என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் 'நீட்' தேர்வு எழுதும் முதல் திருநங்கை
- மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது எனது கனவு.
- எனது பெற்றோர் மிகவும் உறுதுணையாக இருந்து வருகின்றனர்
கோவை:
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. வருகிற கல்வியாண்டுக்கான 'நீட்' தேர்வு நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேசிய தேர்வு முகமை செய்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் இந்த தேர்வு 14 மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வை கோவை சாய்பாபாகாலனியை சேர்ந்த திருநங்கை இந்திரஜா (வயது 22) உள்பட 6,994 பேர் எழுதுகிறார்கள். இந்திரஜா தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் நீட் தேர்வு எழுதும் முதல் திருநங்கை ஆவார்.
இதுகுறித்து திருநங்கை இந்திரஜா கூறும்போது, மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது எனது கனவு. கடந்த 2020-ம் ஆண்டு பிளஸ்-2 முடித்தேன். நான் கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வை எழுதினேன். அதில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றேன்.
இருந்தபோதிலும் எனக்கு மருத்துவ சீட்டுக்கான இடம் கிடைக்கவில்லை. இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுத உள்ளேன். இதில் எனக்கு 1.1 சதவீதம் இட ஒதுக்கீட்டின் படி மருத்துவ சீட்டு கிடைக்கும் என்று நம்புகிறேன். எனக்கு கோவை தடாகம் ரோடு அரசு தொழில்நுட்ப கல்லூரியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு உள்ளது. தேர்வை எதிர்கொள்ள தயாராகி வருகிறேன். எனது பெற்றோர் மிகவும் உறுதுணையாக இருந்து வருகின்றனர்
இவ்வாறு அவர் கூறினார்.