என்பவர் கிளீனராக இருந்தார்.

    இவர்கள் வந்த டிராக்டர் இன்று காலை 5.30 மணிக்கு கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுநெசலூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது அந்த வழியாக சிமெண்ட் பாரம் ஏற்றிய லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரி எதிர்பாராதவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதியது. இதில் டிராக்டரில் இருந்த கணசேன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவர் டிராக்டரின் பின்புற சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    அதன் பின்னர் டிராக்டர் தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிராக்டர் டிரைவர் சந்திரன் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இது குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே இன்று அதிகாலை லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 2 டிரைவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    வேப்பூர்:

    சென்னையில் இருந்து மது பாட்டில்களை ஏற்றி கொண்டு திருச்சியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நேற்று இரவு ஒரு லாரி புறப்பட்டு வந்தது.

    இந்த லாரியை திண்டிவனத்தை சேர்ந்த ராமதாஸ் (வயது 31) என்பவர் ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 5 மணிக்கு அந்த லாரி கடலூர் மாவட்டம் வேப்பூர்-கழுதூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது எதிரே மணல் ஏற்றிக் கொண்டு மற்றொரு லாரி வந்தது. அந்த லாரியை திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்த செல்வமணி (23) என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த லாரி திடீரென்று நிலைதடுமாறி சாலையில் இருந்த தடுப்புக்கட்டையை தாண்டி எதிரே மதுப்பாட்டில்களை ஏற்றி வந்த லாரி மீது கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது.

    இதில் மதுப்பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிய தொடங்கின. உள்ளே இருந்த மதுப்பாட்டில்கள் டமார்... டமார்... என்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. சிறிது நேரத்தில் மணல் ஏற்றி வந்த லாரியின் முன்பகுதியிலும் தீப்பிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் மதுப்பாட்டில்கள் ஏற்றி வந்த லாரியில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது.

    2 லாரிகள் தீப்பிடித்து எரிந்ததால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இது குறித்த தகவல் வேப்பூர் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

    உடனே வேப்பூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடம் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால், லாரியில் இருந்த மது பாட்டில்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து நாலாபுறமும் சிதறியதால் தீயை அணைக்க முடியாமல் அவர்கள் தவித்தனர். 1 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது.

    வேப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். அங்கு உடல் கருகி கிடந்த லாரி டிரைவர்கள் ராமதாஸ், செல்வமணி ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த தீ விபத்தில் மதுப்பாட்டில்கள் ஏற்றி வந்த லாரியில் 20 ஆயிரம் மதுப்பாட்டில்கள் இருந்தன. இவை அனைத்தும் எரிந்து நாசமானது. இவற்றின் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.

    லாரிகள் மோதி தீ பிடித்த சம்பவத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கடலூர் மாவட்டம் வேப்பூரில் இன்று அதிகாலை லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் டிரைவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    வேப்பூர்:

    சென்னையில் இருந்து 25 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆம்னி பஸ் ஒன்று நேற்று இரவு நெல்லை நோக்கி புறப்பட்டது.

    இந்த பஸ்சை நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த வன்னிகோநந்தல் பகுதியை சேர்ந்த மூர்த்தி(வயது 40) என்பவர் ஓட்டிவந்தார்.

    அதே பகுதியை சேர்ந்த செந்தமிழ்செல்வன்(25) என்பவர் அந்த பஸ்சில் மாற்று டிரைவராக இருந்தார்.

    இந்தநிலையில் அந்த பஸ் இன்று அதிகாலை கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோடு அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் பஸ்சின் முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை ஆம்னி பஸ்டிரைவர் முந்திசெல்ல முயன்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ் தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற லாரியின் மீது மோதியது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து சேதமடைந்தது.

    இந்த விபத்தில் பஸ்சின் முன் இருக்கையில் அமர்ந்து இருந்த செந்தமிழ்செல்வன் தூக்கி வீசப்பட்டார். அவர் ஆம்னி பஸ்சின் முன்பக்க டயரில் சிக்கினார். இதில் அவர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான செந்தமிழ்செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே இன்று காலை அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் அதிகாரி மற்றும் 2 மகன்கள் உயிரிழந்தனர்.
    வேப்பூர்:

    சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர் லோக நாதன் (வயது 60). மீன்வளத்துறையில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் தனது மகன்கள் சிவராமன் (40), நிர்மல்குமார் (35) மற்றும் மருமகள், பேத்தியுடன் தீபாவளி கொண்டாடுவதற்காக சொந்த ஊரான கரூர் தான்தோன்றி மலை பகுதிக்கு சென்றார். தீபாவளி கொண்டாடி விட்டு இன்று காலை அங்கிருந்து காரில் குடும்பத்தினருடன் சென்னை புறப்பட்டார்.

    இந்த கார் இன்று காலை 6.30 மணிக்கு கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கூத்தக்குடி ரெயில்வே மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது வேப்பூரில் இருந்து கள்ளக்குறிச்சியை நோக்கி அரசு பஸ் ஒன்று முன்னால் சென்றது.

    அரசு பஸ் டிரைவர் திடீரென்று பஸ்சை வளைவில் திருப்பினார். இதனால் பின்னால் வந்து கொண்டிருந்த கார் நிலை தடுமாறி பஸ்சின் பின்புறம் வேகமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் காரில் பயணம் செய்த லோகநாதன், சிவராமன், நிர்மல்குமார் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி அதே இடத்தில் பலியானார்கள். லோகநாதனின் மருமகள் இடிபாடுகளுக்குள் சிக்கி காயம் அடைந்தார். உடனிருந்த சிறுமி காயமின்றி உயிர் தப்பினாள்.

    இது குறித்து வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், சப்- இன்ஸ்பெக்டர்கள் டைமன் துரை, கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்த பெண்ணை போலீசார் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் சிக்கிய காரை பொக்லைன் எந்திரம் மூலம் போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.

    வேப்பூர் அருகே கூத்தக்குடி ரெயில்வே மேம்பாலம் வளைவில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அந்த இடத்தில் விபத்தை தடுப்பதற்கு போக்குவரத்து போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.
    வேப்பூர் அருகே இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    வேப்பூர்:

    கன்னியாகுமரி மாவட்டம் பாலவிளையை சேர்ந்தவர் அஜீத்ஜோகி (வயது 21). இவரது உறவினர் வினோத் (21). இவர்கள் 2 பேரும் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தனர்.

    ஆயுதபூஜை விடுமுறையையொட்டி இருவரும் சொந்த ஊர் சென்றிருந்தனர். விடுமுறை முடிந்ததும் நேற்று மதியம் அஜித்ஜோகி, வினோத் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் பாலவிளையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டனர்.

    இன்று அதிகாலை 4 மணி அளவில் கடலூர் மாவட்டம் வேப்பூர் பஸ் நிலையம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அஜீத்ஜோகி, வினோத் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்சிமேரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    விபத்தில் பலியான 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வாலிபர்கள் மீது மோதிய வாகனம் எது? என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×