என் மலர்tooltip icon

    சென்னை

    • 20-ந்தேதி கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
    • கனமழை பெய்யும் போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4நாட்களுக்கான கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, இன்று தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.

    நாளை தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் நாளை மறுநாள் கோவை, நீலகிரி, தருமபுரி, நாமக்கல், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    20-ந்தேதி கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். கனமழை பெய்யும் போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது அதிகாலை வேளையில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு உள்ளது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

    • காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
    • பெய்து வரும் மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் தற்போது சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மதுரவாயல், நெற்குன்றம், வளசரவாக்கம், வானகரம், போரூர், அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

    பெய்து வரும் மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதனிடையே, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி மற்றும் புதுச்சேரியில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    • அ.தி.மு.க. ஆட்சியில் பதிந்த வழக்கை தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற முறைகேடு போல் சித்தரிப்பதற்காக ரெய்டு.
    • தவறான அறிக்கையை நியாயப்படுத்த ED டாஸ்மாக் நிறுவன ஊழியர்களை தொடர்ந்து துன்புறுத்துகிறது.

    டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் வீட்டில் 2-வது நாளாக சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களை துன்புறுத்தும் அமலாக்கத்துறைக்கு கண்டனம் தெரிவித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    * அரசியல் உள்நோக்கத்தோடு அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.

    * உச்சநீதிமன்ற விதிமுறைகளை மீறி அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு கண்டனம்.

    * அ.தி.மு.க. ஆட்சியில் விஜிலென்ஸ் பதிவு செய்த வழக்குகளை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

    * அ.தி.மு.க. ஆட்சியில் பதிந்த வழக்கை தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற முறைகேடு போல் சித்தரிப்பதற்காக ரெய்டு.

    * எந்த ஆதாரமும் கிடைக்காததால் ரூ.1,000 கோடி ஊழல் என கற்பனை செய்தியை அமலாக்கத்துறை வெளியிட்டது.

    * வெளியிட்ட தவறான அறிக்கையை நியாயப்படுத்த ED டாஸ்மாக் நிறுவன ஊழியர்களை தொடர்ந்து துன்புறுத்துகிறது.

    * அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, நமது அலுவலர்களுடன் அரசு எப்போது துணை நிற்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதலில் அவருடைய பிரச்சனைகளை தீர்த்துவிட்டு அதன்பிறகு வெற்றி தோல்வி பற்றி நிர்ணயிக்க வேண்டும்.
    • மக்களின் மீது நாட்டம் இல்லாதவர்கள், மக்களை பற்றி கவலைப்படாதவர்கள் தான் இப்படி சொல்வார்கள்.

    சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவரிடம், படுத்துக்கொண்டே 50 தொகுதிகளில் ஜெயிப்பேன் என்று பா.ம.க. நிறுவனர் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:

    * முதலில் அவருடைய பிரச்சனைகளை தீர்த்துவிட்டு அதன்பிறகு வெற்றி தோல்வி பற்றி நிர்ணயிக்க வேண்டும். வெற்றி தோல்வி பற்றி கருத்து சொல்ல வேண்டும்.

    * அவர்கள் குடும்பத்துக்குள்ளேயே குத்து, வெட்டு நடந்துகொண்டு இருக்கிறது. இவர்கள் எப்படி 50 தொகுதிகளை படுத்துக்கொண்டே ஜெயிக்க முடியும்.

    * மக்களின் மீது நாட்டம் இல்லாதவர்கள், மக்களை பற்றி கவலைப்படாதவர்கள் தான் இப்படி சொல்வார்கள்.

    * மக்களை நாடி செல்பவர் தான் உண்மையான மக்கள் பிரதிநிதியாக இருக்க முடியும். மக்களுடைய சேவகராக இருக்க முடியும். அந்த கருத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கவிஞர் வைரமுத்து தாயாரின் இறுதிச்சடங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தேனி மாவட்டத்தில் நடைபெற்றது.
    • தாயார் மறைவிற்கு வைரமுத்து மற்றும் அவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து இருந்தார்.

    கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் வயதுமூப்பு காரணமாக கடந்த 10-ந்தேதி காலமானார். அவரது இறுதிச்சடங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தேனி மாவட்டத்தில் நடைபெற்றது.

    அவருடைய இறப்பைத் தொடர்ந்து வைரமுத்து மற்றும் அவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள கவிஞர் வைரமுத்து இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அவருடன் எம்.பி.க்கள் டி.ஆர் பாலு, ஆ.ராசா, அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    வைரமுத்துவின் மகன்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
    • ஸ்ரீ தேவி நகர், கண்ணபாளையம், கோபாலபுரம், விஜிஎன் நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    இந்த நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னையில் நாளை மறுநாள் (19.05.2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    அதன்படி, பட்டாபிராம் மற்றும் சேக்காடு பகுதிகள் முழுவதும், ஐப்பன் நகர், தந்துறை, ஸ்ரீ தேவி நகர், கண்ணபாளையம், கோபாலபுரம், விஜிஎன் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • சட்டசபை கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • 4 மசோதாக்களையும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் தாக்கல் செய்திருந்தார்.

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 4 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.

    கடந்த மார்ச் 14-ந்தேதி முதல் ஏப். 29-ந்தேதி வரை நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    நீண்ட நாட்களாக ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருந்த நிலையில் இன்று 4 சட்டதிருத்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.

    4 மசோதாக்களையும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் தாக்கல் செய்திருந்தார்.

    4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ள நிலையில் 14 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.

    • நேற்று நிலவரப்படி, கிராமுக்கு ரூ.110-ம், சவரனுக்கு ரூ.880-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 720-க்கும், ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்து 760-க்கும் விற்பனை ஆனது.
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 12-ந்தேதி மளமளவென சரிந்து ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்துக்கு வந்தது. அதன் பின்னர் விலை சற்று உயர்ந்து இருந்த நிலையில், நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,560 குறைந்து காணப்பட்டது. இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு பிறகு, தங்கம் விலை மீண்டும் ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் சென்று இருந்தது.

    இதனை தொடர்ந்து நேற்று மீண்டும் விலை அதிகரித்து இருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 610-க்கும், ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்து 880-க்கும் விற்பனை ஆனது. நேற்று நிலவரப்படி, கிராமுக்கு ரூ.110-ம், சவரனுக்கு ரூ.880-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 720-க்கும், ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்து 760-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்தை தாண்டி, ரூ.70 ஆயிரத்தை தொடும் அளவுக்கு சென்றது.

    இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் ரூ.8,720-க்கும், ஒரு சவரன் ரூ.69,760-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையிலும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.108 க்கும் பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    16-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,760

    15-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,880

    14-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,440

    13-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,840

    12-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,000

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    16-05-2025- ஒரு கிராம் ரூ.108

    15-05-2025- ஒரு கிராம் ரூ.108

    14-05-2025- ஒரு கிராம் ரூ.109

    13-05-2025- ஒரு கிராம் ரூ.109

    12-05-2025- ஒரு கிராம் ரூ.110

    • புகார் மனுவை பெற்ற கமிஷனர் அலுவலக அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
    • சந்திரசேகருக்கு இந்த வைரக்கல்லை கொடுத்தது மதுரையை சேர்ந்த அவரது நண்பர் ஆவார்.

    சென்னை:

    சென்னை அண்ணாநகர் 17-வது தெருவில் வசித்து வருபவர் சந்திரசேகர் (வயது 70). பிரபல வைர வியாபாரியான இவர் பழமையான வைரக்கல் ஒன்றை தன்னிடம் வைத்திருந்தார். அந்த வைரக்கல்லை ரூ.23 கோடிக்கு விற்பதற்கு விலை பேசி வந்தார். அந்த வைரக்கல்லை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்து விற்பதற்கு சந்திரசேகர் 4 ஏஜெண்டுகளிடம் பேரம் பேசினார்.

    அப்போது வைரக்கல்லை வாங்குவதற்கு வந்திருந்த 4 ஏஜெண்டுகளும் திடீர் கொள்ளைக்காரர்களாக மாறினார்கள். வைர வியாபாரி சந்திரசேகரை நட்சத்திர ஓட்டலில் உள்ள ஒரு அறையில் கை-கால்களை கட்டிப்போட்டு விட்டு வைரக்கல்லை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சந்திரசேகர் கொடுத்த புகாரின்பேரில் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    வைரக்கல்லை கொள்ளையடித்து சென்ற அருண் பாண்டியராஜன், ஜான் லாயிட், விஜய், ரத்தீஷ் ஆகிய 4 பேர் தூத்துக்குடியில் வைத்து கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து வைரக்கல் மீட்கப்பட்டது. கைதான 4 பேரும் சென்னை அழைத்து வரப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வைர வியாபாரி சந்திரசேகர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில், கொள்ளையர்களிடம் இருந்து போலீசார் மீட்டு தந்த வைரக்கல் உண்மையான வைரம் இல்லை என்றும், அது போலியானது என்றும் தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி வடபழனி போலீசாரிடம் கேட்டபோது, அவர்கள் தன்னை மிரட்டுவதாகவும், உண்மையான வைரக்கல்லை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகார் மனுவை பெற்ற கமிஷனர் அலுவலக அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வைரக்கல்லை மீட்ட வடபழனி போலீசார் கூறும்போது, கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட வைரக்கல்லை கோர்ட்டில் ஒப்படைத்துவிட்டோம் என்றும், சந்திரசேகர் கொடுத்துள்ள புகாரில் எங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தனர்.

    சந்திரசேகர் எழுப்பி உள்ள இந்த புகார் சென்னை போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. சந்திரசேகருக்கு இந்த வைரக்கல்லை கொடுத்தது மதுரையை சேர்ந்த அவரது நண்பர் ஆவார். அவருடைய நண்பரிடமும் இதுபற்றி விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    • ரெயில்கள் தாமதம், பராமரிப்பு பணி போன்ற பணிகளால் ரெயில் ரத்து உள்ளிட்ட காரணங்களால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
    • இன்று 4 ரெயில்களும், நாளை 13 ரெயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் மக்களின் தினசரி பயணத்திற்கு மின்சார ரெயில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனால் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் சென்னை கடற்கரை- தாம்பரம், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, சென்னை கடற்கரை- வேளச்சேரி மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கும் மின்சார ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.

    மின்சார ரெயிலில் பயணிப்பது மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும், சில சமயங்களில் ரெயில்கள் தாமதம், பராமரிப்பு பணி போன்ற பணிகளால் ரெயில் ரத்து உள்ளிட்ட காரணங்களால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பராமரிப்பு பணி நடைபெறும் நேரங்களில் ரத்து செய்யப்படும் ரெயில்கள் குறித்து அவ்வப்போது அறிவிப்புகள் வெளியாகி கொண்டு இருக்கின்றன.

    இந்த நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக வேளச்சேரி மார்க்கத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 8 மணி வரை மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி- சென்னை கடற்கரை மார்க்கத்தில் இன்று 4 ரெயில்களும், நாளை 13 ரெயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    • 'டாஸ்மாக்' மேலாண்மை இயக்குனர் விசாகன் வீட்டில் நடந்த சோதனைக்கும், மற்ற 7 இடங்களில் நடந்த சோதனைக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
    • திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் வீட்டில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை எழும்பூரில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில் பல்வேறு புகார்கள் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதை கண்டறிந்து அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

    தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனை மற்றும் விசாரணை நடத்த தடை கோரி தமிழக அரசு சார்பிலும், 'டாஸ்மாக்' நிர்வாகம் சார்பிலும் சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு கோர்ட்டு தடை விதிக்கவில்லை.

    நேற்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள். 'டாஸ்மாக்' மேலாண்மை இயக்குனர் விசாகன் சென்னை மணப்பாக்கத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவருடைய வீட்டுக்கு காலை 7 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 பேர் சென்றனர்.

    உடனடியாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விசாகன் வீட்டில் இல்லை. அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மட்டும் இருந்தனர். அவர்கள் முன்னிலையில் சோதனை நடந்தது. வெளியே சென்றிருந்த விசாகனும் சற்று நேரத்தில் வீட்டுக்கு வந்தார். இதையடுத்து அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    இதற்கிடையே இன்னொரு அதிரச்சி சம்பவம் அரங்கேறியது. விசாகன் வீட்டுக்கு பின்பக்கத்தில் 'டாஸ்மாக்' டெண்டர் தொடர்பான ஆவணத்தின் நகல்கள் கிடந்தன. அவை சோதனை நடந்தபோது விசாகன் வீட்டில் இருந்து வெளியே வீசப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதை கண்டுபிடித்த அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியே சிதறி கிடந்த ஆவணங்களை சேகரித்து எடுத்து சென்றனர்.

    நேற்று விசாகனை அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கள் காரில் ஏற்றி அழைத்து சென்றனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது.

    இதுதொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் மேலும் 7 இடங்களில் நேற்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். தியாகராயநகரில் வசிக்கும் கேசவன் வீடு, சூளைமேடு ராஜா வீதியில் உள்ள மேகநாதன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இவர் மதுபான ஆலை நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதேபோல பிரபல சினிமா பட அதிபர் ஆகாஷ் வசிக்கும் தேனாம்பேட்டை கே.பி.தாசன் சாலையில் உள்ள வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் இருந்த அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆகாஷ் பிரபல நடிகர்கள் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்த திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

    தொடர்ந்து புதிய திரைப்படங்களை தயாரித்து வருகிறார். பெசன்ட்நகர் கற்பகம் கார்டன் 2-வது தெருவில் வசிக்கும் ராஜேஷ்குமார் என்பவரது வீடும் இந்த சோதனை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது. இவர் மின்சார வாரிய ஒப்பந்ததாரராக இருக்கிறார். ராயப்பேட்டை கிளப் ஹவுஸ் சாலையில் உள்ள தொழிலதிபர் தேவகுமார் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென்று புகுந்து சோதனை வேட்டையில் ஈடுபட்டனர். பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிலும் சோதனை நடந்தது. சேத்துப்பட்டு ஜெகநாதபுரத்தில் வசிக்கும் பாபு, குமரன் காலனியில் வசிக்கும் இந்திரஜித் ஆகியோரது வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    'டாஸ்மாக்' மேலாண்மை இயக்குனர் விசாகன் வீட்டில் நடந்த சோதனைக்கும், மற்ற 7 இடங்களில் நடந்த சோதனைக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    நேற்றிரவு விசாரணை முடிவடைந்து விசாகன் அமலாக்கத்துறை அலுவலகத்தைவிட்டு வெளியே வந்தார்.

    இந்த நிலையில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் வீட்டில் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் வீட்டிலும், மின்வாரிய முன்னாள் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி மேகநாதன் வீடு மற்றும் அலுவலகத்திலும், சூளைமேட்டில் உள்ள வீடு, அண்ணா நகரில் உள்ள ரியல் எஸ்டேட் அலுவலகம், பெசன்ட் நகர் பகுதியில் உள்ள மின்வாரிய ஒப்பந்ததாரர் ராஜேஷ் குமார் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    • துணை முதல்வர் உதயநிதியின் நண்பர் ரத்தீஷிடம் பேசியது எனவும் செய்திகள் வருகின்றன.
    • டாஸ்மாக் நிறுவனத்தின் MD-க்கு Directives கொடுக்க இந்த ரத்தீஷ் யார்?

    டாஸ்மாக் எம்டி வீட்டருகே கிழிந்த நிலையில் டாஸ்மாக் நிறுவன விவரங்கள் கிடந்த விவகாரத்தில் தொடர்புடைய ரத்தீஷ் யார்? என்று அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

    இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    டாஸ்மாக் MD வீட்டின் அருகே கிழிந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனம் தொடர்பாக முக்கிய விவரங்கள் குறித்த வாட்சப் Chat Screenshots கிடைத்ததாகவும், இவை துணை முதல்வர் உதயநிதியின் நண்பர் ரத்தீஷிடம் பேசியது எனவும் செய்திகள் வருகின்றன.

    டாஸ்மாக் நிறுவனத்தின் MD-க்கு Directives கொடுக்க இந்த ரத்தீஷ் யார்?

    டாஸ்மாக் ஏலம் வெளிப்படையாக நடந்தால் திமுக நிர்வாகிகளுக்கு பாதிப்பு என்று அதன் MD-யிடம் ரத்தீஷ் கூறுவது, யாருக்கான குரலாக அவர் பேசுகிறார்?

    உதயநிதியுடன் டாஸ்மாக் MD எடுத்த புகைப்படத்தை அவருக்கே அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்தவரா இவர்?

    டாஸ்மாக்கில் வாங்க வேண்டிய மதுபானங்கள் பட்டியலை அதன் MD-க்கு அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்த இந்த ரத்தீஷ் தான் திமுகவின் புதிய Power Center-ஆ?

    Logical-ஆக பார்த்தால், ரத்தீஷ் எனும் தனிநபரின் மெசேஜுக்கு Reply பண்ண வேண்டிய அவசியம் டாஸ்மாக் MD-க்கு துளியும் இல்லை.

    இவர் துணை முதல்வருக்கு இணை முதல்வராக இருப்பதனாலோ என்னவோ, அனைத்து அதிகாரிகளும் பணிந்தார்களா?

    ரத்தீஷை நெருங்கும் ED-யின் விசாரணை வளையம்....

    So, Sketch உதயநிதிக்கா?

    #யார்_இந்த_தியாகி? எனவும், இந்த தியாகியின் பின்புலத்தில் உள்ள அந்த "சார்" யார்? எனவும் கேள்விகள் எழுகின்றன.

    கேள்விகளுக்கான பதிலும், அதற்கான தண்டனைகளும் விரைவில் கிடைக்குமென நம்புவோம்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×