என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முன்னதாகவே வெளியாகும் 10-வது மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
    X

    முன்னதாகவே வெளியாகும் 10-வது மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்

    • பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட தேதிக்கு ஒரு நாள் முன்னதாக கடந்த 8-ந்தேதி வெளியானது.
    • சி.பி.எஸ்.இ பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று ஒரே நாளில் வெளியானது.

    சென்னை:

    தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 15-ந் தேதி வரை நடந்தது.

    இதில் சுமார் 9 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடந்தது. தற்போது மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 19-ந்தேதி வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்திருந்தது.

    இதற்கிடையே பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட தேதிக்கு ஒரு நாள் முன்னதாக கடந்த 8-ந்தேதி வெளியானது. அதேபோன்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் முன் கூட்டியே வெளியாகலாம் என்று தகவல் வெளியானது.

    மேலும் சி.பி.எஸ்.இ பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று ஒரே நாளில் வெளியானது. இதையடுத்து தமிழக பள்ளிக்கல்வி, 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிட பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது.

    அதன்படி 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 16-ந் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த 2024-25-ம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியால், அரசு தேர்வுகள் இயக்ககம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் வெளியிடப்பட உள்ளது.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை காலை 9 மணிக்கும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை பிற்பகல் 2 மணிக்கும் மாணவர்கள் இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளை https//results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

    தேர்வர்கள் மேற்கண்டு உள்ள இணைய தளங்களில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

    பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கெள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளது.

    10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 3 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×