என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    டிராவல்ஸ் அதிபரை கூலிப்படை ஏவி கொன்ற கள்ளக்காதலி: கோழிக்கறியில் தூக்க மாத்திரை கலந்து தீர்த்துக்கட்டினர்
    X

    டிராவல்ஸ் அதிபரை கூலிப்படை ஏவி கொன்ற கள்ளக்காதலி: கோழிக்கறியில் தூக்க மாத்திரை கலந்து தீர்த்துக்கட்டினர்

    • சிகாமணி வெளிநாட்டில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார்.
    • ஒரு காரை எடுத்து அதில் இறந்த சிகாமணியின் உடலை ஏற்றி கொண்டு சுற்றியுள்ளனர்.

    கோவை:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விளாத்துர் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சிகாமணி(வயது47).

    இவருக்கு திருமணமாகி பிரியா(45) என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். சிகாமணி கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக துபாயில் சுற்றுலா டிராவல்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். கணவர் வெளிநாட்டில் இருந்ததால், பிரியா தனது குழந்தைகளுடன் தஞ்சாவூர் புளியந்தோப்பு ஜெயம் நகரில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 21-ந்தேதி சிகாமணி துபாயில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு வந்ததாக பிரியாவுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அவர் தனது கணவரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். ஆனால் அது சுவிட்ச் ஆப் என வந்தது. சில நாட்களில் வீட்டிற்கு வந்துவிடுவார் என அவர் நினைத்தார். ஆனால் சில நாட்களை கடந்தும் அவர் வரவில்லை. இதையடுத்து அவர் மீண்டும் தனது கணவரின் போனுக்கு தொடர்பு கொண்டார். அப்போதும் செல்போன் சுவிட்ச் ஆப் என்றே வந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த பிரியா கடந்த 28-ந்தேதி நேராக கோவை வந்து பீளமேடு போலீஸ் நிலையத்தில், வெளிநாட்டில் இருந்து கோவை வந்த எனது கணவரை காணவில்லை என புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கந்தசாமி காணவில்லை என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி கரூர் மாவட்டம் பொன்னமராவதி அடுத்த க.பரமத்தி பகுதியில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்ததாகவும், விசாரணை நடத்தியும் அவர் யார் என கண்டுபிடிக்க முடியாததால், க.பரமத்தி போலீசார், அந்த உடலை அங்குள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ததும் கோவை பீளமேடு போலீசாருக்கு தெரியவந்தது.

    இதனால் இறந்தது சிகாமணியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் இந்த வழக்கை தீவிரப்படுத்தி விசாரணை மேற்கொண்டு வந்தனர். வெளிநாட்டில் சிகாமணிக்கு யாருடனாவது தொடர்பு இருந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி கோவையில் உள்ள ஜே.எம்.கோர்ட்டில், சிகாமணியை கடத்தி கொலை செய்ததாக, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த சிவகளையை சேர்ந்த தியாகராஜன்(58) என்பவர் சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார் தியாகராஜனை காவலில் எடுத்து விசாரித்தனர்.

    இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.

    சிகாமணி வெளிநாட்டில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார். அப்போது அந்த நிறுவனத்தின் அருகே உள்ள ஒரு ஓட்டலில் கோவையை சேர்ந்த சாரதா(32) என்ற பெண் வேலை பார்த்து வந்தார்.

    அருகருகே வேலை பார்த்ததால் சிகாமணிக்கும், சாராதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. மேலும் சாரதா, சிகாமணிக்கு தொழில் விஷயமாக அவ்வப்போது பணமும் கொடுத்து வந்துள்ளார்.

    இவர்களின் பழக்கம் தஞ்சாவூரில் இருந்த சிகாமணியின் மனைவிக்கு தெரியவந்தது. அவர் சாரதாவை செல்போனில் தொடர்பு கொண்டு எனது கணவருடனான தொடர்பை கைவிடுமாறு கூறியுள்ளார். ஆனாலும் அவர்கள் அதனை கண்டு கொள்ளாமல் தங்கள் கள்ளக்காதலை தொடர்ந்தனர்.

    இந்த நிலையில் சாரதா சிகாமணிக்கு தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டு வந்தார். ஆனால் அவர் கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது. இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்றும் வெளிநாட்டில் வைத்து இவர்களுக்கு இடையே இது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சிகாமணி, சாரதாவை கன்னத்தில் அறைந்து விட்டதாக தெரிகிறது.

    தனது பணத்தை வாங்கி வைத்து கொண்டு தராததுடன், தன்னையே தாக்கியதால் அவருக்கு, சிகாமணி மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டது.

    இதற்கிடையே இவர் சில மாதங்களாக வீட்டிற்கு பணம் அனுப்பாததால், அவரது தாயார் கோமதி போன் செய்து ஏன் பணம் அனுப்பவில்லை என அவரிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் வெளிநாட்டில் தனக்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை தாக்கிய அவனை தீர்த்து கட்ட வேண்டும் எனவும் சாரதா தாயாரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து அவரது தாயார் தனது நண்பரான தியாகராஜனிடம் இதுதொடர்பாக தெரிவித்துள்ளார். அவரும் சிகாமணியை தீர்த்து கட்டுவதற்கு சம்மதம் தெரிவித்ததுடன், நெல்லை தச்சநல்லூர் கூலிப்படையை சேர்ந்த குட்டி தங்கம் என்ற புதியவனையும் ஏற்பாடு செய்தார்.

    தொடர்ந்து சிகாமணியை எப்படி கொலை செய்யபோகிறோம் என்று திட்டங்கள் எல்லாம் தீட்டி விட்டு, வெளிநாட்டில் இருந்த சாரதாவுக்கு போன் செய்த தியாகராஜன், இங்கு எல்லாம் தயாராக இருக்கிறது. நீ அவனிடம் நைசாக பேசி இங்கு அழைத்து வந்து விடு மற்றதை நான் பார்த்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    அதன்படி சாரதாவும், சிகாமணியிடம் நீங்கள் ஊருக்கும் போது நானும் வருகிறேன். நீங்கள் என்னுடன் கோவைக்கு வாருங்கள் என கூறி அழைத்துள்ளார். அதற்கு அவரும் சம்மதித்தார். அதன்படி சிகாமணியும், சாரதாவும் கடந்த மாதம் 21-ந் தேதி கோவைக்கு விமானத்தில் வந்து இறங்கினர். பின்னர் சிகாமணியை தனது வீட்டிற்கு சாரதா அழைத்து சென்றார். 2-3 நாட்கள் சிகாமணியும், சாரதாவும் கோவையில் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்துள்ளனர்.

    கடந்த 24-ந்தேதி இரவு சிகாமணியும், சாரதாவும் வீட்டில் மது அருந்தினர். அப்போது தியாகராஜனும், குட்டி தங்கம் என்ற புதியவனும் அங்கு வந்தனர். அவர்கள் யார் என்று சாரதாவிடம் கேட்டதற்கு, தனது நண்பர்கள் என அவர் தெரிவித்தார். இதையடுத்து அவர்களும் இவர்களுடன் சேர்ந்து மது அருந்தினர்.

    அப்போது தியாகராஜன் தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த தூக்க மாத்தியை எடுத்தார். அதில் 30 மாத்திரைகளை சிகாமணி சாப்பிடும் மதுவிலும், சிக்கன் கறியிலும் அவருக்கு தெரியாமல் கலந்து, அவரிடம் எடுத்து கொடுத்தார்.

    அதனை சாப்பிட்ட சில நிமிடங்களில் சிகாமணி மயங்கி விட்டார். இதையடுத்து சாரதா, சிகாமணியின் மீது ஏறி, அவரது நெஞ்சில் பலமாக மிதித்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர் இறந்ததை உறுதி செய்து கொண்ட அவர்கள் உடலை என்ன செய்யலாம் என யோசித்தனர். அப்போது தியாகராஜன் எங்காவது ஒரு காட்டுப்பகுதியில் கொன்று வீசலாம் என கூறினார்.

    அதன்படி ஒரு காரை எடுத்து அதில் இறந்த சிகாமணியின் உடலை ஏற்றி கொண்டு சுற்றியுள்ளனர். பல இடங்களிலும் ஆட்கள் நடமாட்டம் இருந்துள்ளது. கரூர் பொன்னமராவதி அடுத்த க.பரமத்தி பகுதியில் செல்லும் போது காட்டுப்பகுதியை பார்த்த இவர்கள் இது தான் உடலை போடுவதற்கு சரியான இடம் என தேர்வு செய்து அங்கு உடலை வீசி சென்றதும், அதனை போலீசார் கைப்பற்றி அடையாளம் தெரியாத உடல் என கூறி அடக்கம் செய்ததும் பீளமேடு போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் காணவில்லை என பதிந்திருந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர்.

    இதுதொடர்பாக தியாகராஜன், குட்டி தங்கம் என்ற புதியவன், சாரதா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக சாரதாவின் தாயார் கோமதி, சாரதாவின் சகோதரி நிலா ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் தியாகராஜனை கைது செய்து விட்டனர். தொடர்ந்து மற்ற 4 பேரையும் கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

    டிராவல்ஸ் அதிபரை வெளிநாட்டில் இருந்து வரவழைத்து, கூலிப்படை ஏவி கொன்று உடலை காட்டுப்பகுதியில் வீசிய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×