என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கச்சத்தீவு விவகாரம்- சட்டசபையில் நேருக்கு நேர் விவாதித்த மு.க.ஸ்டாலின் Vs எடப்பாடி பழனிசாமி
- எடப்பாடி பழனிசாமியும் பதிலுக்கு பதில் விளக்கம் அளித்தார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு இந்த தீர்மானத்தையொட்டி தான் பேச வேண்டும். இது முக்கியமான தீர்மானம் என்றார்.
சென்னை:
சட்டசபையில் இன்று கச்சத்தீவை மீட்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வரவேற்று ஆதரித்தது.
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இதில் பேசும் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நேருக்கு நேர் விவாதம் செய்தார். 6 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்த தி.மு.க. ஏன் அப்போதெல்லாம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்கிறார். இந்த தீர்மானத்தை முறையாக கட்டுப்பாட்டோடு ஒற்றுமையாக இருந்து நிறைவேற்ற வேண்டும். சபாநாயகர் அதை பார்க்க வேண்டும்.
எதிர்க்கட்சி தலைவர் தேவையில்லாமல் கருத்துக்களை சொல்கிறார். நாங்களும் சொல்வதற்கு தயார்தான். எங்களை பார்த்து கேட்கிறாரே நீங்களும் (அ.தி.மு.க.), 10 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் இருந்திருக்கிறீர்கள். அப்போது என்ன செய்தீர்கள்? கச்சத்தீவை மீட்பது சம்பந்தமாக பிரதமரை சந்திக்கும் போது எல்லாம் நாங்கள் வலியுறுத்தி உள்ளோம். கிட்டத்தட்ட 54 கடிதங்கள் எழுதி இருக்கிறோம்.
எடப்பாடி பழனிசாமி: நாங்களும் டெல்லி செல்லும் போது பிரதமரை சந்தித்து வலியுறுத்தி உள்ளோம். நான் முதலமைச்சராக இருந்த போது மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமாரை அழைத்து சென்று விரிவாக பிரதமரிடம் விளக்கினேன்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: நீங்கள் போகவில்லை என்று நாங்கள் சொல்லவில்லை.
இதை தொடர்ந்து முதலமைச்சருக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ரகுபதி ஆகியோர் குறுக்கிட்டு பேசினார்கள். இதற்கு எடப்பாடி பழனிசாமியும் பதிலுக்கு பதில் விளக்கம் அளித்தார்.
உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு இந்த தீர்மானத்தையொட்டி தான் பேச வேண்டும். இது முக்கியமான தீர்மானம் என்றார்.
அதைத்தொடர்ந்து தீர்மானத்தை ஆதரிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, எதிர்க்கட்சி தலைவர் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்தாலும் இந்த தீர்மானத்தை ஆதரிப்பதாக கூறினார். அவர் உள்பட தீர்மானத்தை ஆதரித்த அத்தனை பேருக்கும் இதயப்பூர்வ நன்றியை தெரிவிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.






