என் மலர்tooltip icon

    சென்னை

    • சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, தேனி மற்றும் திண்டுக்கல்லில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * நாளை மறுநாள் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனழைக்கு வாய்ப்பு உள்ளது. கனமழை பெய்யும் போது 40 முதல் 50கிலோ மீட்டர் வேகத்தல் காற்று வீசக்கூடும்.

    *சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேநேரம் சென்னையில் மதிய வேளையில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக்கூடும். 

    • தினசரி மின்தேவை கடந்த மாதம் முதல் 20,000 மெகாவாட்டாக உயா்ந்தது.
    • கடந்த வாரத்தில் சென்னை மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களிலும் மழை பெய்தது.

    சென்னை:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கோடை மழையால், தினசரி மின்தேவை குறைந்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

    இந்த ஆண்டு மாா்ச் மாதத்திலேயே வெயில் தாக்கம் அதிகரித்தது. இதனால், மின்சாதன பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், மின் தேவை 22,000 மெகா வாட்டை தாண்டும் என எதிா்பாா்க்கப்பட்டது. இதைப் பூா்த்தி செய்ய ஏப்ரல், மே மாதங்களில் கூடுதலாக 6,000 மெகாவாட் மின்சாரம் தனியாா் நிறுவனங்களிடம் இருந்து யூனிட் ஒன்று ரூ.9-க்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    இந்த நிலையில், தினசரி மின்தேவை கடந்த மாதம் முதல் 20,000 மெகாவாட்டாக உயா்ந்தது. மின் தேவையை மின்வாரியம் முறையாகக் கையாண்டு வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கோடை மழை பெய்தது.

    கடந்த வாரத்தில் சென்னை மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களிலும் மழை பெய்தது. இவ்வாறு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது தொடா்ச்சியாக கோடை மழை பெய்து வருவதால், பல இடங்களில் குளிா்ச்சியான சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக தினசரி மின்தேவை 17,000 முதல் 18,000 மெகாவாட்டாக குறைந்துள்ளது.

    தமிழகத்தின் தினசரி மின்தேவை இனி அதிகரிக்க வாய்ப்பில்லை எனவும், இதனால் தமிழகத்துக்கு தடையில்லா மின்சாரம் வழங்க முடியும் எனவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    • ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களிடமும் ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கள் கேட்டார்.
    • நாளை திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

    சென்னை:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை பொதுத்தேர்தலை சந்திக்க ஒவ்வொரு கட்சிகளும் இப்போதே தயாராகி வருகிறது அந்த வகையில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து உள்ள நிலையில் இந்த கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் சேரும் என்பது இன்னும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

    இந்த சூழலில் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை தொடர்ந்து நடத்தி வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் இவருக்கு மாவட்டச் செயலாளர்கள் நிர்வாகிகள் உள்ளனர்.

    பா.ஜ.க.வுடன் நெருக்கம் வைத்துள்ள ஓ.பன்னீர் செல்வம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை பொதுத்தேர்தலில் யாருடன் கூட்டணி சேருவார் என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    பா.ஜ.க.-அ.தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் சேர்த்துக் கொள்ளப்படுவாரா? என்பது இன்னமும் தெரியவில்லை.

    காரணம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்ட நிலையில், மீண்டும் அவரை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்க்கும் நிலையில் இல்லை என்றே தெரிகிறது. எனவே பா.ஜ.க.விடம் பேசி அவர்கள் ஒதுக்கும் இடங்களில்தான் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் போட்டியிட முடியும் என அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். அப்படியே போட்டியிட்டாலும் சுயேட்சை சின்னம் அல்லது தாமரை சின்னத்தில்தான் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வம் மாவட்டச் செயலாளர்களின் கருத்தை அறிய சென்னையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடத்தினார். மயிலாப்பூரில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களிடமும் ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கள் கேட்டார். கட்சியின் எதிர்காலம், தேர்தல் கூட்டணி வியூகம் குறித்து அவர் விரிவாக பேசியதாக தெரிகிறது.

    மேலும் ஓ.பன்னீர்செல்வம் வழங்கிய படிவத்தில் "த.வெ.க., நா.த.க. உடன் கூட்டணி வைக்க வேண்டும்" என நிர்வாகிகள் எழுதித் தந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இன்று மாலையில் தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், புதுச்சேரி மாநில நிர்வாகிகளிடம் கருத்துக்கள் கேட்கிறார்.

    நாளை திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

    இதன் பிறகு பா.ஜ.க.விடம் உள்ஒதுக்கீடு பெற்று தேர்தலில் போட்டியிடலாமா? அல்லது கூட்டணி வியூகத்தை மாற்றி அமைக்கலாமா? என்பது குறித்து ஓ.பன்னீர் செல்வம் முடிவெடுத்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • செஞ்சி ஒன்றியத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் தேர்வெழுதிய 167 பேர் வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்து உள்ளனர்.
    • தனியார் பள்ளி ஒன்றில் தேர்வெழுதிய 148 மாணவ, மாணவிகளில் 91 பேர் வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் எடுத்து உள்ளனர்.

    பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதா? என சர்ச்சை எழுந்துள்ளது.

    கடந்த வாரம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் விழுப்புரம் செஞ்சியில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 167 பேர் வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து உள்ளனர்.

    செஞ்சி ஒன்றியத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் தேர்வெழுதிய 167 பேர் வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்து உள்ளனர்.

    அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 17 பேரும், செஞ்சி அல் ஹிலால் தேர்வு மையத்தில் 35 பேரும் வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்து உள்ளனர்.

    தனியார் பள்ளி ஒன்றில் தேர்வெழுதிய 148 மாணவ, மாணவிகளில் 91 பேர் வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் எடுத்து உள்ளனர்.

    இதனால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வேதியியல் பாடத்தின் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதா? என்று விசாரணை நடத்த தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

    • ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் கொள்முதல் செய்ய தமிழக அரசு மறுப்பதால் உழவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
    • மத்திய அரசிடம் பேசி கொள்முதல் அளவை குறைந்தது 5 மடங்கு, அதாவது 7,000 டன்களாக தமிழக அரசு அதிகரிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பச்சைப்பயறு சாகுபடி மிகப்பெரிய அளவில் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவற்றை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் கொள்முதல் செய்ய தமிழக அரசு மறுப்பதால் உழவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

    தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்படாததால் உழவர்கள் இழப்பை சந்தித்து கடன் வலையில் சிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    இதைத் தடுக்க மத்திய அரசிடம் பேசி கொள்முதல் அளவை குறைந்தது 5 மடங்கு, அதாவது 7,000 டன்களாக தமிழக அரசு அதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால், தமிழக அரசே அதன் சொந்த செலவில் பச்சைப் பயறை உச்சவரம்பின்றி கொள்முதல் செய்து உழவர்களின் துயரத்தைப் போக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அமெரிக்க தூதரகத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்தார்.
    • போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

    சென்னை:

    சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். இதைத் தொடர்ந்து உஷாரான போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

    இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    • பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட தேதிக்கு ஒரு நாள் முன்னதாக கடந்த 8-ந்தேதி வெளியானது.
    • சி.பி.எஸ்.இ பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று ஒரே நாளில் வெளியானது.

    சென்னை:

    தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 15-ந் தேதி வரை நடந்தது.

    இதில் சுமார் 9 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடந்தது. தற்போது மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 19-ந்தேதி வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்திருந்தது.

    இதற்கிடையே பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட தேதிக்கு ஒரு நாள் முன்னதாக கடந்த 8-ந்தேதி வெளியானது. அதேபோன்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் முன் கூட்டியே வெளியாகலாம் என்று தகவல் வெளியானது.

    மேலும் சி.பி.எஸ்.இ பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று ஒரே நாளில் வெளியானது. இதையடுத்து தமிழக பள்ளிக்கல்வி, 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிட பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது.

    அதன்படி 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 16-ந் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த 2024-25-ம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியால், அரசு தேர்வுகள் இயக்ககம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் வெளியிடப்பட உள்ளது.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை காலை 9 மணிக்கும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை பிற்பகல் 2 மணிக்கும் மாணவர்கள் இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளை https//results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

    தேர்வர்கள் மேற்கண்டு உள்ள இணைய தளங்களில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

    பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கெள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளது.

    10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 3 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
    • சன்னதி தெரு, ராம்தாஸ் நகர், சின்ன கோலடி, திருவேங்கடம் நகர், அன்பு நகர், செல்லியம்மன் நகர், தேவி நகர் உள்ளிட்ட பகுதிகள்.

    சென்னை:

    சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னையில் நாளை (15.05.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    அதன்படி, எழும்பூர் பகுதிகளான சைடன்ஹாம்ஸ் சாலையின் ஒரு பகுதி, டெப்போ தெரு, பி.டி.முதலி தெரு, சாமி பிள்ளை தெருவின் ஒரு பகுதி, ஏ.பி. சாலை, ஹண்டர்ஸ் லேன், ஜெனரல் காலின்ஸ் சாலை, மேடெக்ஸ் தெரு, வி.வி. கோவில் தெரு, குறவன் குளம், சுப்பஹா நாயுடு தெரு, நேரு ஸ்டேடியம் (வெளிப்புறம் மற்றும் உட்புறம்), அப்பாராவ் கிருஷ்ணா தெரு, ஆண்டியப்பன் தெரு, ஆண்டியப்பன் முதலி தெரு, சூளை பகுதி, கே.பி.பார்க் பகுதி, பெரம்பூர் பேராக்ஸ் சாலை, ரோட்லர் தெரு, காளத்தியப்பா தெரு, விருச்சூர்முத்தையா தெரு, டாலி தெரு, மாணிக்கம் தெரு, ரெங்கையா தெரு ஒரு பகுதி, அஸ்தபுஜம் சாலை ஒரு பகுதி, ராகவா தெரு ஒரு பகுதி. பரிவாக்கம் பகுதியில் காவலன்சேரி, திருமணம் சிடுகாடு, திருக்கோவில்பத்து.

    திருவேற்காடு: தேரோடும் வீதி, சன்னதி தெரு, ராம்தாஸ் நகர், சின்ன கோலடி, திருவேங்கடம் நகர், அன்பு நகர், செல்லியம்மன் நகர், தேவி நகர், காவேரி நகர், சீனிவாசா நகர், அருள் நகர், நடசேனர் நகர், பாரதிநகர், லட்சுமி நகர் பிரிவு I மற்றும் II.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இளம்பெண் பணி முடிந்து வீடு திரும்பியபோது அவரை பின்தொடர்ந்து வந்த நபர் அவரிடம் அத்துமீறி நடந்து உள்ளார்.
    • விசாரணை நடத்திய துரைப்பாக்கம் போலீசார் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த யோகேஸ்வரன் என்ற நபரை கைது செய்தனர்.

    பணி முடிந்து வீடு திரும்பிய பெண்ணை இழுத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை பெருங்குடியில் ஐ.டி. ஊழியரான கேரளாவை சேர்ந்த இளம்பெண் (24) பணி முடிந்து வீடு திரும்பியபோது அவரை பின்தொடர்ந்து வந்த நபர் அவரிடம் அத்துமீறி நடந்து உள்ளார்.

    இளம்பெண்ணின் வாயை மூடி இழுத்துச்சென்ற வாலிபரின் கையை கடித்துவிட்டு இளம்பெண் தப்பி உள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய துரைப்பாக்கம் போலீசார் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த யோகேஸ்வரன் என்ற நபரை கைது செய்தனர். யோகேஸ்வரன் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். அவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கைதான யோகேஸ்வரன் காவல்நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    • பள்ளிக்கல்வியை முடித்தவர்களுக்கு அழகான எதிர்காலத்தை கொடுப்பதுதான கல்லூரி கனவு திட்டம்.
    • இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம்.

    சென்னையில் கல்லூரிக் கனவு 2025 திட்டத்தை தொடங்கி வைத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * பள்ளிக்கல்வியை முடித்தவர்களுக்கு அழகான எதிர்காலத்தை கொடுப்பதுதான கல்லூரி கனவு திட்டம்.

    * கல்வி மட்டுமே வாழ்க்கையை மாற்றும் சக்தி என்பதை உணர்வு அனைவரும் நன்று பயில வேண்டும்.

    * யார் கூறுவதையும் அப்படியே நம்பாமல் பகுந்தாய்ந்து உணர வேண்டும் என்று பெரியார் கூறியதை கடைப்பிடிப்பவர்கள் இன்றைய மாணவர்கள்.

    * கல்லூரிக் கனவுத்திட்டம் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்களை கல்லூரிகளில் சேர்க்க நடவடிக்கை.

    * இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம்.

    * புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டங்களால் மாணவ, மாணவிகள் பெருமளவில் பயன்பெறுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மருத்துவ மாணவர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.
    • ஆட்சி முடியும் தருவாயில் கூட காலிப் பணியிடங்களை நிறைவேற்றாதது வெட்கக்கேடானது.

    சென்னை :

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    "அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படுவதோடு, ஒப்பந்த நியமன முறையில் பணியாற்றும் மருத்துவர்களும், செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்" என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு முற்றிலும் முரணான சூழ்நிலை தற்போது அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிலவுகிறது.

    தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் சிலவற்றில் நிலவும் குறைகளைச் கட்டிக்காட்டி தேசிய மருத்துவ ஆணையம் விளக்கம் கேட்பதும், அதற்கு தி.மு.க. அரசு சப்பைக்கட்டு சுட்டி பதில் அளிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. ஆனால், இந்த ஆண்டு மொத்தமுள்ள 35 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை, தரவுக் குறைபாடுகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி தேரிய மருத்துவ ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. இந்த அறிவிக்கை ஒன்றே தி.மு.க. அரசு எந்த அளவுக்கு மோசமாக செயல்படுகிறது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

    பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், தோல் மருத்துவம் உள்ளிட்ட 96 சதவிகித துறைகளில் காலிப் பணியிடங்கள் உள்ளன என்றும், உதாரணத்திற்கு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 20 துறைகளில் 19 துறைகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது என்றும், இதேபோன்று சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 20 துறைகளில் 8 துறைகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது என்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் புள்ளி விவாங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் அளித்த மேற்படி தரவுகளின் அடிப்படையில், தேசிய மருத்துவ ஆணையம் தற்போது விளக்கம் கேட்டுள்ளது.

    இதுகுறித்து கருத்து தெரிவித்த மருத்துவக் கல்வி இயக்குநர், உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருவதாகவும், பெரும்பாலானோர் ஒரு சில நாட்களில் பணியில் சேர்ந்து விடுவர் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கு முற்றிலும் மாறான கருத்துகளை மருத்துவர்களுக்கான அமைப்புகள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக உரிய நேரத்தில் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு அளிக்காததன் காரணமாக, தற்போதுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது இயலாத ஒன்று என்றும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 30 விழுக்காடு அளவுக்கு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன என்றும், 2023 ஆம் ஆண்டிற்கான கலந்தாய்வே இப்பொழுதுதான் முடிந்து இருக்கிறது என்றும், தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மருத்துவர்களின் எண்ணிக்கையை அரசு உயர்த்த தவறிவிட்டது என்றும் அரசு மருத்துவர்களுக்கான பல்வேறு சங்கங்கள் தெரிவிக்கின்றன.

    அரசு மரு மருத்துவக் கல்லூரிகளில் நிலவும் பல்வேறு குறைபாடுகளுக்காக ஒரு கோடி ரூபாய் வரை அரசு மருத்துவக் கல்லூரிகள் மீது அபராதம் விதிக்க சட்ட விதிகளில் வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. இதன்படி பார்த்தால், 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு 34 கோடி ரூபாய் மக்கள் பணம் விரயம் என்பதோடு, மருத்துவ மாணவர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

    தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் என்று சொல்லிவிட்டு, ஆட்சி முடியும் தருவாயில் கூட காலிப் பணியிடங்களை நிறைவேற்றாதது வெட்கக்கேடானது. இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டிலாவது அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    • நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.105-ம், சவரனுக்கு ரூ.840-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 855-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது.
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 அதிரடியாக குறைந்து இருந்தது. இதனால் தங்கம் விலை ரூ.70 ஆயிரம் என்ற நிலைக்கு வந்தது.

    பல நாட்களாக விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 500 வரை சென்று இதுவரை இல்லாத உச்சமாக பதிவானது. இந்த நிலையில் நேற்று முன்தினம் விலை குறைந்து காணப்பட்ட தங்கம், நேற்று மீண்டும் அதிகரித்து இருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 750-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

    நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.15-ம், சவரனுக்கு ரூ.120-ம் உயர்ந்து இருந்தது. பின்னர் மாலை நேரத்திலும் விலையில் மாற்றம் இருந்தது. கூடுதலாக கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்தது.

    அந்தவகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.105-ம், சவரனுக்கு ரூ.840-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 855-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,805-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.70,440-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை.ஒரு கிராம் வெள்ளி ரூ.109-க்கும் பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    13-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,840

    12-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,000

    11-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,360

    10-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,360

    09-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    13-05-2025- ஒரு கிராம் ரூ.109

    12-05-2025- ஒரு கிராம் ரூ.110

    11-05-2025- ஒரு கிராம் ரூ.110

    10-05-2025- ஒரு கிராம் ரூ.110

    09-05-2025- ஒரு கிராம் ரூ.110

    ×