என் மலர்
கோயம்புத்தூர்
- மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது எனது கனவு.
- எனது பெற்றோர் மிகவும் உறுதுணையாக இருந்து வருகின்றனர்
கோவை:
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. வருகிற கல்வியாண்டுக்கான 'நீட்' தேர்வு நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேசிய தேர்வு முகமை செய்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் இந்த தேர்வு 14 மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வை கோவை சாய்பாபாகாலனியை சேர்ந்த திருநங்கை இந்திரஜா (வயது 22) உள்பட 6,994 பேர் எழுதுகிறார்கள். இந்திரஜா தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் நீட் தேர்வு எழுதும் முதல் திருநங்கை ஆவார்.
இதுகுறித்து திருநங்கை இந்திரஜா கூறும்போது, மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது எனது கனவு. கடந்த 2020-ம் ஆண்டு பிளஸ்-2 முடித்தேன். நான் கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வை எழுதினேன். அதில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றேன்.
இருந்தபோதிலும் எனக்கு மருத்துவ சீட்டுக்கான இடம் கிடைக்கவில்லை. இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுத உள்ளேன். இதில் எனக்கு 1.1 சதவீதம் இட ஒதுக்கீட்டின் படி மருத்துவ சீட்டு கிடைக்கும் என்று நம்புகிறேன். எனக்கு கோவை தடாகம் ரோடு அரசு தொழில்நுட்ப கல்லூரியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு உள்ளது. தேர்வை எதிர்கொள்ள தயாராகி வருகிறேன். எனது பெற்றோர் மிகவும் உறுதுணையாக இருந்து வருகின்றனர்
இவ்வாறு அவர் கூறினார்.
- சிகாமணி வெளிநாட்டில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார்.
- ஒரு காரை எடுத்து அதில் இறந்த சிகாமணியின் உடலை ஏற்றி கொண்டு சுற்றியுள்ளனர்.
கோவை:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விளாத்துர் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சிகாமணி(வயது47).
இவருக்கு திருமணமாகி பிரியா(45) என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். சிகாமணி கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக துபாயில் சுற்றுலா டிராவல்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். கணவர் வெளிநாட்டில் இருந்ததால், பிரியா தனது குழந்தைகளுடன் தஞ்சாவூர் புளியந்தோப்பு ஜெயம் நகரில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 21-ந்தேதி சிகாமணி துபாயில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு வந்ததாக பிரியாவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவர் தனது கணவரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். ஆனால் அது சுவிட்ச் ஆப் என வந்தது. சில நாட்களில் வீட்டிற்கு வந்துவிடுவார் என அவர் நினைத்தார். ஆனால் சில நாட்களை கடந்தும் அவர் வரவில்லை. இதையடுத்து அவர் மீண்டும் தனது கணவரின் போனுக்கு தொடர்பு கொண்டார். அப்போதும் செல்போன் சுவிட்ச் ஆப் என்றே வந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த பிரியா கடந்த 28-ந்தேதி நேராக கோவை வந்து பீளமேடு போலீஸ் நிலையத்தில், வெளிநாட்டில் இருந்து கோவை வந்த எனது கணவரை காணவில்லை என புகார் கொடுத்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கந்தசாமி காணவில்லை என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி கரூர் மாவட்டம் பொன்னமராவதி அடுத்த க.பரமத்தி பகுதியில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்ததாகவும், விசாரணை நடத்தியும் அவர் யார் என கண்டுபிடிக்க முடியாததால், க.பரமத்தி போலீசார், அந்த உடலை அங்குள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ததும் கோவை பீளமேடு போலீசாருக்கு தெரியவந்தது.
இதனால் இறந்தது சிகாமணியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் இந்த வழக்கை தீவிரப்படுத்தி விசாரணை மேற்கொண்டு வந்தனர். வெளிநாட்டில் சிகாமணிக்கு யாருடனாவது தொடர்பு இருந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி கோவையில் உள்ள ஜே.எம்.கோர்ட்டில், சிகாமணியை கடத்தி கொலை செய்ததாக, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த சிவகளையை சேர்ந்த தியாகராஜன்(58) என்பவர் சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார் தியாகராஜனை காவலில் எடுத்து விசாரித்தனர்.
இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.
சிகாமணி வெளிநாட்டில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார். அப்போது அந்த நிறுவனத்தின் அருகே உள்ள ஒரு ஓட்டலில் கோவையை சேர்ந்த சாரதா(32) என்ற பெண் வேலை பார்த்து வந்தார்.
அருகருகே வேலை பார்த்ததால் சிகாமணிக்கும், சாராதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. மேலும் சாரதா, சிகாமணிக்கு தொழில் விஷயமாக அவ்வப்போது பணமும் கொடுத்து வந்துள்ளார்.
இவர்களின் பழக்கம் தஞ்சாவூரில் இருந்த சிகாமணியின் மனைவிக்கு தெரியவந்தது. அவர் சாரதாவை செல்போனில் தொடர்பு கொண்டு எனது கணவருடனான தொடர்பை கைவிடுமாறு கூறியுள்ளார். ஆனாலும் அவர்கள் அதனை கண்டு கொள்ளாமல் தங்கள் கள்ளக்காதலை தொடர்ந்தனர்.
இந்த நிலையில் சாரதா சிகாமணிக்கு தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டு வந்தார். ஆனால் அவர் கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது. இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்றும் வெளிநாட்டில் வைத்து இவர்களுக்கு இடையே இது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சிகாமணி, சாரதாவை கன்னத்தில் அறைந்து விட்டதாக தெரிகிறது.
தனது பணத்தை வாங்கி வைத்து கொண்டு தராததுடன், தன்னையே தாக்கியதால் அவருக்கு, சிகாமணி மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டது.
இதற்கிடையே இவர் சில மாதங்களாக வீட்டிற்கு பணம் அனுப்பாததால், அவரது தாயார் கோமதி போன் செய்து ஏன் பணம் அனுப்பவில்லை என அவரிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் வெளிநாட்டில் தனக்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை தாக்கிய அவனை தீர்த்து கட்ட வேண்டும் எனவும் சாரதா தாயாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து அவரது தாயார் தனது நண்பரான தியாகராஜனிடம் இதுதொடர்பாக தெரிவித்துள்ளார். அவரும் சிகாமணியை தீர்த்து கட்டுவதற்கு சம்மதம் தெரிவித்ததுடன், நெல்லை தச்சநல்லூர் கூலிப்படையை சேர்ந்த குட்டி தங்கம் என்ற புதியவனையும் ஏற்பாடு செய்தார்.
தொடர்ந்து சிகாமணியை எப்படி கொலை செய்யபோகிறோம் என்று திட்டங்கள் எல்லாம் தீட்டி விட்டு, வெளிநாட்டில் இருந்த சாரதாவுக்கு போன் செய்த தியாகராஜன், இங்கு எல்லாம் தயாராக இருக்கிறது. நீ அவனிடம் நைசாக பேசி இங்கு அழைத்து வந்து விடு மற்றதை நான் பார்த்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அதன்படி சாரதாவும், சிகாமணியிடம் நீங்கள் ஊருக்கும் போது நானும் வருகிறேன். நீங்கள் என்னுடன் கோவைக்கு வாருங்கள் என கூறி அழைத்துள்ளார். அதற்கு அவரும் சம்மதித்தார். அதன்படி சிகாமணியும், சாரதாவும் கடந்த மாதம் 21-ந் தேதி கோவைக்கு விமானத்தில் வந்து இறங்கினர். பின்னர் சிகாமணியை தனது வீட்டிற்கு சாரதா அழைத்து சென்றார். 2-3 நாட்கள் சிகாமணியும், சாரதாவும் கோவையில் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்துள்ளனர்.
கடந்த 24-ந்தேதி இரவு சிகாமணியும், சாரதாவும் வீட்டில் மது அருந்தினர். அப்போது தியாகராஜனும், குட்டி தங்கம் என்ற புதியவனும் அங்கு வந்தனர். அவர்கள் யார் என்று சாரதாவிடம் கேட்டதற்கு, தனது நண்பர்கள் என அவர் தெரிவித்தார். இதையடுத்து அவர்களும் இவர்களுடன் சேர்ந்து மது அருந்தினர்.
அப்போது தியாகராஜன் தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த தூக்க மாத்தியை எடுத்தார். அதில் 30 மாத்திரைகளை சிகாமணி சாப்பிடும் மதுவிலும், சிக்கன் கறியிலும் அவருக்கு தெரியாமல் கலந்து, அவரிடம் எடுத்து கொடுத்தார்.
அதனை சாப்பிட்ட சில நிமிடங்களில் சிகாமணி மயங்கி விட்டார். இதையடுத்து சாரதா, சிகாமணியின் மீது ஏறி, அவரது நெஞ்சில் பலமாக மிதித்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர் இறந்ததை உறுதி செய்து கொண்ட அவர்கள் உடலை என்ன செய்யலாம் என யோசித்தனர். அப்போது தியாகராஜன் எங்காவது ஒரு காட்டுப்பகுதியில் கொன்று வீசலாம் என கூறினார்.
அதன்படி ஒரு காரை எடுத்து அதில் இறந்த சிகாமணியின் உடலை ஏற்றி கொண்டு சுற்றியுள்ளனர். பல இடங்களிலும் ஆட்கள் நடமாட்டம் இருந்துள்ளது. கரூர் பொன்னமராவதி அடுத்த க.பரமத்தி பகுதியில் செல்லும் போது காட்டுப்பகுதியை பார்த்த இவர்கள் இது தான் உடலை போடுவதற்கு சரியான இடம் என தேர்வு செய்து அங்கு உடலை வீசி சென்றதும், அதனை போலீசார் கைப்பற்றி அடையாளம் தெரியாத உடல் என கூறி அடக்கம் செய்ததும் பீளமேடு போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் காணவில்லை என பதிந்திருந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர்.
இதுதொடர்பாக தியாகராஜன், குட்டி தங்கம் என்ற புதியவன், சாரதா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக சாரதாவின் தாயார் கோமதி, சாரதாவின் சகோதரி நிலா ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் தியாகராஜனை கைது செய்து விட்டனர். தொடர்ந்து மற்ற 4 பேரையும் கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
டிராவல்ஸ் அதிபரை வெளிநாட்டில் இருந்து வரவழைத்து, கூலிப்படை ஏவி கொன்று உடலை காட்டுப்பகுதியில் வீசிய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தினமும் 60 முதல் 65 பஸ்கள் வரை இயக்கப்படுகின்றன.
- பல்வேறு இடங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
கோவை:
கோவை மேட்டுப்பாளையம் சாலை, சாய்பாபா காலனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளுக்கு தினமும் 60 முதல் 65 பஸ்கள் வரை இயக்கப்படுகின்றன. அவற்றின் மூலம் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் கோடை சீசனையொட்டி நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
தொடர்ந்து கோவை-ஊட்டி இடையே மேலும் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்குவது என்று கோவை மண்டல அரசு போக்குவரத்துக்கழகம் முடிவு செய்து உள்ளது.
இதுதொடர்பாக கோவை போக்குவரத்துக்கழக நிர்வாகி ஒருவர் கூறுகையில், "கோவையில் இருந்து ஊட்டிக்கு தினமும் இயக்கப்படும் வழக்கமான பஸ்களுடன், மேலும் கூடுதலாக 20 சிறப்பு பஸ்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. தேவை அதிகம் இருந்தால் மேலும் கூடுதல் பஸ்களை இயக்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்று தெரிவித்து உள்ளனர்.
- மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் கடந்த 2023 பிப்ரவரி 24-ந் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது.
- புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் வழக்கு விசாரணையை படித்து பார்த்து தீர்ப்பு கூறவும் வாய்ப்பு உள்ளது.
கோவை:
பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இதுதொடர்பான வீடியோ வெளியானதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.
முதலில் இந்த வழக்கை பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரித்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்த நிலையில் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு (வயது 25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (29), பாபு (27), அருளானந்தம் (34) மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இவர்கள் மீது 2019 மே 21-ந் தேதி கோவை மகளிர் கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்பிறகு வழக்கு விசாரணை தாமதம் ஆனது. அதைத்தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கி விசாரணை தொடங்கப்பட்டது.
மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் கடந்த 2023 பிப்ரவரி 24-ந் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது. அறைக்கதவுகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக சாட்சியம் பெறப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டு வந்தனர். இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு மற்றும் எதிர் தரப்பு இறுதிவாதம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு மே 13-ந் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார்.
இந்தநிலையில் நேற்று தமிழகம் முழுவதும் 77 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களில் பொள்ளாச்சி வழக்கை விசாரித்து வரும் நீதிபதி நந்தினிதேவியும் ஒருவர். அவர் கரூர் மாவட்ட குடும்ப நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.
நீதிபதி நந்தினிதேவி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதால் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அறிவித்த தேதியில் தீர்ப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வழக்கமான நடைமுறைப்படி தீர்ப்பை தள்ளிவைத்த நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டால் அவர் தீர்ப்பை எழுதி கையெழுத்திட்டு சென்றால் அந்த தீர்ப்பை புதிதாக பொறுப்பேற்கும் நீதிபதி அறிவிக்கலாம். அவ்வாறு தீர்ப்பு எழுதப்படவில்லை என்றால் புதிதாக பொறுப்பேற்கும் நீதிபதி மீண்டும் அரசு தரப்பு மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு வக்கீல்களின் வாதங்களை கேட்டு தீர்ப்பை அறிவிக்கலாம் என மூத்த வக்கீல்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவையைச் சேர்ந்த மூத்த வக்கீல் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
இந்த வழக்கு மிக முக்கியமான வழக்கு. மாவட்ட நீதிமன்றங்களில் நடக்கும் விசாரணை தீர்ப்பை அதுவரை விசாரித்த நீதிபதியே அறிவித்தால் தான் சரியானதாக இருக்கும் என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளது. மேல்முறையீட்டு வழக்குகளில் இதுபோன்ற கருத்துக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே பொள்ளாச்சி வழக்கு விசாரணையை விசாரித்த நீதிபதியே தீர்ப்பு வழங்கும் வரை தொடர வேண்டும் என்று வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் அல்லது வழக்கை தொடுத்த பாதிக்கப்பட்ட புகார்தாரர்கள் மனு செய்ய வாய்ப்பு உள்ளது. இதற்கு சட்டத்தில் டேமணர் என்று கூறுவார்கள்.
அல்லது புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் வழக்கு விசாரணையை படித்து பார்த்து தீர்ப்பு கூறவும் வாய்ப்பு உள்ளது. அதேசமயம் விசாரணையை முழுவதுமாக படித்து சாட்சியங்கள் குறித்து ஆராய வேண்டியிருந்தால் தீர்ப்பின் தேதி தள்ளி போகலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே மறுஉத்தரவு வரும் வரை நீதிபதி நந்தினிதேவி அதேகோர்ட்டில் பணிபுரிவார் என்று சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் அலுவலகத்தில் இருந்து மகளிர் கோர்ட்டிற்கு தகவல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே நீதிபதி நந்தினிதேவி, பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு அளித்த பிறகே இடமாறுதலாகி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 4 இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது.
- தடுப்பணைக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க கம்பி வேலி அமைக்கப்பட உள்ளது.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணைக்கு எதிரே பள்ளிவிளங்கால் தடுப்பணை உள்ளது. அணையில் இருந்து தடுப்பணை வழியாக பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
ஆழியாறு வரும் சுற்றுலாபயணிகள் தடுப்பணையில் இறங்கி குளிக்கிறார்கள். இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக ஆறு மற்றும் தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தடையை மீறி குளித்த சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து தடுப்பணையில் சுற்றுலாபயணிகள் குளிப்பதை தடுக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஆழியாறு வரும் சுற்றுலா பயணிகள் தடுப்பணை, அணைக்குள் இறங்கி குளிக்கின்றனர். ஏற்கனவே அணை, தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் தடையை மீறி செல்வதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
3 மாணவர்கள் பலியானதை தொடர்ந்து தடுப்பணை, அணை பகுதிகளில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. மேலும் ஆழியாறு அறிவுத்திருக்கோவிலுக்கு எதிரே உள்ள பகுதி, பாலம், பள்ளி விளங்கால் தடுப்பணைக்கு செல்லும் பகுதி, தடுப்பணை என 4 இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பணைக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க கம்பி வேலி அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிதி அரசிடம் பெறப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டது.
- கடந்த ஒரு மாதமாக இரு தரப்புக்குமான விவாதம் நடைபெற்று வந்தது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ்குமார், வசந்தராஜன், மணிவண்ணன், அருளானந்தம், பாபு, அருண்குமார் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் உள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டது.
கடந்த ஒரு மாதமாக இரு தரப்புக்குமான விவாதம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டுள்ளார்.
- அடிமை ஆட்சியை எதிர்க்க இங்கே புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது என்றார் ஆதவ் அர்ஜுனா.
- எங்கள் கட்டமைப்பை இரண்டு நாட்கள் கோவையில் பார்த்து இருப்பார்கள் என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.
கோவை தனியார் கல்லூரியில் நடைபெறும் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் 2ம் நாள் கருத்தரங்கில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உரையாற்றினார்.
அப்போது அவ் பேசியதாவது:-
வக்பு வாரிய சட்டத்திற்கு முதலில் போராட்டத்தை அறிவித்தது தவெக தான். தமிழகம் முழுக்க போராட்டத்தை தவெக நடத்தியது.
வக்பு வாரிய விவகாரத்தில் விஜய் உச்சநீதிமன்றத்தை நம்பினார். ஒரு சட்டம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி, அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்துவிட்டார் என்றால் அதற்கு மாநிலச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அழுத்தம் தர முடியாது.
தமிழக அரசு வக்பு சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது உண்மைதான். அதை வரவேற்கிறோம். ஆனால், அதை வைத்து அழுத்தம் தர முடியாது.
கேரள அரசு வக்பு வாரிய விவகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமின்றி, வக்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்சநீதிமன்ற வழக்கில் தமிழக அரசு தன்னை இணைத்துக் கொள்ளாதது ஏன்..?
விஜய் ஏன் 3 நிமிடம் மட்டுமே பூத் கமிட்டி மாநாட்டில் பேசினார் என சிலர் கேட்கிறார்கள். அவர் 3 நிமிடம் பேசியதற்கே கோவை ஸ்தம்பித்துவிட்டது. எனவே, எங்கள் திட்டம் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். போலீசார் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். எங்கள் தலைவர் விஜய்யின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்து கொள்வோம்.
மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யப் பாதுகாப்பைக் கொடுங்கள் அதுவே போதும். தேர்தல் நடக்கும்போது மூத்த நிர்வாகிகளைக் காட்டிலும் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கே அதிக பவர் இருக்கிறது.
வாக்குப்பதிவின்போது கடைசி இரண்டு மணி நேரம் வாக்களிக்காதவர்களின் லிஸ்ட்டை வைத்து கள்ள ஓட்டுப் போட வாய்ப்பு இருக்கிறது. அதை பூத் கமிட்டி ஏஜெண்டுகள் கண்காணிக்க வேண்டும்.
நீங்கள் அது குறித்து குரல் எழுப்பினால், உடனே தலைமையின் ஆதரவு வந்துவிடும். அதன் பிறகு அவர்களால் வாக்குப்பெட்டிக்குச் சீல் வைக்க முடியாது. அதேபோல வாக்கு எண்ணிக்கை நடக்கும்போதும் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறுவதை பூத் கமிட்டி ஏஜெண்டுகள் உறுதி செய்ய வேண்டும். அதுவே பிரதானமானது.
இத்தனை காலம் தவெகவுக்கு கட்சி கட்டமைப்பு இல்லை என்ற விமர்சனங்கள் இருந்தது. இப்போது எங்கள் கட்டமைப்பை இரண்டு நாட்கள் கோவையில் பார்த்து இருப்பார்கள்.
ஊழலாட்சியை, அடிமை ஆட்சியை எதிர்க்க இங்கே புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது. இது மக்களுடைய செல்வாக்கு, இந்த இளைஞர்களை வைத்து என்ன செய்யப் போகிறார்கள் என பேசுகிறார்கள்.
2026 தமிழக வெற்றிக் கழகத்திற்கான நாள்.. 2 நாட்களாக கோவை முடங்கிவிட்டது.. வரலாறு உருவாகும்போது பழைய காலத்தை பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மக்கள் நலனுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டோம்.
- நமது ஆட்சி சிறுவாணி தண்ணீர் போல தூய்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்கும்.
கோவை தனியார் கல்லூரியில் நடைபெறும் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் 2ம் நாள் கருத்தரங்கில் விஜய் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக வெற்றிக் கழகம் அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி அல்ல.
நமது ஆட்சி மலரும்போது ஊழல் இருக்காது, ஊழல் வாதிகள் இருக்க மாட்டார்கள்.
மக்களிடம் செல், மக்களிடம் கற்றுக்கொள், மக்களுக்கா வாழு என்று அண்ணா கூறினார்.
அண்ணா கூறியது போன்று மக்களிடம் சென்று நம் கொள்கைகளை எடுத்துக் கூற வேண்டும்.
மக்கள் நலனுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டோம்.
நமது ஆட்சி சிறுவாணி தண்ணீர் போல தூய்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்கும்.
வாக்குச்சாவடி வரும் மக்களுக்கு உதவ வேண்டியது நமது கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.
- எப்போது பேச வேண்டும், எப்போது மக்களைச் சந்திக்க வேண்டும்.
- மக்களோடு மக்களாக இருந்து பணிகளை செய்ய வேண்டும்.
கோவை மண்டல அளவிலான வாக்கு ச்சாவடி முகவர்களுக்கான 2 நாள் மாநாடு கோவை சரவணம்பட்டி அருகே குரும்ப பாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ். கல்லூரியில் நேற்று தொடங்கியது.
முதல் நாள் மாநாட்டில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மாநகர், ஈரோடு மேற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்தியம், சேலம் வடமேற்கு, சேலம் தெற்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு உள்ளிட்ட 10 மாவட்டத்தை சேர்ந்த 7,500 நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று, வாக்கு சாவடி முகவர்களுக்கு பல்வேறு தகவல்கள் அடங்கிய பூத் கமிட்டி புத்தகம், எலக்ட்ரானிக் டேட்டா கொண்ட பென் டிரைவ்களை வழங்கி பேசினார். மேலும் அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
முதல் நாள் நிகழ்ச்சி முடிந்ததும் விஜய், அங்கிருந்து காரில் புறப்பட்டு கோவை-அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்தார். நேற்றிரவு அங்கு தங்கி ஓய்வெடுத்தார்.
இன்று 2-வது நாளாக தமிழக வெற்றிக்கழகத்தின் பூத் கமிட்டி முகவர்கள் மாநாடு இன்று மாலை தொடங்கிய நிலையில், விஜய் பங்கேற்று உரையாற்றுகிறார்.
முன்னதாக, பூத் கமிட்டி கருத்தரங்கில் பேசிய தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்," 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் நம் இலக்கு என்றும் விஜய்யை முதல்வராக அமர வைப்போம் என உறுதியேற்போம்" என்றார்.
மேலும் அவர்," எப்போது பேச வேண்டும், எப்போது மக்களைச் சந்திக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய்க்கு தெரியும்.
ஒவ்வொரு வீட்டிலும் தவெக தலைவர் விஜய்க்கு ஓட்டு உள்ளது. அதை மறுக்க முடியாது. யாரும் யாருக்கும் பயப்பட வேண்டாம். நம்முடைய உயிர், மூச்சு எல்லாம் விஜய்க்குதான்.
மக்களோடு மக்களாக இருந்து பணிகளை செய்ய வேண்டும்" என்றார்.
- எல்லோருக்கும் எல்லாமும் என்பதுதான் திராவிட மாடல் அரசு.
- அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றுகிறார்.
கோவையில் அமையவிருக்கும் சர்வதேச தரத்திலான ஹாக்கி விளையாட்டு மைதானத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் அவர் பேசியதாவது:-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவே திரும்பி பார்க்கும் திட்டம்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவிற்கே முன்னோடித் திட்டமாக செயல் படுத்தப்படுகிறது.
எல்லோருக்கும் எல்லாமும் என்பதுதான் திராவிட மாடல் அரசு. அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றுகிறார்.
புதுமைப்பெண் திட்டம் மூலம் 3.5 லட்சம் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பட்டா என்பது ஆவணம் மட்டும் அல்ல, அது உங்களுக்கான நிலத்தின் மீதான உரிமை.
இந்தியாவிற்கே முன்னோடியாக தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 9.6 ஆக உள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
- பங்களாவில் அங்குலம், அங்குலமாக தீவிர சோதனை மேற்கொண்டனர். வெடிகுண்டு கருவி மூலமாகவும் சோதனை நடந்தது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பதுங்கியிருந்த ஆனந்த்தை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
கோவை:
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்றிரவு ஒரு அழைப்பு வந்தது.
அதில் பேசிய மர்மநபர், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி மேயர் பங்களாவில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது இரவு 10 மணிக்கு வெடிக்கும் என்று கூறிவிட்டு போனை துண்டித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கட்டுப்பாட்டு அறையில் இந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மேயர் பங்களாவிற்கு சென்றன்.
பங்களாவில் அங்குலம், அங்குலமாக தீவிர சோதனை மேற்கொண்டனர். வெடிகுண்டு கருவி மூலமாகவும் சோதனை நடந்தது.
ஆனால் அங்கு வெடி பொருட்கள் எதுவும் இல்லை என்பதும், அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. அதன்பின்னரே போலீசார் நிம்மதி அடைந்தனர்.
இதையடுத்து போலீசார், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் அழைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் யார் என்பதை அறிய, அந்த செல்போன் எண்ணை வைத்து விசாரித்தனர்.
விசாரணையில், மேயர் பங்களாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கவுண்டம்பாளையம் பிரபு நகர், தக்காளி மார்க்கெட் பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது40) என்பது தெரியவந்தது.
இதையடுத்து கவுண்டம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பதுங்கியிருந்த ஆனந்த்தை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஆனந்தின் சொந்த ஊர் திருப்பூர். ஆனந்த், கோவை மாநகராட்சியில் பிளம்பராக தற்காலிகமாக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி விட்டது. குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஆனந்தின் மனைவி குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். ஆனந்த் வற்புறுத்தியும் மனைவி திரும்பி வர மறுத்து விட்டார்.
எனவே தன்னைவிட்டு பிரிந்து சென்ற மனைவி, குழந்தையை மீண்டும் சேர்த்து வைக்க வேண்டும் என்று ஆனந்த் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் போலீசில் புகார் அளித்தார்.
ஆனால் அந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்த் போலீஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் மேயர் பங்களாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.
இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ரூ.82.14 கோடி மதிப்பில் 132 புதிய திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
- ரூ.29.99 கோடி மதிப்பிலான 54 முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
அங்கு அவருக்கு, கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் நா. கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் மற்றும் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் திரண்டு வந்து வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து உதயநிதி காரில் புறப்பட்டு கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு வந்தடைந்தார்.
அங்கு அவரை கலெக்டர் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். அதனை தொடர்ந்து மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.9.67 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் புல்வெளி தளத்துடன் அமைய உள்ள ஹாக்கி மைதானத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அங்கு நடந்து வரும் விழாவில் ரூ.82.14 கோடி மதிப்பில் 132 புதிய திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, ரூ.29.99 கோடி மதிப்பிலான 54 முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
தொடர்ந்து ரூ.239.41 கோடி மதிப்பில் 25 ஆயிரத்து 24 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.






