என் மலர்tooltip icon

    சென்னை

    • அதிமுக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, நெல்லை, தென்காசி மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை ராயப்பட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் 29, 30ம் தேதிகளில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    அதன்படி, வரும் 29, 30 ஆகிய தேதிகளில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டம் காலை 9.30 மணி, பிற்பகல் 3.30 மணி என இரு நேரங்களில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இந்த கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, நெல்லை, தென்காசி மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    • என் ஆட்சியில் விளையாட்டு அமைச்சர் யாரென்று எல்லோருக்கும் தெரியும்’’ என்று ஸ்டாலின் மார்தட்டல் வேறு.
    • ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வோருக்கு 2 கோடி ரூபாய் வரையில் வழங்க பரிசு அறிவித்தது அதிமுக.

    கல்வி உரிமை திட்டத்திற்கான நிதியை ஒதுக்காதது ஏன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கல்வி உரிமைச் சட்டத்தின்படி ((Right to Education Act), தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் 25 சதவீத ஏழை, எளிய மாணவ, மாணவியரின் கல்விக் கட்டணத்தை தமிழ்நாடு அரசே செலுத்தும்.

    அம்மாவின் நல்லாசியோடு நடைபெற்ற கழக ஆட்சியில் இத்தொகை முழுமையாகவும், முறையாகவும் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்டாலின் மாடல் திமுக அரசு, இந்தத் தொகையை செலுத்தாமல் அலட்சியம் காட்டி வருவதாக கல்வியாளர்களும், பெற்றோர்களும் புகார் தெரிவிக்கின்றனர்.

    மேலும், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இதுவரை துவங்காதது குறித்து பதில் அளிக்க ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    முதலமைச்சர் ஸ்டாலினின் மகனான, விளையாட்டு அமைச்சர் உதயநிதியும், அவரின் ரசிகர் மன்றத் தலைவரான பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் சுய புராணங்களைப் பாடுவதில் தீவிரமாக உள்ளனர்.

    இதில், ``என் ஆட்சியில் விளையாட்டு அமைச்சர் யாரென்று எல்லோருக்கும் தெரியும்'' என்று ஸ்டாலின் மார்தட்டல் வேறு.

    24 மணி நேரமும் முழு கவனமும் ரீல்ஸ்க்கு போஸ் கொடுப்பது உள்ளிட்ட விளம்பர வேலைகளில் மட்டுமே இருக்கும் இவர்கள், செயலில் என்னவாக இருக்கின்றார்கள்?

    பள்ளி மாணவர்களை தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்பத் தவறியதற்கு காரணமாக இருந்தவர்கள் தானே இவர்கள்? நல் அமைச்சர்கள்!

    இந்த லட்சணத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது விளையாட்டுத் துறை அமைச்சரை மக்களுக்குத் தெரியாது என்கிறார்.

    SDAT உருவாக்கி, விளையாட்டுக்கான CM Trophy தொடங்கி, அதற்கான பயிற்சித் தொகையாக 1 லட்சம் ரூபாய் வழங்கி, வெற்றிபெறும் ஒவ்வொரு வீரருக்கும் தலா

    1 லட்சம் ரூபாய் வழங்கி, Sports Hostel உருவாக்கி, அதற்கான ஊக்கப் படியை 75 ரூபாயில் இருந்து 250 ரூபாயாக உயர்த்தியது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு.

    மேலும், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வோருக்கு 2 கோடி ரூபாய் வரையிலும்;

    ஆசிய போட்டிகளில் வெல்வோருக்கு 50 லட்சம் ரூபாய் வரையிலும்; தெற்காசிய மற்றும் தேசிய போட்டிகளில் வெல்வோருக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலும், பரிசு அறிவித்து வழங்கியது கழக அரசு.

    அனைத்திலும் முத்தாய்ப்பாக, விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 3 சதவீத இடஒதுக்கீடு அளித்தது எனது தலைமையிலான கழக ஆட்சியில்.

    அமைச்சர் பெயர் முக்கியமல்ல திரு. ஸ்டாலின் அவர்களே, செயல் தான் முக்கியம்! அந்த செயல்வீரர்கள் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்கள். இது மக்களுக்கு நன்றாகத் தெரியும்!

    தமழ் நாட்டின் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு பாஸ்போர்ட் எடுத்து, வெளிநாடு செல்ல வைத்தது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. பாஸ்போர்ட்டே இல்லாமல், "நாச்சியப்பன் பாத்திரக் கடை" கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட் எடுத்தவர்கள் தானே நீங்களும், உங்கள் விளையாட்டு அமைச்சரும்?

    மக்கள் நலத் திட்டங்களுக்கு பணம் இல்லை என்று சொல்லிவிட்டு, உங்கள் மகன் ஆசைப்பட்ட ஒரே காரணத்திற்காக மக்கள் வரிப் பணத்தை கரியாக்கி, தெண்ட செலவு செய்து கார் ரேஸ் நடத்தியது தான் உங்கள் ஆட்சியின் சாதனை!

    முதலீடு வாங்க வருகிறேன் என்ற உல்லாச பயணத்தில், டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை சந்தித்து "ஆகா! ஆகாயத்தில் அதிசயம்" என்று ட்வீட் போட்டதையெல்லாம் சாதனை லிஸ்டில் சேர்ப்பீர்கள் என்றால், மக்கள் சிரிப்பார்கள்!

    விளையாட்டுத் துறை, விளையாட்டு வீரர்களை Promote செய்ய வேண்டும். அமைச்சரை அல்ல.

    மாணவர்களின் கல்வித் தொகையை செலுத்த வக்கில்லாத இந்த தி.மு.க. அரசு இருந்து என்ன பயன்?

    மத்திய அரசின் "புதிய கல்விக் கொள்கை"யை ஏற்க மறுத்ததால், நிதி இல்லை என்று திமுக அரசு சால்ஜாப்பு சொல்வதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    அதற்கும், இதற்கும் என்ன சம்பந்தம்? இது மாநில அரசு விடுவிக்க வேண்டிய நிதி. அதை கொடுக்க துப்பில்லாமல், வழக்கம்போல் யார் மேலாவது பழியைப் போட்டு தப்பிக்க முயல்வது, இன்னும் எத்தனைக் காலம்?

    இதைவிடக் கொடுமை என்னவென்றால், இத்தத் திட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கத் தேவையான நெட் சேவையும் இந்த ஸ்டாலின் மாடல் அரசால் முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வருகிறது.

    "மாணவர்களை Apply பண்ண விட்டாதானே Fees கொடுக்கணும்?" என்று யாராச்சும் உங்களுக்கு ஆலோசனை கொடுத்தார்களா ஸ்டாலின் அவர்களே?

    உடனடியாக, கட்டாயக் கல்வி உரிமைத் திட்டத்தை முழுமையாக, முறையாக செயல்படுத்த வேண்டும் என்று ஏழை, எளிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • டாஸ்மாக் ஊழல் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • காலையில் இருந்து அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் விசாகனை காரில் அழைத்துச் சென்றனர்.

    சென்னையில் உள்ள டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை, மணப்பாக்கம் சி.ஆர். புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீட்டில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    மேலும் டாஸ்மாக் மேலாளர்கள் சங்கீதா மற்றும் ராமதுரை முருகன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, தேனாம்பேட்டை, சூளைமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

    இதேபோல் சென்னை, சூளைமேடு, கல்யாண புரத்தில் உள்ள எஸ்.என்.ஜே அலுவலகத்தில அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    டாஸ்மாக் ஊழல் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு புகாரில் விசாகனை அழைத்துச்சென்று அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன், அவரது மனைவியை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

    காலையில் இருந்து அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் விசாகனை காரில் அழைத்துச் சென்றனர்.

    விசாகன் மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கி கணக்குகளையும் அமலாக்கத்துறை ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    • உங்களின் முயற்சிகளை மறுபரீசலனை செய்து வெற்றிக்கான வழிகளைத் தேடி முன்னேறுங்கள்.
    • கற்றலின் மீதான உங்கள் ஆர்வமும், கடின உழைப்பும் உங்கள் வெற்றியை உறுதியாக்கும்.

    தமிழகத்தில் 10ம், 11ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. தேர்ச்சிப் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்.

    உங்கள் எதிர்கால கல்வி பயணத்திலும் வெற்றி என்ற இலக்கை பெற இதே உழைப்பை தொடருங்கள்.

    தேர்ச்சியின் எல்லை வரை சென்று வெற்றியை தவற விட்டவர்கள் யாரும் மனம் தளர வேண்டாம். வெற்றி தோல்வி என்பது வாழ்வில் தற்காலிக நிகழ்வே. உங்களின் முயற்சிகளை மறுபரீசலனை செய்து வெற்றிக்கான வழிகளைத் தேடி முன்னேறுங்கள்.

    கற்றலின் மீதான உங்கள் ஆர்வமும், கடின உழைப்பும் உங்கள்

    வெற்றியை உறுதியாக்கும். உங்களுக்கு என் வாழ்த்துகள்.

    All the best!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • பெண்கள் படிக்க முன்வந்திருப்பதும், ஆண்களை விஞ்சிய அளவில் தேர்ச்சி பெற்றிருப்பதும் மகிழ்ச்சியளிப்பவையாகும்.

    தமிழகத்தில் 10ம், 11ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. தேர்ச்சிப் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 93.80 விழுக்காடும், 11ம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் 92.09 விழுக்காடு மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தோற்ற மாணவர்கள் அதை நினைத்து கவலைப்படாமல், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் துணைத் தேர்வுகளை புத்துணர்வுடனும், கவனமாகவும் எழுதி, தேர்ச்சியடைந்து மேல்நிலை வகுப்பில் சேர வாழ்த்துகிறேன்.

    பத்தாம் வகுப்பு, 11-ம் வகுப்பு ஆகிய இரு பொதுத்தேர்வுகளிலும் மாணவர்களை விட, மாணவியரே அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பில் 4.14% மாணவிகளும், 11&ஆம் வகுப்பில் 6.43% மாணவிகளும் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு? என்ற பழைய பஞ்சாங்கங்களை எல்லாம் ஒதுக்கித் தள்ளி அதிக எண்ணிக்கையிலான பெண்கள் படிக்க முன்வந்திருப்பதும், ஆண்களை விஞ்சிய அளவில் தேர்ச்சி பெற்றிருப்பதும் மகிழ்ச்சியளிப்பவையாகும். இதேபோல், உயர்நிலைக்கல்வியிலும் பெண்கள் அதிகம் பங்கேற்று சாதனை படைக்க வேண்டுகிறேன்.

    அதேநேரத்தில் தேர்ச்சி விகிதங்களில் வடமாவட்டங்கள் தொடர்ச்சியாக பின்தங்கி வருவது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் அரியலூர், தருமபுரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் முதல் 15 இடங்களில் வந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால், பெரும்பான்மையான வட மாவட்டங்கள் தேர்ச்சி விகிதத்தில் மிக மிக பின்தங்கியே உள்ளன. ஆனால், கடைசி 10 இடங்களை எடுத்துக் கொண்டால், பத்தாம் வகுப்பு, 11-ம் வகுப்பு ஆகிய இரு தேர்வுகளிலும் அவற்றில் 8 இடங்களை வட மாவட்டங்கள் தான் கைப்பற்றியுள்ளன. இது மிகவும் கவலைக்குரிய புள்ளிவிவரம் ஆகும்.

    பத்தாம்வகுப்பு, 11&ஆம் வகுப்பு ஆகிய இரு பொதுத்தேர்வுகளிலும் கடைசி இடத்தைப் பிடித்திருப்பது வேலூர் மாவட்டம் தான். பத்தாம் வகுப்புப் பொதுதேர்வில் வேலூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, இராணிப்பேட்டை, தேனி, நாகப்பட்டினம், சேலம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் கடைசி 10 இடங்களைப் பிடித்திருக்கின்றன. அவற்றில் தேனி, நாகை ஆகிய இரு மாவட்டங்களைத் தவிர மீதமுள்ள 8 மாவட்டங்களும் வட தமிழ்நாட்டைச் சேர்ந்த மாவட்டங்கள் ஆகும்.

    அதேபோல், 11-ம் வகுப்புப் பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் கடைசி 10 இடங்களைப் பிடித்த மாவட்டங்கள் வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நீலகிரி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகியவை என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இவற்றில் புதுக்கோட்டை, நீலகிரி தவிர மீதமுள்ள மாவட்டங்கள் வட தமிழகத்தைச் சேர்ந்தவை.

    தேர்ச்சி விகிதத்திலும், ஒட்டுமொத்த கல்வி நிலையிலும் வட தமிழகம் பின்தங்கியிருப்பது இப்போது ஏற்பட்ட மாற்றமல்ல. 40 ஆண்டுகளுக்கும் மேலாக இதேநிலை தான் நீடிக்கிறது. இதற்கான காரணங்கள் என்ன? தீர்வுகள் என்ன? என்பதை ஒவ்வொரு ஆண்டும் தெரிவித்து வருகிறேன்.வட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையும், கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் தான் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு முதன்மைக் காரணம். வட மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு இரண்டாவது காரணம் அங்குள்ள மக்களின் சமூக, பொருளாதாரக் காரணிகள் தான்.

    தமிழ்நாடு அரசுக்கு உண்மையாகவே சமூகநீதிப் பார்வை இருந்திருந்தால் இந்த சிக்கலுக்கு மிக எளிதாக தீர்வு கண்டிருக்க முடியும். வட தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் போது எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமித்தால் அங்கு பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தியிருக்க முடியும். ஆனால், தமிழக அரசோ இந்த மாவட்டங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடம் செயல்பட்டு வருவதால், அதை செய்ய மறுக்கிறது. வட தமிழ்நாடு கல்வியில் வீழ்ச்சியடைவது கண்டு அரசு கவலைப் படவில்லை. வட மாவட்டங்களுக்கு கல்வித்துறையில் எப்போது விடியல் ஏற்படும் என்பது தெரியவில்லை.

    கல்வியில் வட தமிழ்நாடு முன்னேறவில்லை என்றால், எந்தத் துறையிலும் ஒட்டுமொத்த தமிழகமும் முன்னேற முடியாது. இதை தமிழக அரசு உணர்ந்து கொண்டு வடமாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அந்த மாவட்டங்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் சிறப்புத் திட்டங்களை வகுத்து தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பெற்ற பயிர்க்கடனை கட்டுவதற்கு வழி இல்லாமல், கடுமையான சிரமத்தில் உள்ளார்கள்.
    • சூறாவளி காற்று, சூறைக்காற்று ஆகிய இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு பெற முடியாத நிலை உள்ளது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பு அதிக வெப்பம் நிலவி, சூறாவளி காற்றும் வீசி சில இடங்களில் வெப்பச்சலனத்தால் மழை பெய்தது. தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்தும் வருகிறது. இந்த திடீர் சூறாவளி காற்றால் ஈரோடு, கோவை, திருப்பூர், திருச்சி, தென்காசி, தேனி, சேலம், தூத்துக்குடி ஆகிய மாவட்டப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து அழிந்தது. ஒரு ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் செலவு செய்து, நடவு செய்து பல்வேறு பணிகளை செய்து வந்த விவசாயிகள் தற்போது கடுமையான நஷ்டத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.

    மேலும் பெற்ற பயிர்க்கடனை கட்டுவதற்கு வழி இல்லாமல், கடுமையான சிரமத்தில் உள்ளார்கள். வாழை மரத்திற்கு பயிர் காப்பீடு செய்தாலும் ஒரு வருவாய் கிராமம் முழுக்க சேதமோ, அழிவோ ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு பெற முடியுமே தவிர சூறாவளி காற்று, சூறைக்காற்று ஆகிய இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு பெற முடியாத நிலை உள்ளது.

    எனவே தமிழக அரசு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கோரிக்கையை நிறைவேற்றவும், தற்போது பாதிக்கப்பட்டுள்ள வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தலா ரூ. 2 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 88.70 சதவீதம், மாணவிகள் 95.13 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • மாணவ-மாணவிகள் https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளங்கள் வாயிலாக முடிவுகளை காணலாம்.

    தமிழகம் முழுவதும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இத்தேர்வில் 92.09 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் 11-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 88.70 சதவீதம், மாணவிகள் 95.13 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.8 சதவீதம் பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. ஈரோடு 97 சதவீதமும், விருதுநகர் 96.2 சதவீதமும், கோவை 95.8 சதவீதமும், தூத்துக்குடி 95.1 சதவீதமும் பெற்று அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன.

    இந்த நிலையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மதியம் இணையதளத்தில் வெளியானது. மாணவ-மாணவிகள் https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளங்கள் வாயிலாக முடிவுகளை காணலாம்.

    • கனமழை பெய்யும் போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
    • சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5நாட்களுக்கான கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, இன்று வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். கனமழை பெய்யும் போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

    நாளை தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது அதிகாலை வேளையில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு உள்ளது. அதே நேரம் இன்று மற்றும் நாளை மதிய வேளையில் 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும். 

    • மு.க.ஸ்டாலின் படுகர் இன பழங்குடியின மக்கள், திபெத்தியர்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை கண்டு களித்தார்.
    • நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    கோடை காலத்தில் நீலகிரி மாவட்டத்தின் அழகை கண்டுகளிக்க வருகை தரும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழக அரசின் தோட்டக்கலை துறை சார்பில் மலர் கண்காட்சி ஆண்டுந்தோறும் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு 127-வது மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது.

    5 நாள் சுற்றுப்பயணமாக உதகை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ரூ.24 லட்சத்து 60 ஆயிரம் செலவில் பெரணி இல்லம் புதுப்பிக்கப்பட்டது. இந்த இல்லத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இதைத்தொடர்ந்து அவர், படுகர் இன பழங்குடியின மக்கள், திபெத்தியர்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை கண்டு களித்தார்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 24-ந்தேதி டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    இந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • 10 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
    • தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாதவர்கள் மனம் தளர வேண்டாம்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

    10 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

    பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், உங்கள் கல்லூரி இலக்குக்குத் தேவையான பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள்!

    பதினோராம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், இன்னும் அதிக மதிப்பெண்களைப் பெற்று பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற வாழ்த்துகள்!

    இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாதவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்தடுத்த தேர்வுகள் உள்ளன; அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தேர்ச்சி பெறுங்கள்; கல்வியை இறுகப் பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்!

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அடுத்தடுத்த வகுப்புகளில் மேலும் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கு, கடின உழைப்பை மீண்டும் முதலீடு ஆக்குங்கள்.
    • தன்னம்பிக்கையோடு பற்பல சாதனைகள் புரிந்து தலைசிறந்து விளங்கிடவும் வாழ்வில் வெற்றி காணவும் வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் இன்று 10 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. 10-ம் வகுப்பு 93.80 சதவீத மாணவர்களும், 11-ம் வகுப்பில் 92.09 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்த நிலையில், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    10 மற்றும் 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அடுத்தடுத்த வகுப்புகளில் மேலும் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கு, கடின உழைப்பை மீண்டும் முதலீடு ஆக்குங்கள். தன்னம்பிக்கையோடு பற்பல சாதனைகள் புரிந்து தலைசிறந்து விளங்கிடவும் வாழ்வில் வெற்றி காணவும் வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார். 



    • கோவையில் நாளை மறுநாள் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
    • வருகிற சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட இருக்கிறார்.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி வெற்றி பெற வேண்டும் என்பதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தீவிரமாக உள்ளார்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருப்பதாக தெரிவித்திருக்கும் எடப்பாடி பழனிசாமி திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறாத வகையில் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறியிருந்தார்.

    இதன்படி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் கூட்டணி தொடர்பாக பலமுறை ரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இருக்கின்றன. இப்படி அ.தி.மு.க. கூட்டணி கதவுகள் திறந்திருக்கும் நிலையில் சீமான் பிடி கொடுக்காமலேயே இருந்து வருகிறார்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கே நாம் தமிழர் கட்சி திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் கோவையில் நாளை மறுநாள் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில் கோவையில் நடைபெறும் கூட்டத்தை பிரமாண்டமான முறையில் நடத்துவதற்கு நாம் தமிழர் கட்சியினர் முடிவு செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் நாளை மறுநாள் கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசுகிறார்.

    அப்போது வருகிற சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட இருக்கிறார்.

    அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்துவிடுமாறு சீமானுக்கு தொடர்ச்சியாக அழைப்பு விடுக்கப்பட்டு வரும் நிலையில் கோவையில் நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கூட்டத்தில் சீமான் தனித்து போட்டியிடுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு யாருடனும் கூட்டணி கிடையாது என்பதை உறுதி செய்ய இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    அதே நேரத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியலையும் சீமான் வெளியிட வாய்ப்பு இருப்பதாக கட்சி நிர்வாகிகள் கூறியிருக்கிறார்கள்.

    ×