என் மலர்
சென்னை
- நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி படுத்த வேண்டும்.
- சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒருமனதாக நடைமுறைக்கு கொண்டு வந்து கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கச்சத்தீவை மீட்டெடுப்பதாக இன்று (02.04.2025) தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீண்டும் மீட்டெடுப்பதாக தமிழக அரசு சட்டசபையில் இன்று (02.04.2025) தீர்மானம் கொண்டு வந்திருக்கிறது.
இதை மத்திய, மாநில அரசுகள் இரண்டும் ஒன்றாக இணைந்து நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி படுத்த வேண்டும்.
அனைவரும் எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல், தடையையும் ஏற்படுத்தாமல், உடனடியாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒருமனதாக நடைமுறைக்கு கொண்டு வந்து கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.
பல ஆண்டுகளாக மீனவர்கள் தங்கள் வாழ்க்கை, உயிர், உடைமைகள் எல்லாவற்றையும் இழந்து மிகப்பெரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
மேலும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பு ஒன்றையே கருத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை முறைப்படுத்தி, ஏற்கனவே கச்சத்தீவிற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, மீண்டும் கச்சத்தீவை நமது இந்தியாவுடன் இணைக்க வேண்டும்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கை செல்லும் பொழுது கச்சத்தீவை மீட்டு இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தை உறுதி செய்ய வேண்டும்.
மீனவர்களுக்காக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை மேலும் நீட்டிக்காமல் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகனும் அவரவர் மதங்களை பின்பற்றும் உரிமையை வழங்குகிறது.
- 1995 முன்மொழியப்பட்ட திருத்தங்கள், சிறுபான்மையினருக்கு பாதிப்பை விளைவிப்பதாக உள்ளது.
வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், 1995ம் ஆண்டு வக்பு சட்டத்தில் திருத்தம் செய்யும் மத்திய அரசின் சட்ட முன்வடிவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
மேலும், அரசைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகனும் அவரவர் மதங்களை பின்பற்றும் உரிமையை வழங்குகிறது.
1995 முன்மொழியப்பட்ட திருத்தங்கள், சிறுபான்மையினருக்கு பாதிப்பை விளைவிப்பதாக உள்ளது என குறிப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே, முன்மொழியப்பட்ட எல்லை நிர்ணயத்தைச் சுற்றியுள்ள பிரச்சனை குறித்த எங்கள் குறிப்பாணையை வழங்க, பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களுடன் சேர்ந்து, உங்களுடன் ஒரு சந்திப்பைக் கேட்டுள்ளேன். இது சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தின் தீர்மானங்களைத் தொடர்ந்து நடக்கிறது.
முன்னர் குறிப்பிட்டது போல, எங்கள் மக்களுக்கு இந்த முக்கியமான பிரச்சினையில் எங்கள் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை தெரிவிக்க நாங்கள் அவசரமாக உங்கள் நேரத்தைக் கோருகிறோம். உங்கள் விரைவான பதிலுக்காகக் காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தேர்தலை பார்த்து பயப்படும் கட்சியும் திமுக இல்லை.
- கச்சத்தீவு விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்றது போன்று எதுவும் தெரியவில்லை.
தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவு மீட்பு தொடர்பாக அரசினர் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தலை கருத்தில் கொண்டு கச்சத்தீவு மீட்பு தீர்மானத்தை திமுக அரசு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.
இ.பி.எஸ்.க்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-
* தேர்தலுக்காக தீர்மானம் கொண்டு வரும் கட்சி திமுக இல்லை.
* தேர்தலை பார்த்து பயப்படும் கட்சியும் திமுக இல்லை.
* கச்சத்தீவு விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்றது போன்று எதுவும் தெரியவில்லை.
* இந்தியா- இலங்கை பிரிக்கப்பட்டபோது கச்சத்தீவு இலங்கைக்கு பிரிக்கப்பட்டது.
* எங்களை சொல்லும் அதிமுக, அவர்கள் மத்தியில் கூட்டணியில் இருந்தபோது கச்சத்தீவை மீட்டு இருக்கலாம்.
* கச்சத்தீவு குறித்து திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.
- பிரியாணி கடையில் ஷவர்மா சாப்பிட்ட 10-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது.
- கெட்டுப்போன சிக்கனை பயன்படுத்தி ஷவர்மா செய்யப்பட்டா? என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பிரியாணி கடையில் ஷவர்மா சாப்பிட்ட 10-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் பிரியாணி கடையில் கெட்டுப்போன சிக்கனை பயன்படுத்தி ஷவர்மா செய்யப்பட்டதா? என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
ஆய்வுக்கு பின்னர் உணவகத்திற்கு சீல் வைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
- சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குமரிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தில் இன்று முதல் வருகிற 5-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதன்படி இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாயப்பு.
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
4-ந்தேதி கோவை, திருப்பூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கும், 5-ந்தேதி கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே நேரம் மதியவேளையில் 35 டிகிரி செல்சியஸ் அளவிற்கு அதிகபட்ச வெப்பநிலை பதிவாகக்கூடும்.
- எடப்பாடி பழனிசாமியும் பதிலுக்கு பதில் விளக்கம் அளித்தார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு இந்த தீர்மானத்தையொட்டி தான் பேச வேண்டும். இது முக்கியமான தீர்மானம் என்றார்.
சென்னை:
சட்டசபையில் இன்று கச்சத்தீவை மீட்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வரவேற்று ஆதரித்தது.
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இதில் பேசும் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நேருக்கு நேர் விவாதம் செய்தார். 6 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்த தி.மு.க. ஏன் அப்போதெல்லாம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்கிறார். இந்த தீர்மானத்தை முறையாக கட்டுப்பாட்டோடு ஒற்றுமையாக இருந்து நிறைவேற்ற வேண்டும். சபாநாயகர் அதை பார்க்க வேண்டும்.
எதிர்க்கட்சி தலைவர் தேவையில்லாமல் கருத்துக்களை சொல்கிறார். நாங்களும் சொல்வதற்கு தயார்தான். எங்களை பார்த்து கேட்கிறாரே நீங்களும் (அ.தி.மு.க.), 10 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் இருந்திருக்கிறீர்கள். அப்போது என்ன செய்தீர்கள்? கச்சத்தீவை மீட்பது சம்பந்தமாக பிரதமரை சந்திக்கும் போது எல்லாம் நாங்கள் வலியுறுத்தி உள்ளோம். கிட்டத்தட்ட 54 கடிதங்கள் எழுதி இருக்கிறோம்.
எடப்பாடி பழனிசாமி: நாங்களும் டெல்லி செல்லும் போது பிரதமரை சந்தித்து வலியுறுத்தி உள்ளோம். நான் முதலமைச்சராக இருந்த போது மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமாரை அழைத்து சென்று விரிவாக பிரதமரிடம் விளக்கினேன்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: நீங்கள் போகவில்லை என்று நாங்கள் சொல்லவில்லை.
இதை தொடர்ந்து முதலமைச்சருக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ரகுபதி ஆகியோர் குறுக்கிட்டு பேசினார்கள். இதற்கு எடப்பாடி பழனிசாமியும் பதிலுக்கு பதில் விளக்கம் அளித்தார்.
உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு இந்த தீர்மானத்தையொட்டி தான் பேச வேண்டும். இது முக்கியமான தீர்மானம் என்றார்.
அதைத்தொடர்ந்து தீர்மானத்தை ஆதரிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, எதிர்க்கட்சி தலைவர் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்தாலும் இந்த தீர்மானத்தை ஆதரிப்பதாக கூறினார். அவர் உள்பட தீர்மானத்தை ஆதரித்த அத்தனை பேருக்கும் இதயப்பூர்வ நன்றியை தெரிவிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
- கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தரத் தீர்வாக அமையும்.
- கச்சத்தீவு விவகாரம் குறித்து விரிவாக தங்களது நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர்.
சென்னை:
சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கச்சத்தீவு மீட்பு தொடர்பாக அரசினர் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதை கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் நான் பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவாக இது அமைந்திருக்கிறது. அங்கு எத்தனை அரசியல் நிலைமைகள் மாறினாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது மட்டும் இன்னும் மாறாமல் இருக்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய மீனவர்கள்தான் என்பதை ஒன்றிய அரசு அடிக்கடி மறந்துவிடுகிற காரணத்தால், நாம் மீண்டும் மீண்டும் அவர்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் என்று அழுத்தமாகச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது? கடல் கடந்து போன தமிழனின் கண்ணீரால் என்று பேரறிஞர் அண்ணா சொன்னார். கடல் நீர் இன்று ஏன் சிவப்பாக இருக்கிறது? தமிழ்நாட்டு மீனவர் சிந்திய ரத்தத்தால் என்று சொல்ல வேண்டிய கவலையான நிலைமையில் தான் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.
ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் ஒரு மீனவர்கூட கைது செய்யப்படமாட்டார் என்று 2014 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நரேந்திர மோடி சொன்னார். ஆனாலும், இந்தத் தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இலங்கையில் சில மாதங்களுக்கு முன்னால் ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. ஏற்கெனவே இருந்தவர்கள் தோல்வியடைந்து, புதியவர்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். ஆனாலும், தமிழ்நாட்டு மீனவர்கள் நிலைமை மாறவில்லை; மீனவர்கள் மீதான தாக்குதல் ஓயவில்லை.
பாரம்பரிய மீன்பிடி உரிமை கொண்ட நம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது தொடர்ந்து சிறைபிடிக்கப்படுகிறார்கள்; படகுகள் இலங்கை அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
மார்ச் 27 அன்று, பாராளுமன்ற மாநிலங்களவையில் ஒன்றிய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், 97 இந்திய மீனவர்கள் இலங்கைச் சிறையில் இருக்கிறார்கள் என்று ஒரு புள்ளி விவரத்தைக் கொடுத்திருக்கிறார். அதில், 11 பேரை கடந்த 27-ந்தேதி இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. கடந்த 2024-ம் ஆண்டு மட்டும் 530 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அமைச்சர் சொன்ன கணக்குப்படி பார்த்தால், ஒரு நாளைக்கு இரண்டு மீனவர்களை கைது செய்துள்ளார்கள். எல்லை தாண்டி வந்தார்கள் என்று சொல்லி அவர்களுக்கு அதிகபட்ச சிறை தண்டனை விதிக்கப்படுகிறது அல்லது அதிகபட்ச அபராதம் விதிக்கப்படுகிறது.
அண்டை நாடாக இருந்து கொண்டு இந்திய மீனவர்கள் மீது எந்தவிதமான இரக்கமும் இல்லாமல், நம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும்விதமாக, ஏன் அடியோடு பறிக்கும்விதமாக இலங்கைக் கடற்படையினரும், இலங்கை அரசும் நடந்து கொள்வது நமக்கெல்லாம் மிகுந்த கவலை அளிக்கிறது; கண்டிக்கத்தக்கது. இதனை ஒன்றிய பா.ஜ.க. அரசு தடுத்து நிறுத்திட வேண்டும்.
இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது சவாலாக இருக்கிறது என்று ஒன்றிய மந்திரி ஜெய்சங்கர் சொல்லி இருக்கிறார். இதில் என்ன சவால் இருக்க முடியும் என்று தெரியவில்லை. வேறொரு மாநில மீனவர்கள் இப்படி தொடர் தாக்குதலுக்கு உள்ளானால், இப்படித்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பார்களா? தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் நான் தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டு வருகிறேன்.
இதுவரைக்கும் மீனவர்கள் கைது, தாக்குதல் குறித்து 74 கடிதங்களை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும், பிரதமருக்கும் எழுதியிருக்கிறேன். பிரதமரை நேரில் சந்திக்கும் போதெல்லாம் இது குறித்து வலியுறுத்தியிருக்கிறேன்.
இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எட்டப்பட இயலாமல் கடந்து கொண்டிருக்கிறது. கடிதம் எழுதினால் விடுவிப்பது, பிறகு கைது செய்வதென்று இலங்கை அரசின் நடவடிக்கை தொடர்ந்து கொண்டே இருப்பதால், தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டு, பாரம்பரிய மீன்பிடி உரிமை கேள்விக்குறியாகி, கடலுக்குச் சென்றால் பத்திரமாக வீடு திரும்புவார்களா நம் சொந்தங்கள் என்று குடும்பத்தினர் மீளாக் கவலையில் மூழ்கியிருக்க வேண்டிய துயர நிலை ஏற்பட்டிருக்கிறது.
எவ்வளவு காலத்துக்கு இதனைச் சகித்துக் கொண்டு இருக்க முடியும்? இது போன்ற சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவு மீட்பே மிகச்சரியான வழி என்பதை இம்மாமன்றத்தின் வாயிலாக மீண்டும் வலியுறுத்திட விரும்புகிறேன்.
கச்சத்தீவு விவகாரத்தைப் பொறுத்தவரைக்கும், கச்சத்தீவை மாநில அரசு தான் இலங்கைக்கு அளித்தது போன்று ஒரு தவறான தகவலைப் பரப்பி அரசியல் செய்வது அரசியல் கட்சிகளுக்கு வழக்கமாகி விட்டது. ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக கட்சிகள் செய்யும் அதே தவறை ஒன்றிய அரசு செய்வது வருந்தத்தக்கது; ஏற்கமுடியாதது.
கச்சத்தீவைப் பொறுத்தவரைக்கும், அந்தத் தீவைக் கொடுத்து, ஒப்பந்தம் போட்ட போதே முதலமைச்சராக இருந்த கலைஞர் கடுமையாக எதிர்த்தார். தமிழ்நாட்டு மக்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்று எடுத்துச் சொல்லி இருக்கிறார்.
கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்படக் கூடாது என்று அழுத்தந்திருத்தமாக வாதிட்டு இருக்கிறார். அன்றைக்கிருந்த தி.மு.க. எம்.பி.க்கள் இரா. செழியன், எஸ்.எஸ்.மாரிச்சாமி ஆகியோர் பாராளுமன்றத்திலே கடுமையாக எதிர்த்து இருக்கிறார்கள். அதையும் மீறி கச்சத்தீவு ஒப்பந்தம் 28.6.1974 அன்று கையெழுத்து ஆனவுடன், மறுநாளே அதாவது, 29.6.1974 அன்றே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் கூட்டி இதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி, அன்றைய தினமே பிரதமருக்கும் கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்தில் தமிழ்நாடு அரசின், தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பை பிரதமருக்குத் தெரிவித்து உள்ளதை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அப்போதே 21.8.1974 அன்று "இந்தியாவுக்கு சொந்தமானதும், தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சனையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றி இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தியமைக்க முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது" என அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றியவர் நம்முடைய முதலமைச்சராக இருந்த கலைஞர் தான்.
கச்சதீவை மீட்கவும், கச்சத்தீவில் இருக்கிற இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலை நாட்டவும் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை திராவிட முன்னேற்றக் கழக அரசு எடுத்து வந்திருக்கிறது. கழக அரசு ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் ஒன்றிய வெளியுறவுத் துறை மந்திரிக்கும், பிரதமருக்கும் கடிதங்கள் எழுதி தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்க வலியுறுத்தி வந்திருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் அம்மையார் முதலமைச்சராக இருந்தபோது 3.10.1991 மற்றும் 3.5.2013 ஆகிய தேதிகளிலும், அதேபோன்று, இங்கே அமர்ந்திருக்கக்கூடிய ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் முதலமைச்சராக இருந்தபோது 5.12.2014 அன்றும் கச்சத்தீவைத் திரும்பப் பெற இந்த அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒன்றிய அரசு வலியுறுத்தப்பட்டுள்ளது.
நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் முதன்முதலில் தமிழ்நாட்டிற்கு வந்த பொழுது கச்சத்தீவைத் திரும்பப் பெற அவரிடம் வலியுறுத்திக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன்.
பிறகு 19.7.2023 அன்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், "வரலாற்று ரீதியாக கச்சத்தீவு இந்தியாவின் ஓர் அங்கமாக இருந்திருக்கிறது. தமிழ்நாடு மீனவர்கள் பாரம்பரியமாக கச்சத்தீவைச் சுற்றி மீன்பிடித்து உள்ளார்கள். மாநில அரசின் ஒப்புதலின்றி கச்சத்தீவு இலங்கைக்கு மாற்றப்பட்டதால், தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகளும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது" என் பதை மேற்கோள்காட்டி "கச்சத்தீவைத் திரும்பப் பெற வேண்டும். அதுவே தமிழ்நாட்டு மீனவர்களுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்" என்று வலியுறுத்தி, "அதுவரை தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டுக் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டேன்.
ஒன்றிய வெளியுறவுத்துறை மந்திரிக்கும் எனது 2.7.2024 தேதியிட்ட கடிதம் மூலம் கச்சத்தீவு பிரச்சனையையும், தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமையையும் வலியுறுத்தியிருக்கிறேன். ஆனால், இன்றுவரை மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கக்கூடிய பா.ஜ.க. அரசு கச்சத்தீவை மீட்பது குறித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதை நான் வேதனையுடன் இங்கே குறிப்பிடுகிறேன்.
ஆகவே, இந்தச் சூழலில், தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் போது இலங்கைக் கடற்படையினரால் கடும் தாக்குதலுக்கு உள்ளாவது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது, கடும் அபராதம் விதிக்கப்படுவது போன்றவற்றிலிருந்து தமிழ்நாட்டு மீனவர்களைப் பாதுகாக்கவும், விரைவில் இலங்கை செல்லும் பிரதமர் தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், கச்சத்தீவை மீட்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைக்கு பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றம் விரும்புகிறது. இதனை அடிப்படையாகக் கொண்ட தீர்மானத்தை இப்போது நான் முன்மொழிகிறேன்.
"தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களைப் போக்கிடவும், கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தரத் தீர்வாக அமையும்.
இதனைக் கருத்தில் கொண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும், அரசுமுறைப் பயணமாக இலங்கை செல்லும் இந்திய பிரதமர் அந்நாட்டு அரசுடன் பேசி, இலங்கை சிறையில் வாடும் நம் நாட்டு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக் கொண்டு வரவேண்டுமென்று இப்பேரவை வலியுறுத்துகிறது" என்ற தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.
தமிழ்நாட்டைச் சார்ந்த இந்திய மீனவர்களின் நலன் கருதி, அனைத்துக் கட்சிகளும் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதன் மீது ஒவ்வொரு கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பேசினார்கள். கச்சத்தீவு விவகாரம் குறித்து விரிவாக தங்களது நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர்.
அதன் பிறகு இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இந்த தீர்மானம் இன்றே மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
- எஸ்.வி. சேகரின் செயலுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
- விஷ ஊசி போட்டு டாக்டர் கொலை செய்வதுபோல் சீன் இருந்தால் டாக்டர்கள் மீது கோபம் கொள்வதா?
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பிரபல நகைச்சுவை நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகருக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. தண்டனையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.
கடந்த 27-ந்தேதியன்று நாரதகான சபாவில் நடைபெற்ற நாடகத்தில் மீண்டும் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசியும் நடித்தும் அவர் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக நாடகம் அரங்கேற்றியதாக அவர் மீது புகார் எழுந்தது.
எஸ்.வி. சேகரின் இந்த செயலுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்.வி. சேகரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
* பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியது நான் இல்லை, நான் நடித்த எம்.எல்.ஏ. கதாபாத்திரம் தான் அப்படி பேசியது.
* வேறொருவர் எழுதிய வசனத்தை பேசிய நடிகனான என்னை இழிவுபடுத்துவது சரியா?
* விஷ ஊசி போட்டு டாக்டர் கொலை செய்வதுபோல் சீன் இருந்தால் டாக்டர்கள் மீது கோபம் கொள்வதா?
* பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக சினிமாவில் வசனமே வரவில்லையா?
இவ்வாறு அவர் கூறினார்.
- 5 பிரதமர்கள் தலைமையில் அமைச்சரவையில் தி.மு.க. அரசு அங்கம் வகித்திருந்தது.
- கச்சத்தீவை மீட்க தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சென்னை:
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* கச்சத்தீவு தொடர்பாக தமிழக அரசு சபையில் கொண்டுவந்த தீர்மானத்தில் அ.தி.மு.க.வின் கருத்துகளை தெரிவித்துள்ளோம்.
* தமிழக மீனவர்களின் உரிமை பறிபோய் விடும் என அப்போதே எம்.ஜி.ஆர். எதிர்த்தார். எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அ.தி.மு.க. எதிர்த்து வருகிறது.
* காலம் காலமாக கச்சத்தீவை தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர்.
* வலைகளை காய வைக்கவும், ஓய்வெடுக்கவும் கச்சத்தீவை மீனவர்கள் பயன்படுத்தினர்.
* கச்சத்தீவு தரை வார்க்கப்பட்டதால் அன்று முதல் இன்று வரை மீனவர்களுக்கு சோதனை.
* 5 பிரதமர்கள் தலைமையில் அமைச்சரவையில் தி.மு.க. அரசு அங்கம் வகித்திருந்தது.
* கச்சத்தீவை மீட்க தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
* தேர்தல் நெருங்குவதையொட்டி மீனவர்களுக்கு நன்மை செய்வது போல் நாடகம்.
* சட்டமன்ற தேர்தல் வருவதால் தான் கச்சத்தீவு மீட்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்கள்.
* கடந்த 4 ஆண்டுகளாக அமைதியாக இருந்துவிட்டு இப்போது தீர்மானம் நிறைவேற்றுவதற்கு வரப்போகும் தேர்தல்தான் காரணம்.
* 39 எம்.பி.க்களும் சேர்ந்து கச்சத்தீவு விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் அழுத்தம் தரவில்லை.
* கச்சத்தீவை மீட்க 2008-ம் ஆண்டு ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். ஆட்சிக்கு வந்த பின் வழக்கில் அரசையும் இணைத்தார் என்றார்.
- கச்சத்தீவு தனித்தீர்மானம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது.
- கச்சத்தீவு விவகாரத்திற்கும் ஜெயலலிதா சிகிச்சைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது?
கச்சத்தீவை மீண்டும் திரும்ப பெறுவதற்கான அரசின் தனித் தீர்மானத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபையில் கொண்டு வந்தார்.
தீர்மானத்தை முன்மொழிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களை போக்கிடவும் கச்சத் தீவை மீண்டும் பெறுவதே நிரந்தர தீர்வாக அமையும்.
இதனை கருத்தில் கொண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து கச்சத்தீவு தனித்தீர்மானம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை அளிக்காதது ஏன்?
இந்திரா காந்தி இருந்திருந்தால் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை கொடுத்து இருப்பார். அமெரிக்காவில் எம்.ஜி.ஆருக்கு கொடுத்த சிகிச்சையை ஏன் ஜெயலலிதாவுக்கு கொடுக்கவில்லை? என்று அ.தி.மு.க.வினரிடம் கேள்வி எழுப்பினார்.
கச்சத்தீவு விவகாரத்திற்கும் ஜெயலலிதா சிகிச்சைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விஷயங்களை பேரவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க.வினரின் எதிர்ப்பை அடுத்து செல்வப்பெருந்தகை பேசிய கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது.
- இதுவரை ஒருமுறை கூட கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படவில்லை.
- மாநில அரசுகளுடனும், ஓ.பி.சி. அமைப்புகளுடனும் பேச்சு நடத்தி கிரீமிலேயர் வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பயனடைவதை உறுதி செய்யும் வகையில், கிரீமிலேயர் பிரிவினரை தீர்மானிப்பதற்கான ஆண்டு வருமான வரம்பை இப்போதுள்ள ரூ.8 லட்சத்தில் இருந்து கணிசமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஓபிசி வகுப்பினரின் நலனுக்கான பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.
கிரீமிலேயர் வருமான வரம்பு சராசரியாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தப்பட்டு வந்த நிலையில், 2017-ம் ஆண்டுக்குப் பிறகு 2026-ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக கிரிமீலேயர் வரம்பு உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை ஒருமுறை கூட கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படவில்லை. இப்போது பாராளுமன்ற நிலைக்குழுவே இது குறித்து பரிந்துரை செய்திருக்கும் நிலையில், அதை ஏற்று மாநில அரசுகளுடனும், ஓ.பி.சி. அமைப்புகளுடனும் பேச்சு நடத்தி கிரீமிலேயர் வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 97 இந்திய மீனவர்கள் சிறையில் உள்ளதாக பாராளுமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.
- தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர்.
சென்னை:
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாக முன் வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கச்சத்தீவை மீண்டும் திரும்ப பெறுவதற்கான அரசின் தனித் தீர்மானத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபையில் கொண்டு வந்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களை போக்கிடவும் கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தர தீர்வாக அமையும்.
இதனை கருத்தில் கொண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத் தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். வேறு மாநில மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டால் ஒன்றிய அரசு இப்படிதான் நடக்குமா?
2014 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் ஒரு மீனவர்கள் கூட கைது செய்யப்படமாட்டார்கள் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் 97 இந்திய மீனவர்கள் சிறையில் உள்ளதாக பாராளுமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.
அரசு முறைப் பயணமாக இலங்கை செல்லும் பிரதமர் மோடி இலங்கை அரசுடன் பேசி, அந்நாட்டு சிறையில் வாடும் நமது மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டு கொண்டுவர வேண்டுமென்றும் இந்த பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது என்றார்.
இதனை தொடர்ந்து தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர். அப்போது, கச்சத்தீவை மீட்பதற்கான உறுதியான நடவடிக்கையை பிரதமர் மோடி எடுப்பார் என்று நம்புகிறேன். புயல், சூறாவளிக்கு அஞ்சி வாழும் மீனவர்கள் தற்போது இலங்கை கடற்படைக்கும் அஞ்சி வாழும் நிலை உள்ளதாக ம.ம.க. உறுப்பினர் அப்துல் சமது பேசினார்.
இதனிடையே கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பா.ஜ.க.எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனுக்கும், அமைச்சர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
முதலமைச்சராக இருந்த கலைஞருக்கு தெரிவிக்கப்பட்டு தான் கச்சத்தீவு கொடுப்பட்டது என்பது வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், கலைஞருக்கு இது தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை நான் விடுகிறேன் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து அமைச்சர்கள் பலரும் வானதி சீனிவாசனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தனர். அதனை தொடர்ந்து தமிழக மீனவர்களின் உணர்வுகளுக்கு துணை நிற்பதால் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக பா.ஜ.க. அறிவித்தது.






