search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 person died"

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே இன்று காலை அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் அதிகாரி மற்றும் 2 மகன்கள் உயிரிழந்தனர்.
    வேப்பூர்:

    சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர் லோக நாதன் (வயது 60). மீன்வளத்துறையில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் தனது மகன்கள் சிவராமன் (40), நிர்மல்குமார் (35) மற்றும் மருமகள், பேத்தியுடன் தீபாவளி கொண்டாடுவதற்காக சொந்த ஊரான கரூர் தான்தோன்றி மலை பகுதிக்கு சென்றார். தீபாவளி கொண்டாடி விட்டு இன்று காலை அங்கிருந்து காரில் குடும்பத்தினருடன் சென்னை புறப்பட்டார்.

    இந்த கார் இன்று காலை 6.30 மணிக்கு கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கூத்தக்குடி ரெயில்வே மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது வேப்பூரில் இருந்து கள்ளக்குறிச்சியை நோக்கி அரசு பஸ் ஒன்று முன்னால் சென்றது.

    அரசு பஸ் டிரைவர் திடீரென்று பஸ்சை வளைவில் திருப்பினார். இதனால் பின்னால் வந்து கொண்டிருந்த கார் நிலை தடுமாறி பஸ்சின் பின்புறம் வேகமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் காரில் பயணம் செய்த லோகநாதன், சிவராமன், நிர்மல்குமார் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி அதே இடத்தில் பலியானார்கள். லோகநாதனின் மருமகள் இடிபாடுகளுக்குள் சிக்கி காயம் அடைந்தார். உடனிருந்த சிறுமி காயமின்றி உயிர் தப்பினாள்.

    இது குறித்து வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், சப்- இன்ஸ்பெக்டர்கள் டைமன் துரை, கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்த பெண்ணை போலீசார் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் சிக்கிய காரை பொக்லைன் எந்திரம் மூலம் போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.

    வேப்பூர் அருகே கூத்தக்குடி ரெயில்வே மேம்பாலம் வளைவில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அந்த இடத்தில் விபத்தை தடுப்பதற்கு போக்குவரத்து போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.
    ×